தெலங்கானா முதல்வராகப் பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி - இவரது பின்னணி என்ன?

பட மூலாதாரம், FACEBOOK/Anumula Revanth Reddy
தெலங்கானா மாநில முதல்வராக ரேவந்த் ரெட்டி இன்று (வியாழன், டிசம்பர் 7) பதவியேற்றார்.
அவருடன் துணை முதல்வராக மல்லு பாட்டி விக்ரமார்கா பதவியேற்றார்.
இவர்களுடன், கதம் பிரசாத் குமார், உத்தம் குமார் ரெட்டி, கோமதி ரெட்டி வெங்கட ரெட்டி, பொன்னம் பிரபாகர், சீதக்கா ஜூபல்லி கிருஷ்ணா ராவ், பொங்குலெடி சீனிவாச ரெட்டி, தும்மல நாகேஸ்வரராவ், தாமோதர ராஜநரசிம்ம, கோண்டா அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர்.
ஐதராபாத் நகரத்தின் லால் பகதூர் ஸ்டேடியத்தில் திரளான கூட்டத்தின் மத்தியில் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அனைவருக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர், முதல்வராகப் பதவியேற்ற உடனே ரேவந்த் ரெட்டி, 6 உத்தரவாதங்கள் அடங்கிய கோப்பில் முதல் கையெழுத்திட்டார்.
முன்னர் கொடுத்திருந்த வாக்குறுதியின்படி, வேலையில்லாத ரஜினி என்ற நபருக்கு வேலை வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், ANI
‘காங்கிரசின் வெற்றிக்குக் காரணமான ரேவந்த் ரெட்டி’
தெலங்கானா மாநிலம் 2014ஆம் ஆண்டு உருவானதில் இருந்தே அங்கு ஆட்சி நடத்திவந்த தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதியை (இப்போது பாரத் ராஷ்ட்ரிய சமிதி) நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வீழ்த்தியது.
இந்தி பேசும் மாநிலங்களில் தோல்வியை தழுவிய காங்கிரஸுக்கு தெலங்கானாவின் வெற்றியே சற்று ஆறுதல் கொடுத்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக தெலங்கானா காங்கிரஸ் கமிட்டி தலைவர் ரேவந்த் ரெட்டி பேசப்பட்டார்.
யார் இந்த ரேவந்த் ரெட்டி? தெலங்கானாவின் ‘பிதாமகர்’ என்று பார்க்கப்படும் சந்திரசேகர ராவை தோற்கடித்து காங்கிரஸை வெற்றிப் பாதைக்கு அவர் எப்படி அழைத்துச் சென்றார்?

பட மூலாதாரம், ANI
யார் இந்த ரேவந்த் ரெட்டி?
பிரிக்கப்படாத ஆந்திரப் பிரதேசத்தின் மகபூப்நகர் மாவட்டத்தில் 1969-ஆம் ஆண்டு பிறந்த அனுமுலா ரேவந்த் ரெட்டி, மாணவப் பருவத்திலேயே அரசியலில் ஈடுபடத் துவங்கினார்.
உஸ்மானியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற ரெட்டி, அப்போது ஏ.பி.வி.பி.யில் இணைந்திருந்தார். பின்னர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்தார்.
தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளராக, 2009-ஆம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தின் கோடங்கல் சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்தலில் வெற்றி பெற்றார்.
2014-ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டமன்றத்தில் தெலுங்கு தேசம் கட்சியின் அவைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
சர்ச்சையும் கைதும்
2015, தெலங்கானா சட்டப்பேரவை மேல்சபை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக வாக்களிக்க நியமன எம்எல்ஏ எல்விஸ் ஸ்டீபன்சனுக்கு ரேவந்த் ரெட்டி லஞ்சம் கொடுத்ததாக ஒரு ‘ஸ்டிங்-ஆபரேஷன்’ செய்யப்பட்டது.
அந்த வீடியோ வெளியாகி சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து அந்த ஆண்டு மே மாத இறுதியில் ரேவந்த் ரெட்டியை ஊழல் தடுப்புப் பிரிவு கைது செய்தது.
அவர்மேல் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தெலங்கானா உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியதைத் தொடர்ந்து ரேவந்த் ரெட்டி 2015-ஆம் ஆண்டு, ஜூலை 1-ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.

பட மூலாதாரம், FACEBOOK/Anumula Revanth Reddy
காங்கிரஸ் கட்சியில் ரேவந்த் ரெட்டியின் வளர்ச்சி
அக்டோபர் 17, 2017 அன்று, அவர் தெலுங்கு தேச உறுப்பினர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அக்டோபர் 30-ஆம் தேதி டெல்லியில் ராகுல் காந்தி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.
இருப்பினும், 2018 தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் டி.ஆர்.எஸ் வேட்பாளரிடம் தோல்வியடைந்ததால் காங்கிரஸில் சேர்ந்தது அவருக்குப் பெரிதாகப் பலனளிக்கவில்லை. ஆட்சி முடிவதற்கு ஒரு வருடம் முன்னதாகவே சட்டசபையை கலைத்து தேர்தலை நடத்திவிட்டார் கே.சி.ஆர்.
சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த பிறகு, 2019 மக்களவைத் தேர்தலில் மாநிலத்திலேயே மிகப்பெரிய தொகுதியான மல்காஜ்கிரியில் போட்டியிட அவருக்கு காங்கிரஸ் வாய்ப்பு கொடுத்தது. அதில் அவர் 10,919 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
2021-ஆம் ஆண்டில், காங்கிரஸ் அவரை மாநிலத் தலைவராகத் தேர்ந்தெடுத்து, மிகப்பெரும் பொறுப்பைக் கொடுத்தது.
கருத்து வேறுபாடுகளுக்கும், கோஷ்டிகளுக்கும் தாயகமாக விளங்கிய தெலங்கானா காங்கிரஸ் கட்சியில் தலைவர் பொறுப்பை ஏற்று, சிக்கல்களைச் சமாளிக்க முயன்ற அவர், கட்சித் தலைமைக்கு அருகில் சென்றார்.
கர்நாடகாவுக்குப் பிறகு தெலுங்கானா தேர்தலில் காங்கிரஸ் தலைமை அதிக கவனம் செலுத்தியதால் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா வதேரா மாநிலம் முழுவதும் விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். இதன் போது ரேவந்த் ரெட்டி அவர்களுடன் தங்கி பிரசார நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.
ராகுல் காந்தி நடத்திய பாரத் ஜோடோ யாத்ராவிலும் பங்கேற்ற ரேவந்த் ரெட்டி, அவருடன் நெருக்கமாக இருக்க முயன்றார்.
கட்சியில் ஒருதலைப்பட்சமாக முடிவுகளை எடுப்பதாக மூத்த தலைவர்கள் விமர்சனம் செய்தாலும் தனக்கே உரித்தான பாணியில் செயல்பட்டு நற்பெயர் பெற்றவர் ரேவந்த் ரெட்டி.
இந்தத் தேர்தலில், காமாரெட்டி தொகுதியில் அவர் தற்போதைய முதல்வர் கே.சி.ஆரை எதிர்த்துப் போட்டியிட்டார்.

பட மூலாதாரம், ANI
ரேவந்த் ரெட்டியின் பிரபலம்
தேர்தல் பிரசாரத்தின்போது தொண்டர்களிடையே அவர் மிகப்பிரபலமாக இருந்தார். பிரசாரத்தில் ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அவரோடு இருந்தனர்.
இந்நிலையில் அடுத்த தெல்ங்கானா முதல்வராக அவரது பெயர் அறிவிக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரெட்டியின் சுவரொட்டிகளில் அவர் தெலங்கானா காங்கிரஸின் 'ஜோதியை முன்னெடுத்துச் செல்பவர்’ என்று வர்ணிக்கப்படுகிறார்.
இந்த வளர்ச்சி எப்படி நிகழ்ந்தது?
தேர்தலுக்கு முன்னர் பிபிசிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில், தான் 20 ஆண்டுகளாக அரசியல் செய்து வருவதாகவும், கடந்த 15 ஆண்டுகளாக எதிர்க்கட்சியில் இருந்ததால், பொதுமக்களுடன் தன்னை இணைத்துக் கொண்டு தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொண்டதாகவும் கூறினார்.

பட மூலாதாரம், Facebook/Anumula Revanth Reddy
காங்கிரஸின் வேர்களை வலுப்படுத்திய ரேவந்த் ரெட்டி
ரேவந்த் ரெட்டி காங்கிரஸை முன்னிலைக்கு எப்படி அழைத்துச் சென்றார் என்பது பற்றி முன்னர் பிபிசி தமிழ் தெலங்கானாவைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளரும் தெலங்கானா ஜன சமிதி அமைப்பின் தலைவருமான எம். கோதண்டராமிடம் பேசியது.
அவர், ரேவந்த் ரெட்டி மிகப் பெரிய ஊர்வலங்கள், பொதுக் கூட்டங்களை ஆகியவற்றை ஏற்பாடு செய்தது பெரும் உந்துதலாக இருந்தது, என்றார்.
“அப்போதுதான் காங்கிரஸின் வேர்கள் அப்படியே இருக்கின்றன என்பது புரிந்தது. கர்நாடக மாநிலத்தில் காங்கிரசிற்குக் கிடைத்த வெற்றியும் குறிப்பிடத்தக்க அளவில் அவர்களுக்கு ஊக்கம் அளித்தது. தில்லித் தலைமையும் மாநிலத்தில் கட்சியை மறு கட்டமைப்புச் செய்தது. உள்ளூரில் இருந்த அரசியல் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியது,” என்றார்.

பட மூலாதாரம், Facebook/Anumula Revanth Reddy
கே.சி.ஆரின் குடும்பத்தை கடுமையாக எதிர்த்தவர்
தெலங்கானா மாநில இயக்கம் துவங்கியதிலிருந்தே கே.சி.ஆர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராகக் கடுமையான வார்த்தைகளைப் பிரயோகித்தார் ரேவந்த் ரெட்டி.
சட்டசபையில் ஆளுநரை நோக்கி பேப்பர் வீசுவது போன்ற செயல்களை செய்தாலும், கே.சி.ஆருக்கு எதிர்ப்பு தெரிவித்ததுதான் அவரை தொழிற்சங்கத்தினர் மத்தியில் பிரபலமாக்கியது.
தெலங்கானா மாநிலம் உருவான பிறகும், கே.சி.ஆரை எதிர்ப்பதில் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவராக இருந்தார்.
கே.சி.ஆரையும் அவரது குடும்ப உறுப்பினர்களையும் அவர் எல்லை மீறி விமர்சித்த சம்பவங்களும் உண்டு.
இந்தத் தேர்தலிலும் பி.ஆர்.எஸ் தலைவரான கே.சி.ஆரை எதிர்த்து ரேவந்த் ரெட்டி போட்டியிட்டதற்குக் காரணம், தன்னை அவருக்குப் போட்டியாக உணர வைக்க வேண்டும் என்பதுதான் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கே.சி.ஆரின் சொந்தத் தொகுதியான கஜ்வேலுடன் சேர்ந்து, அவர் காமாரெட்டியில் சட்டமன்றத்திற்கு போட்டியிட்டார். அதே நேரத்தில் ரேவந்த் ரெட்டி தனது தொகுதியான கோடங்கலைச் சேர்த்து அவர் காமாரெட்டியிலிருந்து போட்டியிட்டார்.
இது இருவருக்குமிடையே ஒரு நேரடி மோதலை உருவாக்கியது.
ரேவந்த் ரெட்டியின் குடும்பம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த எஸ். ஜெய்பால் ரெட்டியின் நெருங்கிய உறவினரான கீதாவை 1992ல் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார்.
கே சி ஆரை எதிர்த்து போட்டியிட்டவர்
நடைபெற்ற முடிந்த சட்டமன்றத் தேர்தலில், காமாரெட்டி தொகுதியில், பாரத் ராஷ்ட்ரிய சமிதி தலைவரும் தற்போதைய முதல்வருமான கே சந்திரகேசர ராவ் போட்டியிட்டார். அவருக்கு எதிராக ரேவந்த் ரெட்டி நேருக்கு நேர் மோதினார். ஆனால் அந்த தொகுதியில் இவர்கள் இருவரையும் எதிர்த்து் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கே வெங்கட் ரமண ரெட்டி வெற்றி பெற்றுள்ளார்.
எனினும் ரேவந்த் ரெட்டி கோடங்கல் தொகுதியிலும் சந்திரசேகர ராவ் கஜ்வெல் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளனர்.
இந்தச் சூழலிலேயே ரேவந்த் ரெட்டியின் பெயர் பரவலாகப் பேசப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












