அவமானப்படுத்திய ஹென்றி கிஸ்ஸிங்கரை இந்திரா காந்தி பழிவாங்கிய சம்பவம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ரெஹான் ஃபசல்
- பதவி, பிபிசி நியூஸ்
சிலர் ஹென்றி கிஸ்ஸிங்கரை மிகச் சிறந்த ராஜதந்திரி மற்றும் அரசியல்வாதியாகக் கருதினர். ஆனால் பலருக்கு அவர் அமெரிக்க சக்தியின் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி ஒரு வஞ்சக அரசியல்வாதியாகத் தென்பட்டார்.
2005ல், வெள்ளை மாளிகையின் ரகசிய டேப்புகள் பகிரங்கமாக வெளியான போது, அவர் இந்தியாவையும் இந்திரா காந்தியையும் தவறாகப் பேசியது வெட்டவெளிச்சமாகியது. பின்னர் இதற்காக மன்னிப்பும் கேட்டார்.
1971 போரில், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனும், அவரது பாதுகாப்பு ஆலோசகர் ஹென்றி கிஸ்ஸிங்கரும் முழுக்க முழுக்க பாகிஸ்தானுக்கு ஆதரவளித்தனர்.
பாகிஸ்தான் ராணுவம் சுதந்திரப் போராட்டத்தை தனது பலத்தால் நசுக்கத் தொடங்கியபோது, அமெரிக்க வெளியுறவுத் துறையின் முதல் எதிர்வினை பாகிஸ்தான் ராணுவத்தின் அட்டூழியங்களைக் கண்டித்ததுதான்.
அப்போதைய கிழக்கு மற்றும் தெற்காசிய விவகாரங்களுக்கான உதவி செயலாளராக இருந்த கிறிஸ்டோபர் வான் ஹோலன், 'தி டில்ட் பாலிசி ரீவிசிட்டட்' என்ற தலைப்பில் 'ஏசியன் சர்வே' இதழின் ஏப்ரல் 1980 பதிப்பில், 'அமெரிக்காவின் சிஐஏ மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளின் கூட்டுக்கூட்டம் நடைபெற்றது.
அதில் அதில் ஹென்றி கிஸ்ஸிங்கர் மற்றும் அமெரிக்க அதிகாரிகள் பங்கேற்றிருந்தனர். மேலும் பாகிஸ்தானிய ராணுவத்தின் மிருகத்தனத்தை சாக்காகப் பயன்படுத்தி இந்தியாவை நெருங்குவது அமெரிக்காவின் நலனுக்காக மட்டுமே இருக்கவேண்டும் என்ற முடிவு அக்கூட்டத்தில் எட்டப்பட்டது,” என எழுதியுள்ளார்.
ஆனால் கிஸ்ஸிங்கர் இந்த மதிப்பீட்டை ஏற்கவில்லை. பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதற்றத்தை உள்ளூர் கண்ணோட்டத்தில் பார்க்காமல், அமெரிக்காவுக்கும் சோவியத் யூனியனுக்கும் இடையிலான பதற்றத்தின் கண்ணோட்டத்தில் பார்க்கத் தொடங்கினார்.
வால்டர் ஐசக்சன் தனது நூலான ஹென்றி கிஸ்ஸிங்கரின் வாழ்க்கை வரலாற்றில், "இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகளின் அரசியல் சூழலில், கிஸ்ஸிங்கர் ஒழுக்கத்தை ஒதுக்கிவிட்டு யதார்த்தவாதத்திற்கு முன்னுரிமை அளித்தார். இரண்டாவதாக, அவர் இந்த போரை முழுவதுமாக சோவியத் மற்றும் அமெரிக்க போட்டியின் கண்ணோட்டத்தில் பார்த்தார். பாகிஸ்தானை ஆதரிக்கும் கிஸ்ஸிங்கரின் கொள்கையை, இந்திரா காந்திக்கு எதிராகச் செயல்பட்டு வந்த அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் முழுமையாக ஆதரித்தார்,” எனத் தெரிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
இந்த கசப்பு எந்த அளவிற்கு சென்றது என்றால், 1971 நவம்பரில் இந்திரா காந்தி அமெரிக்கா சென்றிருந்தபோது, ரிச்சர்ட் நிக்சன் அவரை 45 நிமிடங்கள் தனது அலுவலகத்திற்கு வெளியே காத்திருக்க வைத்தார்.
இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய கேத்தரின் ஃபிராங்க், "இந்த அவமானத்திற்கு இந்திரா காந்தி மிகவும் நிதானத்துடன் பழிவாங்கினார்" என்று எழுதுகிறார். அதன்பிறகு நடந்த கூட்டத்தில் பாகிஸ்தானை குறிப்பிடாமல் அமெரிக்க வெளியுறவுக் கொள்கை குறித்து நிக்சனிடம் கூர்மையான கேள்விகளை கேட்டுள்ளார். படிப்பில் நலிவடைந்த ஒரு மாணவனிடம் தன் மன உறுதியை உயர்த்த பேராசிரியர் பேசும் விதத்தில் இந்திரா நிக்சனிடம் பேசினார்.
நிக்சன் எப்படியோ உணர்ச்சியற்ற நாகரீகத்தின் மூலம் தனது கோபத்தை விழுங்கினார். கூட்டத்திற்குப் பிறகு, கிஸ்ஸிங்கர் தனது தலைவரைப் புகழ்ந்து, இந்திரா காந்திக்கு எதிராக முறையற்ற சொற்களைப் பயன்படுத்திப் பேசினார்.
கேரி பாஸ் தனது 'தி பிளட் டெலிகிராம் இண்டியா'ஸ் சீக்ரெட் வார் இன் ஈஸ்ட் பாகிஸ்தான்’ என்ற நூலில், "நிக்சன் தன்னைத் தானே முதுகில் தட்டிக் கொண்டு கிஸ்ஸிங்கரிடம், 'அந்த 'பெண்ணுக்கு' நாங்கள் சிறு பிரச்சனைகளில் சில உதவிகளை அளித்தோம். ஆனால் உண்மையான பிரச்சினைகளில் நாங்கள் ஒரு அங்குலம் கூட உதவவில்லை எனக்கூறினார்,” என எழுதியுள்ளார்.
இதைக் கேட்டு, கிஸ்ஸிங்கர் அவரைப் பார்த்து புன்னகைத்து, "நாங்கள் அவரை எல்லா பக்கங்களிலிருந்தும் எப்படி சுற்றி வளைத்தோம் என்பதை நீங்கள் பார்க்கவில்லையா" எனக் கேட்டார். அதிபர் அவர்களே, எது எப்படியாகிலும், அமெரிக்காவில் என்ன நேர்ந்தது என்பதை அவர் எங்கும் சென்று வெளிப்படையாகப் பேசமுடியாது. நீங்கள் நேரடியாகக் கடுமை காட்டாமல் விட்டது சரியான செயல்தான். இல்லை என்றால், அவர் அதிக உணர்ச்சிவசப்பட்ட நிலையில் இந்தியாவுக்குத் திரும்பியிருப்பார்,” எனக்கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
சீனாவுக்கான தனது இரகசியப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய கிஸ்ஸிங்கர், அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் மற்றும் அவரது ஆலோசகர்களிடம் அந்தப் பயணம் குறித்த விவரங்களை அளித்தார்.
செமர் ஹெர்ஷ் தனது 'தி ப்ரைஸ் ஆஃப் பவர்' புத்தகத்தில், "பாகிஸ்தானை இந்தியா தாக்கினால், பாகிஸ்தானுக்கு உதவ சீனா முன்வரும் என்று கிஸ்ஸிங்கர் கூறினார். இது நடந்தால் இந்தியா சார்பில் சோவியத் யூனியன் களம் இறங்கும். இது போன்ற சூழ்நிலையில், பாகிஸ்தானை இந்தியா தாக்காமல் இருக்கவும், சோவியத் யூனியன் இந்த விஷயத்தில் களமிறங்காமல் இருக்கவும் வேண்டுமென்றால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக அமெரிக்க களமிறங்கவேண்டும் என இந்தியாவும் பாகிஸ்தானை தாக்க நினைக்காமல் இருக்க அமெரிக்கா பாகிஸ்தானுக்கு ஆதரவாக நிற்க வேண்டும் என்றார்,” என எழுதியுள்ளார்.
கிஸ்ஸிங்கரின் இந்தக் கருத்தை அமெரிக்க வெளியுறவுத்துறை ஏற்கவில்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போர் நடந்தால், சீனா தலையிட வாய்ப்பு ஏற்படாமல் இருக்க அமெரிக்கா இந்தியாவை ஆதரிக்க வேண்டும் என்று அவர் நம்பினார்.
இது மூத்த ஆய்வுக் குழுவின் முன் வைக்கப்பட்டபோது, கிஸ்ஸிங்கர் கோபமடைந்தார். அப்போது அவர், “பாகிஸ்தானை ஆதரிக்க வேண்டும் என்று அதிபர் எப்போதும் கூறி வருகிறார். ஆனால் அனைவரும் அதற்கு நேர்மாறாகவே செயல்படுகின்றனர். சில நேரங்களில் நான் ஒரு பைத்தியக்கார விடுதியில் அமர்ந்திருப்பது போல் உணர்கிறேன்,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், AFP
அந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியா சோவியத் யூனியனுடன் நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டபோது கிஸ்ஸிங்கரின் கோபம் மேலும் அதிகரித்தது.
ஆனால் இந்த ஒப்பந்தம் ஒரு வகையில் கிஸ்ஸிங்கரின் சீன ரகசிய பயணத்திற்கு இந்தியாவின் பதில் என்று அமெரிக்கர்களால் யூகிக்க முடியவில்லை. கிஸ்ஸிங்கரின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் வால்டர் ஐசக்சன் தனது புத்தகத்தில், "பாகிஸ்தானின் நண்பராக இருந்த சீனாவுடன் உறவுகளை ஏற்படுத்துவதன் மூலம், அமெரிக்கா இந்தியாவை சோவியத் யூனியனுடன் நெருக்கமாக்கியுள்ளது. இதன் விளைவாக இந்திரா காந்தி அமெரிக்கா வந்தபோது இரு தரப்பிலும் அலட்சியம் காட்டப்பட்டது,” என எழுதியுள்ளார்.
பின்னர், கிஸ்ஸிங்கர், இந்த சந்திப்பு குறித்து எழுதுகையில், தனது 'தி ஒயிட் தௌசண்ட்ஸ் இயர்ஸ்' புத்தகத்தில், "இது எந்த வெளிநாட்டுத் தலைவருடனும் நிக்சனின் மோசமான, மிகவும் துரதிர்ஷ்டவசமான சந்திப்பு," என்று எழுதினார்.
இந்த உரையாடலில் ரிச்சர்ட் நிக்சனை விட ஹென்றி கிஸ்ஸிங்கர் மிகவும் சுறுசுறுப்பான பாத்திரத்தை வகித்து வருகிறார் என்று இந்திரா காந்தி ஆச்சரியப்பட்டார்.
நிக்சன் சில நிமிடங்கள் பேசிவிட்டு கிஸ்ஸிங்கரிடம் திரும்பி, "அது சரியா, ஹென்றி?" என்று கேட்பார். இதற்குப் பிறகு தான் கிஸ்ஸிங்கர் பேசத்தொடங்குவார்.
எப்போதும் நிக்சன் ஏதாவது ஒன்றைப் பேசிவிட்டு, கிஸ்ஸிங்கரிடம், 'நீங்களும் இதைப் பற்றி ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா?' எனக்கேட்பார். இது பற்றி பின்னர் ஒருமுறை குறிப்பிட்ட இந்திரா காந்தி, “நிக்சனிடம் பேசுவதற்குப் பதிலாக கிஸ்ஸிங்கரிடம் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்,” என்றார்.

பட மூலாதாரம், Getty Images
நவம்பர் 22, 1971 அன்று, வங்காளப் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக இந்திய ராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்குள் எல்லையைத் தாண்டியபோது, இந்தச் சம்பவம் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போருக்கு வழிவகுக்கும் என்று நம்பிய உலகின் மிகச் சிலரில் கிஸ்ஸிங்கரும் ஒருவர்.
அதேசமயம் அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் இந்தியாவின் நடவடிக்கைகளில் அதிக கவனம் செலுத்தவில்லை. பாகிஸ்தான் அதிபர் யாஹ்யா கான் கூட போரைத் தவிர்க்கலாம் என்று தான் அப்போதும் நம்புவதாகக் கூறிக் கொண்டிருந்தார்.
டிசம்பர் 3 அன்று அமெரிக்காவில் நடந்த ‘நெருக்கடிக் குழுக்‘ கூட்டத்தில், அமெரிக்க அதிபர் நிக்சன் பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதை வெளியுறவுத் துறை ஏற்கவேண்டும் கிஸ்ஸிங்கர் வலியுறுத்தினார்.
அப்போது பேசிய கிஸ்ஸிங்கர், "ஒவ்வொரு அரை மணி நேரத்திற்கும் நான் ஏன் இந்தியாவை நோக்கி கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்று அதிபரிடம் இருந்து கண்டனங்களை எதிர்கொள்ளவேண்டும்?" எனக்கேள்வி எழுப்பினார். “அதிபருடைய விருப்பத்தை நாம் ஏன் பின்பற்றவில்லை என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது,” என்றும் கூறினார்.
வால்டர் ஐசக்சன் தனது புத்தகத்தில், "கிஸ்ஸிங்கர் நிக்சனின் சார்பாக அறிவுறுத்தல்களை வழங்குவது மட்டுமல்லாமல், இந்தியாவை நோக்கி மிகவும் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க அவரைத் தூண்டினார்," என எழுதுகிறார்.
அவர் டிசம்பர் 5 அன்று நிக்சனிடம், "பாகிஸ்தான் தோற்றால், சோவியத் யூனியனின் பார்வையில் நமது கௌரவம் குறைந்துவிடும்," என்று கூறினார். “அதை சீனர்கள் கூட விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்தியா வெற்றி பெற்றால், அது வேறு இடங்களில் பிரிவினைவாத இயக்கங்களுக்கு வழிவகுக்கும் என்பதுடன் சோவியத் யூனியனும் வேறு பகுதிகளில் எழும் பிரச்னைகளில் தலையிட வழிவகுக்கும்,” என்றார்.
நிக்சனை இரண்டாவது முறை சந்தித்தபோது, அவர் மேலும் வெளிப்படையாக அவரிடம் பேசுகையில், "எந்தச் சூழ்நிலையிலும் ரஷ்யாவின் நண்பருடன் சண்டையிட்டு எங்களுக்கும், சீனாவுக்கும் நண்பராக இருக்கும் ஒருவர் தோற்கடிக்கப்படுவதை நான் விரும்ப மாட்டேன்," எனத்தெரிவித்தார்.

பட மூலாதாரம், NIXON LIBRARY
டிசம்பர் 16, 1971 அன்று, இந்தியா பாகிஸ்தானுடன் போர் நிறுத்தத்தை அறிவித்தபோது, பாகிஸ்தான் உடனடியாக அதை ஏற்றுக்கொண்டது.
இந்திரா காந்தி பாகிஸ்தானுக்கு எதிராக பெரும் நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளாமல் போர் நிறுத்தத்தை அறிவித்தார்.
ஆனால் கிஸ்ஸிங்கர், "சோவியத் அழுத்தத்தின் கீழ் இந்தியா தயக்கத்துடன் இந்த முடிவை எடுத்ததாக நான் நம்புகிறேன்," என்றார். அமெரிக்க ஏழாவது கப்பற்படையை வங்காள விரிகுடாவிற்கு அனுப்புவது மற்றும் அமெரிக்க அதிபரின் உத்தேச சோவியத் பயணத்தை ரத்து செய்வது உள்ளிட்ட அமெரிக்க அழுத்தத்தின் காரணமாக சோவியத் யூனியனின் முடிவுகளும் இருந்தன.
ஆனால் 1971 போரில் பாகிஸ்தானை வெளிப்படையாக ஆதரித்த போதிலும், பாகிஸ்தானின் ஆட்சியாளர்கள் ஹென்றி கிஸ்ஸிங்கரிடம் இருந்து விலகியே இருந்தனர். ஜுல்பிகர் அலி பூட்டோ, பதவியிலிருந்து அகற்றப்பட்டு, தூக்கிலிடப்படும் வரை தொடர்ந்து, அந்தப் போருக்கு ஹென்றி கிஸ்ஸிங்கரை தான் காரணம் என்ற கருத்தையே முன்வைத்து வந்தார்.
அவரது மகள் பெனாசிர் பூட்டோ தனது சுயசரிதையான 'கிழக்கின் மகள்' என்ற நூலில், "கிஸ்ஸிங்கரின் வீழ்ச்சிக்கு தனிப்பட்ட முறையில் என் தந்தை பொறுப்பு,” என்று கூறினார். பெனாசிர் பூட்டோ பாகிஸ்தானின் பிரதமரானபோது, அவர் அமெரிக்காவுக்கு ஆதரவளித்தார். ஆனால் ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு எதிராக தனது தந்தையின் விரோதப் போக்கை எப்போதும் பேணினார்.

பட மூலாதாரம், Getty Images
ஹென்றி கிஸ்ஸிங்கரின் ராஜதந்திர வாழ்க்கையின் மிகப்பெரிய தருணம், அவர் தனது பாகிஸ்தான் பயணத்தின் போது உலகம் முழுவதையும் முட்டாளாக்கிவிட்டு சீனாவுக்குச் சென்றது தான்.
ஜூலை 10, 1971 அன்று, தி நியூயார்க் டைம்ஸின் உள் பக்கங்களில் ஒரு சிறிய மூன்று வரிக் கதை வெளிவந்தது. அதில், “ராவல்பிண்டியின் வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்றிலிருந்து தப்பும் நோக்குடன், நிக்சனின் பாதுகாப்பு ஆலோசகரான ஹென்றி கிஸ்ஸிங்கர் பாகிஸ்தான் நாட்டின் வடக்கு பகுதியின் குளிர்ந்த மலைகளுக்கு இடையே உள்ள நதியாகலியில் நாள் முழுவதும் இருந்தார்,” என எழுதப்பட்டிருந்தது.
அப்போது கிஸ்ஸிங்கரின் உடல்நிலை சற்று சரியில்லாமல் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால், கிஸ்ஸிங்கர் நதியாகலிக்கு செல்லவே இல்லை என்பதுதான் உண்மையான விஷயம். கிஸ்ஸிங்கரின் கார்களின் போலி பாதுகாப்பு வாகனங்கள், சைரன்களின் பெரும் சத்தத்துடன், அமெரிக்கக் கொடிகள் பறக்க, நதியாகலியை நோக்கி நகர்ந்தன. ஆனால் அதில் கிஸ்ஸிங்கர் இல்லை. அவருக்குப் பதிலாக அவரைப் போலவே வேறு ஒருவர் அந்தக் காரில் பயணம் செய்துகொண்டிருந்தார்.
ஹென்றி கிஸ்ஸிங்கர் தனது சுயசரிதையான "தி ஒயிட் ஹவுஸ் இயர்ஸ்" இல், "பாகிஸ்தானில் நான் இறங்கியவுடன் வயிற்று வலியைக் காரணம் காட்டுவது எனது திட்டம்," எனக்குறிப்பிட்டுள்ளார். “தூதரக மருத்துவர் எனக்கு சில மருந்துகளை தருவார். எனது உடல்நிலை இன்னும் சரியாகவில்லை என்ற நிலை உருவாக்கப்படும்.
பாகிஸ்தான் அதிபர் யஹ்யா கான், நதியாகலியில் உள்ள தனது விருந்தினர் மாளிகையில் ஓரிரு நாட்கள் ஓய்வெடுக்குமாறு அறிவுறுத்துவார். இதற்கிடையில் நான் சீனாவுடன் ரகசிய பேச்சுவார்த்தைக்காக பெய்ஜிங்கிற்கு பறந்து செல்வேன் என்பதே எனது திட்டம். ஆனால் இந்த வஞ்சகத்திற்காக கடவுள் என்னை தண்டிக்க முடிவு செய்தார். நான் எனது டெல்லி பயணத்தை முடித்த நேரத்தில், எனக்கு உண்மையில் வயிற்று வலி ஏற்பட்டது. யாரிடமும் சொல்லாமல், எந்த மருத்துவ உதவியும் இல்லாமல் அந்த வலியை தாங்க வேண்டியிருந்தது,” என எழுதியுள்ளார்.

ஜூலை 9, 1971 காலை, கிஸ்ஸிங்கர் அதிகாலை 3:30 மணிக்கு எழுந்தார். அவர் காலை உணவை சீக்கிரம் முடித்துக்கொண்டார்.
அதற்கு முன், பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர் சுல்தான் முகமது கான், பிரியாவிடை பெறுவதற்காக, கிஸ்ஸிங்கரின் விருந்தினர் மாளிகைக்கு தனது தனிப்பட்ட காரில் சென்றடைந்தார்.
சுல்தான் கான் தனது சுயசரிதையான 'நினைவுகள் மற்றும் பிரதிபலிப்புகள்' என்ற நூலில், "அதிகாலையில் அரசு வாகனத்தின் டிரைவரை அழைப்பது மக்களின் கவனத்தை ஈர்க்கும் என்பதால் நான் அரசாங்க காரை பயன்படுத்தவில்லை.
என் மகன் ரியாஸ் இரவில் பயன்படுத்திய காரை எடுத்துச் செல்ல விரும்பினேன். ஆனால், சாவியைக் கண்டுபிடிக்க என்னால் முடியவில்லை. அதனால் நான் அவரிடம் சென்றேன்,” என எழுதியுள்ள அவர், ''அவரை எழுப்பியதும் அவர் முதல் கேள்வியாக அம்மா நலமா எனக்கேட்டார். இவ்வளவு காலையில் டாக்டரிடம் செல்கிறீர்களா என்று அடுத்த கேள்வியை முன்வைத்தார். அவரை திருப்திப்படுத்த, நாங்கள் நதியாகலிக்கு செல்கிறோம் என்று பதிலளித்தேன்.
கண்களை மூடி முணுமுணுத்த அவர், ‘அதிகாலை மூன்று மணிக்கு நாதியாகலியா? உங்கள் தலைமுறை என் புரிதலுக்கு அப்பாற்பட்டது’ என்றார்,” எனத் தெரிவித்துள்ளார்.
சரியாக நான்கு மணிக்கு பாகிஸ்தான் ராணுவ வாகனங்கள் கிஸ்ஸிங்கரை இஸ்லாமாபாத்தில் உள்ள சக்லதா விமான நிலையத்திற்கு அழைத்துச் சென்றன. அவருடன் பாகிஸ்தான் வெளியுறவு செயலாளர் சுல்தான் கானும் உடனிருந்தார்.
பாகிஸ்தானுக்கான அமெரிக்கத் தூதரான ஃபார்லாண்டின் ஆலோசனையின் பேரில், இஸ்லாமாபாத் விமான நிலையத்தில் யாரும் அவரை அடையாளம் கண்டு கொள்ளாதபடி, கிஸ்ஸிங்கர் தனது தலையில் தொப்பி மற்றும் கண்களில் காலை நான்கு மணிக்கு சன்கிளாஸ் அணிந்திருந்தார்.
அந்த விமானத்தை யாஹியா கானின் தனிப்பட்ட விமானி ஓட்டிக்கொண்டிருந்தார். கிஸ்ஸிங்கரின் விமானம் சக்லதா விமான நிலையத்தில் வெளிப்படையாக நிறுத்தப்பட்டிருந்ததால், அதைப் பார்த்த பத்திரிக்கையாளர்களுக்கு கிஸ்ஸிங்கர் இன்னும் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்ற எண்ணம் ஏற்படும்.

பட மூலாதாரம், AFP
கிஸ்ஸிங்கரின் விமானம் மதியம் 12:15 மணிக்கு பெய்ஜிங்கின் ராணுவ விமான நிலையத்தில் தரையிறங்கியபோது, அவரை பொலிட்பீரோவின் மூத்த உறுப்பினர்களில் ஒருவரான மார்ஷல் யே சியென் யிங் வரவேற்றார்.
சரியாக மாலை 4.30 மணியளவில் சீனப் பிரதமர் சௌ என்-லாய், கிஸ்ஸிங்கரைச் சந்திக்க விருந்தினர் மாளிகையை அடைந்தார். அவரது மெலிந்த, வெளிப்படையான முகம் நம்பிக்கையில் துளிர்த்தது. அவர் அழகாக தைக்கப்பட்ட மாவோடை அணிந்திருந்தார்.
இது குறித்து தனது நூலில் எழுதிய கிஸ்ஸிங்கர், "அவர் தனது வசீகரமான புன்னகையால் எங்களை கவர்ந்தார். அவர் சீன மொழியில் பேசினாலும் ஆங்கில மொழியை நன்றாகப் புரிந்து கொண்டார் என்ற எண்ணமும் எனக்கு ஏற்பட்டது. நான் விருந்தினர் மாளிகையின் வாசலை அடைந்து அவரை வரவேற்க கையை நீட்டினேன். 27 ஆண்டுகளுக்கு முன்பு, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆலன் ஃபாஸ்டர் டல்லெஸ் தனது நீட்டிய கையை ஏற்க மறுத்ததை அவரும் நானும் நினைவு கூர்ந்தோம்,” எனத் தெரிவித்துள்ளார்.
"சௌ என் லாய்க்கு தத்துவம், வரலாற்று ஆய்வு மற்றும் நகைச்சுவையான பேச்சுத்திறன் ஆகியவற்றில் நிகரில்லை என்பதை சிறிது நேரத்தில் நான் கண்டுபிடித்தேன். அமெரிக்க நிகழ்வுகள் மற்றும் என்னைப் பற்றிய அவரது அறிவு ஆச்சரியமாக இருந்தது." கிஸ்ஸிங்கருக்கும் சௌ என்-லாய்க்கும் இடையிலான சந்திப்பு பல மணி நேரம் நீடித்தது.

பட மூலாதாரம், AFP
முழு உரையாடலின் போதும், சௌ என் லையின் முன் ஒரு சிறிய காகிதம் மட்டுமே வைக்கப்பட்டது, அதில் அவர் தந்தி மொழியில் சில வார்த்தைகளை எழுதியிருந்தார்.
கிஸ்ஸிங்கர் பின்னர் இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், "எங்களுக்கு இடையேயான உரையாடல் அரசியல் தத்துவத்தின் இரண்டு பேராசிரியர்கள் ஒருவருக்கொருவர் பேசுவது போல் இருந்தது," என்றார். இந்த நீண்ட பயணத்தின் போது, குறிப்பாக தனது சீனப் பயணத்திற்காக இரண்டு சுத்தமான சட்டைகளை ஒதுக்கி வைக்குமாறு கிஸ்ஸிங்கர் தனது உதவியாளர் டேவ் ஹல்பெரினுக்கு அறிவுறுத்தியிருந்தார்.
ஆனால் அவர் கிஸ்ஸிங்கரை விட்டு வெளியேறி நதியாவாலிக்குச் செல்லும்போது, கிஸ்ஸிங்கர் அந்த சட்டைகளை இஸ்லாமாபாத்தில் விட்டுச் சென்றதை அவர் அறிந்தார். கிஸ்ஸிங்கருக்கு விமானத்திலேயே இது பற்றி தெரிய வந்தது. பெய்ஜிங்கில் தரையிறங்குவதற்கு முன்பு அவர் தனது சட்டையை மாற்ற முயன்றபோது, அது அவரது சூட் கேஸில் இல்லை என்பதைக் கண்டுபிடித்தார்.
இது குறித்து எழுதிய கிஸ்ஸிங்கர், "ஆறடி இரண்டு அங்குல உயரமுள்ள ஜான் ஹால்ட்ரிட்ஜிடம் இருந்து ஒரு சட்டையை நான் கடனாக வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்தக் காலகட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை நீங்கள் கவனமாகப் பார்த்தால், அவற்றில் எனது கழுத்து தெரியவில்லை, ஏனென்றால் ஜானின் கழுத்துக்கு ஏற்றவாறே அந்த சட்டை இருந்தது. அவர் என்னை விட ஒரு அங்குலம் குறைவாக இருந்தார்," எனத்தெரிவித்துள்ளார்.
நிக்சனின் சீனப் பயணத்துக்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்ட கிஸ்ஸிங்கர், ஜூலை 11 அன்று இஸ்லாமாபாத் திரும்பினார். விமான நிலையத்திற்கு முன்பு, அவர் நதியாகலியில் இருந்து திரும்புவது போல் தோன்றும் வகையில் அவரை நதியாகலிக்கு அழைத்துச் சென்றனர்.
மாலை ஆறு மணிக்கு கிஸ்ஸிங்கர் அமெரிக்கா திரும்புவதற்காக தனது விமானத்தில் ஏறினார். நிக்சன் அவருக்காக அமெரிக்காவில் ஆவலுடன் காத்திருந்தார். கிஸ்ஸிங்கர் விமானத்தில் ஏறியவுடனேயே முன்னரே தீர்மானிக்கப்பட்ட ‘யுரேகா’ என்ற குறியீட்டை அனுப்பியிருந்ததால், பயணம் வெற்றியடைந்தது என்பது அவருக்குத் தெரியும்.
ஹென்றி கிஸ்ஸிங்கர் சீனாவுக்கு ரகசியமாக வந்திருப்பதாக அமெரிக்கா அறிவிக்க இருந்த நாளில், அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் லக்ஷ்மிகாந்த் ஜாவுக்கு அழைப்பு வந்தது. அப்போது அவர் வீட்டுக்கு வெளியே இருந்தார். ஆங்கிலம் தெரியாத அவரது இந்தியப் பாதுகாப்புக் காவலர் அவரிடம், 'கிஷன் சந்தர்ஜி தொலைபேசியில் தொடர்புகொண்டு சாஹேப் பகதூரைப் பற்றிக் கேட்டிருந்தார்,' என்றார்.
புபுல் ஜெய்கர் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று நூலில் இது குறித்து எழுதும் போது, “இந்த கிஷன் சந்தர் யார் என்று ஜாவுக்கு புரியவில்லை. அவர் கொடுத்திருந்த எண்ணை டயல் செய்யும்படி தனது செயலாளரிடம் கூறினார். அப்போது தான் அவரது பாதுகாவலர் கிஷன் சந்தர் என நினைத்துக் கொண்டிருந்த கிஸ்ஸிங்கரின் போன் என்பது தெரியவந்தது. அந்த நேரத்தில் கிஸ்ஸிங்கர் லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்தார்,” எனக்குறிப்பிட்டுள்ளார்.
இன்று இரவு 8:30 மணிக்கு நீங்கள் எங்கே இருப்பீர்கள் என்று இந்திய தூதரிடம் கிஸ்ஸிங்கர் கேட்டார். அதற்குப் பதில் அளிக்கையில் இரவு உணவிற்கு வருவதாக ஜா கூறினார். கிஸ்ஸிங்கர் அவரை, சரியாக 8:30க்கு அழைப்பதாகக் கூறினார். அழைப்பு என்னவாக இருக்கும் என்று அவர் அப்போது தெரிவிக்கவில்லை. கிஸ்ஸிங்கரின் அழைப்பு 8.30க்கு வந்ததும், ஜா தொலைபேசியை எடுத்துப் பேசினார்.
அப்போது பேசிய கிஸ்ஸிங்கர், "அரை மணி நேரம் கழித்து எனது இந்தியா மற்றும் பாகிஸ்தான் பயணத்தின் போது, நான் ரகசியமாக சீனாவுக்குச் சென்றிருந்தேன் என்று அதிபர் நிக்சன் அறிவிக்கப் போகிறார். அதிபர் நிக்சன் அப்போது தனது செய்திகளில் ஒன்றை பிரதமர் இந்திரா காந்திக்கு தெரிவிக்க விரும்புகிறார். நீங்கள் அதை இப்போது எழுதிக்கொள்ளுங்கள். சீனாவுடன் அமெரிக்கா அரசியல் உறவை ஏற்படுத்தப் போவதாக அதிபரின் அந்த செய்தியில் கூறப்பட்டிருக்கும். இதற்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்தால், அது விரோதப் போக்காகக் கருதப்படும். அதிபர் நிக்சனை இந்தியா எதிர்க்கும் என்று கருதுகிறார்,” எனத் தெரிவித்தார்.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கை குறித்து இந்திரா காந்தி எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அவர் அமைதியாக மாஸ்கோவிற்கு ஒரு செய்தியை அனுப்பினார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு சரியாக ஒரு மாதத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 9, 1971 அன்று, சோவியத் யூனியனுடன் இந்தியா நட்புறவு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












