10,000 ஆண்டுகளுக்கு முன் கூரிய நகங்களால் பாறையைக் குடைந்து ராட்சத கரடிகள் உருவாக்கிய சுரங்கப் பாதைகள்

பெரும் கரடிகள் தோண்டிய சுரங்கப்பாதைகள்

பட மூலாதாரம், Heinrich Theodore Frank

    • எழுதியவர், சாரா ப்ரவுன்
    • பதவி, பிபிசி நியூஸ்

2009-ம் ஆண்டில் பிரேசிலின் தெற்கு பகுதியில் உள்ள தனது சோளத் தோட்டத்தில் ஒரு விவசாயி டிராக்டர் ஓட்டிக் கொண்டிருந்தபோது, திடீரென தனது டிராக்டர் தரைக்குள் புதையத் தொடங்கியதை உணர்ந்தார். அவர் டிராக்டரை நிறுத்திவிட்டு வெளியே பார்த்தபோது, ட்ராக்டரின் ஒரு சக்கரம் மண்ணுக்குள் ஆழமாக புதைந்திருந்தது.

பூமிக்கு அடியில் உள்ள குகை போன்ற ஏதோ ஒன்றின் மேல் பகுதியை அவரது டிராக்டர் உடைத்திருப்பது போல் தெரிந்தது. இதை அறிந்து அங்கு வந்த ஆராய்ச்சியாளர்கள், தரையில் இருந்து சுமார் 2 மீட்டர் உயரம், 2 மீட்டர் அகலம், 15 மீட்டர் நீளம் உள்ள நிலத்தடி சுரங்கத்தை கண்டுபிடித்தனர். குகை போன்ற இந்த சுரங்கப்பாதை விவசாயியின் வீட்டுக்கு அடியிலேயே இருந்தது. சுவர்களில் ஆழமாகப் பதிந்திருந்த கீறல்கள், இந்த சுரங்கப்பாதையை உருவாக்கியது மனிதன் அல்ல என்பதைக் குறித்தன.

தொல்லுயிரியல் துறையில் இன்றுவரை விளக்கப்படாத ஒரு புதிரான விஷயம் இது. அந்த விவசாயி கண்டுபிடித்தது ஒரு மெகாஃபானா பாலியோபர்ரோவை. அதாவது பெரும் பாலூட்டி விலங்குகளால் சுரண்டப்பட்ட குகை அல்லது சுரங்கப்பாதை என்று பொருள்.

விவசாயி வீட்டின் கீழ் இருப்பது ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலத்து சுரங்கப்பாதை ஆகும். இது சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரும் நிலக்கரடி அல்லது பெரும் அர்மடில்லோ என்றழைக்கப்பட்ட விலங்கால் தோண்டப்பட்டது என்று ஒரு புவியியலாளரும் அந்த சுரங்கத்தை நேரில் பார்த்த விஞ்ஞானியுமான லூயிஸ் கார்லோஸ் வெய்ன்ஷுட்ஸ் முடிவு செய்தார்.

இந்த பெரும் நிலக்கரடிகள், ஒரு கட்டுரையில் "யானை அளவு பெரிய எலி" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இன்றைய அவசரமற்ற, மரத்தில் வாழும் கரடிகளிடமிருந்து அவை மிகவும் வேறுபட்டவை. அவை 4 மீட்டர் நீளம் வரை வளர்ந்து, நான்கு கால்களில் நடந்தன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு அவை இருகால்களில் நடக்க முடியும் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன. சுமார் 100 வெவ்வேறு இன கரடிகள் அமெரிக்காவில் 1.5 கோடி முதல் 10,000 ஆண்டுகள் முன்பு சுற்றி திரிந்துள்ளன. அதே போன்று கார் அளவு பெரிய அரமடிலோக்களும் பிரேசிலில் பாறைகள் வழியாக நீண்ட சுரங்கங்களை தோண்டின.

பெரும் கரடிகள் தோண்டிய சுரங்கப்பாதைகள்

பட மூலாதாரம், Alamy

2015 ஆம் ஆண்டில் ரோண்டோனியாவின் வடக்கு மாகாணத்தில் பெரிய கரடிகள் தோண்டிய 100 மீட்டர் நீளமான சுரங்கப்பாதை கண்டுபிடிக்கப்பட்டதாக ஒரு செய்தித்தாளில் பார்த்தபோதுதான் நான் முதன்முதலில் பாலியோபர்ரோக்கள் பற்றி கேள்விப்பட்டேன். இது அமேசான் காடுகளில் கண்டுபிடிக்கப்பட்ட முதல் பாலியோபர்ரோ ஆகும். இருப்பினும், பிரேசிலின் எதிர்முனையில், சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் ஒரு சுரங்கத்தை நேரடியாகப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்தப் பயணத்தின் போது, சாண்டா கேட்டரினா மற்றும் ரியோ கிராண்டே டோ சுல் மாகாணங்களில் பரந்து கிடக்கும் சதர்ன் கான்யான் பாத் ஜியோ பூங்காவை பார்வையிட்டேன். அங்கு பல பாலியோபர்ரோக்கள் உள்ளன. சாண்டா கேட்டரினா மாகாணத்தில் உள்ள காடுகள் நிறைந்த பள்ளத்தாக்கு வழியாக ஒரு மணிநேரம் ட்ரெக்கிங் செய்த பிறகு, என் இலக்கை அடைந்தேன்: பெரிய, பழுதடைந்த பாறையில் செதுக்கப்பட்ட 2 மீட்டர் உயரமுள்ள சுரங்கப்பாதை. உள்ளே இருட்டாகவும் குளிராகவும் இருந்தது. சுவர்களில் தனித்துவமான நகங்களின் நீண்ட கீறல்கள் காணப்பட்டன. அது பெரிய அளவிலான முயல் பொந்து போல இருந்தது.

புவியியலாளரும் பாலியோபர்ரோ நிபுணருமான ஹென்ரிச் தியோடர் ஃபிராங்க், இந்த சுரங்கப்பாதைகளில் ஏதேனும் ஒன்றில் நுழைந்தால், "நீங்கள் ஒரு திறந்த புத்தகத்தைக் பார்க்கிறீர்கள், இது மனிதர்களால் உருவாக்கப்படவில்லை என்று உணர்கிறீர்கள்" என்று எனக்குக் கூறினார். அவர் சரியாக தான் சொன்னார்.

தற்போது பெரும்பாலான பாலியோபர்ரோக்கள் மணல் திட்டுகளால் நிரம்பியுள்ளன. இருப்பினும் சில சுரங்கப்பாதைகள், நான் பார்வையிட்டது போலவும் விவசாயி கண்டுபிடித்தது போலவும் முழுவதுமாக அல்லது பகுதி அளவில் தெளிவான பாதை கொண்டதாக உள்ளன.

தெற்கு மற்றும் தென்கிழக்கு பிரேசிலில் நூற்றுக்கணக்கான இந்த வகை சுரங்கப்பாதைகள் அடையாளம் காணப்பட்டன. அதன் பிறகு, பாலியோபர்ரோக்களில் ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. கடந்த 15 ஆண்டுகளில், இந்தப் பகுதியில் 1,500 க்கும் மேற்பட்டவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இது உலகிலேயே மெகாஃபானா பாலியோபர்ரோக்கள் அதிக அளவில் உள்ள இடமாக அமைந்துள்ளது.

பிரேசிலின் தெற்கு பகுதியில் ஏன் இவ்வளவு அதிகமான சுரங்கப்பாதைகள் உள்ளன என்பது யாருக்கும் தெரியாது. பெரும்பாலானவை சாண்டா கேட்டரினா மற்றும் ரியோ கிராண்டே டோ சுல் மாநிலங்களில் உள்ளன.

ஆனால் மற்றொரு தெற்கு மாநிலமான மினாஸ் ஜெறாயிஸ், 340 மீட்டர் நீளமுள்ள பாலியோபர்ரோ உள்ளது. அது மட்டுமல்லாமல், 40 மீட்டர் நீளமுள்ள ஆறு சுரங்கப்பாதைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவற்றில் 10 மீட்டர் அகலம் மற்றும் 4 மீட்டர் உயரமுள்ள அறைகளும் காணப்பட்டன. இந்த ஆண்டு ஜூன் மாதத்தில், மாகாணத்தின் மிகப்பெரிய பாலியோபர்ரோவான இந்த இடம் மனித நடவடிக்கைகளிலிருந்து பாதுகாக்க அதிகாரப்பூர்வ பாதுகாப்பின் கீழ் கொண்டு வரப்பட்டது.

பெரும் கரடிகள் தோண்டிய சுரங்கப்பாதைகள்

பட மூலாதாரம், Heinrich Theodore Frank

தென் அமெரிக்கா முழுவதும் ஒரு சில பாலியோபர்ரோக்கள் காணப்படுகின்றன, இருப்பினும் வடக்கு அமெரிக்காவில் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. "பெரும் பாலூட்டிகள் கண்டம் முழுவதும் சுற்றித்திரிந்தன. ஆனால் ஏன் வடக்கில் சுரங்கப்பாதைகள் காணப்படவில்லை என்பது தெரியவில்லை. மற்ற இடங்களிலும் சுரங்கப்பாதைகள் இருக்க வேண்டும்" என்று ஃபிராங்க் கூறினார்.

பிரேசிலின் தெற்கில் பாலியோபர்ரோக்கள் அதிக அளவில் உள்ளதற்கு காரணம், இந்த பகுதி தொல்லுயிரியல் ஆராய்ச்சிக்கு ஒரு மையமாக இருப்பதால்தான் என்று கூறுகின்றனர். ஆனால் மற்றவர்கள் இந்த கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. அமெரிக்காவில் உள்ள வெவ்வேறு இனங்கள் மத்தியில் வெவ்வேறு நடத்தைகளை பாதிக்கும் புவியியல் பரிணாமத்தை சுட்டிக்காட்டுகின்றனர். இது மெகாஃபானா காலத்தில் தற்போதையதை விட 10C வரை குளிராகவும், மிகவும் வறண்டதாகவும் இருந்தது.

பல ஆண்டுகளாக, உள்ளூர்வாசிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்த சுரங்கப்பாதைகள் பழங்கால நாகரிகங்களால் கட்டப்பட்டவை என்றும், சுவரில் உள்ள கீறல்கள் கோடரியால் செய்யப்பட்டவை என்றும் நம்பினர். சில பாலியோபர்ரோக்கள் பாறை ஓவியங்களைக் கொண்டுள்ளன, எடுத்துக்காட்டாக, சாண்டா கேட்டரினா மாகாணத்தில் உள்ள டோகா டோ டுட்டு ("அர்மடிலோ பர்ரோ"), அதன் சுவர்களில் சூரியனிலிருந்து வரும் கதிர்கள் மற்றும் மலைகள் போல் கருதப்படும் முக்கோணங்களின் குழுக்கள் செதுக்கப்பட்டுள்ளன.

ஆனால் இந்த கலை பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது, வரையப்படவில்லை என்பதால், அது எப்போது உருவாக்கப்பட்டது என கண்டறிவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது என்று தொல்லியல் நிபுணர் லிசெட் டயஸ் டி ஒலிவேரா கூறினார். பாறை கீறல்களை யார் செய்தார்கள் மற்றும் அவற்றின் அர்த்தம் என்ன என்பது யாருக்கும் தெரியாது.

பாலியோபர்ரோக்கள் அறிவியல் பூர்வமாக அடையாளம் காணப்படுவதற்கு முன்பே பிராந்திய பூர்வகுடி சமூகங்கள் அவற்றின் இருப்பை அறிந்திருந்தன. அவர்களின் வாய்வழி கதைகளில் சுரங்கப்பாதைகள் குறிப்பிடப்படுகின்றன. ரியோ கிராண்டே டோ சுல் பகுதியை பூர்வீகமாக கொண்டவர்கள் கைங்காங் மக்கள். ஒரு பெரிய வெள்ளத்தினால் அவர்களின் மூதாதையர்களை மலை உச்சிகளுக்கு நீந்தி செல்ல வேண்டியிருந்தது.

அங்கு அவர்கள் இறுதியில் தங்குமிடத்திற்காக மலைகள் வழியாக தங்கள் பாதையை தோண்டியெடுத்தனர். கைங்காங்கின் பிற கதைகள், பாலியோபர்ரோக்கள் மெகாஃபானாவால் செய்யப்பட்டவை என்று அவர்களுக்கு தெரியும் என்பதைக் குறிக்கிறது. குழந்தைகளுக்கான நாட்டுப்புற கதை, ஒரு அர்மடிலோ உருவாக்கிய ஒரு குழியில் இறங்கிய ஒரு குடும்பத்தின் கதையை கூறுகிறது.

அந்த சுரங்கத்தினுள் இருக்கும் அதிக அளவிலான உணவை சாப்பிடுவதற்காக உள்ளே சென்றுள்ளனர். அப்போது அவர்களின் கயிற்றை ஒரு "வெள்ளை நபர்" (பூர்வகுடி அல்லாத ஒருவருக்கான பெயர்) துண்டித்துவிடவே அவர்கள் நிலத்துக்கு அடியிலேயே சிக்கிக் கொள்ள அவர்களின் நிலத்தை அந்த வெள்ளை நபர் எடுத்துக் கொண்டார் என்று அதை கூறுகிறது.

பெரும் கரடிகள் தோண்டிய சுரங்கப்பாதைகள்

பட மூலாதாரம், Heinrich Theodore Frank

ஒவ்வொரு கதையிலும் வேறுபாடுகள் உள்ளன. "கைங்காங் மக்களுக்கு, அவை கதைகள் இல்லை, ஏனெனில் தங்கள் மூத்த பூர்வகுடி மக்களால் சொல்லப்படும் அனைத்தையும் அவர்கள் உண்மை என்று கருதினர்" என்று ரியோ கிராண்டே டோ சுல் பெடரல் பல்கலைக்கழகத்திற்கான ஆய்வுக் கட்டுரையில் க்ளாடியா அர்சி எழுதினார்.

சுரங்கப்பாதைகளில் ஜேசுயிட்டுகள் விட்டுச் சென்ற செல்வங்கள் உள்ளன என்பது பாலியோ பர்ரோக்களுடன் இணைக்கப்பட்ட மற்றொரு கோட்பாடு ஆகும். இங்கு இருப்பதாக கூறப்படும் செல்வத்தை தேடி வந்தவர்கள் மண்ணையும் தூசியும் தவிர வேறு எதுவும் கண்டுபிடிக்கவில்லை.

"பொக்கிஷம் தேடுபவர்கள் தொல்லியல் ஆராய்ச்சிக்கு எதிரிகள் தான். அவர்கள் மண்ணை கலைத்துவிடுகிறார்கள். மேல் இருக்கும் மண் கீழும், கீழ் இருக்கும் மேலும் வந்துவிடுகிறது. எனவே புதியது பழையதாகிறது, பழையது புதியதாகிறது," என்று ஒலிவேரா கூறினார். இந்த சுரங்கப்பாதைகள் பற்றி மேலும் அறிய உதவும் கூடுதல் தடயங்களைத் தேட மணல் படிவுகளைப் படிப்பதை இது சிக்கலாக்குகிறது என்று கூறினார்.

பெரிய அளவிலான கட்டுமானங்களை தோண்டுவதற்கான உயிர் இயக்கவியல் முறைகளை என்னவென்று விளக்கும் சான்றுகள் சுரங்கப்பாதைகளில் இருக்கலாம். அவற்றை கண்டறிய, தற்போது சாண்டா கேட்டரினாவில் உள்ள சுரங்கப்பாதைகளின் வடிவங்களை 3D-வரைபடமாக்கி வருகிறார். மேலும் அவற்றை உருவாக்கிய இனங்களை அடையாளம் காண உதவும் பழைய முடியின் தடயங்களைத் தேடுகிறார். "இது இன்னும் ஒரு புதிய ஆய்வு, இந்த துறையில் இன்னும் பல ஆண்டுகள் ஆராய்ச்சி உள்ளது," என்று அவர் உற்சாகமாகக் கூறினார்.

பெரும் கரடிகள் தோண்டிய சுரங்கப்பாதைகள்

பட மூலாதாரம், Heinrich Theodore Frank

இந்த முடிவுகள் ஏன் இந்த விலங்குகள் இவ்வளவு பெரிய சுரங்கப்பாதைகளை உருவாக்கின என்பதற்கான ஒளியைத் தரக்கூடும். பெரும்பாலான விஞ்ஞானிகள், இது இளம் குஞ்சுகளை பாலூட்டுவதற்கு, உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவதற்கு அல்லது மிக நீண்ட தூக்கத்திற்காக இருந்திருக்கலாம் என்று கூறுகிறார்கள். இருப்பினும் சரியான காரணம் இன்னும் ஒரு புதிராகவே உள்ளது.

ஒவ்வொரு சுரங்கப்பாதையும் நூற்றாண்டுகள் அல்லது ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உருவாக்கப்பட்டதாக நிபுணர்கள் சந்தேகிக்கின்றனர். இது கரடிகள் மற்றும் அரமடிலோக்கள் சமூக குடும்பக் குழுக்களில் வாழ்ந்ததைக் குறிக்கிறது. "ஒவ்வொரு தலைமுறையும் இந்த சுரங்கத்தை தோண்டி வந்துள்ளன. எனவே அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர்கள் ஒரு பெரிய குகையை உருவாக்கினர்," என்று ஃபிராங்க் கூறினார்.

பெரிய அரமடிலோக்கள் மற்றும் பெரிய கரடிகள் இரண்டும், "தங்கள் கைகளில் மிகைப்படுத்தப்பட்ட வலிமையை கொண்டிருந்திருக்க வேண்டும்" கோடரியால் கூட வெட்ட முடியாத கடினமான பாறைகளையும் மணல் திட்டுகளையும் அவைகள் துளையிட்டும் திறன் கொண்டிருந்தன என்று வெய்ன்ஷுட்ஸ் கூறினார். ஆர்வத்துடன், நான் ரியோ டி ஜனீரோவில் உள்ள பூமி அறிவியல் அருங்காட்சியகத்திற்குச் சென்று புதைபடிவமாக்கப்பட்ட பெரும் கரடிகளின் எலும்புக் கூட்டைப் பார்த்து அதன் அளவைப் புரிந்து கொள்ளச் சென்றேன். அதன் நீண்ட மண்டை ஒரு குதிரையின் அளவு இருந்தது. அதன் வளைந்த நகங்கள் என் நீட்டிய கையை விட நீண்டதாக இருந்தது.

நான் நகங்களை பிடித்தபோது, என் எண்ணங்கள் சுவரில் ஆழமான கீறல்கள் இருந்த பாலியோபர்ரோவுக்குத் திரும்பின. இந்த பண்டைய வீடுகளின் உண்மையான செல்வங்கள். கடந்த காலத்தின் நில கரடிகள் மற்றும் பெரிய அரமடிலோக்கள் மறைந்து நீண்ட காலமாகி விட்டாலும், அவற்றின் கதைகள் தெற்கு பிரேசிலில் என்றென்றும் குறிக்கப்பட்டுள்ளன. இன்று நமக்கு மிகவும் மர்மமான ஒரு உலகத்தை அவை உயிர்ப்பித்துள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)