குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வது சரியா?

குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதுதான் சரியா?

பட மூலாதாரம், Getty Images

சமீபத்தில், இத்தாலியின் வடக்கு நகரமான பாவியாவில், 75 வயதான மூதாட்டி ஒருவர், தனது மகன்களை வீட்டை விட்டு வெளியேற்றுமாறு நீதிமன்றத்தை அணுகியுள்ளார்.

அவரது மகன்களில் ஒருவரது வயது 40, மற்றவருக்கு வயது 42. தனித்தனியாக வாழுமாறு தனது மகன்களிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் அவர்கள் செவிசாய்க்கவில்லை என அந்தப் பெண் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

இரு மகன்களும் டிசம்பர் 18ஆம் தேதிக்குள் வீட்டை காலி செய்ய வேண்டுமென்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தீர்ப்பை வழங்கும்போது, ​​​​"குழந்தைகளைப் பராமரிப்பது பெற்றோரின் பொறுப்பு என்பதால் ஆரம்பத்தில் மகன்கள் தங்கியிருக்கலாம். ஆனால், இப்போது அவர்கள் 40 வயதுக்கு மேல் இருப்பதால், அந்த வாதத்தை தற்போது முன்வைக்க முடியாது," என நீதிமன்றம் கூறியது.

குழந்தைகள் வயது வந்தவுடன் பெற்றோரின் வீட்டைவிட்டு வெளியேற வேண்டும் என எதிர்பார்க்கும் நாடுகளில், இந்த முடிவு புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதுதான் சரியா?

பட மூலாதாரம், Getty Images

குழந்தைகள் எந்த வயதில் பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழத் தொடங்க வேண்டும், வயது அல்லது நிதி நிலைமையின் அடிப்படையில் இந்த முடிவை எடுக்க வேண்டுமா என்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.

இந்தியா உட்படப் பல நாடுகளில், ஒரே வீட்டில் பல தலைமுறைகள் வாழ்வது பொதுவானது. ஆனால், சில நாடுகளில் குழந்தைகள் பெரியவர்கள் அல்லது பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்கும்போது பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழ வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு செய்ய முடியாதவர்கள், அந்தந்த நாட்டில் சமூக அழுத்தங்களையும் அவதூறுகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.

உதாரணமாக, இத்தாலியில் பெற்றோருடன் வீட்டில் வசிக்கும் பெரியவர்களின் எண்ணிக்கை அதிகம்.

பிபிசி சவுண்டின் போட்காஸ்ட் ' விமன்ஸ் ஹவர் ' (BBC Sound’s Podcast- Women Hour) தொகுப்பாளினி கிருபா, அப்படிப்பட்டவர்களை அங்கு பெரிய குழந்தைகள் என்று சொல்லி கிண்டல் செய்வதாகக் கூறினார்.

பெற்றோரிடமிருந்து பிரிந்து வாழும் வழக்கம்

குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதுதான் சரியா?

பட மூலாதாரம், Getty Images

ஷிம்லாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர் ஸ்னேஹ் பாரத் கூறுகையில், “மேற்கத்திய கலாசாரத்தில் சுயசார்பு மற்றும் சுதந்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது, மேலும் குழந்தைகளும் அதே வழியில் சமூகமயமாக்கப்படுகிறார்கள்.

"மேற்கத்திய நாடுகளில், குழந்தைகள் வயது வந்தவுடன் அவர்களைப் பிரிக்கும் பாரம்பரியம் உள்ளது, இதனால் அவர்கள் சுயசார்புடையவர்களாக ஆக்கப்படுவார்கள்," என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "அங்கு வயது வந்த குழுந்தைகள் தங்கள் பொறுப்புகளை ஏற்கும் திறன் பெற்றுள்ளனர் என்று நம்புகின்றனர். குழந்தைகளும் பெரியவர்களாக மாறும்போது தங்கள் வாழ்க்கையில் யாரும் தலையிடாதபடி சுதந்திரமாக வாழ விரும்புகிறார்கள்," என்றார்.

இத்தாலியை சேர்ந்த பிபிசி இணை ஆசிரியரான அட்ரியானா அர்பானோ, 'பெண்கள் நேரம்' போட்காஸ்டில்(Podcast), இத்தாலியில் பல பெரியவர்கள் நீண்டகாலமாக பெற்றோருடன் வாழ்வதற்கு பொருளாதாரமும் ஒரு காரணம் எனக் குறிப்பிட்டார்.

“என் வயதில் இருக்கும் பெரும்பாலானவர்கள் தங்கள் பெற்றோரின் வீட்டில் வசிக்கின்றனர். இத்தாலியில் குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் நீண்ட காலம் வாழ்வது மிகவும் பொதுவானது.

இதற்குப் பின்னால் கலாசார காரணங்களைவிட பொருளாதார காரணங்கள் அதிகம். நல்ல சம்பளத்துடன் நிரந்தர வேலை கிடைப்பது எளிதல்ல. அத்தகைய சூழ்நிலையில், அவர்கள் தன்னிறைவு பெறும் வரை பெற்றோருடன் இருக்கிறார்கள்,” என்றார் 29 வயதான அர்பானோ.

பெரியவர்கள் ஏன் பெற்றோருடன் வாழ்கிறார்கள்?

குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதுதான் சரியா?

பட மூலாதாரம், Getty Images

இந்த நிலை, இத்தாலியில் மட்டுமல்ல. இந்தியாவின் கிராமம் மற்றும் நகரங்களிலும் இதே நிலைதான்.

இந்தியாவில் பல தலைமுறைகள் ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்வதற்கு பொருளாதார காரணங்கள் மட்டுமல்ல, சில கலாசார காரணங்களும் உள்ளன என்கிறார் பேராசிரியர் ஸ்னேஹ் பாரத்.

"பல தலைமுறைகள் ஒன்றாக வாழும் கூட்டுக் குடும்பங்கள், இந்திய கலாசாரத்தின் ஒரு பகுதி. அத்தகைய குடும்பங்களில், அனைத்து உறுப்பினர்களும் பொருளாதார, சமூக மற்றும் மனநல பாதுகாப்பைப் பெறுகிறார்கள். குடும்பத்தின் பெரியவர்கள் குழந்தைகளைக் கவனித்துக் கொள்கிறார்கள், இளைஞர்கள் தங்கள் பெரியவர்களைக் கவனித்துக் கொள்கிறார்கள்,” என்றார் பேராசிரியர் ஸ்னேஹ் பாரத்.

குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகும் பெற்றோருடன் வாழ வேண்டியதற்குப் பல காரணங்கள் உள்ளன என்கிறார் பேராசிரியர் ஸ்னேஹ் பாரத்.

“உதாரணமாக, திருமணத்திற்குப் பிறகு மணமகள் வழக்கமாக தனது மாமியார்களுடன் வாழச் செல்வார்கள். இது பொதுவாக மூதாதையர் வீடு அல்லது பூர்வீக சொத்து என்பதன் காரணமாக மக்கள் ஒன்றாக வாழ்கிறார்கள்,” என்றார்.

பொற்றோருக்கு தொல்லை கொடுக்கும் வளர்ந்த குழந்தைகள்

குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதுதான் சரியா?

பட மூலாதாரம், Getty Images

பிபிசியின் ஆதர்ஷ் ரத்தோரிடம் பேசிய டெல்லி உயர்நீதிமன்ற வழக்கறிஞர் பிரணாப் கப்ரு, இந்தியாவில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பெரியவர்களாகும் வரை அவர்கள் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

"சமூக நெறிமுறைகள் வேறுபட்டிருக்கலாம், ஆனால் ஒரு குழந்தை முதிர் வயதை அடையும் வரை பெற்றோரிடம் பராமரிப்பு கேட்கலாம் என்று சட்டம் கூறுகிறது," என்றார்.

இத்தாலியில் வயதான பெண் ஒருவர் தனது மகன்களின் பொறுப்பை ஏற்க முடியாமல் நீதிமன்றத்திற்குச் சென்றுள்ளார்.

பிபிசியின் இணை ஆசிரியர் அட்ரியானா அர்பானோ கூறுகையில், “அந்தப் பெண்ணின் இரு மகன்களும் வேலை செய்தார்கள். ஆனால் வீட்டுச் செலவுகளுக்கோ மற்ற வேலைகளுக்கோ உதவவில்லை. அவர்கள் தாய்க்கு சுமையாக இருந்தார்கள்,” என்றார்.

இந்தியாவிலும் பெற்றோருடன் இதுபோன்ற நடத்தைகள் அதிகரித்து வருகின்றன. வழக்கறிஞர் பிரணவ் கப்ரு கூறுகையில், பல பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் சுரண்டல்களால் சோர்ந்துபோய், மூத்த குடிமக்கள் சட்டத்தின் கீழ் மூத்த குடிமக்கள் தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்கிறார்கள்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில் சிலர் வயதான மற்றும் ஆதரவற்ற பெற்றோரின் சொத்துகளைக் கையகப்படுத்துவது அல்லது அவர்களைக் கவனிக்காமல் இருப்பது காணப்படுவதாக அவர் கூறுகிறார்.

இதுபோன்ற சூழ்நிலை ஏற்பட்டால், பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டை விட்டு வெளியே அனுப்பலாம் அல்லது அவர்களிடமிருந்து பராமரிப்புக்கான செலவை வசூல் செய்ய மனு தாக்கல் செய்யலாம் என்று வழக்கறிஞர் பிரணவ் விளக்குகிறார்.

இதற்கு, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 125 மற்றும் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்களின் பராமரிப்பு மற்றும் நலச் சட்டம் போன்ற சட்டப் பிரிவுகளின் படி உதவியைப் பெறலாம்.

எது சரியான தேர்வு?

குழந்தைகள் வளர்ந்த பிறகு பெற்றோரை பிரிந்து தனியாக வாழ்வதுதான் சரியா?

பட மூலாதாரம், Getty Images

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை வீட்டைவிட்டு வெளியே அனுப்புவது ஒரு அசாதாரண சம்பவமாகக் கருதப்படுவதால் இத்தாலியில் நடந்த சம்பவம் அதிகம் விவாதிக்கப்பட்டது.

லக்னௌவில் உள்ள உளவியலாளர் ராஜேஷ் பாண்டே இதுகுறித்துப் பேசுகையில், “பெற்றோர்கள் எப்போதும் தங்கள் குழந்தைகளை நேசிக்க வேண்டும் என்றும், நிபந்தனையின்றி கவனித்துக் கொள்ள வேண்டும் என்றும் சமூகம் எதிர்பார்க்கிறது,” என்றார்.

சிம்லாவில் உள்ள ஹிமாச்சல பிரதேச பல்கலைக்கழகத்தின் சமூகவியல் உதவிப் பேராசிரியரான டாக்டர். ஸ்னேஹ் பாரத், இங்கு சமூகத்தின் தாக்கம் மக்களின் வாழ்வில் அதிகமாக உள்ளதாகக் கூறினார்.

குழந்தைகள் பெரியவர்கள் ஆன பிறகு பெற்றோருடன் வாழ்வதா இல்லையா என்பது அவர்களின் பொருளாதார, கலாசார நிலை மற்றும் அவர்களின் விருப்பம் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதுகுறித்து பேராசிரியர் ஸ்னேஹ் கூறுகையில், ‘‘ஒருவருக்கொருவர் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் புரிந்துகொண்ட பிறகே இந்த விஷயத்தில் எந்த முடிவும் எடுக்க வேண்டும்,” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)