இஸ்ரேல் - ஹமாஸ் போர் நிறுத்தம்: இருதரப்பு உடன்பாடு என்ன?

காஸா

பட மூலாதாரம், Getty Images

இஸ்ரேலுடனான நான்கு நாள் போர் நிறுத்தம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் அமலுக்கு வருவதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. எனினும், போர் நிறுத்தம் தொடங்குவது குறித்து இஸ்ரேலிடம் இருந்து எந்தக் கருத்தும் தெரிவிக்கப்படவில்லை.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் எலி கோஹன், பணயக் கைதிகளின் முதல் குழு வியாழனன்று விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார்.

ஒப்பந்தத்தின்படி, காஸாவில் இருந்து ஹமாஸ் 50 பணயக் கைதிகளை விடுவிப்பதற்குப் பதிலாக இஸ்ரேலிய சிறைகளில் இருந்து 150 பாலத்தீனர்கள் விடுவிக்கப்படுவார்கள். 300 பாலத்தீன கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் ஏற்கெனவே வெளியிட்டுள்ளது. இவர்களில் 121 பேர் சிறார்கள்.

உலகெங்கிலும் உள்ள உயர்மட்ட தலைவர்கள் இந்த ஒப்பந்தத்தை வரவேற்றுள்ளனர், ஆனால் சில தலைவர்கள் இன்னும் நீண்ட கால போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இஸ்ரேலிய பணயக் கைதிகளின் குடும்பங்கள் ஒவ்வொரு பணயக் கைதிகளும் வீடு திரும்ப வேண்டும் என்றும் ஒவ்வொரு மணிநேரமும் கணக்கிடப்படும் என்றும் கூறுகின்றனர்.

இதற்கிடையில், இஸ்ரேலிய ராணுவம் சில வீடியோ காட்சிகளைப் பகிர்ந்துள்ளதோடு, இதுவரை காஸாவில் ஹமாஸின் 400 சுரங்கப் பாதைகளை அழித்துள்ளதாகக் கூறியுள்ளது.

புதன்கிழமை காலை, இஸ்ரேலிய ராணுவம் காஸாவில் அதன் தரை மற்றும் வான் நடவடிக்கைகள் போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு மட்டுமே நிறுத்தப்படும் என்று உறுதிப்படுத்தியது.

பணயக் கைதிகளாக உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளை விடுவிப்பதே முதல் முன்னுரிமை என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஆலோசகர் மார்க் ரெகெவ் பிபிசியிடம் தெரிவித்தார்.

பாலத்தீன சிறைக் கைதிகள்

பட மூலாதாரம், BBC Sport

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள்

  • இந்தப் போர் நிறுத்தத்தின் கீழ் பரிமாறிக் கொள்ளப்படும் பணயக் கைதிகள் மற்றும் பாலத்தீன கைதிகளைத் தவிர, விடுவிக்கப்படும் ஒவ்வொரு 10 பணயக் கைதிகளுக்கும் ஒரு நாள் போர் நிறுத்தம் நீட்டிக்கப்படும்.
  • நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேலிய துருப்புகள் மற்றும் டாங்கிகள் காஸாவில் இருக்கும் என்று தெரிகிறது. அதே நேரத்தில் இஸ்ரேலிய படைகள் யாரையும் தாக்காது அல்லது கைது செய்யாது என்று ஹமாஸின் அறிக்கை கூறுகிறது.
  • இந்த ஒப்பந்தத்தின் கீழ், உதவிப் பொருட்களை ஏற்றிச் செல்லும் 200 டிரக்குகள், நான்கு எரிபொருள் டேங்கர்கள் மற்றும் நான்கு எரிவாயு லாரிகள் எகிப்தின் ரஃபா கடவுப்பாதை வழியாக தினமும் காஸாவுக்குள் நுழைய அனுமதிக்கப்படும்.
  • இஸ்ரேலிய பணயக் கைதிகள் மற்றும் காஸாவில் வசிப்பவர்களின் குடும்பத்தினருடன் போப் பிரான்சிஸ் அவர்கள் தனித்தனியாக ரோமில் சந்தித்து, 'இது போர் அல்ல, பயங்கரவாதம்' என்று கூறினார்.

இந்த உடன்பாட்டின் முக்கியத்துவம் என்ன?

இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

முதலில் விடுவிக்கப்படும் முதல் 50 பேரில் பெரும்பாலானோர் இரு நாடுகளின் குடியுரிமை பெற்ற இஸ்ரேலிய குடிமக்களாக இருப்பார்கள் என்று நம்பப்படுகிறது.

இப்போது இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஹமாஸ் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் 50 இஸ்ரேலிய பணயக் கைதிகளுக்கு ஈடாக, இஸ்ரேலிய சிறைகளில் உள்ள 150 பாலத்தீனிய பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுவிக்கப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் கீழ், மனிதாபிமான உதவி, அத்தியாவசிய மருந்துகள் மற்றும் எரிபொருள் நிரப்பப்பட்ட நூற்றுக்கணக்கான டிரக்குகள் காஸாவுக்குள் நுழையும்.

நான்கு நாள் போர் நிறுத்தத்தின்போது இஸ்ரேல் எந்தத் தாக்குதலையும் நடத்தாது, யாரையும் கைது செய்யாது என்று ஹமாஸின் அறிக்கை கூறுகிறது.

“நான்கு நாள் தற்காலிக போர்நிறுத்தத்தின் போது, தெற்கு காஸாவில் விமானங்கள் பறக்க முற்றிலுமாகத் தடை இருக்கும். வடக்கு காஸாவில் ஒவ்வொரு நாளும் ஆறு மணிநேரம் இந்தக் கட்டுப்பாடு அமலில் இருக்கும்,” என்று ஹமாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

காஸாவின் வான்வெளி முழுவதும் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.

அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில், 240 இஸ்ரேலியர்களை ஹமாஸ் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளது. இவர்களில் நான்கு பணயக் கைதிகள் மட்டுமே இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.

300 பாலத்தீன கைதிகளின் பட்டியல் வெளியீடு

இஸ்ரேலிய பிணைக் கைதிகள்

பட மூலாதாரம், IDF

ஹமாஸுடன் செய்துகொண்ட உடன்பாட்டின்படி இஸ்ரேல் விடுவிக்கப் போகும் 300 பாலத்தீன சிறைக் கைதிகளின் பட்டியலை இஸ்ரேல் வெளியிட்டுள்ளது.

இஸ்ரேலிய நீதித்துறையின் இணையதளத்தில் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இவர்களில் 274 பேர் ஆண்கள். பெரும்பாலும் 17 -18 வயதுடையவர்கள். அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளும் இஸ்ரேலின் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் முதலில் 150 பேர் மட்டுமே விடுவிக்கப்படுவார்கள் என்று ஹமாஸ் ஏற்கெனவே வெளியிட்ட அறிக்கையில் இருந்து தெரிய வருகிறது.

கத்தார் நம்புவது என்ன?

நான்கு நாள் சண்டை நிறுத்த ஒப்பந்தம் 'போரை முடிவுக்குக் கொண்டுவர' வழி வகுக்கும் என்று கத்தார் நம்புகிறது.

காஸாவில் சண்டை நிறுத்தம் செய்ய உதவிய அமெரிக்கா மற்றும் எகிப்துக்கு கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி நன்றி தெரிவித்துள்ளார்.

கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கத்தார் பிரதமர் முகமது பின் அப்துல் ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானி.

இந்த ஒப்பந்தம் "போர் மற்றும் ரத்தக்களரிக்கு முற்றுப்புள்ளி வைக்கும்" என்றும் ஒரு "விரிவான மற்றும் நிலையான ஒப்பந்தத்தை" உருவாக்கும் என்றும் நம்புவதாகக் அவர் கூறியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் "ஒரு விரிவான, நியாயமான அமைதி செயல்முறைக்கான பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்கும்" என்று தான் நம்புவதாகவும் பிரதமர் கூறினார்.

'கத்தாருக்கு நன்றி'

இந்த உடன்பாடு தொடர்பாக ஹமாஸ் டெலிகிராமில் ஓர் அறிக்கையை வெளியிட்டது.

அதில் “மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்த உடன்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று குறிப்பிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்திற்கு மத்தியஸ்தம் செய்த கத்தார் மற்றும் எகிப்துக்கு ஹமாஸ் நன்றி தெரிவித்துள்ளது.

பல வார பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, அக்டோபர் 7 முதல் ஹமாஸின் பிடியில் இருக்கும் இஸ்ரேலிய பணயக் கைதிகள் தொடர்பான ஒப்பந்தத்தை எட்டும் தருவாயில் இருப்பதாக இஸ்ரேலும் ஹமாஸும் சமீபத்தில் கூறின.

செவ்வாய்கிழமை ராய்ட்டர்ஸிடம் பேசிய ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியா, ஹமாஸ் இஸ்ரேலுடனான 'போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு' மிக அருகில் இருப்பதாகக் கூறினார்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் விரைவில் "நல்ல செய்தியை" பகிர்ந்து கொள்வதாகக் கூறியிருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)