காஞ்சிபுரம்: பள்ளி குடிநீர் தொட்டியில் கிடந்தது மலமா? முட்டையா? ஆட்சியர் வந்ததும் காட்சிகள் மாறியது எப்படி?

பள்ளி குடிநீர் தொட்டியில் மலமா?
படக்குறிப்பு, சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை ஆய்வு செய்யும் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.
    • எழுதியவர், லிங்கேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சாலவாக்கத்தை அடுத்துள்ளது திருவந்தவார் கிராம். இங்கு செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், அப்பகுதியைச் சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 90 மாணவர்கள் படித்து வருகின்றனர்.

பள்ளி வளாகத்தில் மாணவ, மாணவிகளின் பயன்பாட்டுக்கு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் குடிநீருக்காக மட்டுமின்றி, பள்ளியில் மதிய உணவு சமைப்பதற்காகவும் தண்ணீர் பிடித்துப் பயன்படுத்தப்படும் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதா எழுந்த குற்றச்சாட்டு தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை அவசரமாக இடித்துள்ள மாவட்ட நிர்வாகம் மலம் கலக்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது. மேலும், புதிய விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.

நவம்பர் 21 அன்று நடந்தது என்ன?

திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், கடந்த 21ஆம் தேதி அன்று வழக்கம் போல, பள்ளி செயல்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது மாணவர்கள் சிலர் குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் பிடித்து குடித்துள்ளனர். அப்போது தண்ணீரில் இருந்து துர்நாற்றம் வீசவே இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.

பள்ளி குடிநீர் தொட்டியில் மலமா?

இந்நிலையில், இந்தத் தொட்டியில் இருந்துதான் பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு தயாரிக்கவும் தண்ணீர் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் சமையல் செய்த கண்ணகி என்பவர் குடிநீர் தொட்டியில் முகம் கழுவியபோது அதில் அதிகமான நுர்நாற்றம் வீசவே இதுகுறித்து பள்ளி ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளார்.

குடிநீர் தொட்டியில் ஏறிப் பார்த்தபோது அதில் மனிதக் கழிவுகள் இருந்ததாகவும், தண்ணீரைத் திறந்து விட்டவுடன், மேலே சென்று தண்ணீர் தொட்டியை ஆய்வு செய்தபோது, மலம் கலந்திருப்பது தெரிய வந்ததாகவும் பள்ளி ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு, வந்த சாலவாக்கம் போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். இதுகுறித்து கல்வி அலுவலர்களும் விசாரணை மேற்கொண்டனர். மலம் கலந்ததால்தான் இந்த இடத்தில் அதிக அளவு துர்நாற்றம் வீசியதாகக் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்தத் தொட்டியில் இருந்த தண்ணீரைப் பயன்படுத்தி மதிய உணவு தயாரிக்கப்பட்டதாகத் தகவல் பரவியதை அடுத்து, மதிய உணவும் குழந்தைகளுக்குக் கொடுக்கப்படாமல் மண்ணில், புதைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மாணவர்களுக்காக தான் சமைத்த உணவுகள் அனைத்தையும் கீழே கொட்டிவிட்டு வேறு தண்ணீர் கொண்டு உணவு சமைத்தாகவும் அந்தப் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் கண்ணகி செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தபோது தெரிவித்துள்ளார்.

ஆட்சியர் வந்தவுடன் காட்சிகள் மாறியதா?

பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட குற்றச்சாட்டு: சாதிப் பிரச்னையா?

பட மூலாதாரம், Getty Images

நவம்பர் 21ஆம் தேதியன்று பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவகலை விடுப்பில் இருக்கவே, அன்று பொறுப்பு தலைமை ஆசிரியராக இருந்தவர் இதுகுறித்து, சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து, நேரில் வந்த போலீசார் குடிநீர் தொட்டியில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து பள்ளிக்குச் சென்ற, உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், இதுகுறித்து மாணவ, மாணவிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் ஊர் மக்கள் ஆகியோரிடம் நடந்ததை கேட்டறிந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்து பள்ளிக்கு நேரில் வந்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மற்றும் காவல் கண்காணிப்பாளர் சுதாகர் ஆய்விடத்திற்குச் சென்று தண்ணீர் தொட்டி மற்றும் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் பள்ளி மாணவர்கள், சத்துணவு அமைப்பாளர்கள், பள்ளி பணியாளர்கள் மற்றும் மாணவ, மாணவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர் பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை என்றும், முட்டை ஓடுதான் இருந்ததாகவும், காகம் ஏதேனும் முட்டையைக் கொண்டுவந்து போட்டிருக்கலாம் என்றும் புதிய விளக்கம் அளிக்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கொடுத்த விளக்கம் என்ன?

பள்ளி குடிநீர் தொட்டியில் மலமா?
படக்குறிப்பு, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி

பள்ளியில் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களிடம் விளக்கம் அறித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி, தண்ணீர் தொட்டியில் மலம் கலக்கப்படவில்லை எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்கள் சந்திப்பில் அவர், "இந்த நடுநிலைப் பள்ளியில் புதிதாக ஒரு தொட்டி கட்டியுள்ளார்கள். அது போக சின்டெக்ஸ் டேங்க்கும் இருக்கின்றது. முதலமைச்சர் காலை உணவுத் திட்டம் செயல்பாட்டுக்கு வந்த பிறகு அதற்கு எனத் தனி தண்ணீர் தொட்டியும் கட்டப்பட்டது.

புதிய கட்டடம் கட்டிக் கொண்டிருந்தபோது, குற்றச்சாட்டு எழுந்துள்ள குடிநீர் தொட்டி பயன்படாமல் இருந்துள்ளது. கடந்த வாரம் அந்தப் பள்ளியின் கட்டடப் பணிகள் முடிவடைந்து, கட்டடம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட குடிநீர் தொட்டியை யாரும் பயன்படுத்தாமல் இருந்துள்ளனர். எப்போதாவது தேவைப்பட்டால், அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அந்தக் குடிநீர் தொட்டி மேலே மூடி போடாமல் இருந்துள்ளது. அதில் வேறு எந்த பிரச்னையும் இல்லை. அதில் பாத்திரம் கழுவுவது, அரிசி கழுவுவது உள்ளிட்ட பணிகளைச் செய்து இருக்கிறார்கள்.

மாணவர்கள் குடிப்பதற்கான தண்ணீர் வேறு தொட்டியில் இருந்து பிடிக்கப்பட்டு வருகிறது. அந்தத் தொட்டியின் மூலமாகவே அனைத்து வகுப்பறைகளுக்கும் தண்ணீர் கொடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாதுகாப்பான குடிநீர் அவர்கள் வகுப்பறைக்கே சென்று விடுகிறது. அந்தத் தொட்டி தேவையில்லை அதை இடித்து விடலாம். ஒருவர் கை கழுவச் சென்றபோது துர்நாற்றம் வந்துள்ளது," என்று தெரிவித்துள்ளார்.

'அது மலம் அல்ல அழுகிய முட்டைதான்'

பள்ளி குடிநீர் தொட்டியில் மலமா?

பள்ளியின் குடிநீர் தொட்டியில் முட்டை ஓடுடன் கூடிய அழுகிய முட்டைக் கரு இருந்துள்ளதாகவும், அதனாலேயே துர்நாற்றம் வந்துள்ளதாகவும், இதைத் தவிர வேறு எந்தவித பிரச்னையும் கிடையாது என்றும் ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.

காகம் அந்த முட்டையைக் கொண்டு வந்து போட்டிருக்கலாம் என்றும் அந்தக் குடிநீர் தொட்டி இடிக்கப்படும் எனவும் தெரிவித்தார். அதன்படி மறுநாள் காலையிலேயே அந்தக் குடிநீர் தொட்டி அவசரஅவசரமாக இடிக்கப்பட்டது.

உண்மை மறைக்கப்படுகிறதா? அரசியல் கட்சிகளின் கேள்வி?

இந்த பிரச்னை குறித்து பிபிசி தமிழிடம் பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் எழிலரசன் சில தகவல்களைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் கூறியதாவது, “திருவந்தவார் கிராமத்தில் 90 சதவீதம் தலித் மக்கள் தான் வசிக்கிறார்கள். இந்தப் பள்ளியில் 99 சதவீதம் தலித் மாணவர்கள் தான் படிக்கிறார்கள். பள்ளியில் மதிய உணவு சமைப்பவர் கண்ணகி. ஊராட்சி மன்றத் தலைவர் தேன்மொழியின் கணவர் மணியின் சகோதரியான இவர் குடிநீர் தொட்டியில் முகம் கழுவியபோது அதில் துர்நாற்றம் வீசுவதைக் கண்டு, ஆசிரியர் காந்தி ராஜனிடம் தெரிவித்துள்ளார்.

அவர், புகைப்படம் எடுத்து ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் மணிக்கு அனுப்பி இருக்கிறார். அவர் காவல் துணை ஆய்வாளர் கிரிராஜனுக்கு அனுப்பியுள்ளார். உடனடியாக குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. குடிநீர் தொட்டி சுத்தம் செய்யப்பட்ட பின்னரே ஆட்சியர் வந்து நேரில் ஆய்வு செய்து காகம் முட்டையைக் கொண்டு வந்து போட்டதால் துர்நாற்றம் வீசியதாகத் தெரிவித்துள்ளார். பின்னர் குடிநீர் தொட்டியை இடிக்க உத்தரவிட்டுள்ளார்," என்று கூறினார்.

அதுமட்டுமின்றி உண்மையில் சமூக விரோதிகள் யாரோ திட்டமிட்டே இதைச் செய்துள்ளதாகவும் எழிலரசன் குற்றம் சாட்டினார்.

"இந்தப் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் கண்ணகி, ஊரில் பல்வேறு பிரச்னைகளில் ஈடுபடுவது வழக்கம். இவர்களைப் பழிவாங்க யாரேனும் இதைச் செய்திருக்கலாம். முதலில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்திருப்பதாகப் புகார் தெரிவித்து விட்டு பின்னர் அவசர அவசரமாக தடயங்களை அழித்துள்ளனர்.

சமைத்த உணவை குழிதோண்டிப் புதைத்திருப்பது சந்தேகத்தை மேலும் அதிகரிக்கிறது. இந்தப் பிரச்னையை மறைப்பதால், குற்றவாளி யார் என்று தெரியாமல்போகும். எனவே சமையலர் கண்ணகியைக் கைது செய்து விசாரணை நடத்த வேண்டும்,” என்று எழிலரசன் வலியுறுத்தி இருக்கிறார்.

பள்ளி குடிநீர் தொட்டியில் மலமா?
படக்குறிப்பு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் எழிலரசன்

இதேபோல, ஊராட்சிமன்றத் முன்னாள் தலைவரும், அதிமுக பிரமுகருமான முருகன் கூறுகையில், “பள்ளி மாணவர்களுக்காக மதிய உணவு சமைத்து முடித்ததும் கண்ணகி, முகம் கழுவியபோது தண்ணீரில் துர்நாற்றம் வீசியதைக் கண்டு அன்று பொறுப்பு ஆசிரியராக இருந்த காந்தி ராஜனிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களுக்குள் ஆலோசனை மேற்கொண்டு பொதுமக்கள் வந்தால் பிரச்னை ஏற்படும் என்பதால் தண்ணீரை வெளியேற்றியுள்ளனர். சமையலர் கண்ணகி முதலில் செய்தி சேனல்களுக்கு பேட்டியளித்த போது தண்ணீரில் மலம் இருந்ததாகவே கூறியுள்ளார். பின்னர் பிளீச்சிங் பவுடர் போட்டு தொட்டியை சுத்தம் செய்துவிட்டு, முட்டை ஓட்டை அதில் போட்டுள்ளனர். உண்மையை முற்றிலும் மூடி மறைத்துள்ளனர்,” என்று முருகன் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சியினரின் புகார்கள் குறித்து காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் விளக்கம் கேட்டபோது, “பள்ளியில் குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக வெளியான தகவல் உண்மைக்குப் புறம்பானது. தற்போது சர்ச்சைக்கு உள்ளான அந்தக் குடிநீர் தொட்டி கைவிடப்பட்ட குடிநீர் தொட்டிதான். இந்தத் தொட்டியின் குடிநீரை பள்ளி மாணவர்கள் பயன்படுத்துவதில்லை.

தற்போது சர்ச்சைக்குள்ளான நிலையில் அந்த சிறிய குடிநீர் தொட்டி உடனடியாக இடிக்கப்பட்டு மாணவர்கள் பயன்பாட்டிற்காக பள்ளி கட்டடத்தின் மேல் புதிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் பாதுகாப்பு குறைபாடு உள்ள நிலையில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படுமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர், குக்கிராமங்களில் உள்ள அரசுப் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா வைப்பதற்கான வசதிகள் தற்போது இல்லை என்றும் அப்படி கேமரா வைத்தாலும் சில விஷமிகள் அதை உடைத்து விடுவதால் கண்காணிப்பு கேமரா வைப்பதில் பயன் இல்லை என்றும் விளக்கம் அளித்தார்.

பள்ளியில் அவசரஅவசரமாக நடைபெறும் பணிகள்

பள்ளி குடிநீர் தொட்டியில் மலமா?
படக்குறிப்பு, மோசமான நிலையில் இருக்கும் பள்ளிக்குச் செல்லும் சாலை

திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடந்தது என்ன என்பது குறித்து விவரம் அறிய பள்ளியின் தலைமை ஆசிரியர் சிவகலையிடம் சில கேள்விகளை முன்வைத்தோம். ஆனால், இந்த பிரச்னையைப் பற்றி ஏற்கெனவே மாவட்ட ஆட்சியர் பேட்டி அளித்துள்ள நிலையில் தான் எதுவும் கூற முடியாது என்று அவர் பேச மறுத்துவிட்டார்.

சர்ச்சைக்குறிய குடிநீர் தொட்டி இடிக்கப்பட்டு அங்கு புதிய தொட்டி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அதை மேற்பார்வை செய்து கொண்டிருந்த ஊராட்சி மன்றத் தலைவர் தேன்மொழியின் கணவர் மணியிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

முட்டை விழுந்ததால்தான் குடிநீர் தொட்டி அசுத்தமானதாகக் கூறப்படும் நிலையில், அவசர அவசரமாகத் தொட்டியை இடித்து அகற்ற வேண்டிய அவசியம் என்ன என்று கேட்டபோது, “அப்படி எல்லாம் எந்தப் பணியையும் அவசரமாகச் செய்யவில்லை என்றும், முன்பே திட்டமிட்டு இருந்த பணிகளே தற்போது மேற்கொள்ளப்படுகிறது” என்றும் தெரிவித்தார்.

இவ்வளவு நாட்களாக இல்லாமல் திடீரென ஏன் பள்ளியில் அனைத்து வேலைகளும் உடனடியாக மேற்கொள்ளப்படுகின்றன எனக் கேட்டபோது, "எல்லா அக்கறையும் எங்களுக்கு இருக்கிறது. என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்குத் தெரியும்," என்று தெரிவித்தார்.

மேற்கொண்டு பிபிசி தமிழ் முன்வைத்த கேள்விகளுக்குப் பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

மோசமான நிலையில் இருக்கும் பள்ளி

பள்ளி குடிநீர் தொட்டியில் மலமா?
படக்குறிப்பு, பள்ளியில் அவசர அவசரமாக நடைபெறும் பணிகள்

திருவந்தவார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வகுப்பறைக்குச் செல்லும் பகுதியைத் தவிர பள்ளி வளாகம் முழுவதும் சேரும் சகதியுமாகவே காணப்படுகிறது.

பள்ளி கழிவறையின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பாழடைந்த நிலையில் இருக்கும் இந்தக் கழிவறையையே பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

பெரும்பாலும் வகுப்பறைகளில் 10க்கும் குறைவான மாணவர்களே உள்ளனர். வகுப்பறை வாயிலில் நாய்கள் நடமாட்டத்தையும் காண முடிந்தது.

குடிநீர் தொட்டியில் துர்நாற்றம் வீசிய சர்ச்சை செய்தி தீயாகப் பரவிய நிலையில், இந்தப் பள்ளியைச் சீரமைக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.

பள்ளியில் புதிய குடிநீர் தொட்டி பிளாஸ்டிக்கில் அமைக்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. பயன்பாடற்று பாழடைந்து கிடந்த சமையல் அறை ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு இடிக்கப்பட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)