செய்யாறு சிப்காட்: நிலத்திற்காக போராடிய விவசாயிகளுக்கு உண்மையில் என்ன நடந்தது? - கள நிலவரம்

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் சிப்காட் தொழிற் பேட்டைக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை அங்குள்ள விவசாயிகள் கடுமையாக எதிர்க்கிறார்கள். எதிர்த்த விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டது, அப்பகுதியினரிடம் கூடுதலான ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
"எனக்கு 55 வயதாகிறது. எனது மகன் மாற்றுத் திறனாளி. என்னிடம் இருக்கும் மூன்றரை ஏக்கர் நிலத்தில் பயிர் செய்து குடும்பத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். இந்த நிலம் நான்காவது தலைமுறையாக என்னிடம் இருக்கிறது. இதை எடுத்துக்கொண்டு, பணத்தைக் கொடுக்கிறேன்; வேலை கொடுக்கிறேன் என்கிறார்கள்.
இந்த வயதில் எனக்கு என்ன வேலை கொடுப்பார்கள்? என் மகனுக்கு என்ன வேலை கொடுப்பார்கள்? எங்களை நிம்மதியாகவிட்டால், நாங்கள் பாட்டுக்கு பிழைத்துக் கொள்வோமே?" என்கிறார் செய்யாறில் உள்ள குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான கார்த்திகேயன்.
கார்த்திகேயன் பேசும்போதே அவரது குரலில் ஆவேசம் தென்படுகிறது. அவருக்கு மட்டுமல்ல, அந்தப் பகுதியில் உள்ள எல்லா விவசாயிகளுமே கொந்தளித்துத்துதான் போயிருக்கிறார்கள்.
விவசாய நிலங்களை தொழிற்பேட்டைக்காக கையகப்படுத்துவதாக அறிவித்தது, அதற்கு எதிரான போராட்டத்தை முடக்கியது, போராட்டத்தில் ஈடுபட்ட சிலரைக் குண்டர் சட்டத்தில் கைது செய்தது என தமிழ்நாடு அரசு தங்கள் மீது கடுமையான ஒடுக்குமுறையை ஏவுவதாக நினைக்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள்.
பிரச்சனையின் பின்னணி என்ன?

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு பகுதியில் ஏற்கெனவே இரண்டு சிப்காட் தொழில் வளாகங்கள் செயல்பட்டுவருகின்றன. முதல் சிப்காட் வளாகம் 1,593 ஏக்கர் பரப்பளவில் இருக்கிறது. இதில் 13 நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டாவது சிப்காட் வளாகம் 5,683 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கிறது. இதில் 55 நிறுவனங்கள் செயல்படுகின்றன.
இந்த நிலையில் மூன்றாவது தொழிற்பேட்டை அமைப்பதற்காக செய்யாறு வட்டத்திலுள்ள மேல்மா, நர்மாபள்ளம், குறும்பூர், காட்டுக்குடிசை, எருமைவெட்டி, தேத்துறை, இரணியல் குன்றம், வட ஆளப்பிறந்தான், அத்தி, சௌந்தரபாண்டியபுரம், மணிப்புரம் உள்ளிட்ட 12 கிராமங்களில் இருந்து 3,174 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்த தமிழ்நாடு அரசு முடிவுசெய்தது.
கடந்த மே - ஜூன் மாதவாக்கில் 1,200 ஏக்கர் அளவுக்கான நிலத்தை எடுப்பதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டது. 1,200 ஏக்கர் நிலத்தின் உரிமையாளர்களில் சிலருக்கு இதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இந்த நோட்டீஸ் வந்ததுமே இந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலத்தின் உரிமையாளர்களில் பலர் பச்சையப்பன் என்பவர் தலைமையில் ஒன்று திரண்டனர்.
இவர்கள் ஜூலை 2ஆம் தேதி முதல் போராட்டம் நடத்த முடிவுசெய்தனர். அதற்காக மேல்மா கிராமத்தில் உள்ள ஒரு பட்டா நிலத்தில் சிறிய இடத்தைச் சரிசெய்து, தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்தப் போராட்டத்தில், கையகப்படுத்துவதற்கான நோட்டீஸ் வழங்கப்பட்ட விவசாயிகள் மட்டுமல்லாது, அந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகளில் பெரும் பகுதியினர் கலந்துகொண்டனர். சில விவசாயத் தொழிலாளர்களும் கலந்துகொண்டனர்.
இதற்குப் பிறகு விவசாயிகளின் கோரிக்கையின் பேரில் எட்டு வழிச் சாலை எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் ஆறுமுகம் என்பவரும் கலந்துகொண்டார். இதற்குப் பிறகு பல கட்டங்களாக இவர்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்திக்க முயற்சிப்பது, மாவட்ட அமைச்சர் ஏ.வ. வேலுவைச் சந்திக்க முயற்சிப்பது, சார் ஆட்சியரைச் சந்திக்க முயல்வது போன்ற முயற்சிகளில் ஈடுபட்டுவந்தனர்.
முதலில் மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷைச் சந்தித்து நிலங்களைக் கையகப்படுத்தக்கூடாது எனக் கோரி மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக்கொண்ட ஆட்சியர் பிறகு பதில் ஏதும் சொல்லவில்லை. இதற்குப் பிறகு, இங்கு வரவிருக்கும் சிப்காட்டிற்காக அமைக்கப்பட்டுள்ள அலுவலகத்திற்கு டிராக்டரில் சென்று மனு அளித்தனர்.
இதற்குப் பிறகு, டிராக்டரில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது. பிறகு மீண்டும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு குறை தீர்க்கும் நாளன்று சென்றுள்ளனர். அப்போது தங்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு உள்ளேயே அனுமதிக்கவில்லை எனக் குற்றம்சாட்டுகிறார்கள் விவசாயிகள்.
பிறகு ஒரு நாள் நடந்து சென்று சார் ஆட்சியரைச் சந்திக்க முயன்றபோது விவசாயிகள் தடுக்கப்பட்டார்கள். இதையடுத்து விவசாயிகள் சாலை மறியலில் அமர்ந்தனர். பிறகு மற்றொரு நாள் அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறி சமாதானம் செய்து கூட்டத்தைக் கலைத்தனர் காவல்துறையினர்.
பிறகு நவம்பர் 2ஆம் தேதியன்று மீண்டும் சார் ஆட்சியரைச் சந்திக்க விவசாயிகள் சென்றனர். அப்போது விவசாயிகள் அனைவரும் கைதுசெய்யப்பட்டு கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். பிறகு இரவு 8 மணிக்கு மேல் அந்த மண்டபத்தில் உள்ள விளக்குகள், மின் விசிறிகளை அனைத்துவிட்டு வெளியில் போகும்படி வற்புறுத்தியுள்ளனர். ஆனால், தாங்கள், சார் ஆட்சியரைச் சந்திக்காமல் வெளியேற முடியாது என விவசாயிகள் கூறியுள்ளனர். பிறகு சார் ஆட்சியர் சந்தித்துப் பேசியுள்ளார்.
இதற்கு நடுவில் மனு கொடுக்கச் சென்றவர்கள் வீடு திரும்பாததால், கிராமங்களில் இருந்தவர்கள் மேல்மா கூட் ரோடு பகுதியில் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது காவல்துறையினர் அவர்களைக் கலைக்க முயன்றபோது தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
அன்று இரவில்தான் ஏற்கனவே உள்ள வழக்குகளின் அடிப்படையில் 19 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் அருள் உள்ளிட்ட ஏழு பேர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டது.
கண்டனத்திற்குள்ளாகும் காவல்துறையின் நடவடிக்கை:

விவசாயிகள் கைதுசெய்யப்பட்டபோது காவல்துறையினர் நடந்துகொண்ட விதம் விவசாயிகளின் குடும்பத்தினரிடம் பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேல்மா கூட் ரோடு பகுதியைச் சேர்ந்த ராதா என்பவர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றிருந்தார். இவரது கணவரை தற்போது காவல்துறை கைதுசெய்திருக்கிறது.
"அன்று இரவு இரண்டு மணி அளவில் காவல்துறையினர் வீட்டின் கதவைத் தட்டிக்கொண்டே இருந்தார்கள். என் கணவரின் அண்ணன் கதவைத் திறந்ததும் உள்ளே புகுந்த காவலர்கள் வெறும் பனியன் மட்டும் அணிந்திருந்த என் கணவர் வெங்கடேசனை தரதரவென இழுத்துச் சென்றனர். அவர் என்ன தவறுசெய்தார், நான்தானே போராடினேன் என்று கத்திக்கொண்டே நான் பின்னாடியே போனேன்.
அவரை வாகனத்தில் ஏற்றிய காவல்துறையினர், வீட்டில் பிள்ளைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பார்த்துக்கொள்ள வேண்டுமானால், ஒழுங்காகப் போய்விடு, இல்லாவிட்டால் உன்னையும் கைதுசெய்வேன் என்று மிரட்டிவிட்டு, அவரை அழைத்துப் போய்விட்டார்கள். இது போல நள்ளிரவில் வந்து கைதுசெய்யும் அளவுக்கு அவர் என்ன தீவிரவாதியா?" எனக் கேள்வி எழுப்புகிறார் ராதா.
மணிப்புரத்தைச் சேர்ந்த கல்பனா என்பவரின் கணவர் பெருமாளும் இதே பாணியில் இரவில் கைதுசெய்யப்பட்டு அழைத்து செல்லப்பட்டார். "எனது கணவரின் கைலியை அழிவித்துவிட்டு, உள்ளாடையுடன் அழைத்துச் சென்றனர். அடுத்த நாள் மறுபடியும் எனது வீட்டிற்கு வந்து சோதனையிட்டனர். கேட்டால், வீட்டில் கஞ்சா இருக்கிறதா, வேறு ஏதாவது இருக்கிறதா எனப் பார்க்க வந்தோம் என்கிறார்கள்." என்கிறார் கல்பனா.
விவசாயிகளை மிரட்டி எழுதி வாங்கியதாக குற்றச்சாட்டு:

குண்டர் சட்டத்தில் ஏழு பேரைக் கைதுசெய்தது தமிழ்நாடு முழுவதும் பெரும் சலசலப்பையும் எதிர்ப்புணர்வையும் ஏற்படுத்திய நிலையில், இவர்களை அச்சட்டத்திலிருந்து விடுவிக்க முடிவுசெய்த தமிழ்நாடு அரசு, அவர்களது குடும்பத்தினரிடம் இனிமேல் போராட மாட்டோம் என எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தது.
இந்த விவகாரம் தொடர்பாக முதலமைச்சரின் பெயரில் வெளிவந்த அறிக்கையில் "வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், இத்தகைய தவறுகளை வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் செய்துவிட்டோம் என்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற தவறுகளைச் செய்யமாட்டோம் என்றும் தெரிவித்து, தங்கள் குடும்ப சூழ்நிலை காரணமாக குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டு சிறையில் இருக்கும் தங்கள் குடும்ப உறுப்பினர்களை விடுவிக்குமாறும் கோரிக்கை வைத்தனர்" என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இவை இந்தப் பகுதியினரிடம் பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கின்றன.
தங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்களை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று எழுதி வாங்கியதாக கைதுசெய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் குற்றம்சாட்டுகின்றனர்.
"எழுதித் தர வேண்டுமென முதலில் என்னை அழைத்தனர். நான் மறுத்துவிட்டேன். பிறகு எனது மாமியாரை அழைத்தனர். அவர் என்னைப் போகச் சொன்னார். நான் மறுக்கவே எனது மாமனாரை அனுப்பிவைத்தார். அவரிடம் மிரட்டி, எழுதி வாங்கிக்கொண்டர். அவர் விருப்பப்பட்டு எழுதிக்கொடுக்கவில்லை" என்கிறார் எருமைவட்டியைச் சேர்ந்த தேவனின் மனைவி கலைச்செல்வி.

அருள் ஆறுமுகம் யார்?
இந்த விவகாரத்தில் அரசுக்கு அதிகம் எரிச்சலை ஏற்படுத்தியிருப்பது, கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த அருள் ஆறுமுகம் என்பவர் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டதுதான்.
அருள் ஆறுமுகம் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். ஒரு மென்பொருள் பணியாளர். இவருக்கு நிலம் செங்கம் பகுதியில் உள்ளது. எட்டு வழிச் சாலை திட்டம் தீட்டப்படும்போது இவரது நிலமும் கையகப்படுத்தப்படும் பகுதிக்குள் வந்தது.
இதனை எதிர்த்து அருள் போராட ஆரம்பித்தார். இந்தத் திட்டத்தை எதிர்க்கும் விவசாயிகளை ஒருங்கிணைக்க எட்டு வழிச்சாலை இயக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. அதன் ஒருங்கிணைப்பாளராக அருள் இருந்தார்.
தங்கள் பகுதியில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த அரசு முயல்வதால், போராட்டத்தை வழிநடத்த அருள் ஆறுமுகத்தை அழைக்கலாம் என முடிவுசெய்த விவசாயிகள் அவரை இங்கே அழைத்து வந்தனர். அவரும் மேல்மா பகுதிக்கு வந்து சில நாட்கள் இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்.
ஆனால், அவரால்தான் போராட்டமே ஏற்பட்டதாகக் கூறி காவல்துறை அவருடன் சேர்த்து ஏழு பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தது. மற்ற ஆறு பேர் குண்டர் சட்டத்தில் இருந்து விடுவிக்கப்பட்டுவிட, தற்போது அருள் மட்டும் குண்டர் சட்டத்தில் சிறையில் இருக்கிறார்.
தங்களுக்காகப் போராட வந்தவர் இப்படி குண்டர் சட்டத்தில் கைதுசெய்யப்பட்டிருப்பது இந்த விவசாயிகளுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது.
"அவருக்கும் இந்தப் பகுதிக்கும் என்ன தொடர்பு? அவருக்கு இங்கே என்ன நிலமா இருக்கிறது என்று கேட்கிறார்கள். அருளை நாங்கள்தான் அழைத்துவந்தோம். நிலமில்லாத விவசாயத் தொழிலாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
காரணம், இந்தப் பகுதியில் விவசாயம் இல்லாமல் போய்விட்டால் தங்களுக்கு வேலை இருக்காது என்ற அச்சத்தில் அவர்கள் போராடுகிறார்கள். நிலமில்லாத அவர்கள் எதற்குப் போராடுகிறார்கள் என்று கேட்பார்களா?" எனக் கேள்வியெழுப்புகிறார் குறும்பூரைச் சேர்ந்த உமா.
இந்த விவகாரத்தில், மாவட்ட நிர்வாகம், தமிழ்நாடு அரசு, தி.மு.கவினர் என எல்லோரும் மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் விவசாயிகள். அரசும் மாவட்ட நிர்வாகமும் வெளிப்படைத் தன்மையே இல்லாமல், யதேச்சதிகாரப் போக்குடன் செயல்படுவதாக நினைக்கிறார்கள் விவசாயிகள்.
"எனக்கு இங்கே 2 ஏக்கர் நிலம் இருக்கிறது. திடீரென அதிகாரிகள் வந்து, நிலத்தை அளக்கிறார்கள். என்ன மரம் இருக்கிறது, வீடு எப்படியிருக்கிறது என்ற கணக்கெடுப்பை மேற்கொள்கின்றனர். எதற்கு என்று கேட்டால் பதில் சொல்வதில்லை" என்கிறார் குறும்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரஸ்வதி.
இந்த கிராமங்களில் சிலருக்கு மட்டுமே நில ஆர்ஜிதம் தொடர்பான நோட்டீஸ் வந்திருக்கிறது. ஆனால், எல்லோருடைய நிலமும் பறிபோகும் என்ற பயம் அந்தப் பகுதியில் வெகுவாகப் பரவியிருக்கிறது. ஆகவே முதற்கட்டமாக நோட்டீஸ் வந்ததில் இருந்தே இங்குள்ள விவசாயிகளில் பலர், தங்கள் நிலத்தில் எதையும் பயிர் செய்யாமல் இருக்கிறார்கள்.
"எங்கள் நிலத்தில் நெல், காய்கறிகள், மிளகாய் என எல்லாவற்றையுமே பயிர்செய்துவிடுவோம். எதையுமே கடையில் வாங்க மாட்டோம். கடந்த நான்கைந்து மாதமாக தூக்கமே வருவதில்லை. நிலத்தை எடுத்தால் நாம் வைக்கும் பயிரை அழித்துவிடுவார்கள் என்று விவசாயமே செய்யவில்லை" என்கிறார் அதே கிராமத்தைச் சேர்ந்த செல்வி.
பெரும் எதிர்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எ.வ. வேலுவின் பேச்சு

பட மூலாதாரம், FACEBOOK
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான எ.வ. வேலு, "இந்த விவகாரம் தொடர்பாக அரசு பல்வேறு விளக்கக் கூட்டங்கள், கருத்துக் கேட்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. 1881 விவசாயிகளில் 239 பேர் மட்டுமே எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள். தொழிற்சாலைகளை எங்கு கட்ட முடியும்? கடலிலும், வானத்திலும் கட்ட முடியாது. நிலத்தில்தான் கட்ட முடியும். அந்த ஊரிலேயே இல்லாதவர்களை எல்லாம் அழைத்து வந்து போராட்டத்தில் ஈடுபடச் செய்கிறார்கள். அந்தப்பகுதி மக்களை வெளியூரைச் சேர்ந்த ஒருவர் தூண்டிவிடுகின்றனர். குறிப்பாக, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இருந்து அருள் ஆறுமுகம் என்ற நபர்தான் மக்களை தூண்டிவிடுகிறார்" என்று தெரிவித்தார்.
அமைச்சரின் இந்தப் பேச்சு, அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. தங்களிடம் யாரும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதோடு, கருத்துக் கேட்புக் கூட்டங்கள் ஏதும் நடக்கவில்லை என்கிறார்கள் இந்தப் பகுதி மக்கள்.
தொழிற்சாலைகளை கடலிலும், வானத்திலும் கட்ட முடியாது. நிலத்தில்தான் கட்ட முடியும் என்று அவர் கூறியிருப்பது பெரும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. "ஏன் அவருடைய நிலத்தில் தொழிற்சாலைகளைக் கட்ட வேண்டியதுதானே?" என்கிறார்கள் விவசாயிகள்.
இந்த 3174 ஏக்கர் நிலத்தில் வெறும் 7 ஏக்கர் மட்டுமே நஞ்சை நிலம் என்கிறது அரசு. ஆனால், இங்கு பெரும்பாலான இடங்கள் 3 போகம் விளையக்கூடிய கிணற்றுப் பாசனத்தில் உள்ள நஞ்சை நிலங்கள்தான் என்கிறார்கள் விவசாயிகள்.
காவல்துறையினர் குவிக்கப்பட்டிருப்பது எதற்காக?

இந்தப் போராட்டத்திற்குப் பிறகு இந்த கிராமங்கள் அனைத்திலும் பெரும் எண்ணிக்கையில் காவல்துறையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அந்தப் பகுதிக்கு வரும் ஒவ்வொருவரையும் காவல்துறை விசாரிக்கிறது. ஊடகத்தினர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன.
விவசாயிகள் போராட்டம் துவங்கிய ஜூலை மாதத்திலிருந்து தற்போதுவரை 11 வழக்குகள் விவசாயிகள் மீது போடப்பட்டிருக்கின்றன. ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி மட்டும் ஐந்து வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன.
இந்தப் போராட்டங்களின்போது எந்த வன்முறையும் நிகழாத நிலையில், முதலமைச்சர் விடுத்த அறிக்கையில், "தொழிற்பூங்கா அமைப்பதற்கு எதிரான வன்முறைப் போராட்டத்தின்போது" என்று குறிப்பிடப்பட்டிருப்பது இப்பகுதி விவசாயிகளிடம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரம் தொடர்பாக, மாவட்ட ஆட்சியர் பா. முருகேஷ், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே. கார்த்திகேயன் ஆகியோரிடமிருந்து எவ்வித விளக்கத்தையும் பெற முடியவில்லை.
தற்போது பாட்டாளி மக்கள் கட்சி, நாம் தமிழர் கட்சி ஆகியவை இந்த விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டங்களில் இறங்கியுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சி, அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஒரு பெரிய போராட்டத்தை நவம்பர் 22ஆம் தேதி நடத்தியிருக்கிறது.
சூழல் இன்னமும் தகிப்புடன் இருக்கும் நிலையில், நிலமெடுக்கும் அறிவிக்கையை ரத்து செய்ய வேண்டும், அருள் ஆறுமுகம் உட்பட போராடியவர்கள் மீதான வழக்குகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என்ற இரு கோரிக்கைகளை மட்டுமே விவசாயிகள் முன்வைக்கிறார்கள்.
ஆனால், கடந்த வெள்ளிக்கிழமையன்று அமைச்சர் எ.வ. வேலு அளித்த பேட்டியிலும் முதலமைச்சரின் அறிக்கையிலும் உள்ள வாசகங்களைப் பார்க்கும்போது, தமிழ்நாடு அரசு தொடர்ந்து நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமென்றே தெரிகிறது.
இது தொடர்பாக தொழில்துறை அமைச்சகம், தி.மு.க. ஆகியவையும் கருத்துக்களை தெரிவிக்க விரும்பவில்லை.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












