காலநிலை மாநாடு துபாயில் நடைபெறுவதற்கு எதிர்ப்பு எழுவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மார்க் பாய்ன்டிங்
- பதவி, காலநிலை மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வாளர், பிபிசி நியூஸ்
துபாயில் நடைபெறவுள்ள ஐ.நா. சபையின் காலநிலை உச்சி மாநாட்டில் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள் தயாராகி வருகின்றனர்.
கடந்தாண்டு முழுவதும் ஏற்பட்ட அதீத காலநிலை நிகழ்வுகளை தொடர்ந்து இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
COP28 என்பது என்ன? எங்கு நடைபெற உள்ளது?
COP28 என்பது காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. சபையின் 28-ஆவது உச்சி மாநாடு. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் அரசுகளின் பிரதிநிதிகள், காலநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துதல், அதற்காக தயாராகுதல் உள்ளிட்டவற்றை விவாதிப்பர்.
இந்த மாநாடு ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் நவம்பர் 30-ஆம் தேதி முதல் டிசம்பர் 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
COP என்பது 1992ஆம் ஆண்டு ஐ.நா. சபையில் காலநிலை மாற்றம் தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகளின் உச்சி மாநாட்டை குறிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
COP28 மாநாட்டை துபாயில் நடத்துவது சர்ச்சையாவது ஏன்?
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உலகளவில் அதிகமாக எண்ணெய் உற்பத்தி செய்யும் 10 நாடுகளில் ஒன்றாகும்.
அந்நாட்டின் அரசால் நடத்தப்பட்டு வரும் எண்ணெய் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுல்தான் அல் ஜாபர் COP28 பேச்சுவார்த்தையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
எரிவாயு மற்றும் நிலக்கரி போன்றவை புதைபடிவ எரிபொருள். இவை எரிசக்தியாக மாற்றப்படும்போது கார்பன்-டை-ஆக்சைடு போன்ற பூமி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் பசுங்குடில் வாயுக்களை வெளியிட்டு, காலநிலை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக இருக்கிறது.
ஆனால், ஐக்கிய அரபு அமீரகத்தின் எண்ணெய் நிறுவனம் தன் உற்பத்தியை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.
”இது சிகரெட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியை புற்றுநோய் குறித்த மாநாட்டை மேற்பார்வையிட நியமித்தது போன்று இருக்கிறது,” என, 350.org என்ற சுற்றுச்சூழல் பிரச்சார குழு தெரிவித்துள்ளது.
எண்ணெய் மற்றும் எரிவாயு துறையில் இருந்து நடவடிக்கை எடுப்பதற்கு தான் தனித்துவமாக சிறந்து விளங்குவதாகவும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனமான மஸ்தார் எனும் நிறுவனத்தின் தலைவராக காற்று மற்றும் சூரிய சக்தி போன்ற தொழில்நுட்பங்களின் விரிவாக்கத்தையும் தான் மேற்பார்வையிட்டுள்ளதாக டாக்டர் அல் ஜாபர் வாதிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
COP28 ஏன் முக்கியமானது?
COP28 மாநாடு, நீண்ட கால உலக வெப்பநிலை உயர்வை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்தும் இலக்கை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவும் என நம்பப்படுகிறது. இந்த இலக்கு 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற பாரீஸ் மாநாட்டில் சுமார் 200 நாடுகளால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
ஐபிசிசி (IPCC) எனப்படும் காலநிலை மாற்றத்திற்கான அரசுகளுக்கிடையேயான குழுவின் படி, காலநிலை மாற்றத்தால் மிக மோசமான பாதிப்புகள் ஏற்படுவதை தவிர்க்க இந்த 1.5 டிகிரி செல்சியஸ் இலக்கு என்பது மிகவும் முக்கியமானது.
மனிதர்கள் புதைபடிவ எரிபொருட்களை எரிக்கத் தொடங்குவதற்கு முன்பான தொழில்மயமாதலுக்கு முந்தையை காலத்துடன் ஒப்பிடுகையில், நீண்ட கால வெப்பமயமாதல் உயர்வு தற்போது 1.1 டிகிரி செல்சியஸ் அல்லது 1.2 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் உள்ளது.
இருப்பினும், பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வைச் சமாளிப்பதற்கான தற்போதைய உறுதிமொழிகளுக்கு மத்தியிலும், 2100-ஆம் ஆண்டளவில் உலகம் சுமார் 2.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதலுக்கான பாதையில் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
COP28 மாநாட்டில் என்ன விவாதிக்கப்படும்?
பாரீஸ் மாநாட்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட இலக்கை அடைவதற்கான முன்னேற்றங்களுடன் இந்த மாநாட்டில் கீழ்க்கண்டவை குறித்தும் கவனம் செலுத்தப்படும்.
- 2030-ஆம் ஆண்டுக்கு முன்பு, பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வை "குறைக்க" புதுப்பிக்கத்தக்க (கார்பன் உமிழ்வு அல்லாத) எரிசக்தி ஆதாரங்களை நோக்கி நகர்வதை வேகப்படுத்துதல்
- காலநிலை மாற்ற தடுப்பு நடவடிக்கைக்காக பணக்கார நாடுகள் ஏழை நாடுகளுக்கு நிதியுதவி வழங்குதல் மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கான புதிய ஒப்பந்தத்தை உருவாக்குவதற்கான பணியில் ஈடுபடுதல்
- இயற்கை மற்றும் மக்கள் மீது கவனம் செலுத்துதல்
- COP28-ஐ ”அனைவரையும் உள்ளடக்கிய” ஒன்றாக உருவாக்குதல்
சுகாதாரம், நிதி, உணவு மற்றும் இயற்கை ஆகிய கருபொருள்கள் குறித்தும் இந்த மாநாட்டில் பல நிகழ்வுகள் நடத்தப்படும்.
COP28 மாநாட்டில் யாரெல்லாம் பங்கேற்பர்?
200-க்கும் மேற்பட்ட நாடுகளின் அரசுகளுக்கு அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. மேலும், அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா போன்ற பல நாடுகளின் தலைவர்கள் தங்கள் வருகையை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இந்த மாநாட்டில் பங்கு பெறுவார். பிரிட்டன் அரசர் சார்ல்ஸ் இம்மாநாட்டில் பங்கேற்பார் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியுள்ளது. அவர் டிசம்பர் 1-ஆம் தேதி மாநாட்டின் பிரதிநிதிகளிடையே தொடக்க உரையை ஆற்றுவார்.
சுற்றுச்சூழல் தொண்டு அமைப்புகள், சமூக குழுக்கள், சிந்தனை மையங்கள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட அமைப்புகள் இம்மாநாட்டில் பங்குபெறுவர்.
புதைபடிவ எரிபொருள் தொடர்பான நூற்றுக்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் 2022-ஆம் ஆண்டு நடைபெற்ற COP27 மாநாட்டில் பங்கேற்றனர்.

பட மூலாதாரம், Getty Images
COP28 மாநாட்டின் முக்கிய பேச்சுவார்த்தைகள் என்னவாக இருக்கும்?
(நாடுகளால்) "தணிக்கப்படாத" புதைபடிவ எரிபொருட்களின் எதிர்காலம் பற்றி கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவை அதன் உமிழ்வை குறைக்க தொழில்நுட்பம் இல்லாமலேயே எரிக்கப்படுகின்றன.
அதன் பயன்பாட்டை படிப்படியாக குறைக்க வேண்டும் என, அல் ஜாபர் அழைப்பு விடுத்தார். இது, காலப்போக்கில் குறைப்பதற்கான ஒன்றே தவிர முழுமையான முடிவு அல்ல. எனினும், புதைபடிவ எரிபொருட்களின் பயன்பாட்டில் இருந்து ”முழுமையாக வெளியேறுவதற்கு” ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தம் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
"தணிக்கப்படாத" புதைபடிவ எரிபொருட்களுக்கான ஒப்பந்தங்களை கட்டுப்படுத்துவது சில உற்பத்திகளை தொடர அனுமதிக்கும் என, காலநிலை மாற்றம் தொடர்பான பிரச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பசுங்குடில் வாயுக்களின் உமிழ்வை கட்டுப்படுத்துவது படிப்படியாக நடைபெறும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என அவர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
நிதியும் ஒரு பிரச்னையாக இருக்கும்.
காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான நிதியுதவியை ஏழை நாடுகளுக்கு வழங்க பணக்கார நாடுகள் COP27 மாநாட்டில் ஒப்புக்கொண்டன.
ஆனால், இது எப்படி வேலை செய்யும் என்பதில் தெளிவின்மை நிலவுகிறது. உதாரணமாக, அமெரிக்கா தன் வரலாற்று உமிழ்வுகளுக்கான இழப்பீட்டை செலுத்த மறுத்துள்ளது.
உமிழ்வை குறைக்கவும் காலநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்ளவும் 2020-ஆம் ஆண்டு வரை வளர்ந்துவரும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் 100 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க 2009-இல் வளர்ந்த நாடுகள் உறுதியளித்தன.
இந்த இலக்கு எட்டப்படவில்லை. ஆனால், இந்தாண்டு இந்த இலக்கு எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
COP28 மாற்றத்தை ஏற்படுத்துமா?
கிரேட்டா துன்பெர்க் உள்ளிட்ட முந்தைய காலநிலை உச்சி மாநாடு குறித்த விமர்சகர்கள், தேவையான மாற்றங்களை செய்யாமல் நாடுகளும் நிறுவனங்களும் காலநிலை மாற்றம் குறித்த நம்பகத்தன்மையை அதிகப்படுத்துவதற்கான “ஏமாற்று வேலை” இது (Greenwashing) என குற்றம்சாட்டினர்.
ஆனால் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடும்போது, தேசிய நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்ட உலகளாவிய ஒப்பந்தங்களுக்கான சாத்தியங்களை உச்சி மாநாடுகள் வழங்குகின்றன.
எடுத்துக்காட்டாக, 1.5 டிகிரி செல்சியஸ் வெப்பமயமாதல் வரம்பு, பாரிஸில் நடைபெற்ற COP21 மாநாட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது. ஐ.நா.வின் கூற்றுப்படி இது, "உலகளாவிய காலநிலை நடவடிக்கைக்கு அருகில்" உந்தப்பட்டது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












