இலைகளை தைத்து கூடு கட்டி விவசாயம் காக்கும் தையல்கார எறும்புகள் - எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க. சுபகுணம்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியா, இலங்கை என்று ஆசியாவின் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழும் மக்களுக்கு சூவ எறும்புகளைப் பற்றித் தெரியாமல் இருக்காது. பொதுவாக இவை தையற்கார எறும்புகள் என்று அழைக்கப்படுகின்றன. வழக்குமொழியில் சூவ எறும்பு, செஞ்சுளுக்கை, சிஞ்சிருக்கான் என்று பல்வேறு பெயர்களில் அறியப்படுகின்றன.
மரங்களில் ஏறும்போது அவற்றிடம் கடி வாங்கி, கை கால்களில் தடித்துப் போன, எரிச்சலூட்டுகின்ற வீக்கங்களோடு வீட்டுக்கு வந்த நினைவுகள் ஊர்ப்புறங்களில் வளர்ந்த யாருக்குத் தான் இருக்காது?
அதற்குக் காரணம், தையற்கார எறும்புகள் கடிக்கும்போது அவற்றின் வயிற்றில் சுரக்கும் ஃபார்மிக் அமிலம் என்ற அமிலத்தை, கடிக்கும் இடத்தில் உட்செலுத்துகின்றன. அந்த அமிலம் எரிச்சலை உண்டாக்கக்கூடியது.
அதைப் பற்றி எழுதும்போதே, சிறுவயதில் தையற்கார எறும்புகளிடம் வாங்கிய கடிகளின் நினைவுகளால் கை, கால்கள் சில்லிடுகின்றன. அவை அப்படி ஆக்ரோஷமாக இருந்தது ஒருவிதத்தில் நம் மாமரங்களுக்கு நல்லதும்கூட.

பட மூலாதாரம், Getty Images
தையற்கார எறும்புகள் மிகவும் ஆக்ரோஷமானவை. அவை வாழும் தாவரத்தில் ஊடுருவும் களைப்பூச்சிகளை உடனடியாகத் தாக்கி, அழிக்கக்கூடிய பண்பு கொண்டவை. ஆகையால், தையற்கார எறும்புகள் கூடு கட்டி வாழும் தாவரங்களில் தங்களுக்கான உணவையும் வாழ்விடத்தையும் அவை எடுத்துக் கொள்வதோடு, அந்தத் தாவரத்திற்கு களைப்பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பும் வழங்குகின்றன.
அட, கூடு என்றவுடன் தான் நினைவுக்கு வருகிறது. அவற்றுடைய கூடுகளைப் பார்த்துள்ளீர்களா!
மரக் கிளைகள் மறைத்திருக்கும் வகையில் பறவைகளைப் போன்ற வேட்டையாடிகளுக்குத் தெரியாதவாறு மறைவான இடத்தில், சுற்றியுள்ள இலைகளை துணி போல ஒன்று மேல் ஒன்று வைத்துத் தைத்துக் கட்டியிருக்கும் கூடுகளைப் பார்க்கவே அவ்வளவு அழகாக இருக்கும்.


ஆடை தைப்பதைப் போல் அவை எப்படி கூட்டைக் கட்டுகின்றன?
ஆடை தைப்பதைப் போல இலைகளைத் தைப்பதற்கு நூல் வேண்டுமல்லவா! அந்த நூலுக்கு இவை என்ன செய்கின்றன?
தையற்கார எறும்புகள், ஃபார்மிசிடே என்ற எறும்புகளின் உயிரின குடும்பத்திற்குள் வரக்கூடிய ஓய்கோஃபில்லா என்ற பேரினத்தைச் சேர்ந்தவை. இந்தப் பேரினத்தில் இரண்டு வகையான எறும்புகள் பூமியில் உள்ளன. அதில் ஒன்றான இவை, தெற்காசியாவில் இந்தியா, இலங்கை, தென்கிழக்கு ஆசியா முழுவதும் மற்றும் வடக்கு ஆஸ்திரேலியா ஆகிய நிலப்பகுதிகளில் வாழ்கின்றன. இந்தப் பேரினத்தில் உள்ள மற்றுமொரு வகை எறும்புகள் ஆப்பிரிக்க கண்டத்தின் வெப்பமண்டலப் பகுதிகளில் வாழ்கின்றன.
"தையற்கார எறும்புகள் குழுவாக இயங்கக்கூடியவை. அதோடு இந்த எறும்புகள் உயிரிழந்த தையற்கார எறும்புகளை விட்டுவைக்காமல் கூடவே தூக்கிச் செல்வதைப் பார்த்துள்ளேன்," என்கிறார் சிற்றுயிர்களின் நடத்தைகளைப் பதிவு செய்யும் காட்டுயிர் ஒளிப்படக்கலைஞர் க.வி.நல்லசிவன்.

பட மூலாதாரம், Getty Images
மேலும், ஒரு சின்ன தொந்தரவு ஏற்பட்டாலும்கூட கூட்டைச் சுற்றி அவை எச்சரிக்கை உணர்வோடு தயார் நிலையில் ஒன்று சேர்ந்து வாசலைச் சுற்றி எதிர்ப்பதற்குத் தயாராவதைப் பார்த்துள்ளேன் என்று கூறினார்.
இரண்டு துணை இனங்களாக அறியப்பட்டாலும், பெரும்பாலும் இவையிரண்டுக்குமான வாழ்வியல் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்றும் பூச்சியியலாளர் ப்ரொனோய் பைத்யா கூறினார்.
எறும்புகள் அனைத்துமே முட்டையிலிருந்து வெளியாகிய பிறகு அடுத்தகட்ட வளர்ச்சியில் கூட்டுப்புழுவாகி, பட்டுநூலால் தன்னைச் சுற்றி கூடமைத்துக் கொள்ளும். அதிலிருந்து அடுத்தகட்ட வளர்ச்சியில் எறும்பாக உருவெடுக்கும். இதுதான் அனைத்து எறும்புகளுக்கும் பொதுவான வாழ்க்கை சுழற்சி.
ஆனால், தையற்கார எறும்புகள் மட்டும் இதிலிருந்து சிறிதளவு வேறுபட்டவை. அவை புழுவாக உருவெடுத்த பிறகு தன்னைச் சுற்றிக் கூடமைத்து கூட்டுப்புழுவாக மாறுவதில்லை. அதற்கு மாறாக, அதன் உடலில் உற்பத்தியாகும் பட்டு நூல்களை அதன் காலனியிலுள்ள மற்ற எறும்புகள் இலைகளைச் சேர்த்து தைத்து கூடமைப்பதற்குப் பயன்படுத்த வழங்குகின்றன.
தையற்கார எறும்புகள் எதை வைத்து இலைகளைத் தைக்கின்றன என்று இப்போது புரிகிறதா!

பட மூலாதாரம், Getty Images
கூட்டிலுள்ள லார்வாக்களின் (முட்டையிலிருந்து வெளியாகி புழு நிலையில் இருக்கும் முழுமையாக வளர்ச்சியடையாத எறும்புகள்), உடலில் உற்பத்தியாகும் நூல்களைப் பயன்படுத்தி இலைகளுக்குள் அவற்றின் கூட்டைக் கட்டமைக்கின்றன.
தையற்கார எறும்புகளின் லார்வாக்கள் மட்டும் ஏன் தம் நூலை கொடையளிக்கின்றன?
பொதுவாக, புழு வடிவிலிருக்கும் பூச்சிகளின் உடலில் உற்பத்தியாகும் நூலைப் பயன்படுத்தி உடலியல் மாற்றம் நடக்கும் காலகட்டத்தில் அவை தம்மைப் பாதுகாத்துக் கொள்கின்றன. அதுவொரு பாதுகாப்பு யுக்தி.
ஆனால், அத்தகைய பாதுகாப்பு யுக்தியையே விட்டுக்கொடுத்து ஏன் இந்த எறும்புகளின் ஆரம்பக்கட்ட புழுக்கள் நூல்களைத் தம் காலனியிலுள்ள மற்ற எறும்புகளுக்காக தானமளிக்கின்றன?
"மரம் சார்ந்து வாழக்கூடிய 10-15 வகை எறும்புகள் உள்ளன. ஆனால், அவையெல்லாம் மரப் பொந்துகளையோ மரத் தண்டுகளில் துளையிட்டோ அல்லது மரத்தடியிலோ வாழக்கூடியவை. மரக் கிளைகளில் இலைகளைச் சார்ந்து வாழக்கூடியது தையற்கார எறும்புகள் தான்.
மரங்களைச் சார்ந்து வாழக்கூடிய மற்ற எறும்பு வகைகளுடைய உணவு மற்றும் வாழ்விடத்திலிருந்து வேறுபட்ட, அதேவேளையில் தமக்கு உகந்த வாழ்வியலைத் தேர்ந்தெடுத்தாக வேண்டியிருந்தது. ஆகையால், பரிணாம வளர்ச்சியில் மரத் தண்டுகளில் இல்லாமல், உயரத்தில் கிளைகளில் இலைகளுக்குள் வாழும் வகையில் அவை தம்மைத் தகவமைத்துக் கொண்டன," என்கிறார் பூச்சியியலாளர் முனைவர் ப்ரொனோய் பைத்யா.

பட மூலாதாரம், Getty Images
ஆக, மற்ற மரம் சார்ந்து வாழும் எறும்புகளில் இருந்து வேறுபட்ட கைவைக்கப்படாத இலைகளைச் சார்ந்து வாழ வேண்டும். அந்த இலைகளுக்குள் எப்படி கூடு கட்டுவது. அவற்றை ஒன்றிணைத்து, இலைகளை ஒன்றோடு ஒன்று சேர்த்துக் கட்ட வேண்டும்.
அந்த நேரத்தில் தான் அவற்றின் பரிணாம வளர்ச்சியில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. வழக்கமாக கூட்டுப்புழு பருவத்திற்காகப் பயன்படுத்தப்படும் பட்டு நூல்களை, தையற்கார எறும்புகளின் ஆரம்பகட்ட பருவத்திலுள்ள புழுக்கள் இலைகளைச் சேர்த்துத் தைப்பதற்காக தியாகம் செய்கின்றன.
எறும்பு, வண்ணத்துப்பூச்சி போன்ற பூச்சி வகைகள் தம் உடலை புழு வடிவிலிருந்து அடுத்தகட்ட வடிவத்திற்கு மாற்றியமைத்துக் கொள்ளும் காலகட்டத்தில், கூட்டுப்புழுவாக தம் உடலில் உற்பத்தியாகும் நூலைப் பயன்படுத்தி உருவாக்கும் ஒரு கூட்டுக்குள் மறைத்து பாதுகாத்துக் கொள்கின்றன.
அனைத்து எறும்புகளுமே இதைச் செய்யும்போது, தையற்கார எறும்புகள் மட்டும் புழு வடிவிலிருக்கும்போது தம் உடலில் உற்பத்தியாகும் நூலை கூடு கட்டக் கொடையளித்து விடுவதால், அவை கூட்டுப்புழுவாக மாறுவதில்லை. மாறாக எந்த ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக தன் உடலியல் மாற்றத்தை மேற்கொண்டு எறும்பாக உருவெடுக்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
புழு பருவ எறும்புகளின் தியாக மனப்பான்மை
இது ஏதோ 100, 1000 ஆண்டுகளில் நடந்துவிடவில்லை. கோண்டுவானா என்ற பெருங்கண்டம் உடைந்து நிலபகுதிகள் பிரிந்து செல்வதற்கு முன்பிருந்து, கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த பரிணாமவியல் செயல்முறையின் ஒரு பகுதி தான், தையற்கார எறும்புகளின் இந்தப் பழக்கம்.
ஆக, தன்னைப் பாதுகாக்கும் மதிப்புவாய்ந்த பட்டு நூலை கொடையளித்தாகிவிட்டது. அதற்குக் கைமாறாக புழு பருவத்திலிருக்கும் எறும்புகளுக்கு என்ன கிடைக்கிறது?
அவற்றுக்கு நீர் புகாத, சூரிய ஒளி மற்றும் வேட்டையாடிகளிடம் இருந்து நன்கு பாதுகாக்கப்பட்ட, ஈரப்பதம் பராமரிக்கப்படக்கூடிய நல்ல கூடு கிடைக்கிறது என்கிறார் ப்ரொனோய். அதோடு, மரத்தின் மேல் பகுதி மற்ற எறும்புகளால் பயன்படுத்தப்படாமல் இருப்பதால், உணவும் அதிகமாகவே கிடைக்கும் என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images
தன்னைப் பாதுகாக்கும் பட்டு நூலைக் கொடையளிப்பதன் மூலம் தான் மட்டுமின்றி தம் சகோதரிகளும் அதன்மூலம் உருவாக்கப்படும் கூட்டினால் பாதுகாக்கப்படுவதோடு, அந்தக் கூட்டின் அடுத்த தலைமுறைக்கான பாதுகாப்பையும் அவை உறுதி செய்கின்றன. தன்னைப் பற்றி மட்டுமின்றி, கூட்டிலுள்ள அனைத்து எறும்புகளின் நன்மைக்காகவும் செயல்படும் இந்தப் பண்பு, பொதுநலப் பண்பு (Altruism) என்று அழைக்கப்படுகிறது.
இப்படிச் செயல்படுவதன் மூலம், புழு பருவத்திலுள்ள தையற்கார எறும்புகளின் வளரும் தலைமுறைகள், தம்மைப் பற்றி மட்டுமே சிந்திக்காமல் மொத்த கூட்டுக்காகவும் சிந்திக்கின்றன என்கிறார் ப்ரொனோய்.
கூட்டுக்குள் பட்டுநூல் திரைச்சீலைகள்
தையற்கார எறும்புகளின் கிடுக்கி போன்ற தாடைகள் மிகவும் உறுதியானவை. அதைப் பயன்படுத்தி கூடு கட்டப் பயன்படுத்தப் போகும் இலைகளை மரத்திலிருந்து இழுத்து இன்னோர் இலையின் மீது சேர்த்து வைத்து இறுக்கமாகப் பிடித்துக்கொள்ளும்.


அதேபோல், அவற்றின் கால் முனையிலும் கொக்கி போன்ற அமைப்பு இருக்கும். அதையும் இதேபோல் பயன்படுத்தும். இப்படியாக காலிலுள்ள கொக்கி போன்ற உடலமைப்பையும் கிடுக்கி போன்ற தாடையையும் பயன்படுத்தி இருபுறங்களிலும் இழுத்து இறுக்கமாகப் பிடித்துக் கொள்கின்றன.
அப்போது மற்ற எறும்புகள் லார்வாக்களை கொண்டு வந்து தங்கள் உணர்கொம்புகளால் மென்மையாக அழுத்தி பசை போல் இருக்கும் பட்டு நூலை வெளியே எடுத்து இரண்டு இலைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து ஒட்டிக்கொண்டே வரும்.
"இலைகளைச் சேர்த்து தைக்கும் என்று சொல்வதால், அது இலையில் ஓட்டை போட்டுத் தைக்கும் என்று அர்த்தமில்லை. அப்படித் தைப்பதைப் போலவே, ஆனால் லார்வாக்களில் சுரக்கும் பசை போல் ஒட்டும் தன்மை கொண்ட நூல் வடிவிலான பொருளைப் பயன்படுத்தி, இரண்டு இலைகளின் ஒவ்வொருபுறத்தையும் சேர்த்து ஒட்டிக்கொண்டே வரும்.
இப்படியாக வெளிப்புறத்தில் இலைகளைச் சேர்த்து ஒரு பந்து போல கூட்டைக் கட்டும். கூட்டுக்குள் பல்வேறு அறைகளை உருவாக்குவதற்கு, சில நேரங்களில் இலைகளை உட்புறத்திலும் இதேபோல் பயன்படுத்தும். இல்லையென்றால், லார்வாக்களில் சுரக்கும் பட்டுநூலையே பயன்படுத்தி திரைச்சீலையைப் போல் நெய்து, அதை வைத்து உட்புற அறைகளை உருவாக்கும்," என்கிறார் ப்ரொனோய்.

பட மூலாதாரம், Getty Images
நாடோடி எறும்புகள்
பெரும்பான்மையாக இலைகளைத் தைத்தே கூடு கட்டினாலும், சில நேரங்களில், மிகவும் உயரம் குறைவான தாவரங்களில் கூடு கட்டும்போது இலைகள் எதையும் பயன்படுத்தாமல் மேலே குறிப்பிட்டதைப் போன்ற திரைச் சீலை போல் உருவாக்கி அதை வைத்தே கூட கூட்டைக் கட்டிவிடுகின்றன.
பெரும்பாலும் புதிய இலைகளையே தேர்ந்தெடுக்கும் இவை, அந்த இலைகள் வாடும் வரை கூட்டைப் பயன்படுத்துகின்றன. பிறகு அதே மரத்தில் வேறு இடத்தில் புதிதாகக் கூடு கட்டி இடம் மாறிக் கொள்கின்றன. அதாவது, நிலவியல், காலநிலை, தாவர வகை போன்ற காரணிகளைப் பொறுத்து ஒரு மாதம் முதல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை தையற்கார எறும்புகள் தம் கூட்டை மாற்றிக் கொள்கின்றன. ஏனென்றால், மண் அல்லது மரக்கட்டையில் கட்டும் கூடுகளைப் போல், இலைகளில் கட்டும் கூடுகள் நீண்டகாலத்திற்கு நிலைத்திருக்காதல்லவா!
இப்படியாக குறிப்பிட்ட காலகட்டம் வரை இருந்துவிட்டு நாடோடிகளைப் போல் தையற்கார எறும்புகள் இடம் மாறிக் கொள்கின்றன.

பட மூலாதாரம், Getty Images
சராசரியாக ஒரு கூட்டில் சுமார் 200 முதல் 500 என்ற அளவில் நன்கு வளர்ந்த எறும்புகள் இருக்கலாம் என்கிறார் ப்ரொனோய். "நான் ஆய்வு செய்த 20 சென்டிமீட்டர் விட்டமே இருந்த ஒரு சிறிய கூட்டில், பல நூறு முட்டைகள் இருந்தன. அவற்றோடு, லார்வாக்களில் இருந்து உருமாறி, ஆனால் இன்னும் வேலை செய்யத் தயாராக இல்லாத எறும்புகள், நன்கு வளர்ச்சியடைந்த எறும்புகள் என்று சுமார் 200 எறும்புகள் மற்றும் 3 ராணி எறும்புகள் இருந்தன," என்றார்.
மூன்று ராணிகளா, வழக்கமாக ஓர் எறும்புக் கூட்டில் ஒரு ராணி தானே இருக்கும்! ஆம் ஆனால், தையற்கார எறும்புகளைப் பொறுத்தவரை ஒரே காலனியில் மூன்று ராணிகளைப் பார்க்கலாம்.
இலைகளில் கூடு கட்டி வாழ்வதால் உயிர் பிழைப்பதில் பல அபாயங்கள் உள்ளன. ஆகவே, இரண்டு மூன்று ராணிகள் ஒன்று சேர்ந்து ஒரு காலனியை உருவாக்குகின்றன. அதன்மூலம் காலனியின் அடுத்த தலைமுறை பிழைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரிக்கின்றன.
பழங்கள் உற்பத்தியைப் பாதுகாக்கும்
இதுமட்டுமின்றி, தையற்கார எறும்புகளின் கூட்டில் மற்றுமோர் தனித்துவமான அம்சமும் உண்டு.
வழக்கமாக ஒரு காலனியிலுள்ள எறும்புகள் ஒரே கூட்டில் தான் இருக்கும். அந்தக் கூட்டுக்குள் பல்வேறு அறைகள், பல்வேறு பிரிவுகள் இருக்கும். அவற்றில் முட்டைகள், புழுக்கள் இரண்டும் அவற்றைப் பராமரிக்க மட்டுமே இருக்கக்கூடிய, அளவில் மிகச் சிறிய எறும்புகளோடு தனித்தனி அறைகளில் இருக்கும் (இந்த எறும்புகள் கூட்டை விட்டு வெளியில் வருவதே இல்லை. அவற்றின் பணியே முட்டைகளையும் லார்வாக்களையும் பராமரிப்பது தான்) என்று ப்ரொனோய் கூறினார். அதுபோக, உணவுகள், ராணி, வேலைக்கார எறும்புகள் என்று ஒவ்வொன்றுக்கும் தனித்தனி பிரிவுகள் அந்தக் கூட்டுக்குள்ளேயே உருவாக்கப்பட்டிருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
தையற்கார எறும்புகளும் இதைச் செய்யும் என்றாலும் சில நேரங்களில் பல்வேறு கூடுகளை மரத்தின் வெவ்வேறு இடங்களில் அமைத்து, இந்தப் பிரிவுகளை தனித்தனியாகவும் வைக்கின்றன. அதாவது ஒரு கூட்டில் முட்டைகளும் லார்வாக்களும் இரண்டு அறைகளில் அவற்றைப் பராமரிக்கும் எறும்புகளோடு இருந்தால், மரத்தின் வேறொரு பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் கூட்டில், உணவுக் கிடங்கு இருக்கும். இன்னொரு பகுதியில் வேலைக்கார எறும்புகள் இருக்கலாம். இப்படியாக ஒரு மரத்திலுள்ள பல்வேறு கூடுகள் ஒரே காலனியைச் சேர்ந்த எறும்புகளாகக் கூட இருக்கலாம்.
சில பூச்சிகள் மாம்பழம் போன்ற பழங்களின் உள்ளே முட்டையிட்டு விடும். அதிலிருந்து பிறக்கும் அவற்றின் அடுத்த தலைமுறைகள், உள்ளிருந்து வெளியே அவையிருக்கும் மாம்பழத்தைச் சாப்பிட்டு வளர்ந்து வெளியேறும்.
இத்தகைய பூச்சிகளால் மாம்பழம், கொய்யா போன்ற பழங்களின் உற்பத்தி வெகுவாகப் பாதிக்கப்படுவதால், அவற்றைக் கொல்வதற்கு பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால், 2010ஆம் ஆண்டு டென்மார்க்கின் ஆரஸ் பல்கலைக்கழகம் தான்சானியாவில் நடத்திய ஆய்வில், தையல்கார எறும்புகளை மரங்களில் வாழ வைத்தபோது, அத்தகைய உற்பத்திக்குக் கேடு விளைவிக்கும் பூச்சிகளின் வரவை அவை வெகுவாகக் கட்டுப்படுத்தியது தெரிய வந்தது.
இனிமேல், மரங்களில் தையற்கார எறும்புகளையோ அவற்றின் கூடுகளையோ பார்த்தால், அவற்றின் போக்கில் வாழ விட்டுவிடுங்கள். நிச்சயம் அவற்றின் வாழ்க்கைமுறை உங்களுக்கும் பயனளிக்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













