எறும்புகளால் கால்நடைகளை இழக்கும் திண்டுக்கல் கிராமம்: அச்சத்தில் பொதுமக்கள் - கள நிலவரம்

யெல்லோ கிரேஸி எறும்புகள்

பட மூலாதாரம், Gopala Krishnan

படக்குறிப்பு, தனது கூட்டின் முட்டைகளைச் சுமந்து செல்லும் யெல்லோ கிரேஸி எறும்புகள்
    • எழுதியவர், பிரசன்னா வெங்கடேஷ் & க.சுபகுணம்
    • பதவி, ㅤㅤ

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சுமார் 20 கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட கரந்தமலை காட்டுப்பகுதியைச் சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன.

காட்டுப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் வசிக்கும் மேற்கண்ட கிராமத்தினரின் பிரதான தொழில் விவசாயம் மற்றும் கால்நடைகளைப் பராமரிப்பது. இந்த மலைப்பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அதிகப்படியான எண்ணிக்கையில் எறும்புகள் பரவத் தொடங்கின.

ஆண்டுகள் செல்லச் செல்ல மலையின் மேல் பகுதியிலிருந்த எறும்புகள் தற்போது கிராமப் பகுதிகளுக்குள் படையெடுக்க ஆரம்பித்துள்ளன. கிராமங்களில் இருக்கக்கூடிய கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களைக் குறி வைத்து இந்த எறும்புகள் தாக்குவதாகவும் அதனால் கால்நடைகள் கண் பார்வையை இழந்து உயிரிழந்து விடுவதாகவும் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் காட்டுப்பகுதிகளில் இருக்கக்கூடிய காட்டெருது, பாம்பு, முயல் உள்ளிட்ட பல காட்டுயிர்களும் இந்த எறும்புகளின் தாக்குதலால் தொடர்ச்சியாக உயிரிழப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இது மட்டுமல்லாமல் இந்த எறும்புகள் மனிதர்கள் உடலில் ஏறுவதால் கிராம மக்களுக்கு தோள்கள் சிவந்து போகுதல், தோல் வீக்கம், கடுமையான அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகின்றன. இதனால் மேற்கண்ட கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினம்

அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்சன் தர்மராஜனிடம் இந்த எறும்பு வகை குறித்துக் கேட்டோம்.

1px transparent line
1px transparent line

"இந்த எறும்புகளின் பெயர் யெல்லோ கிரேஸி ஆன்ட்ஸ் (Yellow Crazy Ants). இவை எதற்குமே அஞ்சாது. இந்த எறும்புகள், மனிதர்கள் இல்லாத நிலப்பகுதிகளில் அதிகமாகக் காணப்படுவதில்லை. மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தான் இவை அதிகமாகப் பெருகுகின்றன. சர்வதேச இயற்கைப் பாதுகாப்பு அமைப்பான ஐயூசிஎன் (IUCN) உலகின் முதல் 100 ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் பட்டியலில் இது உள்ளது," என்றார்.

சுமார் 20 கிமீ பரப்பளவு கொண்ட கரந்தமலை அடிவாரம் முழுவதும் தற்போது இந்த எறும்புகள் பரவியுள்ளன. இதனால் கரந்தமலை காட்டுப் பகுதிகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று கால்நடைத் துறை கிராம மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார்கள்.

தற்போது மலை அடிவாரத்தில் கால்நடைகளை வைத்துப் பராமரித்து வந்த சிலர் இந்த எறும்புகளின் தொடர் தாக்குதலால் அச்சமடைந்து காலி செய்து ஊருக்குள் தஞ்சம் புகுந்துள்ளார்கள். விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்தை தங்களது விளைநிலங்களில் மணிக்கு ஒரு முறை தெளித்து வந்தவண்ணம் இருக்கிறார்கள்.

தற்போது மளமளவென பரவி வரும் இந்த எறும்புகளுக்கு காட்டுயிர்கள் மற்றும் கால்நடைகள் பலியாவதால், இந்த எறும்புகளை உடனடியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று வனத்துறை மற்றும் கால்நடை துறையிடம் கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்த எறும்புகளால் காட்டு எல்லையிலுள்ள எங்களது தோட்டத்திற்குச் சென்று எங்களால் விவசாயம் செய்ய முடியவில்லை என்கிறார் பாதிக்கப்பட்ட விவசாயி செல்வம். இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது, "தற்போது எனக்கு 55 வயதாகிறது. இந்த மாதிரியான எறும்பை நான் இதுவரை பார்த்ததில்லை. ஆடு, மாடு, கோழி, கோழிக்குஞ்சுகள் என்று எதையும் இந்த எறும்புகள் விட்டு வைக்கவில்லை.

இந்த எறும்புகளால் எங்கள் அனைத்து கால்நடைகளும் நோய்வாய்ப்பட்டு இறந்து விடுகின்றன. காட்டுப்பகுதிக்குள் நடந்து சென்றாலே கால் முழுவதும் இந்த எறும்புகள் மேலேறி ஊருகின்றன. இதனால் மிகுந்த எரிச்சலுடன் அங்கங்கே கொப்பளம் ஏற்படுகிறது. தண்ணீர் எடுத்துச் செல்லலாம் என்று பார்த்தால் தண்ணீர் முழுவதும் இந்த எறும்புகள் நிரம்பியிருக்கின்றன. என்ன செய்வதென்றே எங்களுக்குத் தெரியவில்லை," என்றார்.

யெல்லோ கிரேஸி எறும்புகள்
1px transparent line

யெல்லோ கிரேஸி எறும்புகள்

"இந்த எறும்புகள் மனித நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில் தான் பெரும்பாலும் பெருகுகின்றன. ஒரு தோட்டத்து வீடு இருக்கிறதென்றால், அது பூட்டப்பட்டே இருக்கும்போது அங்கு இந்த எறும்புகள் பெரியளவில் காணப்படாது. ஆனால், எப்போது மனித நடமாட்டம் அங்கு தொடங்குகிறதோ அப்போது அவையும் அங்கு வரத் தொடங்குகின்றன," என்கிறார் அசோகா சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல் ஆய்வு அறக்கட்டளையைச் சேர்ந்த பூச்சியியலாளர் முனைவர்.பிரியதர்ஷன் தர்மராஜன்.

"சர்வதேச இயற்கைப்பாதுகாப்பு அமைப்பான ஐயூசிஎன் (IUCN) இந்த எறும்பு வகையை உலகின் முதல் 100 ஆபத்தான ஆக்கிரமிப்பு உயிரினங்கள் (Most notorious invasive species) பட்டியலில் பெயரிட்டுள்ளது. ஆசியா, ஆஸ்திரேலியா பகுதிகளில் இவை காணப்படுகின்றன.

இந்த வகை எறும்புகள் அனைத்து வகையான உயிரினங்களையும் உணவாகக் கொள்கின்றன. மற்ற வகையைச் சேர்ந்த எறும்புகளைக் கூட இவை கொல்லுகின்றன. ஏதேனும் இறந்த உயிரினங்களின் சடலங்களைப் பார்த்தால் அவற்றையும் சாப்பிடும். நம் கால்களில் ஏதேனும் காயம் ஏற்பட்டிருந்தால், அந்தக் காயங்களிலும் இந்தப் பூச்சிகள் வந்து அரித்துச் சாப்பிடத் தொடங்கும். இவற்றுக்குள் ஓர் ஒருங்கிணைப்பு என்று எதுவுமே கிடையாது. ஆங்காங்கே அவற்றின் போக்கில் உலவும்," என்று கூறுகிறார்.

மேலும், அஃபிட்ஸ் எனப்படும் பூச்சி வகையோடு இவை இணைத்திற உறவு (Symbiotic relationship) கொண்டுள்ளன என்று கூறிய பிரியதர்ஷன் தர்மராஜன், "அஃபிட்ஸ் பூச்சிகளில் கிடைக்கும் பால் போன்ற திரவத்தை எடுத்துக் கொள்கின்றன. இந்தப் பூச்சிகள் பயிர்களுக்குச் சேதம் விளைவிக்கக்கூடியவை. இவற்றை அதிகளவில் கொண்டு வந்து செடிகளின் மீது எறும்புகள் வைத்து உணவளிப்பது, பாதுகாப்பு கொடுப்பது போன்றவற்றை எறும்புகள் செய்கின்றன.

இந்த யெல்லோ கிரேஸி எறும்புகள் (Yellow Crazy Ants) எதற்குமே அஞ்சாது. அதனால் தான் இவற்றுக்கு கிரேஸி என்ற பெயர் அளிக்கப்பட்டது. இவை ஃபார்மிக் அமிலத்தை கக்குகின்றன. கூட்டம் கூட்டமாக வந்து இரையைத் தாக்குவது இவற்றின் வழக்கம்," என்றார்.

யெல்லோ கிரேஸி எறும்புகள்

பட மூலாதாரம், Gopala Krishnan

இந்த எறும்புகள் பசுமை மாறா காடுகள், இலையுதிர் காடுகள், புதர் காடுகள், நதியோரங்கள், விவசாய நிலங்கள், தோட்டங்களில் காணப்படுகின்றன என்று ஆன் எ டிரையல் ஆஃப் ஆன்ட்ஸ் என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம் சார் வாழ்வியல், மரம்சார் வாழ்வியல் என்று இரண்டிலுமே அவை அபாரமான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன. இந்த எறும்புகளின் காலனி மிகப்பெரிய அளவில் இருக்கும்.

ஒரு காலனியில் ஆயிரக்கணக்கான எறும்புகள் இருக்கக்கூடும் என்பதால், அவற்றின் வாழ்விடப் பரப்பும் மிகப்பெரிதாக இருக்கும். அந்தப் பகுதியை அவை மிகுந்த ஆக்ரோஷத்தோடு இவை பாதுகாக்கின்றன. தங்களுடைய வாழ்விடத்தைப் பாதுகாப்பதற்காக, இந்த எறும்புகளில் ஒரு பகுதி பகல் மற்றும் இரவு என இரண்டு நேரங்களிலும் செயல்படுகின்றன.

6.5 முதல் 7மிமீ வரையிலான நீளத்தில் இருக்கக்கூடிய இவை மிக வேகமாகச் செயல்படக் கூடியதாகவும் மிக ஆபத்தானவையாகவும் அறியப்படுவதாக ஆன் எ டிரையல் ஆஃப் ஆன்ட்ஸ் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய நிலப்பரப்பில் ஆக்கிரமிப்பு உயிரினமாக அறியப்படும் இவை, மேற்குத்தொடர்ச்சி மலையில் மனித நடமாட்டம் உள்ள பெரும்பகுதியை ஆக்கிரமித்துள்ளன. மனித நடமாட்டம் அதிகமாக இருக்கக்கூடிய காட்டு நிலங்களின் எல்லையோரங்களில் இவை அதிகளவிலான ஆதிக்கத்தைச் செலுத்துகின்றன.

1px transparent line

ஆட்டுக்குட்டிகள் கண் பார்வையை இழந்துவிட்டன

கரந்தமலை காட்டுப்பகுதிக்குள் இருக்கும் அனைத்து உயிரினங்களும் இந்த எறும்புகளால் பாதிக்கப்படுவதாகக் கூறுகிறார் கரந்தமலை கிராமத்தைச் சார்ந்த விவசாயி அழகு.

"கரந்தமலை காட்டுப்பகுதியில் உள்ள காட்டெருது, முயல், பாம்பு உள்ளிட்ட அனைத்து உயிரினங்களும் இந்த எறும்புகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இந்த எறும்பு எங்களின் கால்நடைகளான ஆடு, மாடுகளின் கண்களை மட்டுமே குறி வைத்துக் கடிக்கிறது. இதனால் கால்நடைகளுக்கு பார்வை பறிபோய், அதனால் நீர், உணவு உட்கொள்ள முடியாமல் பரிதாபமாக இறந்து விடுகின்றன. வனத்துறை அதிகாரிகள் இதுவரை எங்கள் பகுதியில் நேரடியாக வந்து முறையாக ஆய்வு மேற்கொண்டு எந்தவொரு தகவலும் தெரிவிக்கவில்லை," என்கிறார் அழகு.

யெல்லோ கிரேஸி எறும்புகள்
படக்குறிப்பு, யெல்லோ கிரேஸி எறும்புகள் தங்களுடைய கால்நடைகளின் கண்களைத் தாக்குவதாக கிராம மக்கள் கூறுகின்றனர்

பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட அனைத்து காட்டுப்பகுதிகளிலும் இந்த எறும்பு பரவியுள்ளதாகக் கூறுகிறார் நாகம்மாள்.

"வேலாயுதம்பட்டி மலை அடிவாரத்தில் நான் வசித்து வந்தேன். இந்த எறும்புகளால் என்னுடைய ஆடுகள் இறந்து விட்டன. மேலும் மூன்று ஆட்டு குட்டிகளுக்குத் தற்போது கண் பார்வை பறிபோய்விட்டது. என்னுடைய வீடு முழுவதுமே இந்த எறும்புகள் சூழ்ந்துவிட்ட காரணத்தால் வீட்டைக் காலி செய்துவிட்டு ஊருக்குள் குடி வந்திருக்கிறேன்.

இந்த எறும்புகளை எங்களால் கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை. நாளுக்கு நாள் இந்த எறும்புகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. எனவே வனத்துறையினர் உடனடியாக இதைக் கவனத்தில் கொண்டு எறும்புகளை அழிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

1px transparent line
1px transparent line

மக்களுக்கு தோல்வீக்கம், அரிப்பு, கொப்பளங்கள்

மனிதர்களை இந்த எறும்புகள் கடித்தால், தோல்வீக்கம், கடுமையான அரிப்பு மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகிறது என்கிறார் கல்லூரி மாணவி ஆஷிகா.

பிபிசி தமிழிடம் பேசிய ஆஷிகா, "சில ஆண்டுகளுக்கு முன்பு காட்டின் மேல் பகுதியில் இருந்த இந்த எறும்புகள் இப்போது காடு முழுவதும் பரவி மலை அடிவாரத்திற்கும் படையெடுத்துள்ளன. வெயில் அடிக்கும்போது இந்த எறும்புகளின் தாக்கம் சற்று குறைவாக உள்ளது.

ஆனால், மழைக்காலத்தில் ஊர் முழுவதுமே பரவி விடுகிறது. மேய்ச்சலுக்குச் செல்லும் மக்களின் கால்களைக் கடிக்கும் இந்த எறும்புகளால் தோல் வியாதிகள் ஏற்படுகின்றன. இந்த எறும்புகளால் விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த எறும்புகளை முற்றிலும் கட்டுப்படுத்த வனத்துறையும் கால்நடை துறையும் இங்கு சிறப்பு முகாம் அமைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்," என்றார்.

இந்த எறும்புகள் சாதாரண எறும்புகள் போலத்தான் தெரிகின்றன என்றும் இந்த எறும்புகளால் தான் கால்நடைகளுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறதா என்பது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நத்தம் கால்நடை மருத்துவர் சிங்கமுத்து பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மேற்கொண்டு பேசியவர், "20 கிமீ பரப்பளவு கொண்ட கரந்தமலை முழுவதுமே இந்த எறும்புகள் தற்போது பரவியுள்ளன. எதனால் அதிகப்படியான எண்ணிக்கையில் எறும்புகள் பரவியுள்ளன என்பது குறித்துத் தெரியவில்லை. மேலும் இந்த எறும்புகளை எவ்வாறு கட்டுக்குள் கொண்டு வருவது என்பது குறித்தும் புரியவில்லை.

யெல்லோ கிரேஸி எறும்புகள்
படக்குறிப்பு, பாம்பு ஒன்றை மொய்த்துக் கொண்டிருக்கும் எறும்புகள்

ஆனால் இந்த எறும்புகளின் தாக்குதல் காரணமாகத்தான் காட்டுயிர்களும் கால்நடைகளும் பாதிக்கப்படுகின்றன என்பது குறித்து உறுதியாகக் கூற முடியாது," என்றவர், தற்போதைய சூழலில் காட்டுப் பகுதிகளுக்குள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டாம் என்று அனைத்து கிராம மக்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வனத்துறை அதிகாரிகளை சம்பந்தப்பட்ட கிராமப் பகுதிகளுக்கு அனுப்பி ஆய்வு மேற்கொண்டு அதன் அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளேன். அந்த அறிக்கையின் அடிப்படையில் தான் இதுகுறித்து விளக்கமளிக்க முடியும் என்று பிபிசி தமிழிடம் பேசிய சிறுமலை வன அலுவலர் பிரபு தெரிவித்தார்.

காலநிலை மாற்றம் காரணமாக இருக்கலாம்

இந்தப் பிரச்னை இவ்வளவு தீவிரமானதற்கு, காலநிலை மாற்றம் மற்றும் புவிவெப்பயமாதல் ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் முனைவர்.பிரியதர்ஷன் தர்மராஜன்.

அவர், "பூச்சிகள் உடலில் வெப்பத்தை உருவாக்க முடியாத உயிரின வகைப்பாட்டைச் சேர்ந்தவை. ஆகவே அவற்றின் உடல் வெப்பநிலை எப்போதும் ஒரே மாதிரியாக இருக்காது. அவை வாழும் பகுதியின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளும். உடல்வெப்பநிலை அதிகரிக்கும்போது அவற்றின் வளர்சிதை மாற்றங்களும் அதிகரிக்கின்றன," என்கிறார்.

வளர்சிதை மாற்றங்கள் அதிகரிக்கும்போது அவை மிகத் தீவிரமாக அதிகளவில் சாப்பிடுகின்றன. இது ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், இந்தக் குறிப்பிட்ட பிரச்னையில் இதை உறுதி செய்வதற்கு நம்மிடம் போதுமான தரவுகள் இப்போது இல்லை. சமீபத்திய பருவநிலைகள் அவற்றின் இந்தப் பெருக்கத்தை ஆதரிக்கும் வகையில் இருந்திருக்க வேண்டும். இந்த எறும்புகள் பெரும் படையெடுப்பைச் செய்திருக்ககூடிய பகுதியின் பருவநிலை குறித்த தரவுகளைச் சேகரித்து விரிவாகப் பகுப்பாய்வு செய்து பார்க்க வேண்டும் என்கிறார் பிரியதர்ஷன் தர்மராஜன்.

1px transparent line
காணொளிக் குறிப்பு, உயிராபத்தை விளைவிக்கும் முரட்டு எறும்புகள் - திண்டுக்கலில் பெருகியது எப்படி?
1px transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: