காலநிலை மாற்ற சேதநிதி: இந்தியாவை சிக்க வைக்க பார்க்கிறதா அமெரிக்கா?

காலநிலை மாற்ற சேத நிதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், நவின் சிங் கட்கா
    • பதவி, சுற்றுச்சூழல் செய்தியாளர், பிபிசி உலகம்

சீனாவும் இந்தியாவும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை அதிக அளவில் வெளியிடும் நாடுகளின் பட்டியலில் உள்ளன. இதில், சீனா முதல் இடத்திலும் இந்தியா மூன்றாவது இடத்திலும் உள்ளது.

இரு நாடுகளும் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்ட நாடுகளாக இருக்கின்றன. இருந்தாலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் உலகளாவிய இழப்பு மற்றும் சேதங்களைச் சமாளிக்கும் நிதிக்கு பங்களிக்க வேண்டுமா என்பதில் இந்த இரண்டு நாடுகளுக்கு இடையே ஏன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

துபாயில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபையின் (UN) காலநிலை மாற்ற மாநாடான COP28ல் விவாதிக்கப்படும் இந்தக் கேள்வி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்...

காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்பு மற்றும் சேத நிதி என்றால் என்ன?

2022 ஐநா அறிக்கையின்படி, வளரும் நாடுகளுக்கு 2030 ஆண்டு வரை பருவநிலை மாற்றத்திற்கு ஏற்ப ஒரு ஆண்டிற்கு 300 பில்லியன் அமெரிக்க டாலர் தேவைப்படும்.

வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளுக்கு இடையே பல ஆண்டுகளாக கருத்து வேறுபாடுகள் நடந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு எகிப்தில் நடந்த COP27ன் போது இழப்பு மற்றும் சேத நிதி கொள்கை ஒன்று நிறுவப்பட்டது.

காலநிலை மாற்றத்தின் எதிர்மறையான விளைவுகளைச் சமாளிக்கும் போது ஏழை நாடுகளுக்கு நிதி உதவி வழங்குவதுதான் இந்த நிதியின் நோக்கம். உதாரணமாக, கடல் மட்டம் உயர்வதால் இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு அல்லது காட்டுத் தீக்குப் பிறகு மீண்டும் வாழ்விடங்களை கட்டமைப்பதற்கும் இந்த நிதி உதவுகிறது.

ஆனால் நிதியில் பணம் ஏதும் இல்லை. அதற்கு யார் நிதியளிப்பார்கள் என்பது பற்றிய விவரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை. அதனால் இந்த நிதி எவ்வாறு செயல்படும் என்ற கேள்விகளுக்கு இன்னும் பதில் கிடைக்காமலேயே உள்ளது.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

இந்த நிதிக்கு யார் பணம் வழங்க வேண்டும்?

பசுமை இல்ல வாயுவை வெளியிடும் நாடுகளின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் அமெரிக்காவும் பிற வளர்ந்த நாடுகளும் க்ரீன்ஹவுஸ் வாயுவை வெளியிடுவதை கணிசமாக குறைக்கும் முயற்சியில் உள்ளன. அவர்களோடு இந்த முயற்சியில் சீனாவும் இந்தியாவும் சேர வேண்டும் என்றும் அதே நேரம், இழப்பு மற்றும் சேத நிதிக்கும் பங்களிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா மற்றும் பிற வளர்ந்த நாடுகள் வலியுறுத்துகின்றன.

ஆனால் சீனாவும் இந்தியாவும் இதற்கு உடன்படவில்லை. அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற வளர்ந்த நாடுகள் பல ஆண்டுகளாக க்ரீன்ஹவுஸ் வாயுவை வெளியிட்டு வந்துள்ளன. அவற்றை ஒப்பிடும்போது தங்களின் உமிழ்வு என்பது சமீபத்திய நிகழ்வுதான் என இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன.

1992 இல் கையொப்பமிடப்பட்ட காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. கூட்டமைப்பின் மாநாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தாங்கள் இன்னும் வளரும் நாடுகளாக இருப்பதாகவும், எனவே இழப்பு மற்றும் சேத நிதியை தங்களுக்குத்தான் வழங்க வேண்டும் என்றும் தாங்கள் அந்த நிதியை தர வேண்டியதில்லை என்றும் இந்தியாவும் சீனாவும் கூறுகின்றன.

COP27 மாநாடு நடந்த வருடத்தில் இருந்து, நிதியை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து நாடுகளிடையே சூடான விவாதங்கள் நடந்தன. இறுதியாக அக்டோபர் 2023 இல் ஒரு பரிந்துரை தொகுப்பிற்கு ஒப்புக்கொண்டன.

அந்த பரிந்துரைகள் இப்போது COP28ல் அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த பரிந்துரைகள் வளர்ச்சியடைந்த நாடுகளை இழப்பு மற்றும் சேத நிதியை ஆதரிக்குமாறு "ஊக்குவிக்கிறது". மேலும் மற்ற நாடுகளை தானாக முன்வந்து ஆதரிக்க "ஊக்குவிக்கிறது".

அனைத்து வளரும் நாடுகளும் நிதியுதவிக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவை என்பதையும் பரிந்துரை தெளிவுபடுத்துகிறது.

ஆனால் இந்த பரிந்துரைகள் வளர்ச்சியடைந்த நாடுகளுக்கும் சீனா மற்றும் இந்தியா போன்ற பெரிய வளரும் பொருளாதாரங்களுக்கும் இடையிலான பதற்றத்தை முடிவுக்கு கொண்டு வரவில்லை என்று பேச்சுவார்த்தை நடத்துபவர்கள் கூறுகிறார்கள்.

"நிதி ஆதாரங்கள் ஒரு பெரிய சர்ச்சைக்குரிய பிரச்னையாக உள்ளது, அது இப்போது நிறுத்தப்பட்டுள்ளது," என்று பெயர் குறிப்பிட விரும்பாத மேற்கு நாடுகளில் இருந்து ஒரு பேச்சுவார்த்தையாளர் கூறினார்.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

நிதியை பெற வேண்டிய நாடுகள் யார்?

2006 ஆம் ஆண்டில் அதிக CO2 உமிழ்ப்பாளராக இருந்த அமெரிக்காவை சீனா முந்தியது.

ஆனால் சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளும், தொழில்துறை காலம் தொடங்கிய 1850 களின் முற்பகுதியில் இருந்தே அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் க்ரீன்ஹவுஸ் வாயுக்களை வெளியிடுவதால்தான் பருவநிலை நெருக்கடி ஏற்பட்டது என்று வாதிடுகின்றனர்.

இரண்டு ஆசிய ஜாம்பவான்களும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டில் (UNFCCC) "பொதுவான ஆனால் வேறுபட்ட பொறுப்புகள்" என்ற கொள்கையை சுட்டிக்காட்டுகின்றனர். இந்த கொள்கையின் அடிப்படையில் அனைத்து நாடுகளும் கிரீன்ஹவுஸ் வாயு உமிழ்வைக் குறைக்கும் பொறுப்பைக் கொண்டுள்ளன. ஆனால் அந்த நாடுகளுக்கு இருக்கக்கூடிய பொறுப்பின் பங்கு அந்த நாடுகளுடைய வளர்ச்சியின் தேவையை அடிப்படையாகக் கொண்டதாகும்.

பல சிவில் சமூகங்கள் மற்றும் காலநிலை பரப்புரையாளர்களும் இதே வாதத்தை ஆதரித்துள்ளனர்.

"காலநிலை மாற்றத்தால் இப்போது நாம் காணும் பெரிய இழப்புகள் மற்றும் சேதங்களுக்கு காரணம், 30 ஆண்டுகளாக வளர்ந்த நாடுகள் தங்கள் உமிழ்வை வேகமாகக் குறைப்பதற்கும் வளரும் நாடுகளுக்கு காலநிலை நிதியை வழங்குவதற்கும் பெரிதும் இழுத்தடித்ததுதான்" என்று ஹென்ரிச் போல் ஸ்டிஃப்டுங்கின் இணை இயக்குநர் லியான் ஷாலேடெக் கூறுகிறார்.

இழப்பு மற்றும் சேதம் பேச்சுவார்த்தைகளை நெருக்கமாகப் பின்பற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட சர்வதேச அமைப்பு.

"வளர்ச்சியடைந்த நாடுகளுடன் சமமான நிலையில் புதிய நிதிக்கு பங்களிப்பு செய்யும்படி வளரும் நாடுகளை கேட்பது தார்மீக ரீதியாக தவறானது மற்றும் நேர்மையற்றது" என்று அவர் வாதிடுகிறார்.

ஒட்டுமொத்தமாக நாடுகளை வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் என ஒரு குழுவிற்குள் அடைப்பது காலாவதியானது என்றும் அந்த முறையை மாற்றவேண்டும் என்றும் வளர்ந்த நாடுகள் வாதிடுகின்றனர்.

விமர்சகர்கள் கூறுகையில், 1992ல் வளர்ந்த நாடுகள் மற்றும் வளரும் நாடுகள் என முத்திரை குத்தப்பட்டன. குறிப்பாக சீனா மற்றும் இந்தியா போன்ற பெரிய பொருளாதாரங்கள் மற்றும் க்ரீன்ஹவுஸ் வாயுக்களை அதிகம் வெளியிடும் நாடுகளில் தற்போது நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

"சீனா மற்றும் இந்தியா மட்டுமல்ல, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் சௌதி அரேபியா கூட இந்த நிதியை பெறுபவர்களாக தங்களை கருதாமல் நிதிக்கு பங்களிப்பவர்களாக தங்களைக் கருதுவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பெயர் குறிப்பிட விரும்பாத பேச்சுவார்த்தையாளர் ஒருவர் கூறினார்.

சில சிறிய தீவு நாடுகளும் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்தன.

காலநிலை மாற்றம்

பட மூலாதாரம், Getty Images

'தார்மீக பொறுப்பு' யாருக்கு உள்ளது?

மிச்சாய் ராபர்ட்சன், சிறு தீவு நாடுகளின் கூட்டணிக்கான முன்னணி இழப்பு மற்றும் சேத நிதி பேச்சுவார்த்தையாளர்.

அவர், சீனா மற்றும் இந்தியா போன்ற பெரிய பொருளாதாரங்களுக்கு இந்த நிதி சார்ந்து செயல்படுவதற்கான தார்மீக பொறுப்பு உள்ளதாக தெரிவித்தார்.

அவர் கூறுகையில், "பரிந்துரையில் 'நிதி வழங்க மற்ற தரப்பினரை ஊக்குவிக்கவும்' என்ற வார்த்தைகள் இருக்கிறது. இது வளர்ந்த நாடுகளுக்கும் அப்பால் முழுக் குழுவின் (வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் உட்பட) ஒத்துழைப்பு தேவை என்பதை குறிப்பதாகும்" எனத் தெரிவித்தார்.

ஆனால் காலநிலை மாற்ற சேதத்திற்கான நிதியை ஒழுங்குபடுத்துவதில் காலதாமதம் ஏற்படுவது இது முதல் முறை இல்லை.

கிறிஸ்டியன் எய்ட் எனும் அதிகாரி, தற்போது நடந்துவரும் காலநிலை இழப்பு மற்றும் சேத நிதி குறித்த விவாதத்தை முந்தைய காலநிலை நிதி உறுதிமொழியுடன் ஒப்பிடுகிறார். அந்த உறுதிமொழியும் இன்னும் நிறைவேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே வளர்ந்த நாடுகள் தாங்கள் கொடுத்த முந்தைய வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், இந்தியா மற்றும் சீனா போன்ற வளரும் நாடுகள் நிதிக்கு பங்களிப்பது கடினம்தான் எனத் தெரிவிக்கப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)