கன்னியாகுமரி வனப்பகுதியில் முதல் முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஒளிரும் காளான்

உயிரொளிர் காளான்

பட மூலாதாரம், Kanniyakumari Nature Foundation/Jude D

    • எழுதியவர், சு.மகேஷ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கன்னியாகுமரி மாவட்ட வனப்பகுதியில் ஒளிரும் தன்மையுள்ள காளான்கள் இருப்பது முதல்முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

‘கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை’ (Kanniyakumari Nature Foundation) மற்றும் மாவட்ட வனத்துறை இணைந்து நடத்திய ஆய்வு பயணத்தின் போது இவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

‘கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை’யின் இயக்குநர் வினோத் சதாசிவன், மழைக்காலத்தைத் தொடர்ந்து நடத்தப்பட்ட ஆய்வு பயணத்தின் போது இந்த வகை காளான்களை கண்டுபிடிக்கப்பட்டதாக பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய பகுதியில் உள்ள பல்லுயிர் குறித்த ஆய்வு மற்றும் ஆவணப்படுத்துதல் பணிகளை மேற்கொண்டு வருகிறது தனியார் நிறுவனமான ‘கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை’.

உயிரொளிர் காளான்

பட மூலாதாரம், Kanniyakumari Nature Foundation/Jude D

இரவில் பச்சை நிறத்தில் ஒளிரும் காளான்

கோவா மற்றும் கேரள மாநில காடுகளில் இந்த வகை காளான்கள் இருக்கின்றன. எனவே கேரள காடுகளைப் போன்றே நிலப்பரப்பை கொண்டுள்ள கன்னியாகுமரி காடுகளிலும் இந்த வகை காளான்கள் இருக்கலாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் வனத்துறையினரும் தேடிச்சென்றுள்ளனர்.

‘கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை’யின் இயக்குநர் விநோத், “கன்னியாகுமரி வனப்பகுதியில் வாழும் காணி பழங்குடியினர் வெகு காலத்துக்கு முன்பு இரவு நேரங்களில் ஒளிரும் காளான்களை அதிக அளவில் பார்த்து உள்ளதாகவும், தற்போது அவ்வகை காளான்களை பார்ப்பது அரிதாகவிட்டது என கூறுகின்றனர்,” என்றார்.

மூங்கில் மரங்கள் உள்ள பகுதிகளிலேயே இந்த வகை காளான்கள் வளரும். எனவே வனத்தில் மூங்கில் காடுகள் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர் ஆய்வுகள் நடத்தப்பட்டன.

“வனத்துறையினருடன் எங்கள் குழுவினர் நடத்திய மூன்று மாத தீவிர தேடுதலுக்கு பின்னர் கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள குலசேகரம் வனசரக பகுதியில் ஒளிரும் தன்மையுள்ளன காளான்களை கண்டுபிடித்தோம்,” என்கிறார் விநோத்.

உயிரொளிர் காளான்

பட மூலாதாரம், Kanniyakumari Nature Foundation/Jude D

கன்னியாகுமரி வனவிலங்கு சரணாலய பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள உயிரொளிர் பூஞ்சை மைசீனியா குளோரோஃபோஸ் (Mycena chlorophos) ரகத்தை சேர்ந்தது. கன்னியாகுமரி வனப்பகுதியில் ஒளிரும் காளான்களின் இருப்பு கண்டுபிடிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

வினோத் மேலும் கூறுகையில், “பகல் பொழுதுகளில் சாதாரண காளான்கள் போலவே காட்சியளிக்கும் இவை இரவில் மட்டும் இளம் பச்சை நிறத்தில் ஒளிர்கின்றன. அடர்ந்த வனப்பகுதியில் மழைக்காலத்தில் மட்டுமே இவற்றை காண முடியும். அதுவும் மை இருட்டாக இருக்கும் சமயத்தில் தான் காண முடியும்,” என்கிறார்.

உயிரொளிர் காளான்
படக்குறிப்பு, உயிரொளிர் காளான்கள் அடர்ந்த வனப்பகுதிகளில் மழைக்காலத்தில் மட்டுமே காணப்படும் என்கிறார் கன்னியாகுமரி இயற்கை அறக்கட்டளை இயக்குநர் விநோத்.

பூச்சிகளை ஈர்க்கவே ஒளிர்கிறது

உயிரொளிர் பூஞ்சை (Bioluminescent Fungi) எனப்படும் இந்த காளான்களில் சுமார் 120 ரகங்கள் உள்ளன. “தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள அடர் வனங்களில் சிதைந்த மரங்கள் உள்ள பகுதிகளில் (decomposed or dead wood) இந்த வகை ஒளிரும் தன்மையுள்ள காளன்களை காண முடியும்” என தமிழ் நாடு வேளாண்மை பல்கலைகழகத்தின் முன்னாள் செயல் துணைவேந்தரும் காளான் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம், பயிர் நோயியல் துறையின் தலைவருமான முனைவர் ஏ.எஸ்.கிருஷ்ண மூர்த்தி பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்த பூசானம் தனது விதைகளை பரப்ப வேண்டும் என்பதற்காகவே ஒளிர்கிறது. இந்த ஒளியால் ஈர்க்கப்பட்டு வரும் பூச்சிகள் மீது பூசானத்தின் விதைகள் பட்டு மற்ற இடங்களுக்கு பரவுகின்றது.

“மின்மினி பூச்சியின் (fireflies/glow worm) வாலில் இருப்பது போன்று இந்த வகை காளான்களில் Luciferin என்ற ஒரு வித வேதிப்பொருள் இருக்கிறது. இது கந்தகம், பாஸ்பரஸ் உள்ளிட்டவை சேர்ந்த ஒரு கலவை போன்றது. காற்றில் உள்ள ஆக்சிஞன் இதில் பட்ட உடன் Luciferase என்கிற ஒரு நொதி செயல்பட்டு இந்த Luciferin ஒளிரும்.” என்றார் முனைவர் ஏ.எஸ்.கிருஷ்ண மூர்த்தி.

உயிரொளிர் காளான்

பட மூலாதாரம், Kanniyakumari Nature Foundation/Jude D

பைன் மர காடுகளில் காணப்படும் காளான்

இளம் பச்சை அல்லது இள நீல நிறத்தில் இந்த காளான்கள் ஒளிரும். இரண்டாம் உலக போர் காலக்கட்டத்தில் இந்த வகை காளான்களிலிருந்து கிடைத்த ஒளியை பயன்படுத்தி கடிதங்கள் எழுதப்பட்டதாகவும் கூறப்படுகிறது, என்று சில சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் பேராசிரியர் கிருஷ்ண மூர்த்தி.

Omphalotus olearius (Jack O' Lantern), Favolachia, Mycena, Panellus, Prunulus, Neonothopanus, Armillaria, Mycena, உள்ளிட்டவை ஒளிரும் காளான்களில் பொதுவாக காணப்படும் ரகங்கள்.

Armillaria Mellea என்ற ரக உயிரொளி காளான்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள பைன் மர காடுகளில் மிக பரவலாக காணப்படுகின்றன.

உயிரொளிர் காளான்

பட மூலாதாரம், Kanniyakumari Nature Foundation/Jude D

உண்ணுவதற்கு தகுதியற்ற இந்த வகை காளான்களை தொழில்துறை பயன்பாட்டுக்கு உகந்தது. இந்த வகை காளானில் உள்ள ஒளிரும் தன்மையுள்ள மூலக்கூறுகள் பயிர் பாதுகாப்புக்கு வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.

கன்னியாகுமரி மாவட்ட வனத்துறை அதிகாரி மு.இளையராஜா பிபிசி தமிழிடம் பேசும் போது, “ வனத்தில் அதிக மனித நடமாட்டம் இல்லாத பகுதிகளிலேயே இந்த வகை ஒளிரும் காளான்களை காணமுடியும். நான்கு ஐந்து நாட்கள் தொடர்ச்சியாக காடுகளில் மழை பெய்தால் அடுத்து வரும் ஆறாம் நாளில் இந்த வகை காளான்களை காண முடிகிறது” என்றார்.

கன்னியாகுமரி வனப்பகுதியில்ன் உயிரொளிர் காளான் முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இது குறித்த தொடர் ஆய்வுகள் நடைபெறவுள்ளன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)