கோவை நகைக்கடை கொள்ளையன் கைது - உள்ளே நுழைய குறுகிய வழி இருப்பதை சொன்னது யார்?

கோவை நகைக்கடையில் கொள்ளை
    • எழுதியவர், ச.பிரசாந்த்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடையில் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் விஜய் என்ற நபரை இரு வாரங்களுக்கு பின்னர் தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர். அவரிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே நவம்பர் 30 ம் தேதி, விஜயின் மனைவி நர்மதாவை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 3.2 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீசார் தர்மபுரி மாவட்டம் தும்பலஹள்ளியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் இருந்த விஜயின் மாமியார் யோகராணியை கைது செய்தனர். அவரிடம் இருந்து 1.35 கிலோ தங்க நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். நகைகளை குப்பைத் தொட்டியிலும், சாலை ஓரத்திலும் புதைத்து வைத்திருந்த நிலையில் அவற்றை மீட்டனர்.

கோவை நகைக்கடையில் கொள்ளை

கோவை நகைக்கடை கொள்ளையன் கைது செய்யப்பட்டது எப்படி?

கடந்த 5 ம் தேதி தர்மபுரி மாவட்டம் தேவரெட்டியூரில் உள்ள தனது இல்லத்திற்கு வந்த விஜய் வீட்டில் 38 கிராம் நகையை வைத்துவிட்டு சென்றதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் விஜயின் தந்தை முனிரத்தினத்திடம் விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் ஆறாம் தேதி இரவு விஜயின் தந்தை முனிரத்தினம் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளில் பெரும்பாலானவை மீட்கப்பட்ட நிலையில் விஜய் தொடர்ச்சியாக தலைமுறைவாக இருந்து வந்தார். ஐந்து தனிப்படை போலீசாரும் தொடர்ச்சியாக பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்நிலையில் ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதியில், ஐயப்பன் கோவிலுக்கு மாலை அணிந்த வேடத்தில் விஜய் சுற்றி திரிவதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி இருந்த நிலையில், காளகஸ்தியில் இருந்து சென்னை வரும் வழியில் விஜயை தனிப்படை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட விஜய் தற்பொழுது தனிப்படை போலீசாரால் கோவை அழைத்து வரப்படுகிறார்.

விஜயிடம் இருந்து 400 கிராம் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்த கொள்ளை சம்பவம் நடைபெற்று 12 நாட்களுக்குப் பிறகு கொள்ளையன் விஜய் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கொள்ளை சம்பவத்தில் முக்கிய நபரான விஜய் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், நகைக்கடையில் இருக்கும் குறுகிய இடைவெளி குறித்து அவருக்கு தகவல் சொன்ன நபர் யார் ? இதன் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடை காணும் பணியில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

கோவை நகைக்கடையில் கொள்ளை

‘லாவகமான திருடன்’

பல நகைக் கடை திருட்டுகள் நடந்திருந்தாலும் இந்த திருட்டு சற்று சவாலானது போலீஸார் கருதுகின்றனர்.

ஏனென்றால் திருடிய நபர் மிக லாவகமாக யாரும் எதிர்பார்க்காத படி ஏசி வெண்டிலேட்டர் குழாய் வழியாக வந்து சென்றுள்ளார்.

சம்பவ இடத்துக்கு வந்து அவர் எவ்வாறு வந்திருப்பார் என செய்து பார்க்க முயன்ற போலீஸாருக்கு காயங்கள் ஏற்பட்டதே மிச்சம்.

சிசிடிவி காட்சிகளில் முதல் முறை ஒரு ஆடையும் அடுத்தடுத்த பதிவுகளில் வேறு ஆடைகளிலும் இருந்துள்ளார். கடையினுள் நுழைந்த 24 வயது திருடர், நகைகளை அப்படியே அள்ளி போடாமல், விரைவாக வேண்டிய இடத்துக்கு சென்று சில நகைகளை எடுக்கிறார் என்பதை போலீஸார் சிசிடிவி காட்சிகளில் கவனித்துள்ளனர்.

எனவே அவருக்கு கடையைப் பற்றிய விவரங்கள் ஏற்கெனவே தெரிந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்

பஸ் டிக்கெட் கொடுத்த துப்பு

பிபிசி தமிழிடம் பேசிய தனிப்படை போலீஸார், ‘‘நகைக்கடையில் திருடிவிட்டு குற்றவாளி தனது சட்டையை விட்டுச்சென்றார். அதில் இருந்த பஸ் டிக்கெட் கொண்டு பொள்ளாச்சியில் இருந்து காந்திபுரம் வந்தது கண்டறியப்பட்டது,” என்றனர்.

மேலும், "திருடும் முன் சிசிடிவி கேமராவை மாற்றியமைக்க முயன்ற போது பதிவான அவரது கைரேகைகளை எடுத்த போலீஸார், பழைய திருட்டு வழக்கு குற்றவாளிகளின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்தனர். ஏற்கனவே விஜய் தருமபுரி பகுதியில் திருட்டு வழக்கில் சிக்கியபோது எடுக்கப்பட்ட கைரேகையும், ஜோஸ் ஆலுக்காஸ் கைரேகையும் ஒத்துப்போனது. ஜோஸ் ஆலுக்காஸில் திருடிவிட்டு நகைகளை சிறிய பையில் வைத்து, ஆட்டோவில் சென்று, அதன்பின் பஸ் மூலம் அவர் வீடு சென்றுள்ளார். இவை அனைத்தும் கண்காணிப்பு கேமரா காட்சிகளில் பதிவாகியுள்ளன. இதை வைத்து அவர் ஆனைமலையில் இருப்பதை கண்டறிந்தோம்," என்றனர்.

மேலும் தொடர்ந்த போலீஸார், "விஜயை கைது செய்ய ஆனைமலை சென்று வீட்டின் கதவை தட்டினோம், அப்போது அவரது மனைவி ஆடை மாற்றுவதாகக்கூறி உள்ளிருந்து சப்தமிட்டு கதவை அடைத்துக்கொண்டார். நாங்கள் கதவை உடைக்க முயன்றபோது அவரே கதவை மீண்டும் திறந்தார், உள்ளே சென்று பார்த்தபோது தான் 18 அடி உயரமுள்ள வீட்டின் மேற்கூரையை பிரித்து மீதமுள்ள 1.6 கிலோ தங்கத்துடன் விஜய் தப்பிச்சென்றது தெரியவந்தது. விரைவில் அவரையும் கைது செய்து மீதமுள்ள நகைகள் மீட்கப்படும்," என்கிறார்கள் அவர்கள்.

கோவை நகைக்கடையில் கொள்ளை
படக்குறிப்பு, நர்மதா

கைதான நபர் யார்?

இப்படியான நிலையில் குற்றவாளி தருபுரி அரூரை சேர்ந்த விஜய் என்பதையும் அவர் கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் தங்கியிருப்பதையும் கண்டறிந்தனர். நவம்பர் 30-ஆம் தேதி விஜய் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்ற போலீஸார் விஜயை கைது செய்யும் முயற்சித்த போது குற்றவாளி அங்கிருந்து தப்பியோடிய நிலையில், வீட்டில் இருந்து 3 கிலோ தங்க நகைகளை பறிமுதல் செய்து, அவரது மனைவி நர்மதாவைக் கைது செய்துள்ளனர்.

கொள்ளைச் சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கோவை மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், "ஜோஸ் ஆலுக்காஸ் நகைக்கடை வழக்கில் முதற்கட்டமாக 2 கிலோ தங்கம், வைர நகைகள் திருடப்பட்டதாக வழக்கு பதிவு செய்திருந்தோம். புலன்விசாரணையில் திருடப்பட்டது 4.6 கிலோ தங்க நகைகள், 700 கிராம் வெள்ளி என்பது தெரியவந்தது. 350க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்து விசாரணை நடத்தியதில் குற்றவாளி தருமபுரியை சேர்ந்த விஜய் என்பது தெரியவந்தது. அவரது மனைவி இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த நர்மதா,” என்றார்.

"ஆனைமலையில் தங்கியிருந்த விஜய் தப்பியோடிய நிலையில், 3 கிலோ தங்க நகைகள் பறிமுதல் செய்து திருடுவதற்கும், திருடிய பொருட்களை மறைக்கவும் உதவிய அவரது மனைவி நர்மதா மற்றும் நண்பர் சுரேஷ் ஆகியோரை கைது செய்துள்ளோம். தப்பியோடி விஜய் விரைவில் கைது செய்யப்படுவார். நகைக்கடையில் கட்டுமானப் பணிகள் நடக்கும் நிலையில் விஜய் எப்படிச்சரியாக மூன்றாம் தளம் சென்று கொள்ளையடித்து தப்பினார், கடை ஊழியர்கள் யாரேனும் உதவினார்களா? என விசாரிக்கிறோம். குற்றவாளி விஜய் இதுவரையில் பணம் மட்டுமே திருடும் குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார், முதன் முதலாக நகைகள் திருடியுள்ளார்," என்றார்.

சம்பவத்தன்று என்ன நடந்தது?

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடையில், ‘ஏசி வென்டிலேட்டர்’ குழாய் வழியாக புகுந்த மர்ம நபர் 200 பவுன் அளவுக்கான தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளார்.

கோவை மாநகரின் முக்கிய வணிகப்பகுதியான காந்திபுரம் 100 அடி ரோடு பகுதியில் அதிக அளவிலான நகைக்கடைகள், ஆடை உள்பட பல கடைகள் உள்ளன. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்தப் பகுதியில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக்கடை அமைந்துள்ளது.

நவம்பர் 28ம் தேதி காலை 9:30 மணிக்கு பணியாளர்கள் கடையை திறந்து பார்த்த போது, முதல் மற்றும் இரண்டாவது தளத்தில், ரேக்குகளில் அடுக்கி வைக்கப்படிருந்த தங்க நகைகள் கொள்ளை போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த பணியாளர்கள், காட்டூர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் கைரேகை நிபுணர்களை வைத்தும், மோப்பநாய் வில்மாவை வரவழைத்தும் சோதனை செய்து தடயங்களை சேகரித்தனர்.

கோவை நகைக்கடையில் கொள்ளை
படக்குறிப்பு, கோவை மாவட்ட கமிஷனர் பாலகிருஷ்ணன்

கொள்ளையர் கடைக்குள் நுழைந்தது எப்படி?

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளி ஒருவர் எனவும், நகைக்கடையில் சில கட்டுமான பணிகள் நடந்து வரும் நிலையில் நகைக்கடையின் பக்கவாட்டு சுவர் அருகேயுள்ள சிறிய சந்தில் நடந்து சென்று, சுவற்றில் பொருத்தியிருந்த ‘ஏசி’ இயந்திரத்துக்கான வென்டிலேட்டர் குழாய் வழியாக சென்று கடைக்குள் நுழைந்தது தெரியவந்துள்ளது.

சம்பவம் குறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த கோவை மாவட்ட கமிஷனர் பாலகிருஷ்ணன், ‘‘முதற்கட்ட விசாரணையில் ஒரு நபர் தான் ‘ஏசி’ வென்டிலேட்டர் வழியாக நகைக்கடைக்குள் புகுந்து நகைகளை கொள்ளையடித்திருப்பது தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பாக சில தடயங்களை சேகரித்துள்ளோம், 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்.

குற்றவாளி தனது சட்டையை கழற்றி முகத்தை மூடி நகைகளை கொள்ளையடித்துள்ளார். அதிகாலை, 12:00 மணிக்கு மேல் கொள்ளை நடந்துள்ளது. சுமார் 150 – 200 சவரன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. நகைக்கடை ஊழியர்கள் எத்தனை நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன என்று கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர்,’’ என்றார்.

குற்றவாளி வட மாநிலத்தை சேர்ந்தவரா? கட்டுமான பணி நடப்பதால் அந்த பணியாளர்களில் யாரேனும் குற்றவாளிகளா? என்ற கேள்விகளை நிருபர்கள் கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், ‘‘குற்றவாளி உள்ளூர் நபராகத் தான் தெரிகிறார், வடமாநிலத் தொழிலாளர் போன்று இல்லை. கட்டுமான பணியில் இதுவரை ஈடுபட்டவர்கள் விபரங்களை சேகரித்து விசாரிக்கிறோம். இந்த கொள்ளையை பொறுத்தவரையில் மற்ற குற்றவாளிகளைப் போல் அல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக நகைகளை எடுத்துச் சென்றுள்ளார்,’’ என்றார்.

நகை திருட்டை எச்சரிக்க கடையில் சைரன் இல்லையா? என்ற கேள்விகளை கமிஷனர் பாலகிருஷ்ணனிடம் நிருபர்கள் முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த அவர், "கடையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆனால், சைரன் இல்லை. மர்ம நபர் நகைகளை கொள்ளையடித்த போது, இரு காவலாளிகள் பணியில் இருந்ததுடன், 12 பணியாளர்கள் நகைக்கடையில் தான் தங்கியுள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடத்துகிறோம்," என்றார் கமிஷனர் பாலகிருஷ்ணன்.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்

ஃபால்ஸ் சீலிங் வழியாக இறங்கிய கொள்ளையர்

பிபிசி தமிழிடம் பேசிய போலீஸார், "கடைக்கு முன் பகுதியில் சில கட்டுமான பணிகள் மற்றும் வெளிப்புற வேலைகள் நடப்பதால் பக்கவாட்டு சுவர் அருகே கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ளன. மற்றொரு பக்கம் மருந்துக்கடை அருகேயும் சந்து போன்று இடமுள்ளது. கட்டுமான பொருட்கள் போடப்பட்டுள்ள பகுதி வழியாக சென்று, ‘ஏசி’ வென்டிலேட்டர் குழாய் வழியாக மர்ம நபர் உள்ளே சென்றிருக்க வாய்ப்பு அதிகம்," என்கின்றனர் போலீஸார்.

மேலும் தொடர்ந்த அவர்கள், "கடைக்குள் நுழைய வென்டிலேட்டர் குழாயை பயன்படுத்திய குற்றவாளி, அதன் வழியாக சென்று பின் ஃபால்ஸ் சீலிங் (False Ceiling) பிரித்து அதன் வழியாக நகை வைத்திருக்கும் தளத்தினுள் இறங்கி, சட்டையால் முகத்தை மூடிக்கொண்டு நகைகளை கொள்ளையடித்துள்ளார். வந்த வழியாகவே வெளியில் சென்று தப்பியுள்ளார். சிசிடிவி காட்சிகளைப் பார்த்தால் அதிகாலை, 12:00 – 3:00 மணிக்கு கொள்ளை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.

"குற்றவாளி வெறும் சாதாரண முகக்கவசம் அணிந்து, துணியை தலையில் சுற்றி வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளார். நகைக்கடை மற்றும் அருகிலுள்ள கடைகளின் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரிக்கிறோம்.

"இரண்டு பக்கவாட்டு சுவர், தரைத்தளத்தின் கீழேயுள்ள பார்க்கிங் என பல வழிகளில் ‘ஏசி வென்டிலேட்டரை’ அடைய முடியும் என்பதால், எந்த வழியாக சென்றார் என்பதையும் விசாரிக்கிறோம்," என்றனர்.

கோவை ஜோஸ் ஆலுக்காஸ்

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)