பங்குனி உத்திர தீர்த்தவாரி: குளத்தில் மூழ்கி 5 பேர் பலி - என்ன நடந்தது?

கோயில், விபத்து, சென்னை

செங்கல்பட்டு மாவட்டம் நங்கநல்லூர் பகுதியில் உள்ள கோயிலில், பங்குனி உத்திரத்தையொட்டி நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியின் போது குளத்திற்குள் இறங்கிய 5 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், நங்கநல்லூர் எம்.எம்.டி.சி. காலனியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோயில் உற்சவருக்கு, இன்று புதன்கிழமை காலை பங்குனி உத்திரத்தையொட்டி தீர்த்தவாரி நடத்தப்பட்டது.

பல்லக்கில் சுவாமியை ஊர்வலமாக கொண்டு சென்ற கோயில் அர்ச்சகர்கள், முவரசம்பட்டில் உள்ள ஒரு குளத்தில் தீர்த்தவாரி நடத்த தொடங்கினர்.

பல்லக்கில் இருக்கும் உற்சவருக்கு குளத்தில் நீராட்டிவிட்டு மீண்டும் கரைக்கு கொண்டுவருவார்கள். உற்சவ மூர்த்தியோடு அர்ச்சகர்களும் குளத்தில் முழுகி எழுவார்கள்.

இன்று நடைபெற்ற இந்த தீர்த்தவாரியில், கோயில் அர்ச்சகர்களுடன் 20க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களும் குளத்திற்குள் இறங்கினர். இவர்கள், விழாக்காலத்தில் பூஜைகளில் உதவுவதற்காக அர்ச்சகர்களால் அழைத்துவரப்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

நீராட்டு நடந்துகொண்டிருந்தபோது, யாரும் எதிர்பாராத விதமாக அந்த சடங்கில் ஈடுபட்டவர்களில் ஒருவர் நீருக்குள் சிக்கி போராடத் தொடங்கினார். இதனை கவனித்த உடன் இருந்தவர்கள், அவரை காப்பாற்ற முயன்றனர். நீரில் ஏற்கனவே சிக்கியிருக்கும் ஒருவரை மீட்பதற்காக நான்கு பேர் சென்றனர். ஆனால் அவர்களும் நீருக்குள் மூழ்கினர் என்று செய்திகள் கூறுகின்றன.

இந்தச் சம்பவம் குறித்து, உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி, கிண்டி தீயணைப்பு வீரர்கள், நீரில் மூழ்கியவர்களை தேடி மீட்பு பணியில் இறங்கினர்.

குறிப்பிட்ட நேர தேடுதலுக்குப் பிறகு, நான்கு பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. நீண்ட நேரத்திற்கு பிறகு மேலும் ஒருவரின் உடல் கண்டெடுக்கப்பட்டது. விசாரணையில் உயிரிழந்தவர்கள் அதே பகுதியைச் சேர்ந்த ராகவன், மணிஷ், பானேஷ், சூர்யா மற்றும் யோகேஸ்வரன் ஆகியோர் என தெரிய வந்துள்ளது. இவர்கள் ஐந்து பேரின் உடலும் தற்போது சென்னை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால், இது தொடர்பான விரிவான விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்.

ஆணையர் என்ன சொன்னார்

ஐந்து அர்ச்சகர்கள் இறந்தது குறித்து பேசிய ஆணையர் ஷங்கர் ஜிவால், அர்ச்சகர்கள் தீர்த்தவாரி நிகழ்ச்சியின்போது குளத்தில் மூழ்கி எழுந்த சமயத்தில் ஒருவர் விழுந்தபோது மற்றவர் உதவ முற்பட, அவர்களும் உள்ளே விழுந்துள்ளனர் என்று தெரியவருகிறது என்றார். ''குளம் எவ்வளவு ஆழம்? இவர்கள் எப்படி தவறி விழுந்தனர்? என்று விசாரித்து வருகிறோம். தற்போது ஐந்து நபர்கள் இறந்துள்ளனர். வேறு யாரும் உள்ளே சிக்கியுள்ளார்களா என்றும் தேடிவருகிறோம். இறந்தவர்கள் 18 முதல் 25 வயதுள்ள நபர்கள்,'' என்றார்.

மேலும், ஐந்து நபர்கள் இறந்த குளம் கோயில் நிர்வாகத்திற்கு சொந்தமான குளம் இல்லை என்றும் பஞ்சாயத்துக்கு சொந்தமான குளம் என்பதால், குளத்தின் பராமரிப்பு குறித்தும் விசாரணை நடைபெற்றுவருகின்றது என்றார் அவர்.

நிவாரணம் அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர்

கோயில், விபத்து, சென்னை

பட மூலாதாரம், TN DIPR/ TWITTER

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளவர்களின் குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”இன்று காலை நடைபெற்ற தீர்த்தவாரி நிகழ்ச்சியில், குளத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளவர்கள் குறித்த செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.

இந்த துயரச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கும் உறவினர்களுக்கும், எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களின் குடும்பத்திற்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரங்கல் தெரிவித்திருக்கும் பாமக தலைவர்

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இந்தச் சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி, டிவிட்டரில் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது டிவிட்டர் பதிவில்,

”கோயில் குளத்தில் ஆழம் அதிகம் என்றும், இந்த நிகழ்ச்சி குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், அதையும் கடந்து தீர்த்தவாரி நடைபெற்ற நிலையில், தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறையினர் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தான் விபத்துக்கு காரணம் ஆகும்.

இனி வரும் காலங்களிலாவது இத்தகைய நிகழ்ச்சிகளின் போது விபத்துகள் நடக்காத வகையில், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதன் மூலம் அப்பாவி மக்கள் உயிரிழப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: