பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டில் கலாக்ஷேத்ரா நடன ஆசிரியர் ஹரிபத்மன் கைது

பிபிசி

சென்னை திருவான்மியூர் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் நடன பிரிவில் பணிபுரிந்த ஆசிரியர் ஹரிபத்மன் என்பவரை பாலியல் குற்றசாட்டுகள் தொடர்பான வழக்கில் சென்னை காவல்துறையினர் இன்று காலை கைது செய்துள்ளனர்.

கடந்த வாரம், கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பணியாற்றும் ஹரிபத்மன் உள்ளிட்ட நான்கு நபர்கள் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுவதாவும், அவர்கள் தொடர்ந்து பாடம் நடத்த அனுமதிக்கபடுவதாகவும் கூறி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் விளைவாக கலாக்ஷேத்ரா நிர்வாகம் ஏப்ரல் 6-ஆம் தேதி வரை விடுமுறை அறிவித்தது.

இந்நிலையில், ஆசிரியர் ஹரிபத்மன் 2019-இல் வாட்சப் மூலம் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கூறி அடையாறு காவல்நிலையத்தில் முன்னாள் மாணவி ஒருவர் புகார் செய்தார். இந்த புகாரை அடிப்படையாக கொண்டு, பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் ஹரிபத்மன் மீது வழக்கு பதிவானது.

இந்திய தண்டனைச் சட்டம் 354A (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் 506 (குற்றவியல் மிரட்டல்), மற்றும் தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 (பெண்ணை துன்புறுத்துவதற்கான தண்டனை) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவானது.

ஆனால் ஹரிபத்மன் ஹைதராபாத்தில் நடன நிகழ்ச்சி ஒன்றை வழங்குவதற்காக மாணவிகளுடன் சென்றிருந்தார். நடன நிகழ்ச்சியில் பங்கேற்கமுடியாது என அங்கும் மாணவிகள் மறுப்பு தெரிவித்ததை அடுத்து, அந்த நிகழ்வு நடைபெறவில்லை என்று ஒரு மாணவி பிபிசிதமிழிடம் தெரிவித்தார். இதனை தொடர்ந்து இன்று காலை ஹரிபத்மன் சென்னை திரும்பியதும் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சென்னை காவல்துறை தெரிவித்துள்ளது.

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் பரதநாட்டியம், கதகளி, வாய்ப்பாட்டு, வாத்திய இசை உள்ளிட்டவை பாடங்களாக கற்பிக்கப்படுகின்றன. இதில், நடன பிரிவைச் சேர்ந்த மாணவ,மாணவிகள் மிக மோசமான பாலியல் துன்புறுத்தல்கள் பல ஆண்டுகளாக தங்களுக்கு நடந்துள்ளதாக குற்றம்சாட்டியது குறிப்பிடத்தக்கது.

பலமுறை நிர்வாகத்திடம் அவர்கள் புகார் அளித்தபோதும், அவர்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை என்றும், மேலும் அவர்கள் அச்சுறுத்தப்பட்டதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர். ஆனால் மாணவர்களின் குற்றசாட்டுகள் குறித்து கருத்து கேட்க பலமுறை தொடர்பு கொண்டபோதும், கலாக்ஷேத்ரா நிர்வாகம் எந்த பதிலும் தரவில்லை.

ஆனால் கலாக்ஷேத்ரா நிர்வாகத்தின் இணையதளத்தில் பாலியல் குற்றசாட்டுகள் குறித்து கருத்து வெளியிட்டுள்ள நிர்வாகம், ''கடந்த சில மாதங்களாக, கலாக்ஷேத்ரா அறக்கட்டளையை இழிவுபடுத்தும் நோக்கில், சமூக ஊடகங்கள் மூலம் வதந்திகளையும் குற்றச்சாட்டுகளையும் பரப்புவதற்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கலாக்ஷேத்ரா அறக்கட்டளையை பாதுகாப்பற்ற சூழல் என்று பொய்யாகக் காட்டி மாணவர்களையும் ஊழியர்களையும் குழப்பி துன்புறுத்துவதன் மூலம் கலாக்ஷேத்ரா அறக்கட்டளையை அவமதிப்பதை நோக்கமாகக் கொண்டவர்கள் மூலமாக இந்த புகார்கள் தயாரிக்கப்பட்டதாகத் தோன்றியது. உள்குழு விசாரணையை சுயமாக எடுத்து, முழுமையான விசாரணைக்குப் பிறகு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முழு ரகசியத்தன்மையுடன் விசாரணைகள் நடத்தப்பட்டன மற்றும் குழு குற்றச்சாட்டுகளில் தகுதியைக் கண்டறியவில்லை,'' என்று தெரிவித்துள்ளது.

கலாக்ஷேத்ரா நிறுவனத்தில் உள்ள மாணவிகள் பலர் தமிழ்நாடு மகளிர் ஆணையத்திடம் ஈமெயில் வாயிலாக புகார் அளித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஊடகங்களிடம் பேசிய ஆணையத்தின் தலைவி ஏ.கே. குமாரி, அலைபேசி எண் மற்றும் ஈமெயில் மூலமாக புகார் தெரிவிக்கலாம் என்று மாணவ,மாணவிகளிடம் நம்பிக்கை அளித்த பின்னர், பலரும் புகார்கள் அனுப்பிவருவதாகத் தெரிவித்தார்.

''195 பெண்கள் அங்குப் பயில்கின்றனர்.கலாக்ஷேத்ரா மாணவ,மாணவிகள் ஆணையத்திற்கு ஈமெயில் வாயிலாகப் புகார் தெரிவிக்கலாம் என்று கூறியதும் அவர்கள் புகார்களைத் தொடர்ந்து அனுப்பிவருகின்றனர். மாணவ,மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அவர்களை அவ்வப்போது சென்று பார்த்துவரவும் முடிவு செய்துள்ளேன். இந்த மாணவ,மாணவிகள் இதற்கு முன்னதாக கலாக்ஷேத்ரா நிர்வாகத்திடம் அளித்த புகார்களின் நகல்களைத் தருமாறும் கேட்டுள்ளேன். நிர்வாகத்திடம் மாணவ, மாணவிகள் அளித்த புகார் அறிக்கை குறித்து கேட்டபோது, அவர்கள் இதுவரை மாணவ,மாணவிகளுக்கு அளித்துள்ள வசதிகள் குறித்த அறிக்கையை அளித்தார்கள். மீண்டும் அவர்களிடம் சரியான அறிக்கையைத் தரவேண்டும் என்று கேட்டுள்ளேன்,'' என்று குமாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.விரைவில், கலாக்ஷேத்ரா மாணவ,மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து அறிக்கை ஒன்றை தமிழ்நாடு அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளதாகவும் குமாரி தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: