'தலைகீழாக கட்டித் தொங்கவிடுவோம்': அமித் ஷா ஆவேசம் ஏன்? பிகார் அரசியலில் நடப்பது என்ன?

- எழுதியவர், சுபம் கிஷோர்
- பதவி, பிபிசி செய்தியாளர்
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஞாயிற்றுக்கிழமை நவாதாவில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றினார். அப்போது அவர் மேற்கொண்ட ஆக்ரோஷமான நிலைப்பாடு பற்றி தற்போது பெரிதும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
பேரணியின் போது அவர் மாநில முதலமைச்சர் நிதீஷ் குமாரை தாக்கிப்பேசினார். “ஒரு எதிர்பாராத சம்பவத்தால் என்னால் சஸாராம் செல்ல முடியவில்லை. அங்கு மக்கள் கொல்லப்படுகிறார்கள். தோட்டாக்கள் சுடப்படுகின்றன. எனது அடுத்த பயணத்தின்போது நான் கண்டிப்பாக அங்கு செல்வேன்,” என்று அவர் குறிப்பிட்டார்.
பேரணியில் உரையாற்றிய அவர் பிகார் ஷெரீப்பும் சஸாராமும் தீப்பற்றி எரிந்ததாகக் கூறினார். "நான் காலையில் ஆளுநரை அழைத்தேன். பிகார் பற்றி நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள் என்று ஆளும் ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் லல்லன் சிங் அவர்களுக்கு கோபம் வந்துவிட்டது,"என்று அமித் ஷா தெரிவித்தார்.
”பிகாரை கலவரம் இல்லாத மாநிலமாக ஆக்கவேண்டுமானால், இங்குள்ள நாற்பது இடங்களையும் மோதிக்கு கொடுங்கள், கலவரக்காரர்களை தலைகீழாகத் தொங்கவிட்டு நிலைமையை சீராக்குவோம்,”என்றார் அவர்.
சஸாராம் திட்டத்தை ரத்து செய்ததற்கு நிதீஷ்குமார் அரசுதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவர் சாம்ராட் செளத்ரி குற்றம் சாட்டினார்.
அமித் ஷாவின் உரைக்கு எதிர்கட்சிகளின் கருத்து

பட மூலாதாரம், ANI
பிகார் சட்டப்பேரவை அமளிக்கு மத்தியில் திங்கள்கிழமை ஒத்திவைக்கப்பட்டது. அமித் ஷா அமைதிக்கு வேண்டுகோள் விடுப்பதற்கு பதிலாக, பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் பேசியுள்ளார் என்று பிகார் நிதியமைச்சர் விஜய் குமார் செளத்ரி குற்றம் சாட்டினார். நிலைமை குறித்து முதலமைச்சரிடம் பேசாமல் ஆளுநரிடம் விவாதித்தது தவறு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேச்சில் பாஜகவின் விரக்தி தெரிகிறது என்று ஐக்கிய ஜனதாதளத் தலைவர்கள் ட்வீட் செய்துள்ளனர். "பெரிய பொய்யர் கட்சி (பாஜக) அவநம்பிக்கை அடைந்துள்ளது மற்றும் குழப்பத்தில் உள்ளது என்பது நவாதாவில் உங்கள் பேச்சிலிருந்து தெளிவாகிறது," என்று ராஜீவ் ரஞ்சன் சிங் எழுதியுள்ளார்.
"உள்துறை அமைச்சர் பிகாரில் கலவரக்காரர்களை தலைகீழாக தொங்கவிடுவது பற்றி பேசினார். குஜராத்தில் அவர்கள் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்டவர்களையும், கொலைகாரர்களையும் விடுவித்து அவர்களுக்கு லட்டு ஊட்டுகிறார்கள்." என்று டிஎம்சியின் மஹுவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.
பா.ஜ.க. உத்தியின் ஒரு பகுதியா அமித்ஷா பேச்சு?

பிகாரில் அமித் ஷாவின் மொழியில் கடுமை என்பது சில காலமாகவே தெரிகிறது என்று மூத்த செய்தியாளர் மணிகாந்த் தாக்கூர் கூறுகிறார். “நாவாதாவில் பேசும்போது அவர் கட்டுப்பாட்டை இழந்தார். உள்துறை அமைச்சராக இருக்கும் அவர் இப்படி பேசியிருக்கக் கூடாது” என்று அவர் குறிப்பிட்டார்.
"அரசியல் பேச்சின் தரம் சரிந்துவிட்டது. பிகாரில் பாஜகவால் தனித்து ஆட்சி அமைக்க முடியவில்லை. இதுவே பாஜகவின் ஆக்ரோஷம் அதிகரிக்க காரணமாக இருக்கலாம்."என்றார் அவர்.
இது செயல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்பதையும் வல்லுநர்கள் மறுக்கவில்லை.
"கலவரம் நடந்த இடம் , நேரம் குறித்து பலர் கேள்வி எழுப்புகின்றனர். எந்த கட்சி அறிக்கை வெளியிட்டாலும் அதன் பின்னணியில் ஒரு உத்தி உள்ளது,” என்று மூத்த பத்திரிக்கையாளர் சுரூர் அகமது குறிப்பிட்டார்.
பிகாரில் இரண்டு இடங்களில் கலவரம் நடந்தது. அதில் ஒன்று முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமான நாலந்தாவில் உள்ள பிகார்ஷெரீப். மற்றொரு இடம் சஸாராம்.
மறுபுறம், பாஜக எங்கு தேர்தலில் போட்டியிட்டாலும் இதே ஆவேசத்துடன்தான் போட்டி போடுகிறது என்று பிகாரைச் சேர்ந்த மூத்த செய்தியாளர் அஜய் குமார் கூறினார்.
“பாஜக தலைவர்கள் எங்கு சென்றாலும் இதே போல ஆவேசமாகவே பேசுகிறார்கள். ஊழலைப் பற்றிப்பேசினாலும், வேறு எந்த விஷயங்களைப் பற்றிப்பேசினாலும் அவர்களின் பேச்சு இப்படித்தான் உள்ளது. உத்திர பிரதேசம், மேற்கு வங்காளம் அல்லது வேறு எந்த மாநிலமாக இருந்தாலும் இதுதான் அவர்களின் பாணி. இதன் நன்மையும் அவர்களுக்கும் கிடைக்கிறது. ஒரு வாக்காளர் மீது இதுதான் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.
”கலவரம் நடந்த பகுதிகளில் முன்பும் பதற்றம் நிலவி வந்துள்ளது. இவை மிகவும் பதற்றமான பகுதிகளாக இருந்தன,” என்றார் அவர்.
ஒருமுனைப்படுத்தும் முயற்சியா?

பட மூலாதாரம், ANI
பிகாரில் சாதி அரசியல் எப்போதும் ஆதிக்கம் செலுத்துகிறது. முஸ்லிம்-யாதவ் சமூகத்தினர் பொதுவாக ஆர்ஜேடியுடன் இருப்பதாக நம்பப்படுகிறது.
"சாதி ஒருமுனைப்படுத்தல் இருக்கக்கூடாது என்று பாஜக விரும்புகிறது. இந்துக்கள் சாதி ரீதியாக பிளவுபடக்கூடாது என்று வகுப்புவாத அடிப்படையில் இத்தகைய சூழ்நிலையை உருவாக்க அது முயற்சிக்கிறது. மறுபுறம், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் ஒன்றாக இருப்பதை உறுதி செய்ய RJD-JDU முயற்சிக்கிறது,” என்று மணிகாந்த் தாக்கூர் கூறினார்.
மதத்தின் அடிப்படையில் மக்களை திரட்டும் முயற்சியில் பாஜக பல இடங்களில் வெற்றி பெற்றுள்ளது என்பது கண்கூடான உண்மை. அதன் தாக்கம் பிகாரின் அண்டை மாநிலமான உத்திர பிரதேசத்தில் தெளிவாகத் தெரிந்தது.
பிகாரில் உள்ள சூழ்நிலை உ.பி.யில் இருந்து வேறுபட்டது. இங்கு சாதி அடிப்படையை மக்கள் மிக அதிகம் பின்பற்றுவதை பார்க்கமுடிந்தது என்று மணிகாந்த் தாக்கூர் கூறுகிறார்.
"இருப்பினும் கடந்த சில தேர்தல்களில் பிகாரிலும் அதன் தாக்கம் காணப்படுகிறது. ஒரு சமூகம் ஒருவருக்கு ஆதரவாக ஒன்றுபட்டால், இன்னொரு சமூகம் பதிலுக்கு ஒன்றுபடுகிறது" என்று அவர் கூறுகிறார்.
மகா கூட்டணிக்கு பதில் சொல்ல முயற்சி?
”இதை மேலும் வலுப்படுத்தும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது. சாதி அடிப்படையில் மகா கூட்டணிக்கு வலுவான பதிலடி கொடுக்க பாஜக தயாராகி வருகிறது.”
இந்துக்கள் ஒன்றுபடுவது பற்றிய பேச்சு பிகார் கிராமங்களில் காணப்படுகிறது என்கிறார் மணிகாந்த் தாக்கூர். " கிராமங்கள் மற்றும் கிராமப்புறங்களில், விலைவாசி உயர்வு மற்றும் பிற பிரச்சனைகளுக்கு பதிலாக, இந்து-முஸ்லிம் பிரச்சினைகள் பற்றி மக்கள் பேச ஆரம்பித்துள்ளனர். இது அதிகரித்தால், அதன் பலன் பாஜகவுக்கு கிடைக்கும்." என்றார் அவர்.
அமித்ஷாவின் பேரணி நவாதாவில் நடைபெற்றது. சஸாராம் மற்றும் பிகார் ஷெரீப் ஆகிய பகுதிகளில் கோய்ரி சமூகத்தினர் அதிகம் இருக்கின்றனர். அவர்களை குறிவைக்க பாஜக விரும்புவதாக சுரூர் அகமது கூறுகிறார்.
"குஷ்வாஹா சமூகத்தைச் சேர்ந்த சம்ராட் செளத்ரி பாஜகவின் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். குர்மி, கோய்ரி (குஷ்வாஹா) சாதிகளை ஒன்றாக கொண்டுவர பாஜக விரும்புகிறது," என்று அவர் கூறுகிறார்.
பிகாரில் உள்ள ஓபிசி வாக்கு வங்கியில், யாதவர்களுக்கு அடுத்தபடியாக குர்மி-கோய்ரிக்கு அதிக பலம் உள்ளது. யாதவர்களின் மக்கள்தொகை சுமார் 15 சதவிகிதம். குர்மி-கோய்ரி மக்கள் எண்ணிக்கை சுமார் ஏழு சதவிகிதம் ஆகும்.
குர்மி-கோய்ரியிலும், கோய்ரி மக்கள் தொகை அதிகம். இப்படிப்பட்ட சூழ்நிலையில், ஆர்ஜேடியின் யாதவ வாக்கு வங்கியுடன் எந்தக் கட்சியாவது போட்டியிட வேண்டும் என்றால், அதில் குர்மி-கோய்ரி வாக்கு வங்கி முக்கியப்பங்கு வகிக்க முடியும்.
”இதுபோன்ற எதிர் கருத்துக்கள் (அமித் ஷாவின்) எந்தக் கட்சிக்கும் பொதுவானது. எல்லா கட்சிகளும் கருத்து தெரிவிக்கின்றன. சட்டப்பேரவையிலும் பேசுகின்றன. இதனால் சபை நடவடிக்கைகள் நடக்க முடியவில்லை,” என்று அஜய் குமார் கூறினார்.
ஜேடியு-ஆர்ஜேடி விவகாரங்களில் பாஜக ஆதிக்கம் செலுத்துகிறதா?

பட மூலாதாரம், ANI
கலவரத்தைத் தடுக்கவும், கலவரத்துக்குப் பிறகு நிலைமையைக் கட்டுப்படுத்தவும் போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று மகா கூட்டணி மீது பாஜக குற்றம்சாட்டி வருகிறது.
தற்போதைய துணை முதலமைச்சர் தேஜஸ்வி யாதவ், கடந்த சட்டப்பேரவை தேர்தல் பிரச்சாரத்தின்போது வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்னையை எழுப்பினார். ஆனால் அடுத்த தேர்தலில் ஒருமுனைப்படுத்தல் மீண்டும் ஆதிக்கம் செலுத்தும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
"கடந்த தேர்தலில் தேஜஸ்வி யாதவ் ஒரு இளம் தலைவராக அடிப்படை பிரச்னைகளை முன்வைத்து முன்னேறுவது போல் இருந்தது. ஆனால் தற்போது அந்த பிம்பம் மங்கிவிட்டது. மீண்டும் இடஒதுக்கீடு, மண்டல் கமிஷன் ஆகியவை பற்றி பேச ஆரம்பித்துள்ளார். பெரிதாக எதுவும் மாறப்போவதில்லை என்று மக்கள் உணர ஆரம்பித்துள்ளனர்,"என்று மணிகாந்த் தாக்கூர் கூறினார்.
பிகாரில் மீண்டும் ஜங்கிள் ராஜ் (காட்டு ஆட்சி) வந்துவிட்டதாக பாஜக சொல்ல ஆரம்பித்துள்ளது. லாலு-ராப்ரி ஆட்சியின் போது கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மீண்டும் நிரூபிப்பதே இதன் பின்னணியில் உள்ள பாஜகவின் நோக்கம் என்கிறார் மணிகாந்த் தாக்கூர்.
பிகாரில் சட்டம் ஒழுங்கு நிலைமை முன்பு இருந்து போல இப்போது இல்லை என்பதில் உண்மை இருப்பதாகவும் தாக்கூர் கூறுகிறார்.
”இது தவிர நிதீஷ் குமாருக்கும், தேஜஸ்வி யாதவுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லை. அரசியல் இழுபறி காரணமாக நிர்வாகத்தின் வலு குறைவாக இருப்பதுபோலத்தெரிகிறது,” என்றார் அவர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












