"அதிமுக- பாஜக கூட்டணியில் குழப்பம் இல்லை" - டெல்லியில் பாஜக தலைவர்களை அண்ணாமலை சந்தித்தது ஏன்?

அண்ணாமலை

பட மூலாதாரம், Getty Images

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு முதல்வர் கண்டனம் தெரிவித்ததற்கு பதிலளித்துள்ள பாஜகவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, ஜனநாயகம் குறித்துப் பேசி முதலமைச்சருக்கு அருகதை இல்லை எனச் சாடியிருக்கிறார்.

நேற்று டெல்லி சென்றிருந்த பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, இன்று விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்து நீண்ட விளக்கமளித்தார்.

"2019இல் கர்நாடக மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியபோது, எப்படி இந்தியாவில் எல்லா திருடர்களின் பெயரும் மோதி என இருக்கிறது என ஆங்கிலத்தில் கூறினார். இந்த மோதி என்ற பின்னொட்டு என்பது ஒரு சாதியை, அடையாளத்தைக் குறிக்கிறது. அதில் பலர் வழக்குத் தொடர்ந்தார்கள். அதில் தீர்ப்பு வந்திருக்கிறது. ராகுல் காந்திக்கு இது முதல் முறையல்ல. சௌக்கிதார் சோர் ஹை என்று சொல்லி, அதற்கு உச்ச நீதிமன்றம் கண்டித்திருக்கிறது.

பாரத் ஜோடா யாத்திரை நடக்கும்போது இரு பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு ஆளாவதாக அவரிடம் புகார் தெரிவித்ததாகச் சொன்னார். டெல்லியில் காவல்துறை அதிகாரிகள், அவரை அணுகிக் கேட்டபோது, யார் சொன்னது என மறந்துவிட்டதாகக் கூறினார்.

இதுபோலத்தான் நம்மை அடிமைப்படுத்தி வைத்திருந்த பிரிட்டனுக்கு சென்று, இந்தியாவை கேவலமாகப் பேசினார். ஆகவே, ராகுல் காந்திக்கு இது முதல்முறையல்ல. இதுபோல தொடர்ந்து செய்திகொண்டிருக்கிறார். இது அவரது நிராசையைக் காட்டுகிறது.

காங்கிரஸ்காரர்கள் ரயில் வராத தண்டவாளத்தில் இறங்கி இதற்காகப் போராடுகிறார்கள். காங்கிரஸின் கைச் சின்னத்தில்கூட ஐந்து விரல் இருக்கிறது. போராடியவர்கள் 3 பேர்தான் இருக்கிறார்கள்.

ராகுல் காந்தி தனது தண்டனை குறித்து மேல்முறையீடு செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, தண்டனை நிறுத்தி வைக்கப்படவில்லை. காங்கிரஸ் தலைவர்களே எப்போது ராகுல் காந்தியை பேக் செய்து அனுப்பலாம் என நினைப்பது அவர்களது பேட்டிகளில் தெரிகிறது.

தமிழகத்தில் சில அரசியல் தலைவர்கள் தவறான கருத்துகளை முன்வைக்கிறார்கள். அதற்காகத்தான் இந்த விளக்கம்.

ட்ரோல் வீடியோ, மீம் வீடியோவுக்கெல்லாம் இந்த அரசு கைது செய்து சிறையில் அடைக்கிறது. இவர்கள் ஜனநாயகத்தைப் பற்றி பேசுகிறார்கள். முதலமைச்சருக்கு ஜனநாயகத்தைப் பற்றிப் பேசுவதற்கு அருகதையே இல்லை.

மனீஷ் சிசோடியா கைதை தி.மு.க. கண்டிக்கிறது. ஆனால், அதன் கூட்டணியான காங்கிரஸ் அதை ஆதரித்தது. ராகுல்காந்தி வழக்கில் இன்னும் மேல் முறையீடு செய்யலாம். ஆனால், முதலமைச்சர் ஒரு அரசியல்சாசன பதவியில் அமர்ந்துகொண்டு தவறான தகவலைச் சொல்கிறார்," என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.

அண்ணாமலை

டெல்லியில் உள்துறை அமைச்சரோடு பேசியது என்ன?

தமிழ்நாடு குறித்த அப்டேட் தகவல்களை அளிப்பதற்காகவே டெல்லிக்கு சென்றதாகவும் இது தொடர்பாகப் பல தவறான தகவல்கள் ஊடகங்களில் வருவதாகவும் அண்ணாமலை கூறினார்.

"புதுடெல்லிக்கு நான் அடிக்கடி செல்வதுதான். தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா, பி.எல். சந்தோஷ், உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தொடர்ந்து சந்தித்து வருகிறேன். கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் வேறு விஷயங்கள் தொடர்பாகவும் பேசி வருகிறேன்.

ஊடங்களில் இது தொடர்பாக ஏதோதோ போடுகிறார்கள். பாஜகவை பொறுத்தவரை, மேல் மட்டத்திலிருந்து கீழ் மட்டம்வரை ஒரே நினைப்பு என்னவென்றால், தமிழ்நாட்டில் கட்சியை எப்படி வளர்ப்பது என்பதுதான்.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி வந்திருக்கிறது. ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத் தேர்தல் நடந்திருக்கிறது. இது தொடர்பாக ஃபீட்பேக் கொடுப்பதற்கான சந்திப்பு நடந்தது. இதில் ஏதும் புதிதாக இல்லை. வழக்கமான சந்திப்புதான்.

கூட்டணி குறித்து பேசியதாகச் சொல்கிறார்கள். பாஜக தலைவர்கள் அனைவரும், எங்கள் பொறுப்புகளை உணர்ந்தே இருக்கிறோம். கூட்டணியைப் பொறுத்தவரை இதற்கென ஒரு நாடாளுமன்றக் குழு இருக்கிறது. அவர்கள் எல்லோரிடமும் கருத்துகளைப் பெறுகிறார்கள். இதையெல்லாம் மனதில் வைத்துதான் முடிவெடுப்பார்கள். ஆகவே கூட்டணியைப் பொறுத்தவரை குழப்பமே இல்லை.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

பாஜகவுக்கோ எனக்கோ எந்தக் கட்சியின் மீதும் தனிப்பட்ட முறையில் வருத்தமோ, ஆதங்கமோ கிடையாது. அதமுக 1972இல் இருந்து இருக்கிறார்கள். அவர்கள் வளர வேண்டுமென நினைப்பதில் தவறு இல்லை. அதேபோல, பாஜகவும் வளர வேண்டும் என நினைப்பதிலும் தவறு இல்லை. அப்படி நினைக்கும்போது, கூட்டணிக்குள் சிறு சிறு சிராய்ப்புகள் வருவது இயல்புதான்.

காங்கிரசில் யாரும் இப்படிச் சொல்வதில்லை. திமுக கூட்டணி ஒரு விசித்திரமான கூட்டணி. நம்முடைய கூட்டணி ஆக்கபூர்வமான கூட்டணி. எங்கள் கூட்டணிக்குள் பல விஷயங்களில் ஒத்துப்போகிறோம். ஆனால், எல்லா விஷயங்களும் ஒத்துப்போவதில்லை. புதிய கல்விக் கொள்கை, நீட், மும்மொழிக் கொள்கை போன்ற விஷயங்களில் வேறுபாடு இருக்கிறது. இதில் குழப்பமோ, கூச்சலோ இல்லை.

தமிழ்நாட்டில் பாலின் கொள்முதல் விலை மிகக் குறைவாக இருக்கிறது. ஆனால், பால்வளத் துறை அமைச்சர் கனவுலகில் இருக்கிறார். எல்லாம் சரியாக இருக்கிறது எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்.

இந்த முறை கர்நாடக மக்கள் முடிவுசெய்துவிட்டார்கள். இந்த முறை 140 இடங்களைத் தாண்டுவோம் என எதிர்பார்க்கிறோம்" என்றார் அண்ணாமலை.

அண்ணாமலை

ஆன்லைன் ரம்மி விஷயத்தில் பாஜகவின் நிலைப்பாடு என்ன?

ஆன்லைன் ரம்மியை தடைசெய்யும் விவகாரத்தில் ஆளுநர் கோரிய திருத்தங்களைச் செய்யாததால், ரம்மி நிறுவனங்களுக்கும் திமுக அமைச்சர்களுக்கும் இடையே தொடர்பு உள்ளதோ என்ற சந்தேகம் எழுந்திருப்பதாக அண்ணாமலை கூறினார்.

"ஆன்லைன் ரம்மியை தடைசெய்ய வேண்டும் என்பதில் பாஜக முழுமையாக அரசோடு இருக்கிறது. ஆனால், ஆளுநர் சில விளக்கங்களைக் கேட்டபிறகும் அதே சட்டத்தைத் திரும்பவும் அனுப்பியிருக்கிறார்கள். இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துதான் ஆக வேண்டும்.

ஆனால், அவர் ஒப்புதல் அளித்தால் அந்தத் தனியார் நிறுவனங்கள் இதற்கு நீதிமன்றத்தில் சென்று தடையாணை வாங்குவார்கள். ஆகவே, திமுக அமைச்சர்களுக்கும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்களுக்கும் தொடர்பிருக்கிறதா என்ற சந்தேகம் வருகிறது.

ஏப்ரல் 14ஆம் தேதி கண்டிப்பாக ஊழல் பட்டியலை வெளியிடுவேன். சுற்றுப் பயணத் தேதியை பிறகு அறிவிப்போம்," என்று அண்ணாமலை தெரிவித்திருக்கிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: