பிகாரில் ராம நவமியின் போது இரு சமூகத்தினரிடையே மோதல் வெடித்தது ஏன்? – பிபிசி வழங்கும் களச்செய்தி

பிகார்
    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர்

பிகாரில் உள்ள நாலந்தா மாவட்டத்தின் பிகார் ஷெரீப்பில், எரிந்த கடைகள், சேமிப்பு கிடங்குகள் மற்றும் வீடுகளில் இருந்து வெளியே எட்டிப்பார்க்கும் மக்களைப் பார்க்கும்போது, நகரத்தில் பீதி பரவியுள்ளதை உணர முடிகிறது.

இங்கு வெறிச்சோடிக்கிடக்கும் சாலைகள் சரியாக மூன்று ஆண்டுகளுக்கு முன்பான கோவிட் பொதுமுடக்கத்தை நினைவூட்டுகின்றன. ஆனால் பலத்த போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினரின் நிலைநிறுத்தத்திற்கு மத்தியில், காவல்துறை மற்றும் நிர்வாக வாகனங்கள் தொடர்ச்சியாக கடந்து சென்றது நிலைமையை விவரிக்க போதுமானதாக இருந்தது.

இங்கு தெருக்களில் பொதுமக்கள் தென்படவில்லை, சில முக்கியமான வேலைகளுக்காக வெளியே வந்திருந்த ஒன்றிரண்டு பேரைமட்டுமே பார்க்க முடிந்தது.

எக்காரணம் கொண்டும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று இங்கு போலீசார் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர்.

பிகார்

பிகார் தலைநகர் பட்னாவிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பிகார் ஷெரீப், நாலந்தா மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.

இங்குள்ள மக்கள் தொகை மூன்றரை லட்சம் எனக் கருதப்படுகிறது. இதில் முஸ்லிம்களின் எண்ணிக்கை சுமார் 30 முதல் 35 சதவிகிதம்.

பிகார் ஷெரீப்பில் ராம நவமி ஊர்வலத்தின் போது ஏற்பட்ட வன்முறையில் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். பலர் காயமடைந்துள்ளனர்.

இந்த வன்முறையில் பல லட்சம் மதிப்பிலான சொத்துக்கள் எரிந்து சாம்பலானது. இப்போதும் கூட சில கடைகளில் இருந்து புகை வெளியேறுவதை பார்க்க முடிகிறது.

இங்கு மதவாத வெறியில், ஒரு மதரஸாவின் நூலகத்துக்கும் தீ வைக்கப்பட்டது. மற்றொரு சமூகத்தினர் புத்தகக் கிடங்குக்கு தீ வைத்தனர்.

இந்த தீயிடலில் பல விலை மதிப்பற்ற, வரலாற்று நூல்கள் எரிந்து சாம்பலாயின.

பிகார் ஷெரீப், மாநில முதல்வர் நிதிஷ் குமாரின் சொந்த மாவட்டமாகும். பிகார் ஷெரீப்பில் ராம நவமியின் முக்கிய ஊர்வலம் தசமி நாளில் அதாவது ராம நவமியின் அடுத்த நாள் நடத்தப்படுவது வழக்கம்.

ஆனால் இம்முறை ஊர்வலத்திற்குப் பிறகு ஏற்பட்ட வன்முறை காரணமாக இங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

வெள்ளிக்கிழமை, ராம நவமி ஊர்வலத்தின்போது இரு சமூகத்தினரிடையே வன்முறை மோதல் ஏற்பட்டது. சனிக்கிழமை இரவு மீண்டும் வன்முறை வெடித்தது.

தற்போதைய சூழ்நிலை

பிகார்

பிகார் ஷெரீப்பில் வன்முறையைத் தடுக்க அப்பகுதியில் இணைய சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்று மக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கூட்டம் கூடாமல் இருக்க 144 தடை உத்தரவு வெள்ளிக்கிழமை முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.

பிகார் ஷெரீப்பில் வெள்ளிக்கிழமை இரு சமூகத்தினரும் கோஷமிடலில் ஈடுபட்டனர். அதன்பிறகு வன்முறை மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பிலிருந்து கல் வீச்சும், சமூக விரோதிகள் சிலர் துப்பாக்கிச் சூடும் நடத்தியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை வன்முறையில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் பேரில் 30 பேரை போலீசார் கைது செய்தனர். ஆனால் சனிக்கிழமை மாலை அதைவிடப்பெரிய வன்முறை வெடித்தது. அதில் ஒருவர் உயிரிழந்தார்.

அதன் பிறகு பெரும் எண்ணிக்கையில் போலீஸ் மற்றும் துணை ராணுவப் படையினர் அங்கு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு நடந்த வன்முறைக்கான காரணங்களை அறிய,போலீஸ் கமிஷனர் மற்றும் ஐஜி ஆகியோர் நகரின் பல்வேறு பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களின் காட்சிகளை பார்த்துள்ளனர்.

கடந்த ஆண்டும் பிகார் ஷெரீப்பில் ராம நவமி ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும், ஆனால் வன்முறை எதுவும் ஏற்படவில்லை என்றும் மொஹரம் பண்டிகையின்போதும் கூட இங்கு வன்முறை ஏற்படவில்லை என்றும் நாலந்தா காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் மிஷ்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்த முறை ராம நவமி ஊர்வலத்தின் போது கூட்டம் அதிகமாக இருந்தது. விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தளம் இணைந்து இந்த ஊர்வலத்தை ஏற்பாடு செய்கின்றன. இந்த முறை மக்கள் மிகவும் ஆவேசத்துடன் காணப்பட்டனர்," என்று அசோக் மிஷ்ரா கூறினார்.

காவல் கண்காணிப்பாளர் அசோக் மிஷ்ரா
படக்குறிப்பு, காவல் கண்காணிப்பாளர் அசோக் மிஷ்ரா

நாலந்தா காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம், ஞாயிற்றுக்கிழமையன்று நகரின் அனைத்து 51 வார்டு உறுப்பினர்களுடனும் சந்திப்பை நடத்தியது. அவர்களுடன் இணைந்து நகரில் அமைதி காக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இதற்கிடையில், பிகார் ஷெரீப்பில் யாரோ கலவரம் செய்துள்ளதாகவும், அதை போலீசார் விசாரித்து வருவதாகவும், அதன் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

வன்முறையை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக போலீசார் வெள்ளிக்கிழமை கூறினர். ஆனால் சனிக்கிழமை மாலை மீண்டும் நிகழ்ந்த வன்முறை மற்றும் துப்பாக்கிச்சூட்டில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

நகரில் பதற்றமான சூழல் நிலவுவதால் அச்சம் காரணமாக பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.

வெள்ளிக்கிழமை முதல் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், இந்த வன்முறையில் ஈடுபட்ட சுமார் 80 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

வன்முறையின் ஆரம்பம்

பிகார் ஷெரீப்பில் ராம நவமி ஊர்வலத்திற்காக, நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து அலங்கார ஊர்திகள், தொழிலாளர் நல மையத்தின் அரங்கம் வரை வரும். இங்கிருந்து அனைவரும் சேர்ந்து நகரைச் சுற்றி மூன்று கிலோமீட்டர் ஊர்வலமாக சென்று மணிராம் அகாடாவை அடைவார்கள்.

இந்த ஆண்டும் இந்த ஊர்வலம் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் துவங்கியது. மக்கள் ராஞ்சி சாலை, முராத்பூர் வழியாக அகாடாவை நோக்கி சென்றனர். ஆனால் ராஞ்சி சாலையில் உள்ள ககன் திவான் பகுதியை ஊர்வலம் அடைவதற்குள் சூழல் மாறத் தொடங்கியது.

ஊர்வலத்தில் போது ககன் திவான் அருகே சில வதந்திகள் பரவின. நாலந்தா எஸ்பியும் அங்கே இருந்தார். அந்த இடத்தில் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆனால் முராத்பூர் மசூதி அருகே கோஷம் எழுப்பப்பட்டது மற்றும் இரு சமூகத்தினரிடையே கல் வீச்சு தொடங்கியது.

தனது 15 வருட அனுபவத்தில் பிகார் ஷெரீப்பில் இதுபோன்ற வன்முறையை பார்த்ததில்லை என்று இந்த மசூதியில் இருக்கும் முகமது சொராபுதீன் கூறுகிறார்.

மக்கள் மசூதியின் மேல் ஏறி மசூதியின் தூபிகளை உடைத்ததாகவும், உள் சுவர் மற்றும் கண்ணாடிகளை உடைத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். இங்கு துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டதாக அவர் கூறினார்.

மசூதி

வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் தோட்டாவில் இருந்து சிதறிய உலோகத்துண்டுகளால் சிலருக்கு காயமேற்பட்டதாக நாலந்தா மாவட்ட அதிகாரி ஷஷாங்க் ஷுபங்கர் தெரிவித்தார்.

இந்த மசூதிக்குப் பின்னால் ஒரு மதரஸா உள்ளது. இது 910ல் கட்டப்பட்டது. 1930ல் அரசிடம் இருந்து இதற்கு அங்கீகாரமும் கிடைத்துள்ளது.

இந்த மதரஸாவில், நாசவேலை மற்றும் தீயிடலின் அறிகுறிகளை பார்க்க முடிகிறது.

இந்த மதரஸாவில் குழந்தைகளின் வகுப்பறை தீ வைத்து எரிக்கப்பட்டது. மின்விசிறிகள், மின் கம்பிகள் என அனைத்தும் சேதமடைந்துள்ளன. இதுமட்டுமின்றி மதரஸா வகுப்பறை சுவர்களை உடைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

இங்குள்ள பல வரலாற்றுப் புத்தகங்கள் எரிக்கப்பட்டதால் மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

”அரபு மற்றும் பாரசீக மொழிகளில் பல விலைமதிப்பற்ற புத்தகங்கள் அங்கு இருந்தன. அவை எரிந்து சாம்பலாகிவிட்டன. பல நூறு ஆண்டுகள் பழமையான அரிய நூல்களும் இதில் அடங்கும்,” என்று உள்ளூர் வழக்கறிஞர் முகமது சர்ஃபராஸ் மாலிக் கூறினார்.

தொடர்ந்து பரவிய வன்முறை

மசூதி மற்றும் மதரஸாவில் தொடங்கிய வன்முறையை காவல்துறை கட்டுப்படுத்துவதற்குள் அது நகரின் பல பகுதிகளிலும் பரவத் தொடங்கியது.

லஹேரி காவல் நிலைய சரகப்பகுதியில் ஒரு செருப்பு கடைக்கும் தீ வைக்கப்பட்டது.

இந்தக் கடைக்கு எதிரே உள்ள ஒரு மருந்துக் கடையில் 'விக்கி' என்ற இளைஞரை நாங்கள் சந்தித்தோம்.

முதலில் ககன் திவான் பகுதியில் பதற்றம் தொடங்கியதாகவும், அதன் பிறகு வன்முறை பரவியதாகவும், அந்த வன்முறையில் எதிரே இருந்த காலணி கடைக்கு தீ வைக்கப்பட்டதாகவும் அவர் கூறுகிறார்.

ககன் திவானில் என்ன நடந்தது என்பதைத் தெரிந்துகொள்ள நாங்கள் முன்னேறிச்சென்றோம். லஹேரி காவல் நிலையத்திலிருந்து சிறிது தூரத்தில் ஒரு கடையில் இருந்து புகை வெளியேறுவதை பார்த்தோம். அது ஒரு டயர் கடை.

இந்த தீ, அருகில் உள்ள ட்ரைகிளீனிங் கடையின் ஒரு பகுதிக்கும் பரவியது.

சிறிது நேரத்தில் தீயணைப்பு துறையின் சிறிய வாகனம் அங்கு வந்து கடையின் தீயை அணைத்தது.

அப்பகுதியில் உள்ள சாலை நெடுகிலும் வன்முறையின் அறிகுறிகள் தென்பட்டன. இங்கிருந்து முன்னேறி ககன் திவான் பகுதியை அடைந்தோம். ஏராளமான கடைகள் மற்றும் சேமிப்பு கிடங்குகள் உள்ள பிரமீளா வளாகத்தின் உரிமையாளரான அருண் குமார் மேத்தாவை நாங்கள் சந்தித்தோம்.

பிகார்

வெள்ளிக்கிழமையன்று பிரமீளா வளாகத்திலும் வன்முறை மற்றும் தீயிடல் சம்பவங்கள் நிகழ்ந்தன. இங்கு ஒரு ஹார்டுவேர் கடை சூறையாடப்பட்டது, பின்னர் இந்த வளாகத்தில் உள்ள பல கடைகளுக்கு தீ வைக்கப்பட்டது.

இந்த இடத்தில் நடந்த வன்முறையில் அருண்குமாரின் ஒரு கார் மற்றும் மூன்று இ-ரிக்‌ஷாக்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. புத்தகங்களின் மொத்த வியாபாரி ஒருவரின் சேமிப்பு கிடங்குக்கும் தீ வைக்கப்பட்டது.

எரிந்த பல புத்தகங்கள் இன்னும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. மேலும் அருண்குமார் சில தொழிலாளர்களுடன் சேர்ந்து தனது வளாகம் மற்றும் குத்தகைதாரர்களின் எஞ்சிய பொருட்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

”இது மதத்தின் வேலை அல்ல. இவர்கள் எல்லாம் கொள்ளையர்கள். ஒரு இடத்தில் கோழிக்கடைக்கு தீ வைக்கப்பட்டது. அதன்பிறகு எங்கள் வளாகத்தை மற்றொரு சமூகத்தினர் தாக்கினர். இங்கு சுவரை உடைத்து, கடைக்குள் தீ வைத்தனர்,” என்றார் அவர்.

இந்த வளாகத்தில் எரிந்து கிடந்த பல புத்தகங்களைப் பார்த்தோம். ஆங்கிலம், இந்தி, அரபு மற்றும் பார்சி மொழிகளிலும் பல புத்தகங்கள் இருந்தன.

வெள்ளிக்கிழமை நடந்த வன்முறை மற்றும் குழப்பத்தை கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக போலீஸார் கூறினர். சனிக்கிழமை பிற்பகல் வரை பிகார் ஷெரீப்பில் நிலைமை கட்டுக்குள் இருப்பதுபோல காணப்பட்டது.

ஆனால் சனிக்கிழமையன்றே பல பகுதிகளில் மீண்டும் வன்முறை தொடங்கியது. இதன்போது இரு சமூகத்தினரிடையே கோஷங்கள் எழுப்பப்பட்டு கல் வீச்சும் நடந்தது. சனிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்று உள்ளூர் காவல்துறை அதிகாரி தெரிவித்தார்.

வன்முறையின் வரலாறு

சமீப ஆண்டுகளாக பிகார் ஷெரீப்பில் இதுபோன்ற வகுப்புவாத வன்முறை நடந்ததில்லை. இது குறித்து அறிக்கை வெளியிட்ட பிகார் முதல்வர் நிதிஷ் குமார், இது முன்பு நடந்ததாகவும் ஆனால் அது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் கூறினார்.

பிகார் ஷெரீப்பில் கட்டாயமாக யாரோ குளறுபடி செய்திருக்க வேண்டும் என்றும் அச்சம் தெரிவித்த நிதீஷ் குமார் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிட்டார்.

"1981-ல் பிகார்ஷெரீப்பில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இது இங்குள்ள கிராமப்புறங்கள் வரை பரவியது. 1998 மற்றும் 2000 ஆம் ஆண்டில் ஆங்காங்கே சிறிய அளவில் வன்முறை ஏற்பட்டது. கடந்த நான்கு தசாப்தங்களாக இங்கு அமைதியான சூழல் நிலவியது,” என்று உள்ளூர் வழக்கறிஞர் முகமது சர்ஃபராஸ் மாலிக் பிபிசியிடம் தெரிவித்தார்.

கடந்த ஆண்டும் தான் இங்கு இருந்தாகவும், ஆனால் நகரில் எந்த பதற்றமோ வன்முறையோ இருக்கவில்லை என்றும் நாலந்தா காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் மிஷ்ரா கூறினார்.

"இந்த முறை ராம நவமி ஊர்வலத்தில் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த முறை ஊர்வலத்தில் சில சமூக விரோதிகள் அதீத ஆவேசம் காட்டியதால் வன்முறை வெடித்து பரவியது. இந்த முறை கூட்டம் அதிக உத்வேகத்துடன் இருந்தது. அவர்கள் ஏன் இப்படிச்செய்தனர் என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது,” என்று அவர் குறிப்பிட்டார்.

”பிகார் ஷெரீப்பில் கடந்த காலங்களிலும் பல மத நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆனால் சமீப ஆண்டுகளில் இதுபோன்ற வன்முறைகள் நடந்ததில்லை. இம்முறையும் ஊர்வலம் அமைதியாக நடக்கும் என்று நாங்கள் நினைத்தோம். ஆனால் இம்முறை சமூக விரோதிகள் அதிகம் இருந்தனர்,” என்று அசோக் மிஷ்ரா தெரிவித்தார்.

பிகார்

'அமைதியே தீர்வு'

பிகார் ஷெரீப்பில் நடந்த வன்முறையால் ஏற்பட்டுள்ள சாதாரண மக்களின் பிரச்னைகள், உயிர், உடமை இழப்புகளை விட அதிகம். இங்கு முக்கிய சாலையில் ஒருவர் தலையில் கனமான மூட்டையை சுமந்து கொண்டு தனது குடும்பத்துடன் சாலையில் சென்று கொண்டிருந்தார்.

அவர் தனது பெயரை அனோகே ரஜக் என்று கூறினார். அவருடன் சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்கள் போக்குவரத்து வாகனத்தை தேடி மதிய வெயிலில் பல கிலோமீட்டர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர்.

இந்தச்சூழலில் எங்கே போகிறீர்கள் என்று அவரிடம் கேட்டோம். கிராமத்தை விட்டு புறப்பட்டபோது இப்படியொரு சூழல் இருப்பது தனக்குத்தெரியாது என்றார் அவர். இந்தப் பகுதியில் உள்ள லஹ்சண்டா என்ற இடத்துக்கு அவர் செல்ல வேண்டும்.

ஆனால் வாகனத்தைத் தேடி எவ்வளவு தூரம் அவர் நடக்க வேண்டும் என்பது அவருக்கோ, சாலையில் உள்ள காவலர்களுக்கோ, எங்களுக்கோ தெரியாது. அவரது முகத்தில் பகல் வெளிச்சமும், சாலையில் போலீஸ்காரர்கள் இருப்பதால் ஒரு நிம்மதியும் தெரிந்தது.

பிகார் ஷெரீப்பில் அமைதியை நிலைநாட்ட தற்போது துணை ராணுவப் படையின் மூன்று பிரிவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தவிர, பிகார் ஆயுதப்படை போலீஸின் 10க்கும் மேற்பட்ட பிரிவுகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இங்கு அமைதியை நிலைநாட்ட நாலந்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாநில போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

"அமைதிதான் தீர்வு என்று மக்கள் நம்பாத வரையில், எங்களால் இயல்பு நிலையை முழுவதுமாக மீட்டெடுக்க முடியாது. சட்டம் அதன் வேலையைச்செய்யட்டும். இந்த வன்முறையின் பின்னணியில் யார் இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,”என்று காவல்துறை கண்காணிப்பாளர் அசோக் மிஷ்ரா குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: