இஸ்லாமுக்கு ஆபத்து என்பதால் நாளந்தா பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டதா?

பட மூலாதாரம், IMAGEBROKER/ALIYAH
- எழுதியவர், சுகத் முகர்ஜி
- பதவி, பி பி சி ட்ராவல்ஸுக்காக
ஒரு குளிர்காலக் காலையில் அடர்ந்த பனிமூட்டம் படர்ந்திருந்தது. குதிரை வண்டிகளை முந்திக்கொண்டு எங்கள் கார் மெதுவாக முன்னேறியது. பிஹாரில் இன்னும் குதிரை வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. வண்டியை இழுக்கும் குதிரையும் அதன் பின்னால் தலைப்பாகை அணிந்த வண்டிக்காரரும் மூடுபனியில் நிழல்கள் போல் தெரிகிறது.
இருப்பினும், புத்தர் ஞானம் பெற்ற போத்கயாவில் ஒரு இரவைக் கழித்துவிட்டு, அதிகாலையில் நாளந்தாவுக்குப் புறப்பட்டேன். செங்கல் கட்டடமாக இருக்கும் நாளந்தா பல்கலைக்கழகம் பண்டைய காலத்தில் மிக முக்கியமான கல்வி மையமாகத் திகழ்ந்தது.
நாளந்தா பல்கலைக்கழகம் கி.பி 427 இல் நிறுவப்பட்டது, இது உலகின் முதல் உறைவிடப் பல்கலைக்கழகம் என்ற புகழைப்பெற்றது. ஒரு காலத்தில் மத்திய கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் ஒரே வளாகத்தில் தங்கிக் கல்வி பயின்று வந்தனர். அப்போது அங்குள்ள நூலகத்தில் சுமார் தொண்ணூறு லட்சம் புத்தகங்கள் சேகரமாக இருந்தன. இந்த மாணவர்கள் மருத்துவம், தர்க்கம், கணிதம் மற்றும் பௌத்தக் கொள்கைகள் பற்றிப் படித்தனர்.
திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா ஒருமுறை, "நாங்கள் பெற்ற புத்த அறிவு அனைத்தும் நாளந்தாவிலிருந்து பெற்றது." என்றார்.
நாளந்தா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டு ஏறக்குறைய எழுநூறு ஆண்டுகள் உலகின் மிகப்பெரிய கல்வி மையமாக விளங்கியது. ஒரு காலத்தில் அதன் புகழ் வானை எட்டியது. உலகில் தனக்கு ஈடு இணையில்லாத கல்வி மையமாகக் கோலோச்சியது.
பௌத்த மடத்தின் கீழ் அமைந்த இந்தப் பல்கலைக்கழகம், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஐரோப்பாவின் பழமையான போலோக்னா பல்கலைக்கழகத்தை விட 500 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. இது மட்டுமல்லாமல், தத்துவம் மற்றும் மதத்திற்கான பல்கலைக்கழகத்தின் அறிவுசார் அணுகுமுறை நீண்ட காலமாக ஆசியாவின் கலாச்சாரத்தைப் பிரதிபலித்தது.
நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவிய குப்தர்கள் வம்சத்தின் அரசர் பக்தியுள்ள இந்து என்பது சுவாரஸ்யமான தகவல். ஆனால் அவர் பௌத்தம், அதன் அறிவுஜீவிகள் மற்றும் தத்துவ எழுத்துக்களின் ஆதரவாளராக இருந்தார்.
குப்தர்கள் வம்ச காலத்தில் தாராளவாதம், கலாச்சார மற்றும் மத மரபுகள் வளர்ந்தன. நாளந்தா பல்கலைக்கழகமும் பலதரப்பட்ட கல்விப் பாடத்திட்டத்தின் மையமாக மாறியது. இது பல்வேறு துறைகளில் உயர்கல்வியுடன் பௌத்தத்தின் அறிவுசார் கல்வியையும் கலந்து போதித்தது.

பட மூலாதாரம், Getty Images
முக்கியக் கல்வி மையம்
ஆயுர்வேதம் என்பது, இயற்கை சிகிச்சை முறைகளை அடிப்படையாகக் கொண்ட பண்டைய இந்திய மருத்துவ முறையாகும். இது, நாளந்தா பல்கலைக்கழகத்தில் நன்கு கற்பிக்கப்பட்டது. பின்னர் இங்குள்ள மாணவர்கள் மூலம் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவியது. நாளந்தா பல்கலைக்கழகத்தின் வளாகம் பிரார்த்தனை அரங்குகள் மற்றும் விரிவுரை அரங்குகளால் நிரம்பிய திறந்த பரப்பிடமாக இருந்தாலும், வெளியில் இருந்து அது ஒரு கோட்டை போன்றே இருந்தது. இந்த வடிவமைப்பு மற்ற பௌத்த நிறுவனங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இங்கு பயன்படுத்தப்படும் பிளாஸ்டர் நுட்பங்கள் தாய்லாந்தின் கட்டடக்கலையிலும் தாக்கத்தை ஏற்படுத்தின. மேலும் உலோகக் கலை திபெத் மற்றும் மலாயா தீபகற்பத்தை அடைந்தது.
ஆனால் நாளந்தா பல்கலைக்கழகத்தின் மிக முக்கியமான மற்றும் நீண்டகால மரபு கணிதம் மற்றும் வானியலில் அதன் சாதனைகள்.
இந்தியக் கணிதத்தின் தந்தையாகக் கருதப்படும் ஆர்யபட்டா, ஆறாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் தலைவராக இருந்ததாகக் கூறப்படுகிறது. கல்கத்தாவைச் சேர்ந்த கணிதப் பேராசிரியை அனுராதா மித்ரா கூறுகையில், "பூஜ்ஜியத்தை ஓர் எண்ணாக முதலில் அங்கீகரித்தவர் ஆர்யபட்டா. அவரது கருத்து மிகப்பெரிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது. இது கணிதக் கணக்கீடுகளை எளிதாக்கியது மற்றும் இயற்கணிதம் மற்றும் கால்குலஸ் போன்ற சிக்கலான கணக்கீடுகளை எளிதாக்கியது." கணிதத்தை விரிவாக்க உதவியது. பூஜ்யம் இல்லாமல் இன்று நம்மிடம் கணினிகள் கூட இருந்திருக்க முடியாது." என்றார்.
பேராசிரியர் மித்ரா ஆர்யபட்டாவின் பங்களிப்பைக் கோடிட்டுக் காட்டுகிறார், "அவர் சதுரங்கள் மற்றும் கனசதுரங்களின் தொடர் தொடர்பான முக்கியமான கோட்பாடுகளை வழங்கினார், அவர் வடிவவியலையும் முக்கோணவியலையும் பயன்படுத்தினார். வானவியலிலும் அவரது பங்களிப்பு மகத்தானது. சந்திரனுக்கு ஒளி இல்லை என்று சொன்ன முதல் நபர் அவர்.”
தென்னிந்தியாவில் மட்டுமல்ல, முழு அரேபிய தீபகற்பத்திலும் கணிதம் மற்றும் வானியல் வளர்ச்சிக்கு அவரது பணி குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது. நாளந்தா பல்கலைக்கழகம் தனது சிறந்த அறிஞர்களையும் பேராசிரியர்களையும் சீனா, கொரியா, ஜப்பான், இந்தோனேஷியா மற்றும் இலங்கை போன்ற இடங்களுக்கு பௌத்தக் கல்வி மற்றும் தத்துவத்தைப் பரப்புவதற்காகத் தொடர்ந்து அனுப்பியது. பண்டைய கலாச்சாரப் பரிமாற்றங்கள், பௌத்தம், ஆசியா முழுவதும் பரவித் தன்னை நிலைநிறுததிக் கொள்ள உதவியது.

பட மூலாதாரம், SUGATO MUKHERJEE/BBC
கில்ஜியால் சேதமான நாளந்தா பல்கலைக்கழகம்
நாளந்தா பல்கலைக்கழகத்தின் தொல்பொருள் மிச்சங்கள் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. 1190 களில், துருக்கி-ஆப்கான் இராணுவ ஜெனரல் பக்தியார் கில்ஜி தலைமையிலான படையெடுப்பாளர்களின் படையால் இப்பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டது.
நாளந்தா பல்கலைக்கழகத்தின் வளாகம் மிகப் பெரியதாக இருந்ததால், தாக்குதல் நடத்தியவர்கள் தீ வைத்து எரித்த பிறகு மூன்று மாதங்களுக்கு அந்த வளாகம் எரிந்து கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது. தற்சமயம் இருக்கும் 23 ஹெக்டேர் தளம் அசல் பல்கலைக்கழக வளாகத்தின் ஒரு பகுதி மட்டுமே, ஆனால் இந்தப் பகுதியில் உள்ள மடங்கள் மற்றும் கோயில்களின் எச்சங்களைப் பார்க்கும்போது, இங்கு எவ்வளவு கல்வி கற்பிக்கப்பட்டிருக்கும் வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
மடத்தின் வழிபாட்டு மண்டபங்களில் சுற்றித் திரிந்தேன். மடங்களின் வராண்டாக்களையும் மண்டபங்களையும் பார்த்தேன். உயரமான, சிவப்பு செங்கல் சுவர் கொண்ட தாழ்வாரத்தின் வழியாக, நான் மடத்தின் உள் முற்றத்தைச் சென்றடைந்தேன். அது செவ்வக வடிவில் இருந்தது, அங்கே கல்லால் ஆன மேடையும் இருந்தது. எனது உள்ளூர் வழிகாட்டி கமலா சிங், "இது 300 மாணவர்கள் அமரக்கூடிய விரிவுரை மண்டபமாக இருந்தது. ஆசிரியர்கள் ஒரு மேடையில் இருந்து கற்பிப்பார்கள்." என்றார்.
அவர், இடிபாடுகளை எனக்க்குச் சுற்றிக் காட்டினார். ஆப்கானிஸ்தான் போன்ற தொலைதூர தேச மாணவர்கள் தங்கியிருந்த வளாகத்தின் ஒரு பக்கத்தில் உள்ள சிறிய அறை ஒன்றின் உள்ளே சென்றேன். எண்ணெய் விளக்குகள் மற்றும் தனிப்பட்ட உடமைகளை வைத்திருப்பதற்காக இரண்டு அலமாரிகள் எதிரும் புதிருமாக இருந்தன. வழிகாட்டி கமலா சிங், அறையின் கதவுக்கு அருகில் உள்ள சிறிய, சதுர வடிவ குழிப் பெட்டி ஒவ்வொரு மாணவரின் தனிப்பட்ட கடிதப்பெட்டி என்று விளக்கினார்.
இன்றைய காலகட்டத்தில், புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவது எவ்வளவு கடினமாக இருக்கிறதோ, அதேபோல் நாளந்தா பல்கலைக்கழகத்தில் சேர்க்கை பெறுவதும் எளிதாக இருக்கவில்லை. சேர விரும்பும் மாணவர்கள் வாய்மொழித் தேர்வில், அதாவது பல்கலைக் கழகத்தின் உயர்மட்டப் பேராசிரியர்களுக்கு முன்பாக நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். இதில் தேர்ச்சி பெற்ற அதிர்ஷ்டசாலிகள் இந்தியாவின் பல்வேறு மூலைகளிலிருந்தும் வந்த தாராளமயக் கருத்துகளைக் கொண்ட பேராசிரியர்களால் கற்பிக்கப்பட்டனர். தர்மபாலர், ஷிலபத்ரா போன்ற புகழ்பெற்ற பௌத்த குருமார்களின் கீழ் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் இருந்தனர்.
நூலகத்தில் உள்ள பனை ஓலைகளில் கையால் எழுதப்பட்ட 90 லட்சம் கையெழுத்துப் பிரதிகள், உலகின் பௌத்த அறிவுப் பெட்டகமாக இருந்தன. அதன் மூன்று நூலகக் கட்டடங்களில் ஒன்று திபெத்திய பௌத்த அறிஞர் தாராநாதாவால் 'மேகங்களிடையே மிதக்கும்' ஒன்பது மாடிக் கட்டடம் என்று விவரிக்கப்பட்டுள்ளது.
படையெடுப்பாளர்கள் இந்த வளாகத்திற்குத் தீ வைத்தபோது, தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்ட சில பௌத்தர்கள் கையால் எழுதப்பட்ட சில கையெழுத்துப் பிரதிகளைக் காப்பாற்றினர். அவற்றை இப்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் கௌன்டி மியூசியம் ஆஃப் ஆர்ட் மற்றும் திபெத்தில் உள்ள யார்லுங் மியூசியம் ஆகியவற்றில் காணலாம்.

பட மூலாதாரம், DINODIA PHOTOS/ALIYAH
யுவான் சுவாங்கின் பயணம்
பிரபல சீன பயணி யுவான் சுவாங் 7 ஆம் நூற்றாண்டில் நாளந்தாவிற்கு விஜயம் செய்தார். வெறும் விருந்தினராக இல்லாமல், அவர் நீண்ட காலம் இங்கு தங்கிப் படித்து, பின்னர் இந்த பல்கலைக்கழகத்தில் நிபுணர் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
கி.பி.630ல் இந்தியா வந்த சுவாங், கி.பி.645ல் சீனாவுக்குத் திரும்பினார். நாளந்தாவிலிருந்து 657 புத்த மத நூல்களை எடுத்துச் சென்றார். அவர், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க பௌத்த அறிஞர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். அவர் இந்த நூல்களில் பலவற்றைச் சீன மொழியில் மொழிபெயர்த்தார்.
இது தவிர, அவர் தனது சுயசரிதையையும் எழுதினார், அதில் நாளந்தா பல்கலைக்கழகத்தின் அனுபவங்களும் இடம்பெற்றுள்ளன. அவரது ஜப்பானிய சீடர் தோஷோ, பின்னர் அவரது எழுத்துக்களை ஜப்பானிய மொழியில் மொழிபெயர்த்து புத்த மதத்தை ஜப்பானுக்குப் பரப்பினார், அங்கு அது ஒரு பெரிய மதமாக மாறியது. கீழை நாடுகளில் புத்த மதத்தை கொண்டு சென்ற புத்த பிக்கு ஹுவான் சுவாங் என்று நினைவுகூரப்படுவதற்கு இதுவே காரணம்.
யுவான் சுவாங் எழுதிய நாளந்தா பற்றிய விளக்கத்தில் ஒரு பெரிய ஸ்தூபி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஸ்தூபி புத்தரின் முக்கிய சீடர்களில் ஒருவரின் நினைவாக கட்டப்பட்ட ஒரு பெரிய நினைவுச்சின்னமாகும்.
இந்த ஸ்தூபியின் அற்புதமான எண்கோண பிரமிடு கட்டமைப்பின் இடிபாடுகளுக்கு முன்னால் நான் நின்று கொண்டிருந்தேன். பிரம்மாண்டமான ஸ்தூபியின் உச்சியை அடைய செங்கற்களால் ஆன திறந்த படிகள் உள்ளன. 30 மீட்டர் உயரமுள்ள பிரம்மாண்டமான ஸ்தூபியைச் சுற்றியுள்ள வெளிப்புறச் சுவரில் பல சிறிய கோயில்கள் மற்றும் ஸ்தூபிகள் காணப்படுகின்றன.

பட மூலாதாரம், REY PICTURES / ALAMY
பிரம்மாண்ட ஸ்தூபியின் வரலாறு
இங்குதான் மும்பையைச் சேர்ந்த வரலாற்று ஆசிரியை அஞ்சலி நாயரை சந்தித்தேன். அவர், "இந்தப் பெரிய ஸ்தூபி நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு முன்பே கட்டப்பட்டது. இது மூன்றாம் நூற்றாண்டில் பேரரசர் அசோகரால் கட்டப்பட்டது. இருப்பினும், அடுத்த எட்டு நூற்றாண்டுகளில் இது பல முறை புதிய முறைகளில் மீண்டும் கட்டப்பட்டது." என்றார்.
மேலும், “இங்கு வாழ்ந்து தங்கள் வாழ்நாள் முழுவதையும் பல்கலைக்கழகத்திற்காக அர்ப்பணித்த பௌத்த பிக்குகளின் எலும்புகள் இங்கே உள்ளன” என்றும் அவர் கூறினார்.
பல்கலைக்கழகம் அழிக்கப்பட்டு ஏறக்குறைய எட்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகு, சில அறிஞர்கள், கில்ஜியும் அவரது வீரர்களும் இந்தப் பௌத்த கற்றல் மையத்தை அழித்ததற்குக் காரணம் அது இஸ்லாம் மதத்துக்குப் பெரும் சவாலாக இருந்தது தான் என்று பரவலாக பரப்பப்பட்ட கோட்பாட்டை மறுத்துள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் மீதான தாக்குதல் பௌத்தத்தை வேரோடு பிடுங்குவதற்காக நடத்தப்பட்டிருக்கலாம், ஆனால் இந்தியாவின் முன்னணி தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான எச்.டி. சங்கலியா 1934 ஆம் ஆண்டு 'நாளந்தா பல்கலைக்கழகம்' என்ற தனது புத்தகத்தில், கோட்டை போன்ற வளாகம் மற்றும் அதன் செல்வம் பற்றிய கதைகள் படையெடுப்பாளர்களை இங்கு தாக்குவதற்கு ஈர்த்திருக்கலாம் என்று குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், SUGATO MUKHERJEE/BBC
முந்தைய தாக்குதல்
"ஆம், தாக்குதலுக்கான உறுதியான காரணத்தைக் கண்டறிவது கடினம்" என்று நாளந்தா பல்கலைக்கழகத்தின் இடிபாடுகளுடன் கட்டப்பட்ட அருங்காட்சியகத்தின் இயக்குநர் சங்கர் சர்மா கூறினார்.
நாளந்தா அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்த 13,000 க்கும் மேற்பட்ட தொல்பொருள் எச்சங்களில் 350 கலைப்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ப்லாஸ்டர் சிற்பங்கள், புத்தரின் வெண்கலச் சிலைகள், யானைத் தந்தம் மற்றும் எலும்பு ஆகியவை இதில் அடங்கும்.
"இருப்பினும், இது நாளந்தா மீதான முதல் தாக்குதல் அன்று. இது 5 ஆம் நூற்றாண்டில் மிஹிரகுலத்தின் தலைமையின் கீழ் ஹுனர்களால் தாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து 8 ஆம் நூற்றாண்டில் வங்காளத்தின் கௌடா மன்னன் படையெடுப்பு நடந்தது," என்று இடிபாடுகளின் ஊடே நடந்து செல்லும்போது சங்கர் சர்மா எங்களிடம் கூறினார்.
ஹூனப் படையெடுப்பாளர்கள் சொத்துகளைக் கொள்ளையடிக்கத் தாக்கினர். ஆனால், வங்காள மன்னரின் தாக்குதல், அக்காலத்தில் சைவ இந்து மதப் பிரிவினருக்கும் பௌத்தர்களுக்கும் இடையே வளர்ந்து வந்த பகையின் விளைவாகும் என்ற முடிவுக்கு வருவது மிகவும் சுலபம். இருப்பினும், இரண்டு சந்தர்ப்பங்களிலும், கட்டடங்கள் புனரமைக்கப்பட்டன. குப்த வம்சத்தின் ஆட்சியாளர்களின் உதவியால் வசதிகளும் விரிவுபடுத்தப்பட்டன.
சர்மா அவர்கள், "இந்தியாவின் மிகச் சிறந்த கல்வி மையத்தை கில்ஜி தாக்கிய சமயத்தில் பௌத்த மதம் சரிவின் பாதையில் இருந்தது. எட்டாம் நூற்றாண்டிலிருந்து பல்கலைக்கழகத்தை ஆதரித்த பௌத்த பால வம்சமும் வீழ்ச்சியடைந்தது. இதனால், மூன்றாவது தாக்குதல் சவப்பெட்டியில் அடிக்கப்பட்ட கடைசி ஆணியானது." என்றார்.
இதற்குப் பிறகு, நாளந்தா படிப்படியாக அடுத்த ஆறு நூற்றாண்டுகளுக்கு மறக்கப்பட்டது. 1812 ஆம் ஆண்டில், ஸ்காட்டிஷ் சர்வேயர் பிரான்சிஸ் புக்கனன்-ஹாமில்டன் இதைப் பற்றி கண்டுபிடித்தார், பின்னர் 1861 இல், சர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் இந்த எச்சங்களைப் பண்டைய நாளந்தா பல்கலைக்கழகம் என்று அடையாளம் காட்டினார்.
ஒரு சிறிய ஸ்தூபிக்கு அருகில் நின்றிருந்தபோது, இளம் துறவிகளின் ஒரு குழு, சிவப்பு நிற ஆடைகளை அணிந்திருந்ததைக் கண்டேன், அவர்களில், ஒரு இளம் சந்நியாசி ஆழ்ந்த தியானித்தில் இருந்தார். அவரது கண்கள் பிரம்மாண்டமான நினைவுச்சின்னத்தின் மீது நிலைகுத்தியிருந்தன. புகழ்பெற்ற கடந்த காலத்தை பயபக்தியுடன் நினைவுகூருவது போல் இருந்தது அந்தக் காட்சி.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












