வைரஸ் ஆய்வகங்களில் இருந்து எப்படி கசிகிறது? அமெரிக்க ஆய்வாளர்கள் சொல்லும் சில காரணங்கள்

Wuhan Institute of Virology

பட மூலாதாரம், Reuters

மூன்று வருடங்களுக்கு முன்பு உலகையே ஆட்டிப்படைத்த கொரோனா பெருந்தொற்று எங்கிருந்து வந்தது என்பது குறித்த விவாதங்கள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் சமீபமாக கோவிட் 19, சீன அரசு கட்டுப்பாட்டில் இருந்த ஒரு ஆய்வகத்திலிருந்து உருவாகியிருக்கலாம் என அமெரிக்கா தெரிவித்ததையடுத்து பல கேள்விகள் எழுந்துள்ளன.

2018லிருந்து 2021ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் இயக்குநராக இருந்த ராபர்ட் ரெட்ஃபீல்ட், கோவிட் 19 ஆய்வகத்திலிருந்து வெளியாகியிருக்கலாம் என தெரிவித்திருந்தார்.

இதே கருத்தை அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில், மத்திய புலனாய்வு முகமையான எஃப்பிஐ-ன் தலைவர் கிறிஸ்டோஃபர் வரேவும் தெரிவித்திருந்தார்,

“பெருந்தொற்று எங்கிருந்து உருவானது என்பதை நீண்ட காலமாக ஆராய்ந்து வருகிறோம். பெரும்பாலும் அது ஆய்வகத்திலிருந்து உருவாகி இருக்கலாம்” என்று தெரிவித்தார்.

கொடிய வைரஸ் கசிவு

அம்மை

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும் பல ஆராய்ச்சியாளர்கள், வைரஸ் ஆய்வகத்திலிருந்து வெளியானது என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்துள்ளனர். வெவ்வேறு அமரிக்க முகமைகளும் வெவ்வேறு விதமான முடிவுகளை தெரிவிக்கின்றன.

சரி ஒரு ஆய்வகத்திலிருந்து வைரஸ் வருவது என்பது எத்தனை எளிதானது? இதற்கு முன்பு இது நடந்துள்ளதா?

ஆம். உயிரை கொள்ளும் வைரஸுகள் பல முக்கிய நகரங்களில் உள்ள ஆய்வகத்திலிருந்து தற்செயலாக வெளியாகியிருக்கிறது. அதில் பெரியம்மையை விட ஆபத்தானது வேறு எதுவும் இல்லை.

1977ஆம் ஆண்டு அது முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு முன்பாக 20ஆம் நூற்றாண்டுகளில் மட்டும் அது 30 கோடி பேரை கொன்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.

எனவே பர்மிங்காம் பல்கலைக்கழகத்தில் மருத்துவ புகைப்படக் கலைஞராக இருந்த ஜெனெட் பார்க்கர் தனது 40 வயதில் 1978ஆம் ஆண்டு பெரியம்மையால் பாதிக்கப்பட்டபோது அது மிகப் பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது.

“அது மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திய ஒரு நோயாக இருந்தது. பர்மிங்காமில் மட்டுமல்ல. அரசு மற்றும் உலக சுகாதார நிறுவனம் அது மீண்டும் வருவதற்கான சாத்தியங்கள் குறித்து அச்சத்தில் மூழ்கின” என இந்த தொற்று காலத்தில் கிழக்கு பர்மிங்காம் மருத்துவமனையில் தொற்று நோய் மருத்துவராக பணியாற்றிய அலாஸ்டயர் கெட்டிஸ் தெரிவித்தார்.

பெரியம்மை வைரஸ் தொற்று ஏற்பட்ட மூன்றில் ஒருவரை கொன்றுக் கொண்டிருந்தது. அதுகுறித்து பல்கலைக்கழக ஆய்வகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டிருந்தது ஆனால் பார்க்கருக்கு எவ்வாறு சின்னம்மை தொற்று ஏற்பட்டது என்பது விடை தெரியாத ஒரு கேள்வியாகவே உள்ளது.

இது குறித்த அரசு ஆய்வு ஒன்று மூன்று வழிகளில் வைரஸ் பரவியிருக்கலாம் என்று தெரிவித்தது. காற்றின் மூலம், தனிநபர் தொடர்பில் அல்லது தொற்று கிருமிகள் கொண்ட உபகரணத்தின் மூலம் ஆகிய வழிகளில் பரவியிருக்கலாம்.

பார்க்கர் தனிமைப்படுத்தப்பட்டார். இருப்பினும் பார்க்கரின் தாய்க்கு இந்த தொற்று ஏற்பட்டிருந்தது. சிகிச்சைக்கு பிறகு பார்க்கரின் தாய் பிழைத்துக் கொண்டார். ஆனால் பார்க்கரை காப்பாற்ற இயலவில்லை. ஆனால் இந்த தொற்று மேலும் இரு உயர்களை காவு வாங்கியது.

தனிமையில் வைக்கப்பட்டிருந்த பார்க்கரின் 77 வயது தந்தை, மகள் இறந்த துக்கத்தால் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். மேலும் பர்மிங்காமின் சின்னம்மை ஆய்வகத்தின் தலைவர் ஹென்ரி பெட்சன் தற்கொலை செய்து கொண்டார்

அதிகபட்ச பாதுகாப்பு

The Centers for Disease Control in Atlanta, Georgia

பட மூலாதாரம், Getty Images

இந்த சம்பவத்திற்கு பிறகு மீண்டும் எந்த ஆய்வகத்தில் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை அதிகாரிகள் ஆராய்ந்து வைரஸ் வைக்கப்பட்டிருக்கும் இடங்களை குறைத்து கொண்டனர்.

1979ஆம் ஆண்டு உருவான உலக சுகாதார அமைப்பின் ஒப்பந்தப்படி, அமெரிக்காவின் அட்லான்டாவில் உள்ள நோய் கட்டுப்பாட்டு மையம் மற்றும் ரஷ்யாவின் சைபீரியாவில் உள்ள வெக்டர் ஆய்வகம், இவை இரண்டு மட்டுமே உலகின் மிக பாதுகாப்பான ஆய்வகங்களாகக் கருதப்பட்டன. ஆனால் அவற்றிலும் சில அசம்பாவிதங்கள் நடந்துள்ளன.

2014ஆம் ஆண்டு நோய் கட்டுப்பாட்டு மையத்தின் பணியாளர்கள் ஆந்திராக்ஸ் வைரஸை மாதிரியை முறையாக செயலிழக்க தவறிவிட்டனர். இதனால் பத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் தொற்று ஏற்படவில்லை.

2019ஆம் ஆண்டு வெக்டர் ஆய்வகத்தில் ஏற்பட்ட கேஸ் வெடிப்பு நிகழ்வால் ஒரு ஜன்னல் வெளியே அடித்துச் சென்றது. இதில் ஒருவருக்கு தீவிர தீக்காயம் ஏற்பட்டது. இருப்பினும் இந்த விபத்தால் எந்த வைரஸ் கசிவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆபத்தான பிழைகள்

இம்மாதிரியாக அதி உயர் பாதுகாப்பு ஆய்வகங்களில் ஏற்பட்ட சம்பவங்களால் ஊழியர்கள் மற்றும் அருகாமையில் உள்ள மக்கள் தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

ஃபிரான்ஸில் இப்படியான ஒரு ஆய்வகத்தில் விஞ்ஞானி ஒருவருக்கு உபகரணம் ஒன்றால் வெட்டுக் காயம் ஏற்பட்டு 10 வருடங்களுக்குப் பிறகு உயிரிழந்தார். எமிலி ஜாவுமெய்ன் தனது 33 வயதில் 2019ஆம் ஆண்டு உயிரிழந்தார். அவர் ப்ரியன்ஸ் என்ற தொற்று கிருமியால் பாதிக்கப்பட்டார். இது விலங்குகளில் பொவைன் ஸ்பாங்கிஃபார்ம் என்சிபலோபதி (Bovine Spongiform Encephalopathy) என்னும் நோயையும், மனிதர்களுக்கு க்ரெஸ்ஃபெல்ட் – ஜாக்கோப் (Creutzfeldt-Jakob) நோயையும் ஏற்படுத்துகிறது. அவர் இந்த நோயால் பாதிக்கப்பட்டார் என்று தெரிந்தும், இந்த நோய்க்கான சிகிச்சையில் பயன்படுத்தும் விதமாக எந்த ஒரு தடுப்பு மருந்தும் கண்டறியப்படவில்லை.

CJD மூளையை பாதிக்கும்

பட மூலாதாரம், Getty Images

சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள லான்சூ ஆய்வுக் கூடத்தில் ஏற்பட்ட தவற்றால் 10 ஆயிரம் பேர் வரை ஆபத்தான நோய்க்கிருமி ஒன்றால் பாதிக்கப்பட்டனர்

ப்ரூசெல்லா பாக்டீரியா தொற்றிலிருந்து விலங்குகளைக் காப்பாற்றும் தடுப்பு மருந்தை உருவாக்கும் தலத்தில் காலாவதியான கிருமிநாசினிகள் தேவையற்ற வாயுவை அப்புறப்படுத்த பயன்படுத்தப்பட்டது.

இது அருகாமையில் உள்ள ஆய்வு நிறுவனத்தின் ஊழியர்களுக்கும் பரவியது. அதன்பின் நகரில் உள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கும் பரவியது. ஆனால் இதனால் இறப்பு ஏற்படுவது என்பது அரிதானது.

ஆயிரக்கணக்கானோருக்கு மருத்துவ உதவி தேவைப்பட்டது. பலருக்கு இழப்பீடுகளும் வழங்கப்பட்டன. இதைத் தவிர வேறு சில கசிவுகளால் பணியாளர்கள் மற்றும் அருகாமை குடியிருப்புவாசிகள் காயமடைந்த நிகழ்வுகளும் நடந்துள்ளன.

விடை தெரியாத கசிவுகள்

அதேபோல ஆய்வகத்திலிருந்து அந்த வைரஸ் எப்படி வந்தது என்றே கண்டுபிடிக்க முடியாத தருணங்களும் உள்ளன. 2021ஆம் ஆண்டு தைவானில் உள்ள ஆய்வகம் ஒன்றில் வைரஸ் குறித்துப் பணிபுரிந்தபோது ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது.

அதன்பிறகு நடைபெற்ற ஆய்வில் அங்கு பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் என்ன நடந்தது என்பது தெளிவாக தெரியவில்லை. ஆய்வகத்திலிருந்த வைரஸை சுவாசித்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்றும் பாதுகாப்பு உபகரணங்களை சரியாக கையாளாமல் இருந்திருக்கலாம் என்றும் கூறப்பட்டது

எனவே ஆய்வகத்திலிருந்து வைரஸ் கசிவு என்பது இயல்பான ஒன்றுதான். ஆனால் கோவிட் பெருந்தொற்றுக்கு இதுதான் காரணமா அல்லது இயல்பாக விலங்கிலிருந்து பரவியதா என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: