தமிழகத்தில் சிஎன்ஜி வாகனங்கள் பெருகுவதற்கு என்ன தடை? விரிவான அலசல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மோகன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தமிழ்நாட்டில் பிற மாநிலங்களைப் போல சிஎன்ஜி வாகனங்களின் பயன்பாடு அதிகரித்தால் என்னென்ன விளைவுகள் ஏற்படலாம்?
சுற்றுச்சூழல் மாசுபாடு விவகாரத்தில், ஒப்பீட்டளவில் குறைவான பாதிப்பையே சிஎன்ஜி வாகனங்கள் ஏற்படுத்துகின்றன. அவை தமிழ்நாட்டில் பரவலாக பயன்பாட்டுக்கு வராமல் இருக்க எவை காரணங்களாக இருக்க முடியும்?
நாடு முழுவதும் தற்போது பிரத்யேகமாக சிஎன்ஜி பொருத்தப்பட்ட வாகனங்கள் 6,36,560 என்றவாறு உள்ளதாக இந்திய நாடாளுமன்றத்தில் கேள்வியொன்றுக்கு இந்திய சாலை போக்குவரத்துத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வ பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014 முதல் இந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதிவரையிலான நிலவரப்படி இதுதான் பிரத்யேக சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை.
இது தவிர, பெட்ரோல் வாகனத்துடன் இணைக்கப்பட்ட சிஎன்ஜி சாதனம், டீசல் எஞ்சினில் இருந்து சிஎன்ஜி ஆக மாற்றப்பட்ட வாகனங்களின் எண்ணிக்கையும் தனியாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
இப்படியாக, தமிழ்நாட்டில் ஓடக்கூடிய பிரத்யேக சிஎன்ஜி வாகனங்களின் எண்ணிக்கை 12,427 மட்டுமே என்று அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் தற்போது காஞ்சிபுரம், சென்னை மற்றும் திருவள்ளூர், கோயம்புத்தூர், கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், இராமநாதபுரம், சேலம் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் வாகனங்களுக்கான சிஎன்ஜி வாயுவை பெறும் வசதி உள்ளது.
புதிய சிஎன்ஜி வாகனங்களை அறிமுகப்படுத்தும் அதே நேரம், ஏற்கெனவே டீசலில் இயங்கி வரும் வாகனங்களை சிஎன்ஜியில் இயங்கும் விதமாக மாற்றுவதும் தற்போது அறிமுகமாகியுள்ளது.
டெல்லி உள்ளிட்ட இடங்களில் சிஎன்ஜி பயன்பாடு பரவலாகிவிட்ட நிலையில் தமிழ்நாட்டில் தற்போதுதான் அந்த வசதி பிரபலமாகத் தொடங்கியிருப்பதாக கூறுகிறார் கோவையைச் சேர்ந்த தனியார் எரிவாயு முகமையின் நிறுவனர் சஞ்சய்.
"டெல்லியில் காற்று மற்றும் புகை மாசுபாட்டை கட்டுப்படுத்த டீசல் வாகனங்கள் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் இயங்க அனுமதி கிடையாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருக்கிறது. அதன் பிறகே அங்கு சிஎன்ஜி வாகன பயன்பாடு அதிகரித்தது," என்கிறார் சஞ்சய்.
பிபிசி தமிழிடம் இது குறித்து விரிவாகப் பேசிய அவர், "சிஎன்ஜி என்பது முழுவதும் பசுமையான எரிவாயு கிடையாது. டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில் சிஎன்ஜியால் புகை மாசுபாடு கணிசமாக குறையும். டீசலை விட மைலேஜ் அதிகம் என்பதால் செலவினம் 25% வரை குறையும்," என்கிறார்.
வழிமுறை என்ன?

பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசின் கீழ் ஐசிஏடி என்கிற நிறுவனம் இயங்கி வருகிறது. மோட்டார் வாகன துறையில் புதிய தொழில்நுட்பங்களைப் பரிசோதித்து அனுமதி வழங்குவது இந்த நிறுவனத்தின் பொறுப்பு.
இந்த வாகனங்களை சிஎன்ஜி முறைக்கு மாற்றுவதற்கான 'கிட்' தயாரிக்கும் நிறுவனங்கள் ஐசிஏடி மூலம் பரிசோதனை செய்து ஒப்புதல் பெற்ற பிறகே டீசல் வாகனங்களை சிஎன்ஜிக்கு மாற்ற முடியும்.
உதாரணமாக, ஒரு கனரக வாகனத்தை சிஎன்ஜிக்கு மாற்ற வேண்டுமென்றால் அதற்காக ஐசிஏடி நிறுவனத்திடம் விண்ணப்பிக்க வேண்டும். பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை உள்ளிட்ட பல கட்ட பரிசோதனை செய்த பிறகு தான் ஐசிஏடி உரிய ஒப்புதல் வழங்கும். அதன் அங்கீகாரம் பெற்ற வாகனங்களை மட்டுமே சிஎன்ஜிக்கு மாற்ற முடியும். சந்தையில் விற்கும் எல்லா மாடல் வாகனங்களையும் சிஎன்ஜிக்கு மாற்ற முடியாது.
இது தொடர்பாக இந்திய அரசும் தமிழ்நாடு அரசும் சில வழிமுறைகளை வெளியிட்டுள்ளன.
இந்த செயல்முறை `ரெட்ரோ ஃபிட்டிங்` என அழைக்கப்படுகிறது.
இந்த வசதியை வழங்கும் நிறுவனங்கள் அரசிடம் அனுமதி பெற்று தான் செயல்பட முடியும். இதற்காக விண்ணப்பித்து போக்குவரத்து அலுவலர்கள் வந்து பரிசோதித்த பிறகு தான் இறுதியான அனுமதி கிடைக்கும்.
வாகனங்கள் எவ்வாறு சிஎன்ஜிக்கு மாற்றப்படுகின்றன?
டீசல் வாகனங்களில் உள்ள எஞ்ஜின் மாற்றப்பட்டு சிஎன்ஜி எஞ்ஜின் மற்றும் சிலிண்டர்கள் பொருத்தப்படும். ஐசிஏடி நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட வாகன மாடல்கள் மட்டும் தான் சிஎன்ஜிக்கு மாற்றப்படும்.
போக்குவரத்து துறை அதிகாரிகள் வண்டியைப் பரிசோதித்து சான்று வழங்கிய பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் (ஆர்டிஓ) சிஎன்ஜி வண்டி என புதிதாக பதிவு செய்த பின்னர் தான் சிஎன்ஜிக்கு மாற்றம் செய்யப்பட்ட வாகனங்களை இயக்க முடியும்.

எந்த வகை வாகனங்களுக்கு சிஎன்ஜி பொருந்தும்?
தற்போது பேருந்து, லாரி போன்ற கனரக வாகனங்கள்தான் சிஎன்ஜிக்கு மாற்றப்பட்டு வருகின்றன.
கனரக வாகனங்களை சிஎன்ஜிக்கு மாற்றும் கிட் தான் தற்போது அதிக அளவில் உள்ளன.
மற்ற வாகனங்களுக்கான பரிசோதனை ஆரம்ப கட்டத்தில் உள்ளது.
சிறிய வாகனங்களை விட சரக்கு ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள், பேருந்துகள் தற்போது சிஎன்ஜிக்கு மாறி வருகின்றன.
சாதக, பாதகம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
சிஎன்ஜியில் இயக்குவதால் போக்குவரத்து செலவு குறையும். காற்று மற்றும் ஓசை மாசுபாடு பரவலாக குறையும். டீசல் வாகனங்களை ஒப்பிடுகையில் சிஎன்ஜி வாகனங்களில் கார்பன் உமிழ்வும் குறைவு, பராமரிப்பு செலவும் குறைவு என்பதால் சூழலுக்கு உகந்ததாக இருக்கும்.
ஆனால் போதிய சிஎன்ஜி நிரப்பும் நிலையங்கள் தற்போது போதிய அளவில் இல்லாதது பாதகமாக பார்க்கப்படுகிறது.
மேலும் வாகனங்களில் உயர் அழுத்தத்தில் சிஎன்ஜி நிரப்பப்படுவதால் எரிபொருள் நிரப்பும்போது பயணிகள் வண்டியில் இருந்து இறங்கிக் கொள்ள வேண்டும்.
"பேருந்து மற்றும் கனரக வாகனங்களில் ஒருமுறை எரிவாயு நிரப்பினால் 400, 500 கி.மீ செல்ல முடியும்," என்கிறார் சஞ்சய்.
"இதனால் ஒருமுறை எரிவாயு நிரப்பினாலே அன்றைய தினத்தின் பயன்பாட்டிற்கு போதுமானதாக இருக்கும். பொதுப் போக்குவரத்து நஷ்டத்தில் இயங்கும் நிலையில் சிஎன்ஜி பயன்பாட்டை ஊக்குவித்தால் லாபகரமாக இயக்கலாம். கேரளா, கர்நாடகாவில் அதற்கான முயற்சிகள் நான்கு ஆண்டுகளாக எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டிலும் அதை முயற்சிக்கலாம்," என்கிறார் சஞ்சய்.

கோவை மாநகரைச் சேர்ந்த ஜான் என்பவர் கடந்த இரண்டு மாதங்களாக சி.என்.ஜி மூலம் இயங்கும் ஆட்டோவை ஓட்டி வருகிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், "நான் முதலில் டீசல் ஆட்டோதான் ஓட்டிக் கொண்டிருந்தேன். இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் சி.என்.ஜியில் இயங்கும் புதிய ஆட்டோவை வாங்கினேன். டீசல் ஆட்டோவை விடவும் புதிய வாகனத்தின் விலை சற்று குறைவுதான். டீசலில் கிடைப்பதைவிட 5 முதல் 10 கி.மீ வரை மைலேஜ் கூடுதலாக கிடைக்கிறது, விலையும் டீசலை விட 10 ரூபாய் குறைவாக இருப்பதால் 30% செலவு மிச்சமாகிறது. ஓட்டுவதற்கும் சி.என்.ஜி. வண்டி அதிர்வில்லாமல் மென்மையாக இயங்குகிறது.
மற்ற மாநிலங்களில் டீசல் வாகனங்களை சிஎன்ஜிக்கு மாற்ற முடிவெடுத்துள்ளார்கள். தமிழ்நாட்டிலும் விரைவில் இது நடைமுறைக்கு வந்துவிடும். அதனால்தான் முன் கூட்டியே சிஎன்ஜிக்கு மாறிவிட்டேன். குறைவான சிஎன்ஜி நிலையங்கள்தான் தற்போது செயல்பாட்டில் உள்ளன. எனவே, நீண்ட தூரம் பயணம் செய்து எரிபொருள் நிரப்ப வேண்டிய நிலை உள்ளது. அதிக சிஎன்ஜி நிலையங்கள் வந்தால் அந்த குறை நீங்கும்," என்கிறார்.
சிஎன்ஜி போதிய அளவில் கிடைக்கிறதா?

ஒவ்வொரு மாவட்டமும் வட்டார வாரியாக பிரிக்கப்பட்டு சிஎன்ஜி கட்டமைப்பை உருவாக்கி விநியோகம் செய்யும் உரிமம் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவை மாவட்டத்திற்கான சிஎன்ஜி உரிமத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் பெற்றுள்ளது.
இந்தியன் ஆயில் நிறுவனத்தின் கோவை மண்டல உதவி மேலாளர் ஞானதீப் பிபிசி தமிழிடம் பேசுகையில், "தற்போது கோவையில் 13 இடங்களில் சி.என்.ஜி எரிபொருள் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அடுத்த எட்டு ஆண்டுகளில் 273 எரிபொருள் நிலையங்கள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கோவையில் நாள் ஒன்றுக்கு 7,000 கிலோ சி.என்.ஜி விற்பனையாகிறது.
ஒரு கிலோ சி.என்.ஜி 84 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கொச்சியில் இருந்து குழாய் மூலமாக கோவைக்கு சிஎன்ஜி எரிவாயு கொண்டு வரப்படுகிறது. தற்போதுவரை சிஎன்ஜி வாகனங்களில் எந்த விதமான விபத்தும் பதிவானதாக தெரியவில்லை. வர்த்தக ரீதியிலான வாகனங்கள் அதிக அளவில் சிஎன்ஜிக்கு மாறி வருகின்றன," என்றார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












