பெட்ரோல், டீசல் விலை இந்தியாவில் குறையுமா? நரேந்திர மோதி அரசு கூடுதல் வரி விதிக்குமா? - கச்சா எண்ணெய் விலை சரிவு

பட மூலாதாரம், Pacific Press
- எழுதியவர், ஜூபைர் அகமத்
- பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி
மேற்கத்திய நாடுகளில் கொரோனா வைரஸின் டெல்டா திரிபு அதிகமாகப் பரவிவரும் நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை ஏழு சதவிகிதம் குறைந்துள்ளது. எண்ணெய் விலை செவ்வாய்க்கிழமை வரை அதே அளவில் நிலையாக உள்ளது.
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் அமைப்பு (ஒபெக்) மற்றும் ஒபெக் பிளஸ் நாடுகளுக்கு இடையே எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க ஞாயிற்றுக்கிழமை எட்டப்பட்ட ஒப்பந்தம், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு மற்றொரு காரணம்,
கடந்த வாரம், உலகின் மிகப்பெரிய எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளான ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் செளதி அரேபியாவுக்கு இடையிலான கருத்துவேறுபாடுகள் எண்ணெய் உற்பத்தி ஒதுக்கீடு தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளுக்கு முட்டுக்கட்டை போட்டது.
ஆனால் இந்தப் பிரச்னை ஞாயிற்றுக்கிழமை முடிக்குவந்தது. இராக், குவைத், ரஷ்யா, செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகமும் உற்பத்தியை அதிகரிக்கும் என்று ஒபெக் கூட்டமைப்பு அறிவித்தது.
ஆனால் தற்போது இந்தியாவில் லிட்டருக்கு 100 ரூபாய்க்கும் மேல் இருக்கும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறையுமா?
இந்தியாவில் எண்ணெய் விலை சர்வதேச சந்தைகளின் விலையால் தீர்மானிக்கப்படுகிறது. அதாவது சர்வதேச சந்தையில் விலை சரிவு மற்றும் விலை உயர்வின் நேரடி தாக்கம் இந்தியாவின் நுகர்வோர் மீதும் ஏற்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ள போதிலும், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்து வரும் போக்கு காணப்படுகிறது. இதற்கு ஒரே காரணம், மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணெய் மீதான கலால் வரியை அதிகரித்துக்கொண்டே இருப்பதுதான்.
இந்திய அரசின் 90,000 கோடி ரூபாய் வருவாய்

பட மூலாதாரம், Getty Images
ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் எண்ணெய் மீதான கலால் வரியிலிருந்து இந்திய அரசு 90,000 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருவாயை ஈட்டியது. எனவே தொடர்ந்து இது அப்படியே இருக்குமா?
இந்தமுறை இந்தியாவில் எண்ணெய் விலை குறையும் என்று பொருளாதார நிபுணர் விவேக் கவுல் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
" உற்பத்தியை அதிகரிப்பது என்ற ஒபெக் + நாடுகளின் முடிவால், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலைகளில் நிச்சயமாக ஒரு தாக்கம் இருக்கும். இந்தியா வாங்கும் கச்சா எண்ணெயின் விலை ஜூலை 19 அன்று பீப்பாய்க்கு 71.2 டாலராகக் குறைந்தது. இது ஜூலை 15 ஆம் தேதி 75.26 டாலராக இருந்தது. மத்திய அரசு அல்லது மாநில அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை அதிகரிக்காமல் இருந்தால் மட்டுமே விலை குறைவது சாத்தியமாகும். அப்படி நடந்தால் விலை கணிசமாகக் குறையக்கூடும்," என்று அவர் குறிப்பிட்டார்.
அரசு கலால் வரியை அதிகரிக்கும் என்றும், சாதாரண நுகர்வோருக்கான விலைகள் குறையாது என்றும் சூடிவாலா செக்யூரிட்டிஸின் அலோக் சூடிவாலா கருதுகிறார்.
"சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஸ்திரமடைந்தாலும்கூட, இந்தியாவில் இதேபோன்ற வீழ்ச்சியை நான் எதிர்பார்க்கவில்லை. மத்திய பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்ட நேரத்தில், கோவிட் காரணமாக கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கோவிட் 19 காரணமாக பெரும் செலவு மற்றும் பொருளாதார சலுகைத் திட்டங்கள் அறிவிக்கப்பட்ட போதிலும் வரிகள் அதிகரிக்கப்படவில்லை," என்று அவர் மேலும் கூறினார்.
சர்வதேச சந்தைகளில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியால் அரசுக்கு கிடைக்கும் பெருவாரியான நன்மைகளை கருத்தில் கொண்டே,வரவு செலவுத் திட்டத்தில் வரி அதிகரிக்கப்படவில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.
அரசின் பிம்பம் அடிபடுமா?

பட மூலாதாரம், EPA
இந்த முறை விலையை அதிகரிப்பது அரசின் பிம்பத்திற்கு ஊறு விளைவிக்கும் என்று விவேக் கவுல் நினைக்கிறார்.
" பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கும் அதிகம், டீசல் விலை கிட்டத்தட்ட 100 ரூபாய் ஆகிவிட்டது. இந்த நிலையில் மக்களுக்கு அரசு மீது அதிருப்தி ஏற்படக்கூடும். எனவே இந்த முறை, விலை சரிவின் நன்மை நுகர்வோரை சென்றடைய அனுமதிக்கப்படும் ," என்று அவர் தெரிவித்தார்.
அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வோராக இந்தியா திகழ்கிறது. இந்தியா தனது எண்ணெய் தேவையில் சுமார் 80 சதவிகிதத்தை இறக்குமதி செய்கிறது.
இந்திய வரலாற்றில் முதல்முறையாக, பெட்ரோல் விலை 100 ரூபாயைத் தாண்டியது மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 100 ரூபாய்க்கு அருகில் உள்ளது.
இந்தியாவில் கச்சா எண்ணெயின் விலை சர்வதேச சந்தையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை குறைந்தால், இந்தியாவிலும் அது குறைய வேண்டும். எண்ணெய் விலை அதிகரித்தால், இங்கும் அதிகரிக்க வேண்டும்.
ஆனால் கடந்த ஆண்டு தொற்றுநோய்க்குப் பரவல் தொடங்கிய பிறகு, சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்து, ஒரு பீப்பாயின் விலை சுமார் 20 டாலராக ஆனபோதிலும், இந்தியாவில் பெட்ரோல் விலை குறைவதற்கு பதிலாக வேகமாக அதிகரித்தது.
"இந்திய அரசு எண்ணெய் மீதான கலால் வரியை இரண்டு முறை அதிகரித்தது. பல மாநில அரசுகளும் அவ்வாறே செய்தன. விலை உயர்வுக்கு அதுவே காரணம்," என்று சிங்கப்பூரில் உள்ள இந்திய வம்சாவளி எரிசக்தி நிபுணர் வந்தனா ஹரி சுட்டிக்காட்டுகிறார்.
தற்போது, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை பீப்பாய்க்கு 68-70 டாலராக உள்ளது. அதாவது விலை கடந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களை விட 80 சதவிகிதம் அதிகம். கூடுதல் கலால் வரி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை வேகமாக அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன.
'மோதி வரி' - பிரதமர் மீது விமர்சனம்

பட மூலாதாரம், Reuters
இந்திய அரசின் வரியை 'மோதி வரி' (Modi Tax) என்று வர்ணித்துள்ள காங்கிரஸ் கட்சி, பிரதமர் "மோதி வரியை" நீக்கினால், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 60 ரூபாயாக குறைக்கமுடியும் என்று வாதிடுகிறது. கூடுதல் கலால் வரியை விதிப்பதன் மூலம் கடந்த ஏழு ஆண்டுகளில் அரசு 20 லட்சம் கோடி ரூபாயை ஈட்டியுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
எண்ணெய், எரிவாயு மற்றும் டீசல் விலை வேகமாக உயர்ந்து வருவதால் பொது மக்கள் கலக்கமடைந்துள்ளனர். எண்ணெய் விலை அதிகரிப்பு காரணமாக, பல பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
இதனால் பொருட்களுக்கான கிராக்கி குறைத்துள்ளது. தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட பொருளாதாரம் இப்போது மீட்சியடைந்து வரும் நேரத்தில், இது அரசுக்கு மோசமான செய்தியாகும்.
சாதாரண வாக்காளர்கள் மற்றும் விவசாயிகள் மீது அதன் நேரடி தாக்கம் உணரப்படும் வரை எண்ணெய் விலை அதிகரிப்பை தடுத்துநிறுத்த அரசு நடவடிக்கை எடுக்காது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தக் கட்டுரையில் Google YouTube வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் Google YouTube குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
YouTube பதிவின் முடிவு
பிற செய்திகள்:
- பெகாசஸ் ஸ்பைவேர்: இந்திய ஜனநாயகத்தை ஆட்டம் காண வைக்கும் உளவுப் பிரச்னையா?
- இந்தியாவில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை - மத்திய அரசு
- ஜெஃப் பெசோஸின் 11 நிமிட விண்வெளி பயணத்தில் மெய்சிலிர்க்கும் அனுபவம்
- கொரோனாவால் இந்தியாவில் 40 லட்சம் பேர் பலி - அதிர்ச்சி தரும் அமெரிக்க ஆய்வு
- ஐஎஸ் குழுவினரின் ஸ்மார்ட் ஃபோன் மர்மங்கள் - அறியப்படாத தகவல்கள்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












