செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரிடம் கேரளாவில் அமலாக்கத்துறை விசாரணை - என்ன நடந்தது?

செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
சட்டவிரோத பணிப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை விசாரித்துக்கொண்டிருந்த போதே, அவரின் சகோதரர் அசோக்குமாரை விசாரிக்க அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், அவர் நேரில் ஆஜராவதைத் தொடர்ந்து தவிர்த்து வந்தார்.
கடந்த முறை அனுப்பியிருந்த சம்மனுக்கு பதிலளித்திருந்த அவர், தனக்கு உடல்நிலை சரியில்லாததால், நேரில் ஆஜராவத்தில் இருந்து விலக்கு கேட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த வாரம் கரூரில் அசோக்குமார் கட்டி வரும் வீட்டை அமலாக்கத்துறை முடக்கியது. அதைத் தொடர்ந்து, இன்று(ஆகஸ்ட் 13) கேரள மாநிலம் கொச்சியில் வைத்து அசோக்குமாரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை செய்தனர்.
இதற்கிடையில், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க உச்சநீதிமன்றம் அனுமதியளித்ததால், சென்னை புழல் சிறையில் இருந்து அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தியது அமலாக்கத்துறை. ஐந்து நாள் விசாரணை முடிந்த பின், நேற்று(ஆகஸ்ட் 12) அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி கைது செல்லும்: உச்ச நீதிமன்றம்

செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என மெட்ராஸ் உயர்நீதிமன்றம் உத்தவிட்டிருந்தது. அதை எதிர்த்து, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், செந்தில் பாலாஜியின் கைது செல்லும் என தீர்ப்பளித்தனர்.
மேலும், கைதுக்கு பின் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்ய முடியாது என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து, அவரை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிகோரியது.
அதற்கு உச்சநீதிமன்றம் அனுமதியளித்த நிலையில், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் காவல்கோரி அமலாக்கத்துறை மனுத் தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில், செந்தில் பாலாஜியை ஐந்து நாட்கள் அமலாக்கத்துறை காவலில் விசாரிக்க அனுமதி வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், காவலில் உள்ள நாட்களில் செந்தில் பாலாஜியை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காவேரி மருத்துவமனையில் பரிசோதனை செய்ய வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பு முறையிட்டது. ஆனால், நீதிபதிகள் அதனை நிராகரித்துவிட்டனர். அவரின் உடல் நலனை அமலாக்கத்துறையினர் பார்த்துக்கொள்வதாக நீதிமன்றத்தில் உத்தரவாதமளித்தனர்.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கைதாகியுள்ள செந்தில் பாலாஜியிடம் முழுமையான விசாரணை முடியவில்லை என்றும், வழக்கை முழுமையாக விசாரிக்கவே காவல் கோருவதாக அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
பின்னணி என்ன ?

பட மூலாதாரம், SENTHIL BALAJI
அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை சட்டவிரோத காவலில் வைத்திருப்பதாகக் கூறி அவரது மனைவி மேகலா தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்னதாக மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருந்தது.
செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம், அவரது கைதுக்கான காரணங்கள் சொல்லப்படவில்லை என்று கூறி அவரது மனைவி மேகலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார்.
சட்டவிரோத காவலில் உள்ள செந்தில் பாலாஜியை உடனே விடுவிக்க வேண்டும் என்பது அவரது கோரிக்கை.
வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வில் இடம்பெற்றிருந்த நீதிபதி பரத சக்கரவரத்தி, மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது அல்ல என்று தீர்ப்பளித்தார்.
கைதோ அல்லது தடுத்து வைக்கப்பட்டிருப்பதோ சட்டவிரோதமாக இல்லாத பட்சத்தில் இதுபோன்ற ஆட்கொணர்வு மனுக்கள் விசாரணைக்கு உகந்தவை அல்ல என்று அவர் கருத்து தெரிவித்திருந்தார்.
அதேநேரத்தில், செந்தில்பாலாஜி மனைவி மேகலாவின் ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்தது என்றும், சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் விசாரணைக் காவல் கோர அமலாக்கத்துறைக்கு அதிகாரம் இல்லை என்றும் நீதிபதி நிஷா பானு தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் நேற்று, (ஜூலை 15, வெளிக்கிழமை) மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயன், செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது செல்லும் என்று தீர்ப்பளித்துள்ளார்.
முன்னதாக, இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் செந்தில் பாலாஜி கைது செல்லும் எனத் தீர்ப்பளித்த நீதிபதி பரத சக்ரவர்த்தி தெரிவித்த காரணங்களுடன்தான் ஒத்துப்போவதாக மூன்றாவது நீதிபதி கூறியுள்ளார்.
'மூன்றாம் நீதிபதியின் தீர்ப்பு சரியானது'

பட மூலாதாரம், KARPAGAVINAYAGAM
சென்னை காவேரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சைக்குப் பின்னர் செந்தில் பாலாஜி தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இனிவரும் நாட்களில் வழக்கின் போக்கு, செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் ஆகியவற்றைப் பற்றி பிபிசி தமிழ் ஒரு சட்ட வல்லுநரிடமும் ஒரு அரசியல் விமர்சகரிடமும் பேசியது.
தற்போது நீதிபதி சி.வி. கார்த்திகேயன் வழங்கியிருக்கும் தீர்ப்பு சரியானது என்று கூறுகிறார் ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், இந்த வழக்கில் ஆட்கொணர்வு மனு செல்லாது என்றார். “மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஒருவரை சட்டவிரோதமாக அடைத்து வைத்திருப்பதாக எப்படிச் சொல்லமுடியும்,” என்றார்.
மேலும் பேசிய அவர், இவ்வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கை செல்லும் என்றார். “இதேபோன்ற ஒரு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதி எம்.ஆர்.ஷா இதேபோன்ற ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறார்,” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதோடு, இந்த வழக்கில், செந்தில் பாலாஜிக்கு எதிரான ஆவணங்கள் இருக்கின்றன, எனவே இந்த வழக்கு மேற்கொண்டு செல்லும், என்றார்.
செந்தில் பாலாஜிக்கு என்னென்ன சிக்கல்கள் ஏற்படலாம்?

இந்தத் தீர்ப்பின் மூலம், செந்தில் பாலாஜி சந்திக்கக்கூடிய சிக்கல்களைப் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன், இந்த வழக்கிலிருந்து செந்தில் பாலாஜி குறுகிய காலகட்டத்தில் வெளியே வருவது கடினம் என்றார்.
இப்போது வந்திருக்கும் மூன்றாவது நீதிபதி சி.வி.கார்த்திகேயனின் தீர்ப்புக்குப் பிறகு செந்தில் பாலாஜி சிறைக்குச் செல்ல வேண்டிய வருவது நிச்சயம் என்கிறார் குபேந்திரன்.
“இப்போது அவர் இதய அறுவை சிகிச்சைக்குப் பின் காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சை முடிந்ததும் அவர் ஒரு கஸ்டடி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். எப்படியும் அடுத்த 2 அல்லது 3 மாதங்கள் சிறையில் கழிக்க வேண்டிவரும்,” என்றார்.
மேலும், அவர் ஒவ்வொருமுறை ஜாமீனுக்காக விண்ணப்பிக்கும் போதும், அமலாக்கத்துறை அவருக்கு எதிரான ஒரு புதிய ஆவணத்தை வெளியிட்டு, இந்த சாட்சிகளை அவர் கலைக்கப் பார்ப்பார் என்று வாதிட்டு, ஜாமீன் கிடைப்பதை முடக்கப் பார்க்கும், என்றார் குபேந்திரன்.
மேலும் அவரது தம்பி அசோக் குமார் இருக்கும் இடம் இன்னும் தெரியாமல் இருப்பதும் அவருக்கு சிக்கலை ஏற்படுத்தும் என்கிறார் குபேந்திரன். அவரை வைத்து இவரை வளைக்கப் பார்ப்பார்கள் என்கிறார்.
அதேபோல், ஆரம்பத்தில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததும் அவருக்கு எதிராகத் திரும்பும் வாய்ப்புள்ளது, என்கிறார் குபேந்திரன்.
செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலம் என்னவாகும்?
செந்தில் பாலாஜியின் அரசியல் எதிர்காலத்தைப் பற்றிப் பேசிய அவர், அவர் சிறையிலிருந்து வந்த பின்னும் அவரை தி.மு.க ஆதரிக்குமா என்பது அவரைச் சுற்றியிருக்கும் பிரச்னைகள், சிக்கல்கள், அவருக்கு எதிரான ஆவணங்கள் ஆகியவற்றைப் பொருத்தது, என்றார்.
தமது கணிப்பில் செந்தில் பாலாஜி இந்தப் பிரச்னையிலிருந்து முழுதாக வெளிவர ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகள் ஆகும் என்கிறார்.
“அவர் எந்த சிக்கலும் இன்றி இந்த வழக்கிலிருந்து வெளியே வந்துவிட்டால், தி.மு.க.விலேயே தொடர்ந்து தனது அரசியல் பயணத்தை மேற்கொள்வதற்கு எந்தப் பிரச்னையும் இருக்காது.
ஆனால் அவருக்கு எதரான ஆவணங்கள், சிறைத்தண்டனை என்று மேலும் சிக்கல்கள் உருவானால் அவரது அரசியல் வாழ்க்கை தடைபடும். இருப்பினும் சிறைக்குச் செல்வதால் மட்டுமே ஒரு அரசியல்வாதியில் அரசியல் வாழ்க்கை தடைபடாது,” என்றும் குறிப்பிட்டார், குபேந்திரன்.
செந்தில் பாலாஜி மீதான வழக்கு என்ன?
கடந்த 2011 முதல் 2015 வரை அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தபோது, ஓட்டுநர், நடத்துநர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட்டது. அந்த விஷயத்தில் அவர் முறைகேட்டில் ஈடுபட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பலர் புகார் அளித்திருந்தனர். காவல்துறை உரிய விசாரணை நடத்தவில்லை எனக் கூறி சிலர் உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்திருந்தனர்.
கடந்த 2018ஆம் ஆண்டு மெட்ரோ போக்குவரத்து கழக தொழில்நுட்ப ஊழியரான அருள்மணி என்பவர் போக்குவரத்து கழகத்தில் வேலைகளைப் பெற்றுத்தர பலரிடம் லஞ்சம் பெற்றப்பட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி உட்பட பலர் மீது புகார் அளித்திருந்தார்.
முதல் கட்ட புகார்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது குற்றம் சுமத்தப்படவில்லை. இந்நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியையும் சேர்த்து லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட வேண்டும் என வழக்கு தொடரப்பட்டது. சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2018ஆம் ஆண்டு வழக்கு பதிவு செய்தனர்.

மோசடியில் சட்ட விரோத பணப் பரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கியது.
மத்திய குற்றப்பிரிவு வழக்கை ரத்து செய்யும்படியும் அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை கோரியும் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இதில், மத்தியக் குற்றப்பிரிவு வழக்குகள் ரத்து செய்யப்பட்டு, அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டது.
செந்தில் பாலாஜிக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கட்டுப்பாடுகள் விதித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அமலாக்கத் துறை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
அதே நேரம் பழைய வழக்குகளை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்கிற உத்தரவை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம், அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்ய மறுத்ததுடன் தமிழ்நாடு காவல்துறை முறையாக விசாரணை நடத்தி இரண்டு மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கடந்த மாதம் உத்தரவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












