வரதட்சணை கொடுமை, மருமகளுக்கு எய்ட்ஸ் ஊசி போட்ட மாமியார் – இன்றைய முக்கிய செய்திகள்

எய்ட்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

(தமிழகம், இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் தொடர்பாக, 16/02/2025 அன்று வெளியான நாளிதழ் மற்றும் இணைய செய்திகளின் தொகுப்பை இங்கே காணலாம்)

கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, மருமகளுக்கு எய்ட்ஸ் ஊசி செலுத்திய மாமியார் மீது குற்றவழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக 'தினத்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் மீரட்டை சேர்ந்த 30 வயது பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆண் ஒருவருக்கும் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. இந்த திருமணத்துக்கு பெண் வீட்டு தரப்பில் இருந்து 45 லட்சம் ரூபாய் செலவு செய்யப்பட்டது. மேலும் 15 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகளும் வரதட்சணையாக வழங்கப்பட்டது.

திருமணம் முடிந்த சில நாட்களுக்கு பின்னர் அந்த பெண்ணுக்கு அவரது மாமியார் வரதட்சணை கொடுமை கொடுக்கத் தொடங்கினார். மேலும் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக அவரது தந்தை வீட்டுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.

இந்த விவகாரம் ஊர் தலைவர்களுக்கு தெரியவந்ததால், இரு வீட்டாரையும் அழைத்து பேசி, அந்த பெண்ணை கணவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். இதனால் ஆத்திரம் அடைத்த மாமியார், தனது மருமகளுக்கு எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் செலுத்தி உள்ளார். இதனால் மருமகளின் உடல்நலம் பாதிக்கப்பட்டது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையடுத்து அந்த பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு எச்.ஐ.வி. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

தனது மகளுக்கு நேர்ந்த இந்த கொடுமை குறித்து நீதிமன்றத்தில், அப்பெண்ணின் தந்தை வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த கொடுஞ்செயலை செய்த மாமியார் மீது குற்றவழக்கு பதிவு செய்யுமாறு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார் என்கிறது அந்த செய்தி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் உட்பட இருவர் கொலை

மயிலாடுதுறை அருகே கல்லூரி மாணவர் உட்பட இருவர் வெள்ளிக்கிழமை இரவு கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது.

மயிலாடுதுறை மாவட்டம் முட்டம் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் மூவேந்தன் (24). அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் (28), முன்விரோதம் காரணமாக கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மூவேந்தனிடம் தகராறு செய்தார். அப்போது, மூவேந்தன், தினேஷை தாக்கியபோது, அருகில் இருந்தவர்கள் சமாதானம் செய்து அனுப்பினர்.

மூவேந்தனின் உறவினர்களான ராஜ்குமார் மற்றும் தங்கதுரை மீது அப்பகுதியில் சாராயம் விற்பனை செய்ததாக வழக்குகள் பதிவாகி உள்ளன. இவர்களுள் ஒருவர் சமீபத்தில் சாராயம் விற்பனை செய்ததாகக் கைது செய்யப்பட்டு, வெள்ளிக்கிழமை பிணையில் வெளியே வந்தார்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் முட்டம் வடக்குத் தெருவில் தினேஷ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அவரது நண்பர்களான ஹரிஷ், ஹரிசக்தி, அஜய் ஆகியோருடன் நின்று பேசிக்கொண்டிருந்தனர்.

மூவேந்தன், தங்கதுரை மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மதுபோதையில் தினேஷிடம் தகராறில் ஈடுபட்டு, அவரை கத்தியால் குத்த முயன்றுள்ளனர். ஹரிஷ், ஹரிசக்தி, அஜய் ஆகியோர் இதைத் தடுக்க முயன்றபோது, ஹரிஷுக்கு வயிற்றிலும், ஹரிசக்திக்கு முதுகிலும், அஜய்க்கு கையிலும் காயம் ஏற்பட்டது. மூவரையும் மீட்ட உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே ஹரிஷ் மற்றும் ஹரிசக்தியும் உயிரிழந்தனர் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தங்கதுரை குடும்பத்தினர் சிலர் அப்பகுதியில் கடந்த சில மாதங்களாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவதாகவும், அதைத் தட்டிக்கேட்டதால் ஹரிஷ், ஹரிசக்தி இருவரும் கொல்லப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, அவர்களது உறவினர்கள், கிராம மக்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனை அருகில் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த வழக்கில் தங்கதுரை, ராஜ்குமார், மூவேந்தன் ஆகியோரை காவல்துறை கைது செய்துள்ளது.

''இந்த கொலையில் தொடர்புடைய சாராய வியாபாரம் செய்யும் 2 பெண்கள் உள்பட மேலும் 4 பேரை கைது செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட இளைஞர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்'' என வலியுறுத்தி, சடலத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்து இறந்தவர்களின் உறவினர்கள், கும்பகோணம் சாலையில் சனிக்கிழமை (பிப்ரவரி 15) மீண்டும் மறியலில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ.ஸ்டாலின், டிஎஸ்பி பாலாஜி, மதுவிலக்கு டிஎஸ்பி சுந்தரேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது என்று அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உடல் உறுப்புதானம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

ஒரு கிராமம் முழுவதுமே கண்களை தானம் செய்வதாக முடிவு

உடல் உறுப்பு தானம் விகிதங்கள் இந்தியாவில் மோசமான நிலையில் இருக்கின்றது. ஆனால் தெலங்கானாவில் ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள முச்செர்லா என்ற கிராமத்தில் வசிக்கும் 500 பேரும், தாங்கள் இறந்த பிறகு தங்களது கண்களை தானம் செய்வதாக உறுதியளித்துள்ளனர் என்று 'டைம்ஸ் ஆஃப் இந்தியா' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக சுமார் 70 கிராமவாசிகள் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர்.

"ஒரு தசாப்தத்திற்கு முன்பு தனது தாயின் கண்களை தானம் செய்வதாக உறுதியளித்ததன் மூலம் உடல் உறுப்புதானம் குறித்து முதல் படியை எடுத்தேன். இறந்த பிறகு உறுப்புகள் வீணாகக்கூடாது என்று நான் உறுதியாக நம்புகிறேன்.அதனால் எனது சொந்த உறுப்புகளை தானம் செய்வதாக முடிவு எடுத்தேன். உடல் உறுப்பு மாற்றம் தேவைப்படுபவர்களுக்கு இது உதவும். இது ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும். மற்றவர்களையும் இதைப் பின்பற்ற ஊக்குவித்தேன்," என்று கிராமவாசி மண்டலா ரவீந்தர் கூறினார்.

ரவீந்தரின் இந்த முடிவினால் ஈர்க்கப்பட்டு கிராமத்தில் இருக்கும் பலரும் இறந்த பிறகு தங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதன்மூலம் மரணத்துக்கு பிறகும் ஒருவர் தொடர்ந்து வாழ முடியும் என்று அவர்கள் வலுவாக நம்புகின்றனர் என்கிறது அந்த செய்தி.

"எங்கள் கிராமத்தின் இந்த செயல்பாடு உடல் உறுப்பு தானம் குறித்து ஒரு மாற்றத்தை ஊக்குவிக்கும். பொதுவான நோக்கத்துடன் ஒரு சமூகத்தில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்தால், ஒரு அர்த்தமுள்ள மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக இது இருக்கின்றது", என்று கிராமவாசி பி சுஜாதா கூறினார்.

மேலும் அம்மாநில ஆளுநரிடமிருந்து 'கண் தானத்தில் சிறந்து விளங்கும் கிராமம்' என்ற விருதையும் சமீபத்தில் இந்த கிராமம் பெற்றது என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

தங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்

சுற்றுலா விசாவில் வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண்ணுக்கு பிணை

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் வியாபாரிக்கு கல்முனை நீதிவான் நீதிமன்று பிணை வழங்க உத்தரவிட்டுள்ளது என்று 'வீரகேசரி' இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகைதந்து நகைத் தொழிலில் ஈடுபட்ட இந்திய பெண் தொடர்பில் நகை கடை ஊழியர்கள் மற்றும் நகைக் கடைகளை நடாத்துபவர்கள் கல்முனை காவல்துறைக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கல்முனை தலைமையக பல்வேறு குற்றத்தடுப்பு பிரிவு காவல்துறையின் முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொண்ட விசாரணை நடவடிக்கையில் அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட கிறீன் பீல்ட் வீட்டுத்திட்டம் அருகில் வைத்து சந்தேகத்திற்கிடமாக நடமாடிய பெண்ணை கைது செய்தனர் என்கிறது அந்த செய்தி.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தமிழ்நாட்டை சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். அத்துடன் அவர் வசம் இருந்து மாதிரி நகைகளுடன் ஏனைய சில பொருட்களும் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன. இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது 1 லட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுதலை செய்யப்பட்டதுடன் எதிர்வரும் திங்கட்கிழமை (17) ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

சமீப காலமாக சுற்றுலா விஸாவில் இலங்கை வரும் இந்திய வியாபாரிகள் வீடு வீடாகச் சென்று தங்கநகைகளை விற்பனை செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் மாதாந்தத் தவணை மற்றும் கடன் அடிப்படையிலும் நகை விற்பனையில் ஈடுபடுகின்றனர்.

இதன் காரணமாக உள்ளூரில் நகைத் தொழிலில் ஈடுபடும் வர்த்தகர்கள் பெரும் நஷ்டங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். இவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கைகளை எடுத்து இவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளீட்டு நகைத் தொழிலாளர்கள் தெரிவித்தனர் என்று அந்த செய்தியுள் கூறப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)