ஒடிஷா ரயில் விபத்து - விடை தெரியாமல் விஸ்வரூபம் எடுத்து நிற்கும் கேள்விகள்

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சௌதிக் பிஸ்வாஸ்
    • பதவி, பிபிசி இந்தியா செய்தியாளர்

ஒடிசாவில் கடந்த வெள்ளிக்கிழமை இரவன்று நடந்த ரயில் விபத்து ஏன் நடந்தது என விடைகாண முடியாத பல கேள்விகள் உள்ளன.

288 பேரை காவு வாங்கிய இந்த கோர விபத்து, இந்தியாவில் நடந்த மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.

வழக்கமாக நேருக்கு நேர் மோதி விபத்து என நடக்கும் ரயில் விபத்துகளுக்கு நடுவே, இந்த விபத்தில் மூன்று ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் இரண்டு அதிவேக பயணிகள் ரயிலும், ஒரு சரக்கு ரயிலும் அடுத்தடுத்து மோதின. முதலில் ஒரே தடத்தில் இருந்த சரக்கு ரயிலுடன் ஒரு பயணிகள் ரயில் மோதியது.

அதில் தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகிலிருந்த மற்றொரு ரயில் தண்டவாளத்தில் சென்று விழுந்ததில் அந்த தடத்தில் வந்து கொண்டிருந்த மற்றொரு ரயில் அந்த பெட்டிகள் மீது மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளதாக விபத்து தொடர்பான முதற்கட்ட விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

விரிவான விசாரணைக்கு பிறகு மட்டுமே இந்த சம்பவத்தின் முழுமையான பின்னணி குறித்தும், எங்கு தவறு நடந்தது என்பது தெரியவரும்.

நாட்டையே அதிர்க்குள்ளாக்கிய இந்த விபத்து, இந்தியன் ரயில்வேயின் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரிக்க செய்துள்ளது.

பிரமாண்டமான இந்தியன் ரயில்வே

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் மிக முக்கியமான பொது போக்குவரத்து சேவைகளில் ஒன்றான ரயில் போக்குவரத்து மிகவும் பிரமாண்டமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய ரயில் அமைப்புகளில் ஒன்றாக இந்தியன் ரயில்வே கருதப்படுகிறது. நாடு முழுவதும் 1 லட்சம் கிலோமீட்டருக்கு இதன் தண்டவாளங்கள் பரந்து விரிந்துள்ளன. நாளொன்றுக்கு இந்தியன் ரயில்வேயின் ரயில்கள் மூலமாக இரண்டரை கோடி மக்கள் நாடு முழுவதும் பயணிக்கின்றனர்.

கடந்த ஆண்டு மட்டும் 5 ஆயிரத்து 200 கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய வழித்தடம் அமைக்கப்பட்டதாகவும், ஆண்டுதோறும் 8 ஆயிரம் கிலோமீட்டர் வரை பழைய ரயில் தண்டவாளங்கள் புதிதாக மாற்றி அமைக்கப்படுவதாகவும் ம்த்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார்.

மேலும் இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான வழித்தடங்களில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லுமளவுக்கு தண்டவாளங்களின் திறன் மேம்படுத்தப்பட்டு வருவதாகவும், குறிப்பிட்ட சில வழித்தடங்களில் 130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில் செல்லும் அளவுக்கு அவை தரம் உயரத்தப்படுவதாக இந்தியாவின் ரயில்வே அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.

இதுமட்டுமின்றி, முக்கியமான வழித்தடங்களில் மணிக்கு 160 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான பணிகள் நடந்து வருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்த பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மும்பை - ஆமதாபாத் இடையே புல்லட் ரயில் இயக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

தடம் புரளும் ரயில்கள்

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

ரயில்வே துறை நவீனமாக்க தொடர்ந்து முயற்சிகள் நடந்து வந்தாலும், அடிக்கடி ரயில்கள் தடம் புரள்வது இந்தியன் ரயில்வே சந்திக்கும் முக்கியமான பிரச்னைகளின் ஒன்று என பிபிசியிடம் பேசிய முன்னாள் ரயில்வே வாரியத்தின் தலைவரான விவேக் சஹாய் தெரிவித்தார்.

"ரயில்கள் தடம் புரள பல காரணங்கள் உள்ளன. மோசமாக பராமரிக்கப்பட்ட தண்டவாளங்கள், பழுதான ரயில் பெட்டிகள், ஓட்டுநரின் பிழைகள் என பல்வேறு காரணங்களால் ரயில்கள் தடம் புரள்கின்றன."

ரயில்கள் தடம் புரள்வதுதான், 70% ரயில் விபத்துகளுக்கு காரணமாக உள்ளது என 2019-20ஆம் ஆண்டு அரசால் வெளியிடப்பட்ட ரயில்வே பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 68% வரை உயர்ந்துள்ளது. ரயில்களில் ஏற்படும் தீ விபத்தால் 14 சதவிகித விபத்துகளும், ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாவதால் 8% விபத்துகளும் ஏற்படுவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

33 பயணிகள் ரயில், 7 சரக்கு ரயில் உள்பட மொத்தம் 40 ரயில்கள் குறிப்பிட்ட அந்த ஆண்டில் மட்டும் தடம் புரண்டதாக ரயில்வேயின் பாதுகாப்பு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதில் 17 விபத்துகளுக்கு காரணம், ரயில் தண்டவாளத்திலுள்ள குறைபாடுகள் என குறிப்பிடப்பட்டுள்ளது. ரயில் என்ஜின், பெட்டிகளில் உள்ள பழுதின் காரணமாக 9 முறை ரயில் தடம் புரண்டது.

இந்தியாவிலுள்ள ரயில் தண்டவாளங்களில் பயன்படுத்தபடும் உலோகம், வெயில் காலங்களில் அதிக வெப்பத்தின் காரணமாக விரிவடையும். அதேபோல குளிர்காலங்களில் சுருங்குகின்றன. இதனால் ஏற்படும் விரிசல் காரணமாக ரயில்கள் தடம்புரள்கின்றன.

இதை தவிர்க்க இந்த தண்டவாளங்களை தொடர்ந்து பராமரிக்க வேண்டும். தளர்வாக உள்ள தண்டவாளங்களை இறுக்குவது, தண்டவாளங்களை மாற்றும் சுவிட்ச்களில் உராய்வு ஏற்படாமல் இருக்க தேவையான பராமரிப்பை மேற்கொள்வது என விரிசலை தவிர்க்க பல பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

110 முதல் 130 கிலோமீட்டர் வேகத்தில் ரயில்கள் செல்லும் தண்டவாளங்கள் அனைத்தும், மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்யவேண்டுமென இந்தியன் ரயில்வே பரிந்துரைத்துள்ளது.

விபத்தை ஏற்படுத்தும் காரணிகள்

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

ஏப்ரல் 2017 - மார்ச் 2021க்கு இடைப்பட்ட காலத்தில் ரயில் தடம் புரண்டதால் ஏற்பட்ட விபத்து குறித்து ஃபெடரல் ஆடிட்டர்கள் வெளியிட்ட அறிக்கையில் சில முக்கியமான தகவல்கள் இடம் பெற்றிருந்தன.

தண்டவாளங்களில் உள்ள குறைபாடுகளை ஆய்வு செய்வதில் 30% முதல் 100 % வரை குறைபாடுகள் உள்ளன.

1,129 ரயில் தடம் புரண்ட விபத்துகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் விபத்தை அதிகமாக ஏற்படுத்தும் 2 டஜன் காரணிகள் கண்டறியப்பட்டன.

171 விபத்துகளில் தண்டவாளங்களை பராமரிக்க தவறியதன் காரணமாக விபத்து நேர்ந்துள்ளது.

இதற்கு அடுத்தபடியாக "அனுமதிக்கப்பட்ட அளவை தாண்டி பாதையின் விலகல்" இருப்பதன் காரணமாக விபத்துகள் நடக்கின்றன.

180க்கும் மேற்பட்ட விபத்துகளுக்கு இயந்திர கோளாறு காரணமாக அமைந்துள்ளது.

பழுதான ரயில் பெட்டிகளின் காரணமாகவும் ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளாகின்றன.

அதிக வேகம் மற்றும் மோசமான ஓட்டுநர் காரணமாகவும் பெரும்பான்மையான விபத்துகள் ஏற்படுகின்றன.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் எதனால் விபத்திற்குள்ளானது என்பது விரிவான விசாரணைக்கு பிறகு மட்டுமே தெரியவரும் என ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் 'கவச்' தொழில்நுட்பம் தற்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை வழித்தடங்களில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு அருகிலிருந்த தண்டவாளத்தில் எப்போது சாய்ந்தது என்றும், அதே தடத்தில் ஷாலிமார் எக்ஸ்பிரஸ் ரயில் எப்போது வந்தது என்பதற்கான நேர இடைவெளி தெரியவில்லை.

கடந்த 2010ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு எதிரே வந்த சரக்கு ரயில் மீது மோதியதில் 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மாவோயிஸ்டுகள் தண்டவாளத்தை சேதப்படுத்தியதாகவும், இதனால் கொல்கத்தா-மும்பை பயணிகள் ரயில் தடம் புரண்டதாகவும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒடிஷாவில் வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்தில் இதுபோன்ற நாசவேலை நடந்ததற்கான எந்த அறிகுறியும் இதுவரை கண்டறியப்படவில்லை.

இந்தியன் ரயில்வே, ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

2021-22 ஆம் ஆண்டில் நேருக்கு நேர் மோதல், தடம் புரண்டது, ரயில்களில் தீ விபத்து, லெவல் கிராசிங்கில் ரயில்களுடன் மோதும் வாகனங்கள் என 34 ரயில் விபத்துகள் நடந்துள்ளதாக இந்தியன் ரயில்வே தெரிவித்துள்ளது.

2022-2023 ஆம் ஆண்டில் இதுபோன்ற விபத்துகளின் எண்ணிக்கை 48 ஆக உயர்ந்துள்ளதாக தி இந்து நாளிதழ் மே 31 அன்று செய்தி வெளியிட்டது.

அதிகரித்து வரும் விபத்துகள் குறித்து ரயில்வே அதிகாரிகள் கவலை கொள்வதாகவும், குறிப்பாக கிழக்கு கடற்கரை ரயில்வே மற்றும் தென்கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில் பணியாற்றும் ஊழியர்களின் நீண்ட வேலை நேரத்தை பகுப்பாய்வு செய்து, உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்குமாறு ரயில்வே அதிகாரிகள் தங்கள் மூத்த மேலாளரை கேட்டுக் கொண்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த விபத்து கிழக்கு கடற்கரை ரயில்வே மண்டலத்தின் கீழ் நடந்தது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: