ரயில்கள் மோதிய வேகத்தில் பயங்கரமாக 'ஆட்டம்' கண்ட பெட்டிகள் - மரண பயத்தைக் காட்டிய அந்த '10' நிமிடங்கள்

ஒடிஷா ரயில் விபத்து, இந்தியா

பட மூலாதாரம், VENKATESAN

ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே நேரிட்ட கோர ரயில் விபத்து இந்தியாவை மட்டுமல்ல, உலகையே உலுக்கியுள்ளது. ஹவுரா - சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்பட 3 ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக் கொண்டதில் இதுவரை 288 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

காயங்களுடன் மீட்கப்பட்ட பயணிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். விபத்து நடந்த இடத்தில் இன்னும் மீட்புப் பணிகள் தொடர்கின்றன. அந்த மார்க்கத்தில் சென்னை - ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்ளிட்டஅனைத்து ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பாலசோர், கோபால்பூர், காந்தபாரா, சோரோ, பாத்ரக் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளில் காயமடைந்த பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாலசோர் ரயில் விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒடிஷா தீயணைப்பு சேவை இயக்குநர் ஜெனரல் சுதான்ஷூ சாரங்கி, தனது வாழ்நாளில் இவ்வளவு சடலங்களைப் பார்த்ததில்லை என்று கூறியிருக்கிறார்.

விபத்துக்குள்ளான ரயிலில் மொத்தம் 867 பயணிகள் சென்னைக்கு முன்பதிவு செய்துள்ளதாகவும், அதில் எத்தனை பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் கணக்கிடப்பட்டுவருவதாகவும் நேற்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை சென்ட்ரல் ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் தெரிவித்தார். எனவே பலியானவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விபத்தில் சிக்கிய ரயிலில் பயணித்த தமிழக பயணிகளில் முதல் கட்டமாக 250 பேர் மீட்கப்பட்டு, சிறப்பு ரயிலில் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணித்தவர்களிடம் பிபிசி தமிழ் பேசியது.

தஞ்சாவூரைச் சேர்ந்த வெங்கடேசன் தேசிய பேரிடர் மீட்பு படையில் வேலை செய்து வருகிறார். கடந்த 15 வருடங்களாக மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பணியாற்றி வருகிறார். விடுமுறைக்காக சொந்த ஊருக்கு செல்லும் பொருட்டு கோரமண்டல் ரயிலில் பயணித்துள்ளார் வெங்கடேசன். தற்போது சென்னையை நோக்கி வந்து கொண்டிருக்கும் சிறப்பு ரயிலில் பயணித்து வரும் வெங்கடேசனை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது.

இந்த மோசமான விபத்திலிருந்து தான் தப்பிய அனுபவத்தை பிபிசி தமிழிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

ஒடிஷா ரயில் விபத்து, இந்தியா

பட மூலாதாரம், VENKATESAN

“ஷாலிமாரில் இருந்து 03:25 மணிக்கு கோரமண்டல் ரயில் புறப்பட்டது. மூன்று மணி நேரம் எந்த பிரச்னையும் இல்லாமல் தான் பயணித்தது. சரியாக 06:20 மணிக்கு பாலசோர் ரயில் நிலையத்திற்கு ரயில் வந்தது. அங்கிருந்து கிளம்பி 15 நிமிடம் தான் இருக்கும். சரியாக 06:45 மணிக்கு விபத்து நேர்ந்தது.

நான் பி7 ஏசி பெட்டியில் பயணித்து கொண்டிருந்தேன். ரயில் மோதியதில் ரயிலின் என்ஜின் அருகில் இருந்த சரக்கு ரயில் மீது ஏறிவிட்டது. நான் வந்த பெட்டிக்கு முந்தைய பி6 பெட்டி வரை தடம் புரண்டுவிட்டது. ரயில் தடம் புரண்டதை அதிர்வு மூலம் உணர்ந்தோம். ஏழு மணி கூட ஆகி இருக்கவில்லை என்பதால் நான் வந்த பெட்டியில் அனைவரும் விழித்துதான் இருந்தனர், யாரும் உறக்கத்தில் இல்லை. மேல் இருக்கையில் இருந்த சிலர் நிலை தடுமாறி கீழே விழுந்தனர். ஆனால் பெரிதாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை” என்று கூறுகிறார் வெங்கடேசன்.

அவர் தொடர்ந்து பேசுகையில், “எங்கள் பெட்டி ரயிலின் பின்பக்கம் இருந்தது. முதலில் என்ஜின், அதன் பிறகு ஜெனரல், ஏசி பெட்டிகளைத் தொடர்ந்துதான் எங்களுடைய பெட்டி இருந்தது. என்ஜின் மோதிய அதிர்வு அனைத்து பெட்டிகளிலும் எதிரொலித்தது. ரயில் தடம் புரண்டதால் பயணிகளின் அலறல் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது. ஒவ்வொரு பெட்டியாக தடம் புரள எங்கள் பெட்டிக்கு என்னவாகும் என்கிற பதற்றம், அச்சம் அனைவருக்கும் இருந்தது. சாவோமா பிழைப்போமா என்கிற நிலையில்தான் நான் இருந்தேன். தடம் புரள்வது நின்று, ரயில் ஒரு நிலைக்கு வருவதற்கு 10 வரை நிமிடங்கள் ஆகிவிட்டது. அந்த 10 நிமிடங்கள் முழுவதும் அலறல் சத்தம் மட்டுமே கேட்டது. எங்கள் பெட்டி தண்டவாளத்திலிருந்து விலகி மின் கம்பத்தில் மோதி நின்றது. தண்டவாளம் இருந்ததற்கான தடயமே இல்லை. மொத்தமாக அழிந்துவிட்டது” என்று பிபிசி தமிழிடம் விபத்தின் கோரத்தை விவரிக்கிறார் வெங்கடேசன்.

”ரயில் ஒரு நிலைக்கு வந்து பிறகு பெட்டிக்குள் இருந்த குழந்தைகளை முதலில் வெளியேற்றி ஒவ்வொருவராக வெளியே வந்தோம். பெட்டியிலிருந்து வெளியே சென்று பார்த்தபோது பிணக்குவியலாக இருந்தது. என்னால் அதை பார்க்கக்கூட முடியவில்லை. பெரிய காயங்கள் ஏற்படாதவர்கள் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். நான் மீட்பு படையைச் சேர்ந்தவன் என்பதால் என்னால் அங்கிருந்து செல்ல முடியவில்லை. காயம் ஏற்படாத சிலர் அங்கிருந்து முடிந்த வரை உதவிகள் செய்தோம்” என்றும் வெங்கடேசன் குறிப்பிடுகிறார்.

ஒடிஷா ரயில் விபத்து, இந்தியா

பட மூலாதாரம், Getty Images

தற்போது வரை வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, பலி எண்ணிக்கை 288 ஆக இருக்கிறது. அதேபோல் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. ஆனால் கோரமண்டல் ரயிலில் பயணம் செய்து, விபத்திலிருந்து உயிர்பிழைத்து வந்திருக்கும் வெங்கடேசன் பலி எண்ணிக்கை 500ஐ தாண்டும் என கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “பலி எண்ணிக்கை எப்படியும் 500 ஐ தாண்டிவிடும். ஏனெனில் அது அந்த அளவுக்கு மோசமான விபத்தாக இருந்தது. அந்த பகுதியில் இணைய சேவை உடனடியாக துண்டிக்கப்பட்டது. யாருக்கும் இணைய சேவை கிடைக்கவில்லை. விபத்து ஏற்பட்டவுடன் கிராம மக்கள் உடனடியாக உதவிக்கு வந்துவிட்டனர். சிறியவர்கள், பெரியவர்கள் என ஊர்மக்கள் அனைவரும் அங்கே குவிந்தனர். பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்களும் வண்டிகளை எடுத்துக் கொண்டு சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தீயணைப்புத் துறை மற்றும் காவல்துறை அரை மணி நேரத்திற்குள்ளாக சம்பவ இடத்திற்கு வந்தனர்.

நான் என் படை தலைவருக்கு உடனடியாக தகவல் தெரிவித்தேன். எனவே, சம்பவ இடத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படையினரும் ஒரு மணி நேரத்தில் வந்துவிட்டார்கள்.” என்று தெரிவித்தார்.

விபத்து ஏற்பட்ட நிகழ்வு குறித்து மிரட்சியுடன் பேசும் வெங்கடேசன், அதன்பின் சம்பவ இடத்தில் துவங்கிய மீட்புப் பணி குறித்தும், பிபிசி தமிழிடம் சில தகவல்களை பகிர்ந்துகொண்டார்.

”இரவு நேரம் என்பதால் தொடக்கத்தில் இருட்டில் தான் மீட்பு பணிகள் நடந்தன. அதன் பின்னர் விளக்குகள் மூலம் வெளிச்சம் ஏற்பாடு செய்யப்பட்டது. தற்காலிக மருத்துவ உதவி மையங்கள் அமைக்கப்பட்டது. மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடனடியாக அங்கு அழைத்து வரப்பட்டனர்.

அதன் பின்னர் காயம் ஏற்படாமல் ஓரளவு நல்ல நிலையில் உள்ளவர்களை ஒலிப்பெருக்கி மூலம் அழைத்தார்கள். நலமாக இருந்தவர்களை கணக்கெடுக்க அழைத்தார்கள். அங்கிருந்து எங்களை பத்ராக் ரயில் நிலையம் அழைத்து வந்து சாப்பாடு கொடுத்தார்கள். பின் ஒரு ரயில் மூலம் புவனேஸ்வர் வந்தடைந்தோம். புவனேஸ்வரிலிருந்து தற்போது மற்றொரு ரயிலில் சென்னைக்கு வந்து கொண்டிருக்கிறோம்” என்று தெரிவித்தார் வெங்கடேசன்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: