சரக்கு ரயில் நின்றிருந்த 'லூப்' லைனில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் நுழைந்தது எப்படி? 'கிரீன்' சிக்னல் கொடுத்தது யார்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஒடிஷாவின் பாலாசோர் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை மாலை நிகழ்ந்த பயங்கர ரயில் விபத்தில் இதுவரை 288 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் சுமார் 1000 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கோரமண்டல் விரைவு ரயில், பின்னால் இருந்து சரக்கு ரயில் மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது.
ரயில்வேயின் டெக்னிகல் மொழியில், இது ஹெட் ஆன் மோதல் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய விபத்துகள் பொதுவாக மிகவும் அரிதாகவே நிகழ்கின்றன.
இந்த விபத்தில் கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. அதில் சில அடுத்த தண்டவாளத்தில் சென்று விழுந்தன.
சரியாக அதே நேரத்தில் பெங்களூருவில் இருந்து யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் அந்த தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது.
தடம் புரண்ட கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் அடுத்த தண்டவாளத்தில் சென்றுகொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியது. இதன் காரணமாக இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது.
ரயில்வேயின் தென்கிழக்கு மண்டலத்தின் கரக்பூர் பிரிவில் உள்ள அகலப்பாதை நெட்வொர்க்கில் இந்த விபத்து நடந்தது.
வெள்ளிக்கிழமை இரவு நேரிட்ட இந்த விபத்தின்போது என்னென்ன நிகழ்ந்தன என்று தெரிந்துகொள்வோம்.
இந்த விபத்து எப்படி நடந்தது?
ஜூன் 2, வெள்ளியன்று ரயில் எண் 12841 ஷாலிமார்- சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுராவுக்கு அருகிலுள்ள ஷாலிமார் ரயில் நிலையத்திலிருந்து சரியான நேரத்தில் புறப்பட்டது.
23 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் பாலசோர், கட்டக், புவனேஷ்வர், விசாகப்பட்டினம் மற்றும் விஜயவாடா வழியாக சென்னையை அடைய இருந்தது.
இந்த ரயில் மாலை 3.20 மணிக்குத் தனது பயணத்தைத் தொடங்கியது. முதலில் சாந்த்ராகாச்சி ரயில் நிலையத்தில் அது நின்றது. பின்னர் 3 நிமிட தாமதத்துடன் கரக்பூர் ரயில் நிலையத்தை அடைந்தது.

கரக்பூர் நிலையத்தில் இருந்து மாலை 5.05 மணிக்கு ரயில் தனது ஓடத் தொடங்கியது. இந்த ரயில் இரவு 7 மணியளவில் பாலசோர் அருகே உள்ள பஹானகா பஜார் ரயில் நிலையத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
இந்த ரயில் பஹானாகா ஸ்டேஷனில் நிற்காமல் நேராக முன்னோக்கிச் செல்லவேண்டும். ஆனால் இந்த ரயில் ஸ்டேஷனில் உள்ள மெயின் லைனுக்குப் பதிலாக லூப் லைன் நோக்கிச் சென்றது. சரக்கு ரயில் ஒன்று லூப் லைனில் நின்று கொண்டிருந்தது. அதிவேகமாக வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலின் மீது பின்னால் இருந்து மோதியது.
சில தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கோரமாண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டது அல்லது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ரயில் மெயின் லைனை விட்டு லூப் லைனில் சென்றது. இதன் காரணமாக விபத்து நடந்தது என்று அகில இந்திய ரயில்வே ஆண்கள் சம்மேளன பொதுச்செயலர் ஷிவ் கோபால் மிஷ்ரா பிபிசியிடம் தெரிவித்தார்.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் சரக்கு ரயிலின்மீது மோதியதால் ரயிலின் 12 பெட்டிகள் தடம் புரண்டன. அதன் சில பெட்டிகள் கீழே விழுந்து மறுபுறத்தில் உள்ள டவுன்லைனை அடைந்தன. அந்தப் பெட்டிகள் அந்த லைனில் வந்துகொண்டிருந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதியது.

பட மூலாதாரம், Getty Images
மற்றொரு ரயிலுடன் மோதியபோது…
அதேநேரத்தில் யஷ்வந்த்பூரில் இருந்து ஹவுரா நோக்கிச் சென்று கொண்டிருந்த 12864 யஷ்வந்த்பூர் ஹவுரா எக்ஸ்பிரஸ் விபத்து நடந்த இடத்தைக் கடந்துகொண்டிருந்தது. 22 பெட்டிகள் கொண்ட இந்த ரயில் சுமார் 4 மணி நேரம் தாமதமாக ஓடிக்கொண்டிருந்தது. ரயிலின் பெரும்பாலான பெட்டிகள், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் விபத்திற்குள்ளாகும் போது அந்த இடத்தைக் கடந்து சென்றுவிட்டிருந்தன.
அப்போதுதான் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. அதன் சில பெட்டிகள் கீழே விழுந்து உருண்டு யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸின் பின்புறத்தில் மோதியது. இதன் காரணமாக இரண்டாவது ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டன.
வெள்ளிக்கிழமை இரவு 7 மணியளவில் இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இந்த விபத்தில் இரண்டு ரயில்களின் மொத்தம் 15 பெட்டிகள் தடம் புரண்டதாகவும் ரயில்வே அமைச்சக செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா வெள்ளிக்கிழமை இரவு ஒரு அறிக்கையில், தெரிவித்தார்.

மிகப்பெரிய மனிதத் தவறு காரணமாக இந்த விபத்து நடந்திருப்பதாக, கிடைக்கப் பெறும் தகவல்களில் இருந்து தெரிகிறது என்று ரயில்வே நிபுணரும், ரயில்வே வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான (போக்குவரத்து) ஸ்ரீபிரகாஷ், பிபிசியிடம் தெரிவித்தார்.
"ஒரு ரயில், தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்தால் அந்தப் பாதையில் மற்றொரு ரயில் வர முடியாதபடி ’பாயிண்ட் ரிவர்ஸ்’ செய்யப்படும். இதனால் ரயில் அந்த தண்டவாளத்திற்குப் போகாது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இதைச் செய்யமுடியாமல் போனால் உடனடியாக சிவப்பு விளக்கு சிக்னல் கொடுக்கப்படும். இதனால் எந்த ரயில் வந்தாலும் நின்றுவிடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ரயில்களின் வேகம்
சுமார் 15 நாட்களுக்கு முன்பு இந்த வழித்தடத்தில் ரயில்களின் வேகம், அதிகபட்சமாக மணிக்கு 130 கிலோமீட்டராக அதிகரிக்கப்பட்டது என்று சிவ கோபால் மிஷ்ரா கூறினார்.
விபத்து நடந்தபோது கோரமண்டல் எக்ஸ்பிரஸின் வேகம் மணிக்கு 128 கிலோமீட்டராக இருந்தது. மற்ற ரயிலும் மணிக்கு 125 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக்கொண்டிருந்தது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த வேகம் காரணமாகவே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் அதிக அளவில் சேதம் அடைந்தது. மறுபுறம் அதிக வேகம் காரணமாக, யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலின் பெரும்பாலான பகுதி விபத்து நடந்த இடத்தைக் கடந்துவிட்டது. அதன் பின் பகுதி மட்டுமே விபத்தில் சிக்கியது.

பட மூலாதாரம், Getty Images
விபத்திற்குள்ளான இரண்டு ரயில்களிலும் ’எல்எச்பி பெட்டிகள்’ இருந்தன என்பது மற்றொரு விஷயம். 'Linke Hoffmann Busch' ரயில் பெட்டிகள் ஜெர்மனியில் வடிவமைக்கப்பட்டவை. விபத்துகளைப் பொருத்தவரை இவை அதிக பாதுகாப்பானவையாகக் கருதப்படுகின்றன.
ரயில்வேயின் பழைய ’ஐசிஎஃப் டிசைன்’ கோச்சுகளை ஒப்பிடுகையில், ’எல்ஹெச்பி பெட்டிகள்’ விபத்தின்போது ஒன்றின் மேல் ஒன்று ஏறுவதில்லை. பெட்டிகள் நசுங்கும் அபாயமும் இல்லை. பயணிகளின் உயிருக்கும் ஆபத்து குறைவு.
கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலின் இன்ஜின், சரக்கு ரயிலின்மீது ஏறியிருப்பதை ஒடிஷா விபத்தின் புகைப்படங்கள் காட்டுகின்றன. இன்ஜினுக்குப் பின்னால் இருந்த பல பெட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதால் நசுங்கின.
இந்த விபத்து தொடர்பாக மேலும் தகவல்களை அறிய ரயில்வே அதிகாரிகளைத் தொடர்புகொள்ள பிபிசி முயன்றது. ஆனால் எந்த அதிகாரியையும் தொடர்புகொள்ள முடியவில்லை.
உதவி எண்
விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தென்கிழக்கு ரயில்வே பல உதவி எண்களை வெளியிட்டுள்ளது.
இதனுடன் தென்கிழக்கு ரயில்வே சனிக்கிழமையன்று ஹவுராவிலிருந்து பாலசோருக்கு சிறப்பு ரயிலை இயக்குகிறது. இதன் மூலம் விபத்து நடந்த இடத்தை உறவினர்கள் சென்றடையலாம்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












