ஒடிஷா ரயில் விபத்தை ‘கவச்’ பாதுகாப்பு அமைப்பு இருந்திருந்தால் தடுத்திருக்க முடியுமா?

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

ஒடிஷா ரயில் விபத்திற்குப் பிறகு எதிர்க்கட்சிகளும் வல்லுநர்களும் மத்திய அரசை விமர்சித்து வருகின்றனர்.

ரயில் விபத்திற்குப் பிறகு எதிர்க்கட்சித் தலைவர்களும் பொது மக்களும் இவ்வளவு பெரிய விபத்து எப்படி நடந்தது என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறும்போது, “விபத்து குறித்து உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு நடத்தப்படும் விசாரணையின் அறிக்கை வந்த பிறகுதான் எதுவும் சொல்ல முடியும்,” என்று கூறினார்.

இதற்கிடையே ஒடிஷா ரயில் விபத்திற்குப் பிறகு சமூக ஊடகங்களில் ‘கவச்’ என்ற வார்த்தையும் பேசுபொருளாகியுள்ளது.

கவச் என்ற அமைப்பு மூலம் ரயில் விபத்துகளைத் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் வந்தால், இந்த இரண்டு ரயில்களும் நிறுத்தப்படும் என்று கூறப்பட்டது.

கவச் விபத்து தடுப்பு அமைப்பு என்றால் என்ன?

கவச் அமைப்பு மார்ச் 2022இல் தொடங்கப்பட்டது. அரசாங்கத் திட்டத்தின்படி, 2000 கிமீ ரயில் நெட்வொர்க் கவாச் அமைப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் பழைய வீடியோ ஒன்றில், அஸ்வினி வைஷ்னவ், “நாங்கள் சொந்தமாக கவச் என்ற அமைப்பை உருவாக்குகிறோம்,” என்று கூறுவதைக் காணலாம்.

இந்த கவச் அமைப்பு குறித்து, “இந்த அமைப்பு ஐரோப்பிய தொழில்நுட்பத்தைவிடச் சிறந்தது. நாங்களும் சோதனை செய்தோம். இந்தச் சோதனையில் நானும் ரயிலில் இருந்தேன். ஒரே பாதையில் இருபுறமும் ரயில்கள் அதிவேகமாக வந்துகொண்டிருந்தன. கவச் அமைப்பு தானாகவே 400 மீட்டர் தூரத்தில் ரயில்களை நிறுத்துகிறது.

நான் ஒரு பொறியாளர். எனவே, இந்த ரயில்களில் உட்கார்ந்து நானே ரிஸ்க் எடுத்து அந்தச் சோதனையைச் செய்தேன். நான் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தேன்,” என்று ரயில்வே அமைச்சர் அந்தப் பழைய வீடியோவில் தெரிவித்துள்ளார்.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

“விபத்து நடந்த பாதையில் கவச் நிறுவப்படவில்லை”

இப்படிப்பட்ட நிலையில், பாலசோரில் கவாச் அமைப்பால் விபத்து ஏன் தடுக்கப்படவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரயில்வே கவச் பாதுகாப்பு முறை என்பது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தெற்கு ரயில்வே ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சூர்ய பிரகாசம், “ரயில்வே கவச் பாதுகாப்பு முறை என்பது ரயில்களில் விபத்து நிகழாமல் தடுத்து நிறுத்த உதவும் ஒரு வகைத் தொழில்நுட்பம். இந்தப் பாதுகாப்புக் கருவியை ரயில் இன்ஞ்சினில் பொருத்திவிட்டால், இரண்டு ரயில்கள் ஒரே தடத்தில் வந்தாலும் மோதிக் கொள்ளாமல் தடுத்துவிட முடியும்.

ஏறக்குறைய அரை கி.மீ முதல் ஒரு கி.மீ தொலைவுக்குள்ளேயே இரு ரயில்களுக்கும் சிக்னல் கொடுத்து விபத்து ஏற்படாமல் ரயிலை பாதுகாக்கும். ரயிலை இயங்கவிடாமல் நிறுத்திவிடும். ஆனால், அந்த கவச் கருவி பல ரயில்களில் பொருத்தப்படவில்லை,” என்று கூறினார்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இதற்கு ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா பதிலளித்தபோது, “கவாச் அமைப்பு ரயில் பாதையை அடிப்படையாகக் கொண்டது. அது தற்போது டெல்லி-ஹவுரா, டெல்லி-மும்பை வழித்தடங்களில் மட்டுமே நிறுவப்பட்டு செயல்பாட்டில் உள்ளது. விபத்து நடந்த பாதையில் கவாச் அமைப்பு நிறுவப்படவில்லை,” என்று தெரிவித்தார்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்தக் கோர விபத்தில் கவச் தொழில்நுட்பம் இருந்திருந்தால் விபத்தைத் தடுத்திருக்க முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.

தெற்கு ரயில்வே டிசம்பர் 2022இல் வெளியிட்ட விவரங்களின்படி, 1,455 கிமீ வழித்தடத்தில் 77 ரயில்களில் கவச் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது டெல்லி-மும்பை, டெல்லி-ஹவுரா இடையே 3,000 கிமீ நீள ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், INDIANRAILWAYS

இதுகுறித்து ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமிதாப் ஷர்மா, இந்த வழித்தடத்தில் கவச் அமைப்பு இல்லை, தற்போது டெல்லி, மும்பை, டெல்லி ஹவுரா இடையே நிறுவப்பட்டுள்ளது என்று விளக்கினார்.

ரயில் மோதல் தவிர்ப்பு அமைப்பு 2011-12இல் செயல்படுத்தப்பட்டது. பிறகு 2014இல் நரேந்திர மோதி ஆட்சிக்கு வந்ததும், 2019இல் கவச் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த அமைப்பு விபத்துகளை முழுமையாகத் தவிர்ப்பதை நோக்கமாகக் கொண்டது.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட டிசிஏசி, நாட்டில் உருவாக்கப்பட்ட ஐரோப்பிய ரயில் பாதுகாப்பு, எச்சரிக்கை அமைப்பு, மோதல் எதிர்ப்பு சாதனம் போன்றவை தற்போதைய அமைப்பில் உள்ளன.

இது பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையின் அடிப்படையில் மிகவும் உயர்ந்த நிலை 4இல் இருப்பதாகக் கூறப்படுகிறது. அதாவது 10,000 ஆண்டுகளில் ஒரே ஒரு தவறு நடக்கும் என்று சொல்லப்படும் அளவுக்குப் பாதுகாப்பானது.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

கவச் அமைப்பின் முக்கிய அம்சங்கள்

  • சிவப்பு சிக்னல் விழும்போது ரயில் முன்னோக்கி நகர்வதைத் தடுப்பது
  • அதீத வேகத்தில் செல்வதைத் தடுக்க தானியங்கிய பிரேக்கிங்
  • லெவல் கிராசிங்கை நெருங்கும்போது தானாக ஹாரன் ஒலிக்கும்
  • பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்ட இரண்டு ரயில்களுக்கு இடையில் மோதல் நிகழ்ந்து விபத்து ஏற்படுவதைத் தவிக்கிறது
  • அவசரகாலத்தில் SOS செய்திகளை அனுப்புகிறது
  • நெட்வொர்க் கண்காணிப்பு அமைப்பு மூலம் அனைத்து ரயில் இயக்கங்களையும் மையப்படுத்திய கண்காணிப்பு
ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், Getty Images

கவச் இருந்திருந்தால் விபத்து தவிர்க்கப்பட்டிருக்குமா?

‘கவச்’ அமைப்பு குறித்து ரயில்வே அமைச்சகமும் ரயில்வே அமைச்சரும் வெளியிட்ட விவரங்களின் அடிப்படையில், இந்த விபத்தைத் தவிர்த்திருக்க முடியும் என எண்ணலாம்.

ஏனெனில் ஒரே பாதையில் இரண்டு ரயில்கள் ஓடுவதை ‘கவச்’ தடுக்கும். அது தவறும் பட்சத்தில் கோரமண்டல் எக்ஸ்பிரஸில் பிரேக் போடப்பட்டிருக்கும்.

ஆனால், கோரமண்டல் எக்ஸ்பிரஸின் பெட்டிகள் பக்கவாட்டுப் பாதையில் விழுந்து யஸ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மீது மோதிய சம்பவம் முற்றிலும் தற்செயல் நிகழ்வாகத் தெரிகிறது.

இதுபோன்ற விபத்துகளைத் தடுக்க, கவச் பாதுகாப்பு அமைப்பை அனைத்து ரயில்களிலும் பொருத்த வேண்டும் என்கிறார் சூர்ய பிரகாசம்.

“ரயில் அதிவேக எச்சரிக்கையைக் கருவியைப் பொருத்த வேண்டும் அல்லது ஆக்ஸிலரி வார்னிங் சிஸ்டம் ஆகிய 3 முறைகளை ரயில் இஞ்சினில் பொருத்தினால் விபத்துகளை எதிர்காலத்தில் 100 சதவீதம் தவிர்க்க முடியும்,” என்று அவர் கூறுகிறார்.

'கவச்' அமைப்பை நிறுவ என்ன செலவாகும்?

கவச் அமைப்பை நிறுவுவதற்கு ரூ. 54 லட்சம் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆனால் உலகில் இத்தகைய அமைப்பை நிறுவ சராசரியாக ரூ. 2 கோடி செலவிடப்படுகிறது.

இதனால்தான் 'கவச்' ஒரு விலைகுறைவான - மலிவான அமைப்பு என்று கூறப்படுகிறது.

'கவச்' அமைப்பின் சோதனைகள் எங்கு நடந்தன?

கவச் அமைப்பு முதன்முறையாக 2022ம் ஆண்டு மார்ச் 4 அன்று செகந்திராபாத் அருகே உள்ள குல்லகுடா மற்றும் சிட்டிகிடா ரயில் நிலையங்களுக்கு இடையே சோதனை செய்யப்பட்டது.

ஒருபுறம் புறப்பட்ட ரயிலில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அமர்ந்திருந்த நிலையில், மறுபுறம் மற்றொரு ரயில் அதே தண்டவாளத்தில் இயக்கப்பட்டது. எதிரெதிரே வந்த இரண்டு அதிவேக ரயில்களுக்கும் இடையே சரியாக 400 மீட்டர் இடைவெளி மட்டுமே இருந்த போது, ஓட்டுநர்களின் தலையீடு இல்லாமல் தாமாகவே இரண்டு ரயில்களும் பிரேக்குகளைப் பயன்படுத்தி நின்றுவிட்டன.

இதையடுத்து, கவச் சோதனை வெற்றி பெற்றதாக ரயில்வே அமைச்சர் அறிவித்தார்.

ஒடிஷா ரயில் விபத்து

பட மூலாதாரம், YEARS

எவ்வளவு தொலைவுக்கான ரயில் பாதையில் 'கவச் அமைப்பு' நிறுவப்பட்டுள்ளது?

நாடு முழுவதும் இருக்கும் ரயில் பாதைகளின் மொத்தம் நீளம் 68 ஆயிரம் கிலோமீட்டர்கள். இதில் கவச் அமைப்பு சுமார் 1455 கிலோ மீட்டர் தொலைவுக்கான ரயில் பாதைகளில் மட்டுமே நிறுவப்பட்டுள்ளது. மேலும் 3000 கிலோ மீட்டர் தொலைவுக்கான ரயில் பாதைகளில் தற்போது கவச் அமைப்பை நிறுவும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதுவரை கவச் அமைப்பின் மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள ரயில் பாதைகளின் தொலைவு என்பது மொத்த ரயில் பாதைகளில் 5 சதவீதம் கூட இல்லை. எனவே நாடு முழுவதும் உள்ள அனைத்து ரயில் பாதைகளிலும் 'கவச்' முறையை நிறுவ இன்னும் பல ஆண்டுகள் ஆகலாம்.

இதனால் 'கவச்' அமைப்பை நிறுவும் பணிகள் மிக மெதுவாக மேற்கொள்ளப்படுவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: