டாப் 5 செய்திகள்: பாலியல் வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்த பள்ளிக் கல்வித்துறை

பட மூலாதாரம், Getty Images
இன்றைய (12/03/2025) நாளிதழ்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் சில இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகளில் சிக்கிய ஆசிரியர்கள் உள்பட 23 அரசுப் பள்ளி பணியாளர்களை தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை பதவி நீக்கம் செய்துள்ளதாக தி டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வழக்குகள் அதிகரிக்கும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் மீதான வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தில் உள்ளது. இவர்களது கல்வித் தகுதிகளும் ரத்து செய்யப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் மீதான பாலியல் வழக்குகள் குறித்த கிரிமினல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இந்தப் பதவி நீக்கம் கூடுதலான நடவடிக்கை. இது மற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும். எதிர்காலத்தில் பிறர் குற்றம் செய்வதைத் தடுக்கும்" என்று தொடக்கக் கல்வி இயக்குநர் பி ஏ நரேஷ் தெரிவித்திருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
பதவி நீக்கம் செய்யப்பட்டவர்களில் 15 பேர் தொடக்கக் கல்வி இயக்குநரகத்தின் கீழும் எட்டு பேர் பள்ளிக் கல்வி இயக்குநகரத்தின் கீழும் பணிபுரிந்தனர்.
கடந்த பத்து ஆண்டுகளில் 238 அரசுப் பள்ளிப் பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, தனியார் பள்ளிப் பணியாளர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பதாகவும் 15 பேர் பதவிநீக்கம் செய்யப்பட்டு, பிறர் மீது விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி ஏற்கெனவே தெரிவித்திருந்ததாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
- சென்னையில் ரூ.6 கோடி மோசடி: சினிமா பிரபலம் பெயரில் ஏ.ஐ மூலம் மோசடி நடப்பது எப்படி?
- விண்வெளியில் புவி ஈர்ப்பு விசை இல்லாத சூழலில் இதயம் வேகமாக முதுமை அடையுமா?
- இந்திய விடுதலைக்குப் பின்னரும் தமிழ்நாட்டில் இங்கே அமலில் இருந்த 'முண்டச்சி வரி' பற்றி தெரியுமா?
- தமிழ்நாடு போல, இந்தியாவில் வேறு எங்கெல்லாம் மொழி காக்கும் போராட்டம் நடந்துள்ளது தெரியுமா?

விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட பிரதமரின் மக்கள் மருந்தகங்களுக்கு மாநில சுகாதாரத்துறை நோட்டீஸ்

பட மூலாதாரம், Getty Images
தமிழ்நாட்டில் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்ட மக்கள் மருந்தகங்களுக்கு மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், " தமிழகத்தில் விதிகளுக்குப் புறம்பாகச் செயல்பட்டதாக 17 மக்கள் மருந்தகங்கள் மீது நடவடிக்கை எடுக்க மாநில மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் முனைப்பு காட்டி வருகிறது. அதில் 8 மருந்தகங்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதாகவும், 9 மருந்தகங்களின் ஆவணங்களை ஆய்வு செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 1,100க்கும் மேற்பட்ட பிரதமரின் மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. இங்கு சந்தை விலையைக் காட்டிலும் குறைவாக மருந்துகள் விற்கப்படுவதால் பல்லாயிரக்கணக்கானோா் இதன் மூலம் பயனடைகின்றனர். இந்நிலையில், நிகழ் நிதியாண்டில் பிரதமரின் மக்கள் மருந்தகங்களிலும் மாநில மருந்துக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு நடத்தினா்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் சில கடைகளில் முறையாக ஆவணங்களைப் பராமரிக்காமல் இருந்ததும், மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருந்துகளை விற்றதும் கண்டறியப்பட்டதாகவும், அதன்பேரில் நடவடிக்கை எடுப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
இதுதொடா்பாகப் பேசிய மாநில மருந்து உரிமம் வழங்குதல் கட்டுப்பாட்டு அதிகாரி எம்.என்.ஸ்ரீதா், "கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தற்போது வரை விதிகளுக்குப் புறம்பாக மருந்து விற்பனையில் ஈடுபட்டதாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 17 மக்கள் மருந்தகங்கள் கண்டறியப்பட்டுள்ளன. பிரதமரின் மக்கள் மருந்தகம் மட்டுமல்லாது, வரும் நாள்களில் முதல்வா் மருந்தகங்களிலும் இதுபோன்ற ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னையில் மாடுகள் சுற்றித் திரிவதைத் தடுக்க கோசாலை மையங்கள்

பட மூலாதாரம், Getty Images
சென்னை மாநகராட்சியில் மண்டலங்கள் வாரியாக கோசாலை மையம் அமைக்கப்பதற்கான பணிகள் நடந்து வருவதாக சென்னை மேயர் ஆர்.பிரியா தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
வில்லிவாக்கத்தில் ரூ.1.48 கோடி மதிப்பிலான கோசாலை மையம் அமைக்கும் பணியை அமைச்சர் பி.கே.சேகர் பாபு செவ்வாய்க்கிழமையன்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது "மனித உயிர்கள் மட்டுமின்றி, சாலைகளில் சுற்றித் திரியும் உயிரினங்களுக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற நோக்கில் சென்னை மாநகராட்சி சார்பில் கோசாலை மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன" என்று தெரிவித்ததாக தினமணி செய்தி குறிப்பிட்டுள்ளது.
மேலும் அவர், இதற்காக இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான சுமார் அரை ஏக்கர் நிலத்தில் கோசாலை மையம் அமைக்கும் பணி தற்போது தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டதாக அந்தச் செய்தி கூறுகிறது.
அதோடு, இந்தப் பணிகள் நிறைவடைந்த பிறகு சாலையில் மாடுகள் சுற்றித் திரிவது தடுக்கப்படும் என்றும் அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்
முன்னதாக, சென்னை மேயர் ஆர்.பிரியா, சென்னை மாநகராட்சியில் மண்டலங்கள் வாரியாக கோசாலை மையம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும், வில்லிவாக்கம் கோசாலை மையமானது 200 மாடுகளைப் பராமரிக்கும் திறன் கொண்டது எனவும் தெரிவித்ததாக இந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியை புதிய மாவட்டமாக அறிவிக்குமாறு கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images
பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் மாவட்டத்தை உருவாக்க வேண்டுமென்று முன்னாள் அமைச்சரும் திமுகவின் உயர்நிலை செயல் திட்டக் குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன் முதல்வருக்கு மனு அனுப்பியுள்ளதாக இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் மத்திய, மாநில அமைச்சரும், திமுகவின் உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினருமான மு.கண்ணப்பன், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், செந்தில் பாலாஜி, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ஆகியோருக்கு இந்த மனுவை அனுப்பியுள்ளார்.
அதில், "பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, ஆனைமலை, வால்பாறை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலை, மடத்துக்குளம் ஆகிய ஆறு தாலுகாக்களை உள்ளடக்கிய புதிய வருவாய் மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்," என்று கோரிக்கை வைத்துள்ளதாக இந்து தமிழ் செய்தி கூறுகிறது.
மேலும், "இந்தப் புதிய மாவட்டம் நிலப்பரப்பு அடிப்படையில், கேரள எல்லை, கிழக்கில் அமாரவதி நதி, தெற்கில் மேற்குத் தொடர்சி மலை, வடக்கில் கிணத்துக்கடவு பகுதி ஆகியவற்றைக் கொண்டதாக இருக்கும். மேலும் பொள்ளாச்சி வருவாய்க் கோட்டத்தில் இருந்து திருப்பூர் தனியாகப் பிரிக்கப்பட்டு மாவட்டமாக மாறியுள்ளது.
தற்போது பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, தொண்டாமுத்தூர், உடுமலை, மடத்துக்குளம் என ஆறு சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கியுள்ளது. அத்துடன் பரம்பிக்குளம் ஆழியாறு பாசனத் திட்டத்தில், பரம்பிக்குளம், சோலையாறு, ஆழியாறு, திருமூர்த்தி, அமராவதி உள்ளிட்ட அணைகளின் பாசன நிலப்பரப்பு, பொள்ளாச்சி, உடுமலை ஆகிய பகுதிகளில் அடங்கியுள்ளது" என்று அவர் தனது கோரிக்கையில் கூறியிருப்பதாக இந்து தமிழ் செய்தி தெரிவிக்கிறது.
ஆகையால், பொள்ளாச்சியை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அறிவிக்க வேண்டும் என்றும் கேரள மாநில அரசுடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், ஆனைமலையாறு, நீராறு-நல்லாறு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியுள்ள அவர், பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில் இவற்றை நிறைவேற்றுமாறும் கோரிக்கை வைத்துள்ளார்.
இலங்கை: கச்சத்தீவு புனித அந்தோணியார் தேவாலய திருவிழாவுக்கு ஏற்பாடுகள் தயார்

மார்ச் 14, 15ஆம் திகதிகளில் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தின் வருடாந்திர திருவிழாவை நடத்துவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக வீரகேசகரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், "இந்த விழாவுக்கு வரும் கப்பல்களுக்கு தற்காலிக இறங்கு துறைகளை அமைத்தல், குடிநீர் வசதிகள் அமைத்தல், சுகாதார வசதிகள் அமைத்தல், சாலைகள் அமைத்தல், மின்சார வசதிகள் அமைத்தல், மருத்துவ வசதி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இன்று (2025 மார்ச் 10) இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
அத்துடன், பெருவிழாவிற்கு வரும் மக்களுக்கு தகவல் தொடர்பு வசதிகளை வழங்குவதற்காக கச்சத்தீவில் தகவல் தொடர்பு கோபுரம் நிறுவும் பணியானது ஆரம்பிக்கப்பட்டுள்ளது," என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "தீவு மற்றும் கரையோரப் பகுதிகளில் சட்டவிரோத செயல்களைத் தடுக்கவும், பக்தர்களின் பாதுகாப்பிற்காகவும் பாதுகாப்பு கமரா அமைப்பைப் பொருத்தும் பணி நிறைவடைந்துள்ளது. அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளை நிறுவ கடற்படையின் முழு உழைப்பு, தொழில்நுட்ப மற்றும் வள பங்களிப்பை வழங்குவதற்கு ஏனைய அரச நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயற்பட்டு வருகின்றனர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












