இந்திய வீரர்களை ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் 'வலை விரித்துப் பிடித்தது' எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், போத்திராஜ்
- பதவி, பிபிசி செய்திகளுக்காக
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்துவரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்களின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய பேட்ஸ்மேன்கள் வரிசையாக ஆட்டமிழந்து அணியை சிக்கலில் ஆழ்த்தியுள்ளனர்.
பேட்டிங்கிலும், பந்துவீச்சிலும் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை புரட்டி எடுத்தது. இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் பாலோ-ஆனை தவிர்க்குமா என்ற இக்கட்டான கட்டத்தில் இருக்கிறது. 2-ம்நாளான நேற்று மட்டும் இரு அணிகளிலும் சேர்த்து 12 விக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.
அஸ்வினை ஏன் தேர்ந்தெடுக்கவில்லை என்ற விவகாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இ்ப்போது இந்திய பேட்ஸ்மேன்களின் சொதப்பலான பேட்டிங், வீரர்கள் தேர்வு அந்த விவாகாரத்துக்கு மேலும் எரியும் தீயில் எண்ணெயை வார்த்திருக்கிறது.
டாப்ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஏமாற்றம்
இந்திய அணியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, கோலி ஆகியோர் சொற்ப ரன்களுக்கு விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்பினர். ஜடேஜா ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேட் செய்தார். ரஹானே(29), ஸ்ரீகர் பரத்(5) ஆகியோர் களத்தில் இருப்பதால் ஓரளவுக்கு நம்பிக்கை இருக்கிறது.
பாடம் எடுத்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள்
ஆஸ்திரேலிய அணியின் ஸ்டார்க், போலந்து, கம்மின்ஸ், கிரீன், லேயான் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தி இந்திய பேட்டிங்கை நிலைகுலையச் செய்தனர். இந்தியப் பந்துவீச்சாளர்களுக்கு பாடம் எடுத்த ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் ஒவ்வொரு பந்தையும் லைன் லென்த்தில் எவ்வாறு வீசுவது, பவுன்ஸர்களை வீசுவது, அவுட் சைட் ஆப்சைடில் வீசுவது குறித்து பாடம் நடத்துவதுபோல் பந்துவீசினர்.
ஸ்மித், டிராவிஸ் ஹெட்டையும் பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் ஏறக்குறைய 67 ஓவர்களை எடுத்துக்கொண்டனர். ஆனால், இந்திய அணி சார்பில் எந்த பார்ட்னர்ஷிப்பையும் அமைக்கவிடாமல் பேட்டிங் வரிசையைக் குலைப்பது குறித்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் பாடம் எடுத்துவிட்டனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் ஸ்மித்(123), டிராவிஸ் ஹெட்(163) இருவரும் சதம் அடித்து பெரிய ஸ்கோருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர்.
ஓவலில் விளையாடுவது எனக்குப் பிடிக்கும்

பட மூலாதாரம், Getty Images
சதம் அடித்து ஆட்டமிழந்தபின் ஸ்மித் கூறுகையில் “ இங்கிலாந்தில் கிரிக்கெட் விளையாடுவது எனக்கு மிகவும் பிடிக்கும். கிரிக்கெட் விளையாட இது சிறந்த இடம். இந்த ஆண்டு கோடைகாலம் எனக்கு சிறப்பாக, சதத்தோடு தொடங்கியுள்ளது. அதிலும் ஓவல் மைதானத்தில் விளையாடுவதை நான் மிகவும் விரும்புவேன்.
உலகில் மற்ற இடங்களைவிட ஓவல் மைதானத்தில் என்னுடைய ரெக்கார்டு சிறப்பாகவே இருக்கிறது என நினைக்கிறேன். பேட்டிங் செய்வதற்கு நல்ல ஆடுகளம், நீங்கள் அடிக்கும் ஷாட்களுக்கு மதிப்பு இருக்கும், மைதானத்தின் அனைத்துப் பகுதிகளிலும் அடித்து ஆட முடியும்” எனத் தெரிவித்தார்
பாலோ-ஆனைத் தவிர்க்க எத்தனை ரன் தேவை
2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 38 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் சேர்த்துள்ளது. இன்னும் பாலோ-ஆனைத் தவிர்க்க இந்திய அணிக்கு 118 ரன்கள் தேவைப்படுகிறது.
3-வது நாளான இன்று காலை நேரத்தில் டியூக் புதிய பந்தில் வீசும்போது பந்து எகிறும், பவுன்ஸ் அதிகமாக இருக்கும். ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சை பரத், ரஹானே இருவரும் சமாளித்து முதல் செசனை கடத்திவிட்டால், தப்பித்துவிடலாம். இல்லாவிட்டால், இன்று உணவு இடைவேளைக்குள் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸை ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் முடித்துவிடுவார்கள்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலிய அணியின் ஸ்கோரைவிட இந்திய 318 ரன்கள் குறைவாக இருக்கிறது. ஒருவேளை இந்திய அணி பாலோ-ஆனை தவிரப்பதற்கு தேவையான ரன்களுக்குள் ஆட்டமிழந்துவிட்டால், தொடர்ந்து பாலோ-ஆனை ஆஸ்திரேலிய அணி வழங்குமா அல்லது, தொடர்ந்து பேட் செய்யுமா என்பது தெரியாது.
கட்டம் கட்டிய ஆஸ்திரேலியா

பட மூலாதாரம், Getty Images
இந்திய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை எவ்வாறு ஆட்டமிழக்கச் செய்வது என்று ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர்கள் நன்கு “ஹோம் ஓர்க்” செய்து களத்தில் இறங்கினர். ஒவ்வொரு பேட்ஸ்மேனுக்கும் ஒவ்வொரு வியூகம் அமைத்து, அதற்கு ஏற்றார்போல் பந்துவீசி காலி செய்தனர்.
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரிலிருந்தே ஃபார்மில்லாமல் தடுமாறி வந்தார். அதிகவேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும் ஓவல் ஆடுகளத்தில் ரோஹித் சர்மா எவ்வாறு தாக்குப்பிடிப்பார் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சனம் வைத்திருந்தனர். அதற்கு ஏற்றார்போல், கம்மின்ஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி ரோஹித் சர்மா 15 ரன்னில் வெளியேறினார்.
ரோஹித் சர்மாவை வெளியேற்ற நன்கு திட்டமிட்டு ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் கம்மின்ஸ் செயல்பட்டார். ரோஹித் சர்மாவை குழப்பும் வகையில் லென்த் பால், பவுன்ஸர், அவுட்சைட் ஆப் ஸ்டெம்ப், லெக்சைட், ஷார்ட் பிட்ச் என பந்துவீசி அவரை குழப்பி, திடீரென ஒரு பந்தை ஸ்டெம்ப் டூ ஸ்டெம்ப் வீசியபோது, ரோஹித் சர்மாவால் என்னசெய்வதென்று தெரியாமல் “ப்ளம்ப் எல்பிடபிள்யு” வாங்கி வெளியேறினார்.
தவறான கணிப்பில் கில், புஜாரா

பட மூலாதாரம், Getty Images
ஐபிஎல் தொடரிலிருந்து முரட்டுத்தனமான ஃபார்மில் இருந்த சுப்மான் கில்லுக்கும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் வலை விரித்திருந்தனர். சுப்மான் கில்லுக்கு ஓவர் பிட்சாகவே தொடர்ந்து போட்லாந்து பந்துவீசினார். இதனால் போலந்து பந்துகளை பெரும்பாலும் “லீவ்இட்” செய்து கில் ஆடி வந்தார்.
ஆனால், கில் எதிர்பாராத வகையில் ஒரு பந்தை போலந்து உள்ளே எடுத்துவந்து, அதை லெக்கட்டராக வீசினார். வழக்கமான ஓவர் பிட்ச் பந்து என நினைத்த கில் பந்தை அடிப்பதா லீவ் செய்வதா என்ற குழப்பத்துடனே லீவ் செய்தார். ஆனால், பந்து ஆப் ஸ்டெம்பின் மீது பட்டு க்ளீன் போல்டாகியது. கில்13 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
புஜாராவும், விராட் கோலியும் ஜோடி சேர்ந்தபின் மாலை தேநீர் இடைவேளைவரை தாக்குப்பிடித்ததால், ஓரளவுக்கு நம்பிக்கை இருந்தது. அதிலும் கடந்த 3 மாதங்களாக கவுன்டி போட்டிகளில் புஜாரா ஆடி வருவதால், அவர் மீது பெருத்த எதிர்பார்ப்பு இருந்தது.
சுப்மான் கில்லை எவ்வாறு கட்டம்கட்டி வெளியேற்ற எப்படி பந்துவீசப்பட்டதோ அதே போல் புஜாராவுக்கும் கேமரூன் க்ரீன் பந்துவீசினார். கேமரூன் வீசிய பந்தில் எதை டிபென்ஸ் ஆடுவது, எந்தப் பந்தை அடித்து ஆடுவது, எதை லீவ் செய்வது எனத் தெரியாமல் புஜாரா குழப்பத்தில் இருந்தார்.
புஜாரா யோசித்து செயல்படுவதற்குள் கேமரூன் வீசிய ஒரு பந்து திடீரென ஆப் ஸ்டெம்பை பதம் பார்க்க க்ளீன் போல்டாகி 14 ரன்னில் வெளியேறினார். 50 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
புஜாரா, கில் இருவருமே பந்தை சரியாகக் கணிக்கவில்லை. அனைத்துப் பந்துகளுமே அவுட் சைட் ஆப்டெம்ப்பில் செல்லும் என்று “லீவ்” செய்வதிலேயே இருந்தனர். ஆனால், திடீரென ஒரு பந்து ஸ்விங் ஆகியபோது, செய்வதறியாமல் திகைத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
கோலியும் அரவுண்ட் விக்கெட்டும்

பட மூலாதாரம், Getty Images
விராட் கோலியின் பலவீனத்தை நன்கு அறிந்திருந்த ஆஸ்திரேலியப் பந்துவீச்சாளர்கள் மிட்ஷெல் ஸ்டார்க்கை பயன்படுத்தினர். அரவுண்ட் ஸ்டெம்பில் இருந்து வீசப்படும் பந்தை ஆடுவதில் கோலி சிரமப்படுவார் என்பதை அறி்ந்து ஸ்டார்க் மூலம் கட்டம் கட்டினர்.
அதேபோல ஸ்டார்க் லென்த்தில் வீசிய பந்தை கோலி பிரன்ட்புட் மூலம் தடுத்து ஆட முயன்றார். ஆனால் கோலியின் பேட்டில் பந்து முனையில் பட்டு 2வது ஸ்லிப்பில் இருந்த ஸ்மித்திடம் கேட்ச்சானது. கோலி 14 ரன்களில் ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.
5-வது விக்கெட்டுக்கு ரஹானே- ஜடேஜா ஜோடி ஓரளவுக்கு நம்பிக்கையளிக்கும் வகையில் பேட் செய்தனர். ஆஸ்திரேலிய பந்துவீச்சை நிதானமாகக் கையாண்ட இருவரின் ஆட்டத்தால் ஸ்கோர் மெல்ல உயர்ந்தது.
ரஹானேவுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்
குறிப்பாக ரஹானே நேற்று அதிர்ஷ்டத்தால் ஆட்டமிழப்பதில் இருந்து தப்பித்தார். கம்மின்ஸ் வீசிய புல்லர் லென்த் பந்தில் ரஹானே பேட்டில் பட்டு விக்கெட் கீப்பரிடம் கேட்சானது. நடுவரும் அவுட் வழங்கியநிலையில், ரஹானே டிஆர்எஸ் அப்பீல் செய்தார்.
ஆனால், 3வது நடுவர் பார்த்தபோது, கம்மின்ஸ் வீசியது நோ-பால் எனத் தெரியவந்தது. இதையடுத்து, ரஹானேவுக்கு வழங்கப்பட்ட அவுட்திரும்பப் பெறப்பட்டு அதிர்ஷ்டத்தால் தப்பித்தார்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துக்குப்பின் டெஸ்ட் போட்டிக்குத் திரும்பிய ரஹானே மிகுந்த கவனத்துடன், கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தினார். ஜடேஜா அவ்வப்போது பவுண்டரிகளை விளாசி ரன்களைச் சேர்த்தார். இருவரின் பார்ட்னர்ஷிப் 50 ரன்களைக் கடந்ததால் இந்திய அணியை மீட்டுவிடுவார்கள் என ரசிகர்கள் எண்ணினர்.
ஜடேஜா ஆறுதல்
ஆனால், இந்த நம்பிக்கையை நாதன் லேயான் உடைத்தெறிந்தார். ஜடேஜா 48 ரன்கள் சேர்த்திருந்தபோது, லேயான் வீசிய பந்தில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 5-வது விக்கெட்டுக்கு இருவரும் 71 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். ரஹானே 29, பரத் 5 ரன்களில் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர்.
முன்னதாக, ஆஸ்திரேலிய அணி முதல்நாளில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் சேர்த்திருந்தநிலையில் நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தது. ஸ்மித் 95 ரன்களிலும், ஹெட் 145 ரன்களிலும் ஆட்டத்தைத் தொடர்ந்தனர்.
ஸ்மித் வரலாற்று சதம்

பட மூலாதாரம், Getty Images
ஆட்டம் தொடங்கியவுடன் சிராஜ் வீசிய முதல் ஓவரில் இரு பவுண்டரிகளை விளாசி, ஸ்மித் தனது 31-வது சதத்தை நிறைவு செய்தார். இந்தியாவுக்கு எதிராக ஸ்மித் தனது 9-வது சதத்தை பதிவு செய்தார். ஜோ ரூட்டுக்கு அடுத்தார்போல் இந்திய அணிக்கு எதிராக அதிக சதம் அடித்தவீரர் ஸ்மித் மட்டும்தான்.
அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து மண்ணில்ஸ்மித் அடித்த 7-வது சதம் இதுவாகும். ஆஸ்திரேலியாவின் பிராட் மேன் 11 சதங்களும், ஸ்டீவ் வாஹ் 7 சதங்களும் அடித்திருந்தநிலையில் அவரோடு ஸ்மித்தும் இணைந்தார்.
ஸ்மித்துக்கு இது 31-வது டெஸ்ட் சதமாகும். ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் அடித்த வீரர்களில் 3வது இடத்தை ஸ்மித் பெற்றுள்ளார். பாண்டிங்(41), ஸ்டீவ் வாஹ்(32) ஆகியோர் முதலிரு இடங்களில் உள்ளனர்.
ஸ்மித்தை நோக்கி பந்தை எறிந்த சிராஜ்
சிராஜ் முதல் ஓவரின் 4வது பந்தை வீச வந்தபோது, ஸ்மித்தின் கண்கள் சூரியஒளியில் கூசியதால் திரையை ஒதுக்கக்கோரி நகர்ந்தார். இதனால், பந்துவீச ஓடி வந்த சிராஜ், கோபத்தால் திடீரென பந்தை ஸ்டெம்பை நோக்கி எறிந்துவிட்டு திரும்பினார்.
சிராஜின் இந்த செயல் ஸ்மித் சதம் அடித்துவிட்டார், டிராவிஸ் ஹெட் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை என்ற விரக்தியின் வெளிப்பாடாகவே கருதப்பட்டது.
மைல்கல் பார்ட்னர்ஷிப்
அதைத் தொடர்ந்து, டிராவிஸ் ஹெட்டும் பவுண்டரி அடித்து 150 ரன்களை எட்டினார். அதன்பின் சிராஜ் வீசிய பந்தில் டிராவிஸ் ஹெட் 163 ரன்களில் பரத்திடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு ஸ்மித், ஹெட் கூட்டணி 285 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர். இந்திய அணிக்கு எதிராக 4-வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இது அமைந்தது. அதுமட்டுமல்லாமல் டாஸில் தோற்றுவிட்டு, 4வது விக்கெட்டுக்கு 285 ரன்கள் சேர்த்தது என்பது 2வது அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாகவும் இருந்தது.
அடுத்துவந்த கேமரூன் க்ரீனை 6 ரன்னில் ஷமி வெளியேற்றினார். சதம் அடித்து ஆடிவந்த ஸ்மித், ஷர்துல் தாக்கூர் பந்தில் “இன்சைட் எட்ஜ்” முறையில் போல்டாகி 121ரன்களி்ல் ஆட்டமிழந்தார். அதன்பின் மளமளவென விக்கெட்டுகள் ஒருபக்கம் சரிந்தாலும் அலெக்ஸ் கேரே நிதானமாக பேட் செய்து வந்தார். அலெக்ஸ் கேரே 48 ரன்களில் ஜடேஜா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணித் தரப்பில் சிராஜ் 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












