அன்று பிச்சை எடுத்த திருநங்கை, இன்று புகைப்பட கலைஞர் - ஆஷாவின் தன்னம்பிக்கை கதை

- எழுதியவர், பிரவீன் சுபம்
- பதவி, பிபிசி செய்தியாளர்
"உழைத்து வாழ முடியாதா என்று இந்த சமூகம் என்னைப் பார்த்து அடிக்கடி கேள்வி கேட்கும். இப்போது அதற்கான பதிலைத் தர நான் தயாராகி விட்டேன்."
தெலங்கானாவில் மாநிலம் கரீம்நகரை பகுதியைச் சேர்ந்த திருநங்கை 'ஆஷா'வின் வார்த்தைகள் இவை.
தற்போது ஆஷா கரீம்நகரில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றி வருகிறார். அதுமட்டுமின்றி சொந்தமாக புகைப்படம் எடுக்கும் கடையையும் ஆஷா நடத்தி வருகிறார்.
இன்று தொழில்முனைவோராக புகைப்படக் கலைஞராக பிரகாசிக்கும் ஆஷா, சில ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்வாதாரத்திற்காக பிச்சை எடுத்து வந்தார் எனனால் உங்களால் நம்ப முடிகிறதா?
ஆம். அந்த நிலையில் அவரது வாழ்க்கை இருந்தபோது அவர் சந்தித்த அவமானங்களும், எதிர்கொண்ட ஒரு விபத்தும் ஆஷாவின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டது.
இளமைப் பருவத்தில் தனது உடல், பாலின குணாதிசயங்கள் வித்தியாசமாக இருப்பதை உணர்ந்த ஆஷா, தனது பெற்றோருக்குத் தெரியாமல் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார்.
டெல்லியில் நடந்தது என்ன?

ஆணின் உடலில் பிறந்த ஆஷா, தனக்கு ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த பிறகு LGBT குழுவுடன் சேர்ந்து வாழ விரும்பினார். அதற்காக சொந்த ஊரைவிட்டு வெளியேறி டெல்லி சென்றார். ஆனால், அங்கு எதிர்பாராத சிரமங்களை எதிர்கொண்டார்.
“எனது குடும்பம் எனக்கு ஆதரவளித்தாலும், நான் ‘திருநங்கை’ சமூகத்துடன் வாழ முடிவு செய்தேன். தென் மாநிலங்களைவிட வட மாநிலங்களில் உள்ள திருநங்கைகள் பிச்சை எடுப்பதன் மூலம் அதிகம் சம்பாதிக்கின்றனர். அதனால்தான் டெல்லி சென்றேன்.
முதலில் ஏதாவது வேலை செய்ய வேண்டும் என்று நினைத்தேன். எனக்கு கல்வி இருக்கிறது. ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறையில் நான் டிகிரி வரை படிக்க என் அப்பா உறுதுணையாக இருந்தார்.
எனக்குப் பல திறமைகள் இருந்தும், அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை எதுவும் கிடைக்கவில்லை. அரசாங்கத்திற்கே திருநங்கைகள் பற்றிய புரிதல் இல்லாதபோது, என்னைப் போன்றவர்களை இந்தச் சமூகம் மோசமாக நடத்துவதை எப்படி மாற்ற முடியும்?"
இத்தகைய சூழ்நிலைகளில், பிச்சை எடுப்பது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான வழியாக மாறியது என்கிறார் ஆஷா.
“ஒரே இடத்தில் எப்போதும் பிச்சையெடுக்க முடியாது. வெவ்வேறு மாநிலங்களுக்குச் செல்ல வேண்டும். டெல்லியின் சுந்தர் நகர் பகுதியில் பிச்சை எடுக்கும்போது அங்குள்ள ரவுடி கும்பல் மற்றும் போலீசாரால் பிரச்னையை எதிர்கொண்டேன். ரவுடி கும்பல்களின் வன்முறைக்கு நான் ஆளானேன். பிச்சை எடுக்கும் பணத்தில் ஒரு பகுதியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் கண்மூடித்தனமாக தடியடி நடத்துவார்கள்.“
பிச்சை எடுக்கும்போது காவல்துறை அதிகாரிகளும் விரட்டியடித்ததாகவும், அப்படி தப்பி ஓடும்போது மோசமான விபத்தில் சிக்கினேன் என்றும் பிபிசியிடம் பேசிய ஆஷா பகிர்ந்து கொண்டார்.
“போலீசார் என்னை விரட்டியபோது எதிர்புறம் வேகமாக வந்த கார் என்மீது மோதியது. ஆனால் நல்வாய்ப்பாக உயிருக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. உடலில் சில காயத்துடன் அந்த விபத்திலிருந்து தப்பினேன்," என்று ஆஷா கூறினார்.
வாழ்க்கைக்கு வழிகாட்டிய புகைப்படம்

அந்த விபத்திற்குப் பிறகு டெல்லியில் இருந்து சொந்த ஊருக்கு ஆஷா திரும்பினார்.
“அந்த விபத்துக்குப் பிறகு எனக்குள் பல சந்தேகங்கள் எழுந்தன. நான் ஏன் இப்படி வாழ வேண்டும்? வேற என்ன செய்யலாம்? என்ன வேலைக்குப் போகலாம்? ஏதாவது தொழில் செய்யலாமா? இப்படி எனக்குள் இந்த மாதிரி பல கேள்விகள் எழுந்தன."
ஆஷாவுக்கு புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் இருந்தது. மொபைல் போனை பயன்படுத்தி அவர் எடுத்த புகைப்படங்கள் குடும்பத்தினரின் பாராட்டைப் பெற்றன.
ஆஷா தனது புகைப்படத் திறனை மேம்படுத்த வாராங்கலில் உள்ள ஒரு நிறுவனத்தில் பயிற்சிக்காகச் சேர்ந்தார். 20 பேர் கொண்ட அந்தக் குழுவில் இவர் மட்டுமே திருநங்கை.
"புகைப்படம் எடுக்கவும், கிராஃபிக்ஸ் டிசைனிங் கற்றுக் கொள்ளவும் ஒரு நிறுவனத்திற்குச் சென்றேன். அங்கே இருந்த அனைவரும் என்னை வித்தியாசமாகப் பார்த்தார்கள். புகைப்படம் எடுப்பது எனக்கு ஏன் அவசியம் என்பது அவர்களின் கருத்தாக இருக்கலாம். நான் அவர்களின் வார்த்தைகளையும் பார்வையையும் புறக்கணித்தேன்."
அவர்களுக்கான என் பதில் ஒன்றே ஒன்றுதான்.
"நான் ஏன் கற்றுக்கொள்ளக் கூடாது?"
தெலுங்கானா அரசின் கடனுதவி

பட மூலாதாரம், AASA
பயிற்சிக்குப் பிறகு, கரீம்நகரில் உள்ள திருநங்கைகளுக்கு உதவும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தில் சில ஆண்டுகள் வரை ஆஷா பணியாற்றினார்.
அந்த அமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிக்காக ஆஷா வடிவமைத்த சுவரொட்டி மாவட்ட அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்தன.
இந்த போஸ்டரை வடிவமைத்தவர் ஒரு திருநங்கை என்பதை அறிந்த இணை ஆட்சியர் அதிர்ச்சி அடைந்தார்.
'உனக்கு ஃபோட்டோகிராபி தெரியும் என்கிறாய், ஒரு ஸ்டுடியோ தொடங்கலாமே' என்று மாவட்ட அதிகாரிகள் ஆஷாவிடம் கேட்டனர்.
அதற்கு ஆஷா இசைவு தெரிவிக்கவே, அரசின் சார்பாக கடனுதவி வழங்கி ஸ்டுடியோ வைக்க உதவுவதாக முடிவு செய்யப்பட்டது.
ஆனால் தெலங்கானா மாநில அரசு சார்பாக திருநங்கைகளுக்கு கடனுதவி வழங்கும் திட்டம் ஏதும் இல்லததால், கரீம்நகர் மாவட்ட நிர்வாகம் பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் கடனுக்கு விண்ணப்பிக்க ஆஷாவை ஊக்குவித்து ஆதரவளித்தது.
அதன்மூலமாக ஃபோட்டோ ஸ்டுடியோ திறக்க ஐந்து லட்சம் ரூபாய் ஆஷாவுக்கு கடனாக வழங்கப்பட்டது.
இது குறித்து பிபிசியிடம் பேசிய கரீம்நகர் மாவட்ட நல அலுவலர் (WWO) சபிதா, தெலங்கானாவில் திருநங்கை ஒருவருக்கு தொழில் தொடங்க அரசு கடன் வழங்குவது இதுவே முதல் முறை என்றார்.
"திருநங்கைகளுடன் தனிப்பட்ட நேரத்தைச் செலவிடுவது சமூகத்தின் பார்வையை நிச்சயமாக மாற்றும். அவர்களில் பலர் பிச்சை எடுப்பதை தவிர்த்து கண்ணியமாக வாழ விரும்புகிறார்கள். தங்கள் திறமையை நிரூபிக்க விரும்புகிறார்கள்," என்கிறார் சபீதா.
‘எங்கள் தவறா, சமூகத்தின் தவறா’

“இந்தச் சமூகத்தில் விரும்பிய தொழிலைச் செய்து உழைத்து வாழ முன் வந்துள்ளேன். ஆனால் பொது சமூகத்தின் அங்கீகாரத்திற்காக காத்திருக்கிறேன்.
கடந்த காலங்களில் நான் திருநங்கை சமூக நிகழ்வுகளில் மட்டுமே புகைப்படம் எடுத்தேன். இதுவரை வெளியாட்களிடம் இருந்து எனக்கு ஆர்டரும் கிடைக்கவில்லை. அது என்னுடைய தவறா அல்லது இந்த சமூகத்தின் தவறா என்ற கேள்விக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை,“ என்கிறார் ஆஷா.
புகைப்படம் எடுப்பது மட்டுமின்றி, கரீம்நகர் மாவட்டத்திலுள்ள திருநங்கை சமூகத்தின் மேம்பாட்டிற்காகவும் ஆஷா பணியாற்றி வருகிறார்.
“எங்கள் குழந்தைகள் காவல்துறையினரால் பல பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அதனால்தான், காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் கூட்டங்களை ஏற்பாடு செய்து, எங்கள் பிரச்னைகளை அவர்களின் கவனத்திற்குக் கொண்டு வந்தோம்.
இதன் பலனாக காவல்துறை உதவியுடன் ஏற்பாடு செய்யப்பட்ட தொழில் கண்காட்சியில் எங்களுக்கும் பங்குபெறும் வாய்ப்பு கிடைத்தது. தொடர் முயற்சியின் பலனாக, எங்களில் ஒருவருக்கு தெலுங்கு தொலைக்காட்சி நிகழ்ச்சியிலும், மற்றொருவருக்கு இண்டிகோ ஏர்லைன்ஸில் ஊழியராகவும் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது.
இன்னும் சிலர் மருத்துவமனைகளில் ஆய்வகங்கள் மற்றும் நர்சிங் துறைகளில் பணிபுரிகின்றனர்,'' என்று ஆஷா தெரிவித்தார்.
'என் தந்தைக்கு பெரிய மனசு'
ஆஷா, தன் தந்தை தனக்காகப் பல கனவுகளை வைத்திருப்பதாகவும், ஆனால் அதை நிறைவேற்ற முடியாமல் போனதற்காக அவரிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் கூறினார்.
“என் அப்பாவுக்கு என்னைப் பற்றி நிறைய கனவுகள் இருக்கும். என்னால் அவற்றை நிறைவேற்ற முடியவில்லை. அவருக்குப் பெரிய மனசு. இருந்தும் நான் அவரிடமிருந்து விலகிச் சென்றேன்.
திருநங்கையாக இருந்தாலும் அவர் எனக்கு ஆதரவாக இருந்தார். ஆனால் எங்களைச் சுற்றியிருந்தவர்கள் 'உன் மகன் கண்களில் படுவதே கல்லையே, எங்கே போனான், எங்கேயாவது பிச்சை எடுக்கிறானா' என்று நேரடியான வார்த்தைகளால் அவரைத் துன்புறுத்தினார்கள். அதனால் என்னை மன்னித்துவிடுங்கள் அப்பா," என்று என்று மனம் உருகப் பேசினார் ஆஷா.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













