சென்னையில் தாயைக் கொலை செய்து ‘வாய்ஸ் நோட்’ அனுப்பிய மகன் - ஏன் தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
சென்னையின் திருவொற்றியூரில், தனது தாயையும் சகோதரனையும் கொலை செய்ததற்காக 20 வயது இளைஞர் ஒருவரை சனிக்கிழமையன்று (ஜூன் 22) காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கடந்த வாரம் புதன்கிழமையன்று நடந்த இந்த சம்பவம் இரண்டு நாட்கள் கழித்து தான் வெளிச்சத்திற்கு வந்ததாகவும், கைது செய்யப்பட்ட இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது.
'தி இந்து' நாளிதழின் செய்தியின் படி, கல்லூரி மாணவரான அந்த இளைஞர் சரிவர படிக்காததால் பல பாடங்களில் தோல்வியடைந்திருந்தார். இது குறித்து இளைஞருக்கும், தாய்க்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் குடும்ப பொருளாதாரம் தொடர்பான அழுத்தம் மற்றும் வேறு சில குடும்ப பிரச்னைகள் காரணமாக அவர் இந்தக் கொலைகளில் ஈடுபட்டுள்ளார் என காவல்துறையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த வழக்கின் முழு விவரம் என்ன? கல்லூரியில் படிக்கும் இளைஞர், தனது தாய் மற்றும் இளைய சகோதரரையே கொலை செய்யும் அளவுக்கு சென்றதன் பின்னால் உள்ள உளவியல் என்ன?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
வழக்கின் முழு விவரம்
காவல்துறையின் அறிக்கையின்படி, சென்னை திருவொற்றியூர் திருநகர் முதல் தெருவைச் சேர்ந்தவர் முருகன். இவர் ஓமன் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரின் மனைவி பத்மா (48). இந்தத் தம்பதியினருக்கு நித்தேஷ் (20), ரமேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (15) என இரண்டு மகன்கள்.
மூத்த மகன் நித்தேஷ் தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். நித்தேஷ் கடந்த 21-ஆம் தேதி இரவு, தன்னுடைய செல்போனிலிருந்து உறவினர் ஒருவருக்கு, "நான் எனது அம்மாவையும் தம்பியையும் கொலை செய்து விட்டேன்," என்ற 'வாய்ஸ் நோட்' அனுப்பியுள்ளார்.
உடனே அவர் பத்மாவின் வீட்டருகே வசிக்கும் மற்றொரு பெண்ணுக்கு தகவல் சொல்ல, அவர் வீட்டுக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டுக்குள் பத்மாவும் அவரின் இளைய மகனும் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடந்தது தெரியவந்துள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், இரு உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக திருவொற்றியூர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, நித்தேஷ் கைது செய்யப்பட்டார். முதல் கட்ட விசாரணையில், கடந்த கடந்த ஜூன் 20-ஆம் தேதி, அதிகாலையில் தனது தாய் மற்றும் தம்பியைக் கொலை செய்துவிட்டு, வீட்டைப் பூட்டிவிட்டு தலைமறைவானது தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட நித்தேஷிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது எனவும் காவல்துறை அறிக்கை கூறுகிறது.
'தி இந்து' நாளிதழின் செய்தியின்படி, காவல்துறை விசாரணையில், நித்தேஷுக்கு 14 அரியர்கள் இருந்ததாகவும், இதற்காக அவரது தாய் அவரை பலமுறை கண்டித்ததாகவும் தெரிய வந்துள்ளது. தனது தந்தையின் சம்பாத்தியம் குடும்பத்தை நடத்த போதுமானதாக இல்லை என்று தாய் தன்னிடம் அடிக்கடி கூறி வந்ததால் ஏற்பட்ட மனஅழுத்தத்தில் தன்னால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்றும், குடும்பத்தில் வேறு சிக்கல்களும் இருந்ததாகவும் அவர் காவல்துறை விசாரணையில் கூறியுள்ளார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்த அவர், பின்னர் பயந்து மனம் மாறியதாகவும் விசாரணையில் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
உளவியல் ரீதியிலான காரணங்கள்
இந்த வழக்கு தொடர்பாகவும், வளரிளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் மனஅழுத்தங்கள் தொடர்பாகவும், பிபிசி தமிழிடம் பேசினார் கீழ்பாக்கம் அரசு மனநல மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
"இந்த வழக்கு குறித்து செய்திகளில் படித்தபோது, குற்றத்தில் ஈடுபட்ட இளைஞர் நாள்பட்ட மனச்சோர்வில் இருந்துள்ளார் என்பது புரிந்தது. அந்த இளைஞர் கல்வியில் சந்தித்தப் பின்னடைவுகள், வீட்டின் பொருளாதாரச் சூழ்நிலைகள் என அனைத்தும் அவருக்கு மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தப்படும்போது, அவரது மனச்சோர்வு இறுதிக் கட்டத்திற்குச் சென்று, தன் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டும் என்ற நிலைக்கு தள்ளும். இது கண்டிப்பாக ஒரு தீவிரமான மனநலப் பிரச்னை தான்,” என்றார்.
"அத்தகைய நிலையில் இருப்பவர்களுக்கு மனித உயிரின் மதிப்பு தெரியாது. அது பிறரது உயிராக இருந்தாலும் சரி. அதனால் தான் தற்கொலை எண்ணம் கொண்ட பலரும், தனது குடும்பத்தினரை அல்லது நெருக்கமானவர்களையும் கொலை செய்துவிட்டு இறக்கிறார்கள் எனச் செய்திகளில் பார்க்கிறோம். இந்த இளைஞர் கூட கொலை செய்துவிட்டு தற்கொலைக்கு முயன்றிருக்கிறார், ஆனால் பின்னர் பயந்து அதை கைவிட்டிருக்கிறார்," என்கிறார் பூர்ண சந்திரிகா.

இவ்வாறு பலவித காரணிகளால் மோசமான மனச்சோர்வில் இருப்பவர்கள் கண்டிப்பாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்றும், யாருக்கு வேண்டுமானாலும் இது நடக்கலாம் எனவும் எச்சரிக்கிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
"ஒரு வீட்டில் வளரிளம் பருவத்தைச் சேர்ந்த மகனோ மகளோ எப்போதும் தனியாக, அமைதியாக இருந்தால், கண்டிப்பாக அவர்களிடம் பேச வேண்டும். பிள்ளை வளர்ப்பில், ஒன்று பெற்றோர்கள் மிகக் கடுமையாக நடந்துகொள்கிறார்கள் அல்லது கண்டுகொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள். எனது பெற்றோர் என்னை இப்படித் தானே வளர்த்தார்கள் என்று கூற முடியாது. இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு அணுக வேண்டும்,” என்கிறார்.
"குடும்பக் கஷ்டங்களைச் சொல்லாமல் பிள்ளைகளை சொகுசாக வளர்க்க வேண்டும் என்று சொல்லவில்லை, அதேவேளையில் அதை மட்டுமே அடிக்கடி கூறி, அவர்களைக் குற்றவுணர்ச்சியில் தள்ள வேண்டாம். அது அவர்களது தன்னம்பிக்கையை உடைத்துவிடும்," என்கிறார் பூர்ண சந்திரிகா.

பட மூலாதாரம், Getty Images
'கல்லூரி வாழ்க்கையில் ஏற்படும் தடுமாற்றம்'
இந்தப் பிரச்னை தொடர்பாகப் பேசிய பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளரும் கல்வியாளருமான பிரின்ஸ் கஜேந்திர பாபு, "இப்போது பல கல்லூரிகள் மாணவர்களை சேர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்துகின்றன. இவ்வளவு மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கு ஒரு விளம்பரம். பின்னர் அவர்களின் படிப்பைக் குறித்தோ அல்லது அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்று பட்டம் பெறுகிறார்களா என்பது குறித்தோ கவலைப்படுவதில்லை,” என்கிறார்.
"ஒரு மாணவர் 14 அரியர்கள் வைத்திருக்கிறார் என்றால், அதை கண்டிப்பாக விசாரித்திருக்க வேண்டும். இன்றைய தலைமுறையினர் அரியர் என்பதை மிகவும் சகஜமான ஒன்றாகப் பார்க்கிறார்கள். சினிமாவில் காட்டுவது போல எல்லா அரியர்களையும் ஒரே செமஸ்டரில் முடிப்பது போல நிஜ வாழ்க்கையில் செய்துவிட முடியாது," என்கிறார்.
சிறுவயது முதலே பள்ளிக் கல்வியைப் போட்டி மனப்பான்மை மற்றும் கட்டுப்பாட்டுடன் அணுகிப் பழக்கப்பட்ட பிள்ளைகள், கல்லூரி வாழ்க்கையில் கிடைக்கும் பலவித அனுபவங்களால் நிச்சயம் தடுமாறுவார்கள் என்றும், அவர்களுக்கு கல்லூரி நிர்வாகங்கள் தான் முறையாக வழிகாட்ட வேண்டும் என்றும் கூறுகிறார் பிரின்ஸ் கஜேந்திர பாபு.
மனச்சோர்வால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது தற்கொலை எண்ணங்களுடன் போராடுபவர்கள், குடும்பத்தினரிடம் அதைப் பற்றி பேச முடியவில்லை என்றால், அரசின் உதவி எண்ணான 104-ஐ தொடர்பு கொள்ளலாம் என்கிறார் பூர்ண சந்திரிகா.
"இதற்குத் தேவையான ஆலோசனைகளை, உதவிகளை தமிழக அரசு இலவசமாக வழங்குகிறது. அது மட்டுமில்லாது 14466 என்ற எண்ணில் மத்திய அரசும் தேவையான உதவிகளை வழங்குகிறது. இது தவிர அனைத்து தமிழக அரசு மருத்துவமனைகளிலும் மனநலப் பிரிவு என ஒன்று உள்ளது. அங்குள்ள மருத்துவர்களிடமும் இலவசமாக சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். எந்தச் சூழ்நிலையிலும் தற்கொலை அல்லது வன்முறை என்பது தீர்வல்ல," என்று கூறுகிறார் மருத்துவர் பூர்ண சந்திரிகா.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












