டி20 உலகக்கோப்பை: வங்கதேசத்தை வென்றாலும் இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பலவீனம்

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

5-வது முறையாக இந்திய அணி டி20 உலகக் கோப்பைத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை பிரகாசப்படுத்தியது. ஆன்டிகுவாவில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் சூப்பர்-8 சுற்றின் குரூப்-1 பிரிவில் நடந்த ஆட்டத்தில் வங்கதேச அணியை 50 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி.

முதலில் பேட் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் சேர்த்தது. 197 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 8 விக்கெட் இழப்புக்கு 146 ரன்கள் சேர்த்து 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

வாய்ப்பை பயன்படுத்தும் ரிஷப் பந்த்

முதலில் பேட் செய்த இந்திய அணி சிறப்பான தொடக்கம் கண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய கேப்டன் ரோகித் சர்மா 11 பந்துகளில் ஒரு சிக்சர் 3 பவுண்டரிகளுடன் 23 ரன் சேர்த்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நட்சத்திர வீரர் விராட் கோலியும் அதிரடி காட்டினார். 3 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 24 பந்துகளில் கோலி 37 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். இந்த தொடரில் சிறப்பாக பேட் செய்து வரும் ரிஷப் பந்த் இந்த முறையும் அசத்தினார்.

IND vs BAN

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரிஷப் பந்த் இந்தத் தொடரில் தனக்கு வழங்கப்பட்ட 3வது இடத்தை சிறப்பாகச் செய்து வருகிறார். இந்திய அணி சரிவில் சிக்கியபோதெல்லாம் விக்கெட்டுகளை காப்பாற்றி ஸ்கோரை உயர்த்துவதில் ரிஷப் பந்த் பேட்டிங் பாராட்டுக்குரியது. இந்த ஆட்டத்திலும் ஒரு விக்கெட் இழப்புக்கு 71 ரன்கள் என்றிருந்த இந்திய அணி, அடுத்த 6 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து 3 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எனத் தடுமாறியது.

அந்த நேரத்தில் துபே, ரிஷப் பந்த் இருவரும் சேர்ந்து விக்கெட் சரிவிலிருந்து அணியைத் தடுத்து ஸ்கோர் செய்தனர். ஆன்டிகுவா ஆடுகளம் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் ஆடுகளம் இல்லை, பந்து பேட்டரை நோக்கி மெதுவாகத்தான் வரும். ஆனால், நிதானமாக ஆடித்தான் ரன்களை சேர்க்க வேண்டிய நிலையில் அதை ரிஷப் பந்த் சிறப்பாகச் செய்தார். வங்கதேச பந்துவீச்சாளர்கள் வீசும் மோசமான பந்துகளை அவ்வப்போது சிக்ஸருக்கும், பவுண்டரிகளுக்கும் அனுப்பி ரிஷப் பந்த் ரன்ரேட் குறையவிடாமல் கொண்டு சென்று, 36 ரன்களில் ஆட்டமிழந்தார்.

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக்கின் அசத்தல் அரைசதம்

ஹர்திக் பாண்டியா களமிறங்கிய போது இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 120 ரன்களுடன் போராடியது. நிதானமாகத் தொடங்கிய பாண்டியா 7 பந்துகளில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தார். அதன்பின் அதிரடிக்கு மாறிய பாண்டியா, பவுண்டரி, சிக்ஸர்களை விளாசினார். நீண்ட நாட்களுக்குப்பின் ஹர்திக் பாண்டியா பாராட்டக்கூடிய வகையில் அரைசதம் அடித்துள்ளார். வங்கதேச வீரர்கள் வீசிய யார்க்கர் பந்துகளைக் கூட பாண்டியா தனது வலிமையால் பவுண்டரிகளாக மாற்றினார். மெஹதி ஹசன் வீசிய 15-வது ஓவரில் சிக்ஸர், பவுண்டரி என பாண்டியா 15 ரன்கள் சேர்த்தார். ஷிவம் துபேயும் தனது பங்கிற்கு அவ்வப்போது சிக்ஸர், பவுண்டரி அடித்து ஸ்கோரை உயர்த்தினார்.

ரிசாத் ஹூசைன் வீசிய 18-வது ஓவரில் சிக்ஸர் அடித்த துபே 34 ரன்களில் ஆட்டமிழந்தாலும் அதே ஓவரில் ஹர்திக்கும் ஒரு சிக்ஸர் விளாசினார். சகில் அல்ஹசன் வீசிய 19வது ஓவரில் சிக்ஸர், முஸ்தபிசுர் வீசிய கடைசி ஓவரில் 2 பவுண்டரிகள் என ஹர்திக் 27 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்திய அணி கடைசி 5 ஓவர்களில் மட்டும் 62 ரன்கள் சேர்த்தது.

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் பாண்டியா இதுவரை இந்திய அணிக்காக 3 முறை மட்டுமே அரைசதம் அடித்திருந்தார். அதிலும் சமீபத்தில் 2022 உலகக் கோப்பை அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 33 பந்துகளில் 63 ரன்களை ஹர்திக் சேர்த்தும் இந்திய அணி தோல்வி அடைந்தது. அடுத்ததாக மொஹாலியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 30 பந்துகளில் 71 ரன்களை பாண்டியா விளாசி இருந்தார். 2022ல் சவுத்தாம்டனில் இங்கிலாந்துக்கு எதிராக பாண்டியாவின் 33 பந்துகளில் 51 ரன்கள் அரைசதத்தால் இந்திய அணி அபார வெற்றி பெற்றிருந்தது. இந்த 3 அரைசதத்துக்குப்பின் நேற்று ஹர்திக் 4வது அரைசதத்தை அடித்தார்.

இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் ஆடியுள்ள ஹர்திக் ஒரு அரைசதம் உள்பட 89 ரன்கள் சேர்த்துள்ளார், பந்துவீச்சில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டராக ஜொலித்துள்ளார். ஹர்திக் பாண்டியா பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் ஃபார்முக்கு வந்துவிட்டால் இந்திய அணிக்கு வலுவான, தடுக்கமுடியாத ஆயுதமாக மாறிவிடுவார்.

வங்கதேச கேப்டன் ஷாண்டோ டாஸ் வென்ற இந்த விக்கெட்டைப் பார்த்துவிட்டு 160 ரன்கள் சேர்த்தாலே நல்ல ஸ்கோர் என்று கூறியிருந்தார். ஆனால், அதே விக்கெட்டில் இந்திய அணி 196 ரன்கள் சேர்த்தமைக்கு ஹர்திக்கின் பங்களிப்பு மிக முக்கியக் காரணமாகும்.

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

வங்கதேச அணியின் பேட்டிங் மோசம்

வங்கதேச தொடக்க பேட்டர்கள் இதுவரை இந்த டி20 போட்டிகளில் 13 ரன்களுக்கு மேல் நிலைத்திருக்கவில்லை. இந்த முறைதான் 35 ரன்கள்வரை பார்ட்னர்ஷிப் அமைத்தனர். தமிம் ஹசன் மட்டும் 5 இன்னிங்ஸில் இருமுறை டக்அவுட் ஆகியிருந்தார். இந்த முறை 29 ரன்கள் வரை தாக்குப்பிடித்து குல்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். பவர்ப்ளே முடிவுக்குள் லிட்டன் தாஸ் 13 ரன்னில் பாண்டியா பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.பாண்டியா வீசிய ஸ்லோ பாலில் மிட்விக்கெட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்து தாஸ் ஆட்டமிழந்தார். பவர்ப்ளேயில் ஒரு விக்கெட் இழப்புக்கு 42 ரன்கள் சேர்த்த வங்கதேசம் 10 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 62 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

பவர்ப்ளே ஓவர்கள் முடிந்தபின் குல்தீப், அக்ஸர் படேல், ஜடேஜா என மும்முனைத் தாக்குதலில் வங்கதேச பேட்டர்களால் ரன் சேர்க்கமுடியவில்லை. குறிப்பாக குல்தீப் யாதவின் ரிஸ்ட் ஸ்பின்னை பேட் செய்வது வங்கதேச பேட்டர்களுக்கு கடினமாக இருந்தது. குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சில் சிக்கிய பேட்டர்கள் மீளவில்லை. ஹிர்தாய் 4 ரன்னில் குல்தீப் பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். அனுபவ வீரர் சஹிப் அல் ஹசன் வந்தவேகத்தில் சிக்ஸர், பவுண்டரி அடித்து குல்தீப் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவுக்கு கைகொடுத்த ஹர்திக், குல்தீப்

ஆன்டிகுவா ஸ்லோ விக்கெட்டில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு ஹர்திக் பாண்டியாவின் குறிப்பிடத்தகுந்த அரைசதமும், குல்தீப் யாதவின் சுழற்பந்துவீச்சும் முக்கியக் காரணமாக அமைந்தது. அதிலும் தேவைப்படும் நேரத்தில் அரைசதம் அடித்து 27 பந்துகளில் 50 ரன்களுடன்(3சிக்ஸர்,4பவுண்டரி) இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஹர்திக் பாண்டியா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

குல்தீப் யாதவ் 4 ஓவர்கள் வீசி 19 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி தன்னை நிரூபித்துள்ளார். பும்ராவின் துல்லியமான பந்துவீச்சு தொடர்வதால் 4 ஓவர்களில் 13 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பந்துவீச்சில் குல்தீப், பும்ரா இருவருமே மிகுந்த கட்டுக்கோப்புடன் பந்துவீசினர். இருவரும் 8 ஓவர்கள் வீசிய நிலையில் 26 டாட் பந்துகளை ஏறக்குறைய 4.2 ஓவர்களை டாட் பந்துகளாக வீசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

அரைசதம், சதம் தேவையில்லை

வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில் “ எங்களிடம் இருந்து எதை வெளிப்படுத்த வேண்டும் என்பதை அறிந்துள்ளோம் அதை வெளிப்படுத்தினோம். தேவையான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறோம். சூழலை ஏற்றுக்கொண்டு காற்றின் வேகம், திசைக்கு ஏற்றார்போல் எங்கள் ஆட்டத்தை மாற்றிக்கொண்டோம். அனைத்து 8 பேட்டர்களும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர்.

எங்களின் டாப் ஸ்கோர் 50 ரன்கள்தான், ஆனாலும் 196 ரன்கள் சேர்த்துள்ளோம். டி20 போட்டிகளைப் பொருத்தவரை பெரிதாக அரைசதம், சதங்கள் தேவையில்லை. பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தாலே போதும். அப்படித்தான் எங்கள் ஆட்டமும் இருந்தது. ஹர்திக் ஆட்டம் சிறப்பாக இருந்தது, ஸ்கோரை நல்ல நிலைக்கு கொண்டுவர அவரின் பேட்டிங் உதவியது. அவரால் என்ன செய்ய முடியும் என்பது எங்களுக்குத் தெரியும். அதை சிறப்பாக செய்துவிட்டார். ஹர்திக் பந்துவீச்சிலும், பேட்டிங்கிலும் இந்திய அணிக்கு முக்கியமான வீரர்” எனத் தெரிவித்தார்

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

பேட்டர்கள் மீது குற்றச்சாட்டு

தோல்விக்குப் பின் வங்கதேச கேப்டன் ஷாண்டோ கூறுகையில் “ 160 முதல் 170 ரன்களுக்குள் சுருட்டிவிடுவோம் என நினைத்தோம் இந்த ஸ்கோரை எங்களால் சேஸிங்கும் செய்ய முடியும். ஆனால், இந்திய அணி பேட் செய்தவிதம் அருமையாக இருந்தது. காற்றின் வேகம், திசையைக் கணித்து ஷாட்களை ஆடினர் என நினைக்கிறேன்.

எங்களிடம் நல்ல பேட்டர்கள் பலர் இருந்தும் யாரும் முழு உறுதியுடன் பேட் செய்யவில்லை, தேவைப்படும் நேரத்தில் ஆடவில்லை. ஒவ்வொரு போட்டியிலும் பங்களிப்பு செய்ய முயல்கிறேன். தன்ஷிம் சஹிப் இந்தத் தொடரில் சிறப்பாக செயல்பட்டு பந்துவீசி வருகிறார். ரிஷத் சிறந்த லெக் ஸ்பின்னர் என்பதை நிரூபித்துள்ளார்” எனத் தெரிவித்தார்

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

இந்தியா அரையிறுதிக்கு முன்னேறுமா?

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் 2.425 என வலுவான நிகர ரன்ரேட்டில் முதலிடத்தில் இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி ஒரு போட்டியில் வென்று 2 புள்ளிகளுடன் 2.471 என இந்தியாவை விட வலுவான நிகர ரன்ரேட்டில் இருக்கிறது.

ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலியா வென்றால், 4 புள்ளிகளுடன் நிகர ரன்ரேட்டில் இந்தியாவை முந்தி முதலிடத்தைப் பிடித்துவிடும். இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் வெல்லும் அணிகளைப் பொருத்துதான் குரூப்-1 பிரிவில் எந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும், அரையிறுதியில் எந்த அணியுடன் மோதும் என்பது தெரியவரும்.

இன்று நடக்கும் சூப்பர்-8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை ஆஸ்திரேலிய அணி வென்றுவிட்டால், குரூப்-1 பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா இரு அணிகள் அரையிறுதிக்குள் செல்லும். ஒருவேளை ஆப்கானிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோற்றால்தான் அனைத்துக் கணிப்புகளும் மாறக்கூடும்.

IND vs BAN

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவை ஆட்டிப் படைக்கும் பலவீனம்

டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்கியதிலிருந்து இதுவரை விராட் கோலி, கேப்டன் ரோஹித் சர்மா பெரிய ஸ்கோர் ஏதும் அடிக்கவில்லை. அமெரிக்காவில் நடந்த ஆட்டங்களில் ரோஹித் மட்டுமே ஒரு ஆட்டத்தில் சிறப்பாக பேட் செய்தார், ஆனால், இதுவரை கோலியிடம் இருந்து சிறந்த ஆட்டம் வெளிப்படவில்லை. இருவரும் இந்திய அணிக்காக பல ஆட்டங்களை வென்றுகொடுத்திருந்தாலும், ஆனால், டி20 உலகக் கோப்பைத் தொடரில் இதுவரை இருவரும் ஆகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.

விக்கெட்டுகளுக்கு இடையே ரன் ஓடுவதில் இருவருக்கும் இடையே குழப்பம் நீடிக்கிறது. மிட்விக்கெட்டில் தட்டிவிட்டால் ரன் எடுக்கலாமா என பலமுறை ரோஹித் யோசித்தார். பலமுறை இருவரும் குழப்பத்துடனே ரன் ஓடலாமா வேண்டாமா என்று யோசித்தே ஓடினர். தொடக்க வீரர்கள் வலிமையான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தால்தான், நடுவரிசை பேட்டர்களுக்கு அழுத்தம் இல்லாமல் சுதந்திரமான மனநிலையில் பேட் செய்ய முடியும். ஆனால், இந்த டி20 உலகக் கோப்பைத் தொடர் முழுவதும் இந்திய அணியின் தொடக்க கூட்டணி பெரிதாக வலுவான அடித்தளத்தை அமைக்கவில்லை. இதனால் நடுவரிசை பேட்டர்களின் பங்களிப்போடுதான் ரன்களைச் சேர்த்து வெற்றி பெற்று வருகிறது.

ரோஹித், கோலி இருவரில் யார் ஃபார்மில் இல்லை என்பது தெரியாமல் ஒவ்வொரு போட்டியிலும் மாறி, மாறி விரைவாக ஆட்டமிழந்து வருவது அணிக்கு ஒரு பெரிய பலவீனமாகும். கோலியிடமிருந்தோ, ரோஹித்திடமிருந்த இதுவரை “மேட்ச்வின்னிங் இன்னிங்ஸ்” வெளிப்படவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாகும். இன்னும் ஒரு சூப்பர்-8 ஆட்டம், அரையிறுதி இருப்பதால், இருவரிடம் இருந்து சிறந்த ஆட்டம் உறுதியாக வெளிப்படும் என்று நம்பலாம்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)