ஆஸ்திரேலியாவிடம் தோற்றாலும் இந்திய அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியுமா?

IND vs AUS

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. சூப்பர் 8 சுற்றில் குரூப்-2 பிரிவில் இருந்து இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறிவிட்டன. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா ஆகிய இரு அணிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன. ஆனால், குரூப் -ஒன்றில் இருந்து எந்தெந்த அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பது இன்னும் இறுதியாகவில்லை.

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் அரையிறுதிக்குச் செல்லும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆப்கானிஸ்தானிடம் அடைந்த தோல்வியால் ஆஸ்திரேலியா நிலை திரிசங்கு நிலையில் விடப்பட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆப்கானிஸ்தானின் வெற்றி, அரையிறுதிக்கான வாய்ப்பை 4 அணிகளுக்கும் விசாலமாக்கி, இந்திய அணியின் அரையிறுதி வாய்ப்பையும் உறுதியில்லாத ஒன்றாக்கிவிட்டது.

குரூப் 1 - இந்திய அணிக்கு என்ன வாய்ப்பு?

அரையிறுதிக்கு போட்டா போட்டி: ஒவ்வொரு குரூப்பிலும் எந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு? விரிவான பார்வை

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணி தற்போது 2 போட்டிகளில் வென்று 4 புள்ளிகளுடன் 2.425 நிகர ரன் ரேட்டில் வலுவாக இருக்கிறது. இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற வேண்டும் என்பதற்கு எந்தவிதமான சிக்கலின்றி ஒரே வழி, ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தினால் 6 புள்ளிகளுடன் சிக்கலின்றி முதலிடத்துடன் அரையிறுதி செல்லும்.

ஒருவேளை இந்திய அணி கடைசி லீக்கில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்தால் இந்தியா, ஆஸ்திரேலியா தலா 4 புள்ளிகளுடன் இருக்கும். கடைசி லீக்கில் வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் வென்றால் 4 புள்ளிகளுடன் இருக்கும். 3 அணிகளும் 4 புள்ளிகள் பெற்றால் நிகர ரன்ரேட் அடிப்படையில் இரு அணிகள் அரையிறுதிக்குள் செல்லும்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியைவிட வலுவான நிகர ரன்ரேட்டில் 2.425 என இருப்பதால், இந்திய அணியை வெளியேற்ற வேண்டுமானால், ஆஸ்திரேலிய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வெல்ல வேண்டும் அதேசமயம், வங்கதேச அணியை 83 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெல்ல வேண்டும். இது நடந்தால்தான் இந்திய அணியை வெளியேற்ற முடியும்.

ஒருவேளை ஆப்கானிஸ்தானை வங்கதேசம் அணி வென்றாலே இந்தியா, ஆஸ்திரேலிய அணியிடம் தோற்றும்கூட இரு அணிகளும் 4 புள்ளிகளுடன் தானாகவே அரையிறுதி செல்லும். ஆப்கானிஸ்தான், வங்கதேசம் தலா 2 புள்ளிகளுடன் முடிக்கும்.

ஆஸ்திரேலியாவை முந்துமா ஆப்கானிஸ்தான்?

அரையிறுதிக்கு போட்டா போட்டி: ஒவ்வொரு குரூப்பிலும் எந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு? விரிவான பார்வை

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வென்றால், ஆஸ்திரேலிய அணியின் நிகர ரன்ரேட்டை முறியடிக்க வங்கதேச அணியை 36 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் வெல்ல வேண்டும். இந்திய அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி ஒருவேளை கடைசிப்பந்தில் வென்றால், வங்கதேசத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்ஸில் 160 ரன்கள் சேர்த்து, 15.4 ஓவருக்குள் சுருட்டினால் ஆஸ்திரேலிய அணியைவிட நிகர ரன்ரேட்டில் உயரலாம்.

3 அணிகள் போட்டா போட்டி

இந்திய அணி ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திவிட்டால் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து அரையிறுதி செல்லும். அதேசமயம், ஆப்கானிஸ்தானை வங்கதேசம் வீழ்த்திவிட்டால் 2 புள்ளிகள் பெறும். ஆக ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் தலா 2 புள்ளிகள் பெற்று நிகர ரன்ரேட்டுக்கு போட்டியிடும்.

இதில் இந்த 3 அணிகளில் ஆஸ்திரேலிய அணியின் நிகர ரன்ரேட் வலுவாக 0.223 என இருக்கிறது. ஆப்கானிஸ்தான் அரையிறுதி செல்ல, ஆஸ்திரேலியா 31 ரன்களில் இந்தியாவிடம் தோற்க வேண்டும், இது நடந்தால் ஆப்கானிஸ்தான் ஒரு ரன்னில் வங்கதேசத்திடம் தோற்றாலும் அரையிறுதி செல்லும். ஆஸ்திரேலியா 31 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றதால், நிகர ரன்ரேட் ஆப்கானிஸ்தானுக்கும் குறைந்து வெளியேறிவிடும்.

வங்கதேச அணிக்கு வாய்ப்பு உள்ளதா?

குரூப் ஒன்றில் கடைசி இடத்தில் உள்ள வங்கதேசத்திற்குக் கூட அரையிறுதி வாய்ப்பு இல்லாமல் இல்லை.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வங்கதேசம் 31 ரன் வித்தியாசத்தில் வெல்லும் பட்சத்தில், இந்தியா ஆஸ்திரேலியாவை வென்றால் வங்கதேசம், ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் ஆகிய 3 அணிகளும் தலா 2 புள்ளிகள் பெற்றிருக்கம். அவ்வாறான சூழலில் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் அரையிறுதியில் நுழையலாம்.

அரையிறுதிக்கு போட்டா போட்டி: ஒவ்வொரு குரூப்பிலும் எந்த இரு அணிகளுக்கு வாய்ப்பு? விரிவான பார்வை

பட மூலாதாரம், Getty Images

ஆஸ்திரேலியா வென்றால்?

இ்ந்திய அணியை ஆஸ்திரேலிய அணி வென்று, அதேசமயம், ஆப்கானிஸ்தான் அணியை வங்கதேசம் வீழ்த்தினால், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் 4 புள்ளிகளுடன் அரையிறுதி செல்லும். ஆப்கன், வங்கதேசம் தலா 2புள்ளிகளுடன் வெளியேறும்.

ஒருவேளை ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தினால், வங்கதேச அணியை ஆப்கானிஸ்தான் வென்றால், இந்திய அணி 6 புள்ளிகளுடனும், ஆப்கானிஸ்தான் 4 புள்ளிகளுடனும் அரையிறுதி செல்லும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)