டி20 உலகக்கோப்பை: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள் எவை?

பட மூலாதாரம், Getty Images
நடப்பு உலகக்கோப்பை போட்டிகளில் அதிர்ச்சிகரமான முடிவுகள் என்பது இயல்பான ஒன்றாகி வருகின்றன. கத்துக்குட்டி அணிகளின் சவால் தரும் ஆட்டத்தால் முன்னணி அணிகள் பலவும் தொடரை விட்டே வெளியேறியுள்ளன.
ஏ பிரிவில் இந்தியா, அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற, பாகிஸ்தான், கனடா, அயர்லாந்து ஆகிய 3 அணிகளும் வெளியேற்றப்பட்டு விட்டன.
பி பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளும், சி பிரிவில் ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளும், டி பிரிவில் இருந்து தென் ஆப்ரிக்காவும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இங்கிலாந்து தகுதி
பி பிரிவில் இடம் பெற்றுள்ள இங்கிலாந்து 4 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளைப் பெற்றுள்ளது. அந்த அணியின் நிகர ரன் ரேட் 3.611 ஆக இருக்கிறது.
இங்கிலாந்துடன் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெற போட்டியிட்ட ஸ்காட்லாந்து அணியும் 2 வெற்றிகளுடன் 5 புள்ளிகளை பெற்றுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்காட்லாந்து தோற்றுப் போனதால் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துவிட்டது.
இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றதால், நிகர ரன் ரேட் அடிப்படையில் நடப்புச் சாம்பியன் இங்கிலாந்து அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசம், நெதர்லாந்து அணிகள் கடும் போட்டி
டி பிரிவில் தென் ஆப்ரிக்கா அடுத்த சுற்றுக்கு முன்னேறிவிட்ட நிலையில், இரண்டாவது இடத்திற்கு வங்கதேசம் - நெதர்லாந்து அணிகள் போட்டியிடுகின்றன.
தற்போதைய நிலையில் வங்கதேசம் 3 போட்டிகளில் 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்றுள்ளது. லீக் சுற்றின் கடைசி ஆட்டத்தில் வெற்றி பெற்றாலோ, அல்லது ஆட்டம் தடைபட்டாலோ கூட வங்கதேசம் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிவிடும்
மறுபுறம், நெதர்லாந்து அணியோ சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற தனது அடுத்த ஆட்டத்தில் இலங்கையை வெல்ல வேண்டும். அதேநேரத்தில், வங்கதேச அணி தனது கடைசி ஆட்டத்தில் நேபாளத்திடம் தோற்க வேண்டும். இவை இரண்டும் நடந்தால் மட்டுமே நெதர்லாந்து அணி அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும்.

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை வெளியேற்றம்
ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த பாகிஸ்தானும், பி பிரிவில் இடம் பெற்றிருந்த நியூசிலாந்து அணியும், டி பிரிவில் இலங்கை அணியும் கத்துக்குட்டிகளின் சவாலை சமாளிக்க முடியாமல் டி20 உலகக்கோப்பை தொடரை விட்டே வெளியேற்றப்பட்டுள்ளன.
நிகர ரன் ரேட் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?
ரன்-ரேட் என்பது ஒரு அணி தனது முழு இன்னிங்ஸிலும் ஒரு ஓவருக்கு அடித்த சராசரி ரன்களின் எண்ணிக்கை ஆகும். உதாரணமாக, 20 ஓவர்களில் 140 ரன்கள் என்பது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கு சமம்.
மற்ற அணியின் ரன் ரேட்டிலிருந்து எதிரணியின் ரன் ரேட்டைக் கழிப்பதன் மூலம் நிகர ரன் ரேட் கணக்கிடப்படுகிறது.
எனவே வெற்றி பெறும் அணி நேர்மறை நிகர ரன் ரேட்டையும், தோல்வியுற்ற அணி எதிர்மறை நிகர ரன் ரேட்டையும் கொண்டிருக்கும்.
ஒரு அணி 20 ஓவர்களையும் முழுமையாக ஆடாமல் முன்கூட்டியே ஆட்டமிழந்தால், அந்த அணியின் ரன் ரேட் 20 ஓவர் அடிப்படையிலேயே கணக்கிடப்படும்.
இவ்வாறு, ஒவ்வொரு ஆட்டத்திலும் கிடைக்கும் நிகர ரன்ரேட் அடிப்படையிலேயே லீக் சுற்றில் அந்த அணியின் ஒட்டுமொத்த ரன் ரேட் கணக்கிடப்படும்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்லுமா?
இதுவரை, ஆறு அணிகள் முந்தைய டி20 போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன.
இந்தியா இரண்டாவது முறையாகப் பட்டம் வெல்வதை இலக்காகக் கொண்டுள்ளது. 2007ஆம் ஆண்டு நடந்த முதல் போட்டியில் இந்திய அணி அற்புதமான வெற்றியைப் பதிவு செய்தது. இந்திய அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடி வெற்றி பெற்றது மறக்க முடியாத நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
கடந்த 2014இல் இந்தியா மீண்டும் பட்டத்தை வெல்லும் சூழலில் இருந்தது. ஆனால் இலங்கைக்கு எதிரான அந்தப் போட்டியில் இரண்டாம் இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது.
பாகிஸ்தான் 2009இல் ஒருமுறை வெற்றி பெற்றது. அதன் பிறகு மூன்று முறை இறுதிப் போட்டி வரை வந்துள்ளது.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணி, 2010 மற்றும் 2022இல் போட்டிகளில் வெற்றி பெற்ற பிறகு, டி20 உலகக்கோப்பையில் மூன்றாவது பட்டத்தைப் பெற இலக்கு நிர்ணயித்துள்ளனர். போட்டிகளை நடத்தும் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் 2012 மற்றும் 2016இல் இரண்டு பட்டங்களைப் பெற்றுள்ளது. 2021இல் நடந்த போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












