டி20 உலகக் கோப்பை: கோலி தொடக்க ஆட்டக்காரராக இறங்குவதை விமர்சிக்கும் ரசிகர்கள் - என்ன காரணம்?

விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

1, 4, 0…

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் இதுவரை இந்திய அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் விராட் கோலி எடுத்த ரன்கள் இவை.

ஜூன் 12, புதன்கிழமை, நியூயார்க்கில் உள்ள நாசாவ் கவுண்டி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்குள் விராட் கோலி பேட்டிங் செய்ய வந்தார். இந்த தினம் அவரின் வாழ்வின் மற்றொரு முக்கியமான நாள். ​​ கோலி டி20 கிரிக்கெட்டில் தனது முதல் போட்டியை விளையாடி 14 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

அயர்லாந்து மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் விளையாட முடியாமல் போனதால், கிரிக்கெட் ரசிகர்களும், கோலியின் தீவிர ரசிகர்களும் புதிய அணியான அமெரிக்காவுக்கு எதிராக கோலியின் பேட்டிங் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்த்தனர்.

ஆனால் அமெரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் கோலி `கோல்டன் டக்’ அவுட் ஆனார்.

வாட்ஸ்ஆப்

முதல் ஓவரின் இரண்டாவது பந்தில் அவர் அமெரிக்க வீரர் செளரப் நேத்ரவால்கரின் பந்துவீச்சில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இருப்பினும், இந்திய அணி அமெரிக்காவை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி `சூப்பர்-8’ ல் இடம் பிடித்துள்ளது.

இந்திய அணி வெற்றி பெற்ற போதிலும், விமர்சகர்கள் கோலியின் ஆட்டத்தில் அதிருப்தி அடைந்து, இந்திய அணியின் வியூகம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். கேப்டன் ரோகித் சர்மாவுடன் விராட் கோலி தொடக்க பேட்ஸ்மேனாக களமிறங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்படுகிறது.

டி-20 உலகக் கோப்பை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி - தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியை களமிறக்கியதால் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

முந்தைய உலகக் கோப்பை போட்டிகளில் கோலியின் ஆட்டம் எப்படி இருந்தது?

23 அக்டோபர் 2022.

டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில், விராட் கோலி இந்தியாவை அபார வெற்றியடைய வைத்த தினம் இதுவாகும்.

விராட் கோலி இறுதிவரை களத்தில் நின்று விளையாடி இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். அந்த ஆட்டத்தில் கோலி 53 பந்துகளில் 82 ரன்கள் எடுத்தார்.

இரண்டு வெவ்வேறு டி20 உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த ஒரே வீரர் கோலி .

2014ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் விராட் அதிகபட்சமாக 319 ரன்கள் எடுத்திருந்தார். அதே நேரத்தில், 2022 ஆஸ்திரேலியாவில் நடந்த உலகக் கோப்பையில், விராட் கோலி அதிகபட்சமாக 296 ரன்கள் எடுத்தார்.

கடந்த மாதம் முடிவடைந்த இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) தொடரில் கூட விராட் கோலி அதிக ரன்கள் குவித்தார்.

இருப்பினும், அந்த சமயத்தில் அவரது மெதுவான பேட்டிங் பற்றி அதிகம் விமர்சிக்கப்பட்டது, கோலி பல போட்டிகளில் வேகமாக ரன்களை அடித்ததன் மூலம் தனது ஸ்டிரைக் ரேட்டை 150க்கு மேல் அதிகரித்திருந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

ஐபிஎல்லின் இரண்டு வெவ்வேறு சீசன்களில் 700 ரன்களுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை கோலி பெற்றார்.

ஐபிஎல் போட்டிகளில் கோலியின் ஆட்டத்தை கண்டு டி-20 உலகக் கோப்பையில் மூன்றாவது வீரராக இல்லாமல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க அவருக்கு பொறுப்பு வழங்கப்பட்டது.

ஆனால் கோலிக்கு இன்னும் அமெரிக்க ஆடுகளம் பழகவில்லை போலும்.

அடுத்ததாக ஜூன் 15 சனிக்கிழமை அன்று நடைபெறும் குழுநிலை பிரிவின் கடைசி ஆட்டத்தில் இந்தியா கனடாவை எதிர்கொள்கிறது.

டி-20 உலகக் கோப்பை: இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி - தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலியை களமிறக்கியதால் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்

பட மூலாதாரம், Getty Images

கோலியின் பேட்டிங் வரிசையை மாற்றியதால் அதிருப்தியில் ரசிகர்கள்

அமெரிக்க அணிக்கு எதிரான போட்டிக்கு பிறகு, "விராட் கோலி விரைவில் பெரியளவில் ரன்களை குவிப்பார்” என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அவர் தன் சமூக வலைதளத்தில் "ஆட்டம் நன்றாக முடிந்தது. தற்போது சூர்யாவும் துபேயும் ரன் குவித்ததால், நம் அணி முன்பை விட சிறப்பான ஆட்டத்தை விளையாடி இருக்கின்றனர். அடுத்து ஜட்டு (ஜடேஜா) மட்டுமே ஃபார்முக்கு வர வேண்டும், இதனால் ஒட்டுமொத்த அணியும் சிறப்பாக விளையாட முடியும். விராட் கோலி விரைவில் பெரிய ஸ்கோரை பெறுவார், காத்திருங்கள்" என்று பதிவிட்டார்.

மறுபுறம், ‘ஓப்பனிங்’ பேட்ஸ்மேனாக களமிறங்கிய விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஜோடியை குறித்து பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

விராட் கோலி மூன்றாவதாக களமிறங்க வேண்டும் என்று முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைஃப் கருதுகிறார். போட்டி முடிந்ததும் முகமது கைஃப் சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

கைஃப் தனது பதிவில், "மூன்றாவதாக விளையாடுவதன் நன்மை என்னவென்றால், நீங்கள் வெளியில் இருந்து உட்கார்ந்து விளையாட்டின் போக்கைப் புரிந்து கொள்ள முடியும். களத்தில் இருக்கும் விரர்களில் செயல்திறனை நீங்கள் புரிந்து கொள்ளலாம். ஆடுகளத்தை பற்றியும் புரிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது." என்று குறிப்பிட்டார்.

மேலும், "இதுபோன்ற விஷயங்களைப் புரிந்து கொண்டு ஃபார்முக்கு வருவதில் விராட் கோலி சிறப்பானவர். இங்கு விக்கெட்டுகள் விழாமல் கவனமாக விளையாட வேண்டும். மூன்றாவதாக களமிறங்கினால் கொஞ்சம் மெதுவாக விளையாட வாய்ப்பு கிடைக்கும். மூன்றாம் இடத்தில் விளையாடிய விராட் உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். விராட் கோலிக்கு வெளியில் இருந்து பந்துவீச்சை புரிந்துக் கொள்ள வாய்ப்பு அளிக்க வேண்டும். அவர் மூன்றாவதாக மட்டுமே விளையாட அனுமதிக்கப்பட வேண்டும் என்று நான் நம்புகிறேன்.” என்று பதிவிட்டார்.

கோலி அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்த போது, ஒரு ரசிகர் சமூக வலைத்தளத்தில், "ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி பார்ட்னர்ஷிப்பில் அயர்லாந்துக்கு எதிராக 22 ரன்கள், பாகிஸ்தானுக்கு எதிராக 12 ரன்கள், டி20 உலகக் கோப்பையில் விளையாடிய தொடக்க ஆட்டக்காரர்களாக ஒரு ரன் என எடுத்துள்ளனர். இனி ரோகித் சர்மாவுடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அல்லது சஞ்சு சாம்சன் ஆகியோரை தொடக்க வீரராக களமிறங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது, விராட் கோலி மூன்றாவது வீரராக பேட் செய்ய வேண்டும்.

``மோசமாக அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது, ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக விராட் கோலி ஏன் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்குகிறார்? அமெரிக்காவிடம் தோற்றிருந்தால் நல்லது.” என்று காட்டமாக மற்றொரு ரசிகர் பதிவிட்டிருந்தார்.

மற்றொரு பயனர் , "ஜெய்ஸ்வால் அல்லது சஞ்சு சாம்சனை மீண்டும் ரோகித் ஷர்மாவுடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறக்க வேண்டும். விராட் கோலி மூன்றாவதாக களமிறக்கினால் சிறப்பாக விளையாடுவார். இந்தியா அணி அவரை ஒரு தொடக்க ஆட்டக்காரராக களமிறக்கி அவரின் ஆட்டத்தை வீணாக்கி வருகிறது."

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)