காஸா போர் நிறுத்தம்: அமெரிக்கா நடவடிக்கையால் நெதன்யாகுவுக்கு என்ன நெருக்கடி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜெரிமி போவென்
- பதவி, சர்வதேச ஆசிரியர், பிபிசி
சர்வதேச அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்த ராஜதந்திரிகள், தினமும் ஒரே மாதிரியான வாழ்க்கையை வாழ வேண்டியிருந்தால், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது உணர்ந்ததைப் போலவே அவர்களும் உணர்வார்கள்.
பிளிங்கனின் விமானம் தரையிறங்கும் போது, அவர் சோர்வாகவும் சலிப்பாகவும் உணர்ந்திருக்கக் கூடும். அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு கடந்த எட்டு மாதங்களில் மத்திய கிழக்கிற்கு பிளிங்கன் மேற்கொண்ட எட்டாவது பயணம் இதுவாகும்.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகளின் அரசியல் மற்றும் பாலத்தீன கைதிகளுக்கு பதிலாக இஸ்ரேலிய பணயக் கைதிகளை பரிமாறிக் கொள்வது ஆகியவை மிகவும் சிக்கல் நிறைந்த செயல்பாடுகள்.
ஆனால் தற்போது அது முன்னெப்போதையும் விட மேலும் சிக்கலானதாக மாறியுள்ளது, ஏனெனில் இஸ்ரேலின் எதிர்க்கட்சித் தலைவர் பென்னி காண்ட்ஸ் தனது அரசியல் கூட்டாளியான காடி ஐசென்கோட் (Gadi Eisenkot) உடன் அதிபர் நெதன்யாகுவின் போர்க்குழு அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
இருவருமே ஓய்வுபெற்ற ஜெனரல்கள், அவர்கள் தலைமைத் தளபதிகளாக இஸ்ரேல் பாதுகாப்புப் படையை வழிநடத்தினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அமெரிக்காவின் முன்மொழிவு மற்றும் நெதன்யாகுவுக்கு நெருக்கடி
பென்னி காண்ட்ஸ் போர்க்குழு அமைச்சரவையில் அமெரிக்காவின் விருப்பமான பிரமுகராக இருந்தார். ஆனால் இப்போது அவர் மீண்டும் எதிர்க்கட்சியில் இருப்பதால், நாட்டில் புதிய தேர்தல்களைக் கோருகிறார்.
இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்று வாக்கெடுப்பு நடத்துபவர்கள் மத்தியில் முதன்மையான தேர்வாக இருப்பது பென்னி காண்ட்ஸ் தான். ஆனால் நெதன்யாகு தனது கூட்டணியுடன் சமரசமாக இருக்கும் வரை பாதுகாப்பாக இருப்பார். ஏனெனில் 120 உறுப்பினர்களைக் கொண்ட இஸ்ரேலிய நாநாடாளுமன்றத்தில் பெரும்பான்மைக்குத் தேவையான 64 இடங்களை இந்த கூட்டணி அவருக்கு வழங்குகிறது.
இந்த கூட்டணி, தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச் தலைமையிலான இரண்டு தீவிர தேசியவாத பிரிவுகளின் ஆதரவை சார்ந்துள்ளது. இதை குறிவைத்து தான் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளிங்கனின் வியூகம் இஸ்ரேலிய அரசியலுடன் மோத நினைக்கிறது.
காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நம்புகிறார். அதை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்வது பிளிங்கனின் வேலை. அதே சமயம் காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர ஒப்புக்கொள்ளும் பட்சத்தில் நெதன்யாகுவின் அரசாங்கம் கவிழ்க்கப்படும் என்று பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் அச்சுறுத்தியுள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
இந்த தலைவர்கள் தீவிர யூத தேசியவாதிகள், எனவே ஹமாஸ் அழிக்கப்படும் வரை போர் தொடர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
காஸா உட்பட மத்தியதரைக் கடலுக்கும் ஜோர்டான் நதிக்கும் இடையே உள்ள அனைத்துப் பகுதிகளும் யூதர்களின் நிலம் என்று அவர்கள் நம்புகிறார்கள். யூதர்கள் அங்கே குடியேற வேண்டும் என்றும் பாலத்தீனர்கள் தானாக முன்வந்து காஸாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
முந்தைய போர் நிறுத்தத் திட்டங்களைப் போல இந்தத் திட்டமும் வீண் போகக் கூடாது என்பதற்காக ஆண்டனி பிளிங்கன் இம்முறை மத்திய கிழக்கை அடைந்துவிட்டார். இதற்கு முன்னர் ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா மூன்று போர்நிறுத்த தீர்மானங்களை தடுத்து நிறுத்தியது. ஆனால் தற்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடன் போர் நிறுத்தத்தை விரும்புகிறார்.
இது அமெரிக்காவின் ஒப்பந்தமா?

பட மூலாதாரம், Getty Images
அதிபர் பைடன், மே 31 அன்று, ஒரு உரையில், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான இஸ்ரேலின் புதிய முன்மொழிவை ஏற்குமாறு ஹமாஸிடம் வேண்டுகோள் விடுத்தார்.
தற்போது ஐநா தீர்மானத்தின் ஆதரவை பெற்றுள்ள இந்த ஒப்பந்தம் மூன்று பகுதிளாக உள்ளது. முதலாவதாக, ஆறு வார போர்நிறுத்தத்தை பற்றியது. அந்த சமயத்தில், காஸாவுக்கான மனிதாபிமான உதவிகள் அதிகரிக்கப்படும் மற்றும் சில இஸ்ரேலிய பணயக்கைதிகளும் பாலத்தீனிய கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள்.
அதன் பிறகு, ஒப்பந்தத்தின்படி அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்படுவார்கள். இறுதியில் காஸாவின் மறுசீரமைப்புப் பணிகள் நடக்கும்.
பைடன் கூறுகையில், இஸ்ரேலியர்கள் இனி ஹமாஸை எண்ணி பயப்பட வேண்டாம். ஏனெனில் அவர்களால் இனி அக்டோபர் 7-ஐ போன்ற சம்பவத்தை (தாக்குதல்) மீண்டும் நிகழ்த்த முடியாது என்றார்.
அதிபர் பைடனும் அவரது ஆலோசகர்களும் இந்த பணியில் சிக்கல்கள் இருக்கும் என்பதை அறிவர். காஸாவில் இருந்து இஸ்ரேல் வெளியேறி, போருக்கு முடிவு கட்டுவது உறுதி செய்யப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தத்துக்கு சம்மதிக்கப்படும் என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
கடந்த வாரம், காஸாவின் நுசிராத் அகதிகள் முகாமில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி, அதன் நான்கு பணயக்கைதிகளை விடுவித்தது. இதில் பல பாலத்தீன பொதுமக்கள் கொல்லப்பட்டனர். காஸாவில் ஹமாஸ் நடத்தும் சுகாதார அதிகாரிகள் கூற்றுபடி 274 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) இறந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் குறைவாக இருப்பதாக கூறுகிறது. இந்த சம்பவம் ஹமாஸ் முன்வைக்கும் கோரிக்கையை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
இஸ்ரேலில் உள்ள பல தரப்பினர் தனது முன்மொழிவை எதிர்ப்பார்கள் என்பதும் பைடனுக்குத் தெரியும்.
எனவே, "இந்த ஒப்பந்தத்தில் உறுதியாக நிற்க வேண்டும் என்று இஸ்ரேல் தலைமையை வலியுறுத்தியுள்ளேன். எவ்வளவு அழுத்தம் வந்தாலும் பரவாயில்லை” என அவர் தனது உரையில் தெரிவித்தார்.
அமைதி காக்கும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா எதிர்பார்த்தது போல், பைடனின் போர்நிறுத்த முன்மொழிவை பென் க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் கடுமையாக எதிர்த்தனர். இந்த ஒப்பந்தம், தாங்கள் அங்கம் வகிக்காத போர்க்குழு அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது அவர்களுக்கு முக்கியமல்ல.
இருப்பினும், பென்னி காண்ட்ஸ் ராஜினாமா செய்த பின்னரே, பென் க்விர் போர்க்குழு அமைச்சரவையில் இடம்பெற விருப்பம் தெரிவித்தார்.
ஏற்கெனவே எதிர்பார்த்தபடி, போர்நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டால், நெதன்யாகுவின் கூட்டணி அரசாங்கத்தைக் கவிழ்ப்பேன் என்று அவர் எச்சரித்தார்.
இதுவரை, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இரண்டும் பைடனின் போர்நிறுத்த முன்மொழிவில் எந்த உறுதிப்பாட்டையும் பகிரங்கமாக வெளிப்படுத்தவில்லை.
இருப்பினும், போர் நிறுத்த முன்மொழிவின் சில பகுதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளவை, இறுதி செய்யப்பட வேண்டும் என்று பைடன் ஒப்புக்கொண்டார்.
முன்மொழிவின் சில பகுதிகளில் உள்ள தெளிவின்மை, ராஜதந்திர சூழ்ச்சிக்கு இடம் அளிக்கலாம். போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நேரம் வந்துவிட்டது, போரை நீடிப்பதால் எந்தப் பயனும் இல்லை என்ற பொதுவான புரிதல் இருக்க வேண்டும்.
காஸாவில் உள்ள ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் அவ்வாறு செய்ய ஒப்புக்கொள்வார் என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை. அக்டோபர் 7ம் தேதியில் இருந்து தான் பின்பற்றி வரும் அதே பாதையையே பின்பற்ற அவர் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.
பெருமளவில் பாலத்தீன மக்கள் உயிரிழந்தது, ஹமாஸை பலவீனப்படுத்தவில்லை, மாறாக அதன் நோக்கத்தை வலுப்படுத்தியுள்ளது என்பது தெளிவாகிறது. இப்போது அவர்களைப் பொறுத்தவரை, ஹமாஸின் இருப்பே அவர்களின் வெற்றி.
37,000க்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டது (காஸாவின் சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி) இஸ்ரேலுக்கு உலகளவில் கெட்ட பெயரை ஏற்படுத்தியுள்ளது என்பதில் அவர்கள் கவனம் செலுத்துகின்றனர்.
சர்வதேச நீதிமன்றத்தில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு, பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கேலன்ட் ஆகியோருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்க கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
நெதன்யாகுவுக்கு கடினமான பாதை

பட மூலாதாரம், Getty Images
இஸ்ரேலில், நெதன்யாகு தனது போர்க்குழு அமைச்சரவையில் இருந்து இரண்டு அமைச்சர்களை இழந்துள்ளார். காண்ட்ஸ் மற்றும் இசென்கோட் இருவரும் பணயக்கைதிகளை விடுவிக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற ஏதுவாக தற்காலிக போர் நிறுத்தத்தை விரும்பினர்.
இப்போது அவர்கள் இருவரும் அமைச்சரவையில் அங்கம் வகிக்காததால், நெதன்யாகு, பென்-க்விர் மற்றும் ஸ்மோட்ரிச் ஆகியோரால் பாதிக்கப்படலாம்.
ஒருவேளை ஆண்டனி பிளிங்கன் அவர்களுடன் பேசி, லட்சக்கணக்கான இஸ்ரேல் மக்களை திருப்திப்படுத்தும் வகையில், பணயக்கைதிகளை மீட்கும் ஒரு உடன்பாட்டை எட்டலாம்.
நெதன்யாகு தனது அரசாங்கத்தைப் பணயம் வைத்து, தேர்தலில் சவாலை எதிர்கொள்வதை தவிர வேறு வழியில்லை.
தேர்தலில் நெதன்யாகு தோல்வியடைந்தால், அவருக்கு எதிராக விசாரணை ஆணையம் அமைக்கப்படும். எட்டு மாதங்களுக்கு முன்பு இஸ்ரேலை ஹமாஸ் தாக்கியதன் காரணமாக என்ன அரசியல், உளவுத்துறை மற்றும் ராணுவத் தவறுகள் நடந்தன என்பதை அந்த ஆணையம் ஆராயும்.
அல்லது நெதன்யாகு இஸ்ரேலின் நீண்ட காலம் பிரதமராக இருந்த காலத்தில் கற்றுக்கொண்ட சூழ்ச்சி மற்றும் பிரசாரத்தின் நுட்பங்களையும் பயன்படுத்தலாம்.
நெதன்யாகு ஜூலை 24 அன்று வாஷிங்டன் டிசியில் நடைபெறும் அமெரிக்க நாடாளுமன்ற கூட்டத்தில் உரையாற்றுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












