கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு: மேலும் மூன்று பேரை கைது செய்த என்ஐஏ

பட மூலாதாரம், Getty Images
கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே ஆறு பேரை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) கைது செய்துள்ள நிலையில், தற்போது மேலும் மூன்று பேரை புலனாய்வாளர்கள் கைது செய்துள்ளனர்.
கோவை மாநகர், உக்கடம் ஈஸ்வரன் கோவில் வீதியில் கடந்த அக்டோபர் மாதம் 23 ஆம் தேதி கார் சிலிண்டர் வெடித்தது. இதில் காரை ஓட்டி வந்த கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த ஜமேசா முபின் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த நிகழ்வை கோவை மாநகர காவல்துறை விசாரித்து பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு (என்.ஐ.ஏ) மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் ஏற்கெனவே கோவை உக்கடம் பகுதியைச் சேர்ந்த முகமது அசாருதீன், முகமது தல்கா மற்றும் ஜி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த ஃபிரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில், முகமது ரியாஸ் மற்றும் அப்சர் கான் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்திருந்தனர். அப்சர் கான் - உயிரிழந்த ஜமீசா முபின் உறவினர் என விசாரணையில் தெரிய வந்தது.
கடந்த நவம்பர் 10ஆம் தேதி என்ஐஏ தமிழ்நாடு முழுவதும் 43 இடங்களில் சோதனை நடத்தியிருந்தது.
கைதானவர்கள் யார், யார்?
இந்த சோதனையின் போது சந்தேகப்படுபவர்களின் இல்லங்களில் டிஜிட்டல் சாதனங்கள் மற்றும் நிரூபிக்கத்தக்க ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக என்ஐஏ தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை என்.ஐ.ஏ இன்று கைது செய்துள்ளது.
அவர்களின் பெயர் உமர் பாரூக், முகமது தௌபிக் மற்றும் பெரோஸ் கான்.
இவர்களில் ஆட்டோ ஓட்டுநரான உமர் ஃபாரூக் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தான் கோவையில் இருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு குடிபெயர்ந்துள்ளார்.
கடந்த மாதம் தமிழ்நாடு முழுவதும் என்.ஐ.ஏ நடத்திய சோதனையில் இவருடைய வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது. அப்போது சில ஆவணங்கள் என்.ஐ. ஏ அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும் உமர் பாருக்கை இன்று நேரில் ஆஜராகுமாறு என்.ஐ.ஏ அதிகாரிகள் சம்மன் அனுப்பியிருந்தனர்.
அதன் அடிப்படையில் நேற்று விசாரணைக்கு நேரில் ஆஜரான உமர் பாரூக், என்.ஐ.ஏ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.
கார் சிலிண்டர் வெடி விபத்து தொடர்பாக உமர் பரூக் மற்றும் பெரோஸ்கானிடம் கோவை மாநகர காவல்துறையினர் ஏற்கெனவே விசாரணை நடத்தியுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்டவர்களில் முகமது தௌபிக் மற்றும் பெரோஸ்கான் ஆகியோர் ஜமேசா முபின் முன்பு வசித்த ஜி.எம்.நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
இந்த மூவரும் ஜமேசா முபினுக்கு உதவியாக அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்துள்ளனர். உமர் பாரூக் ஜமேசா முபினுடன் செல்போனில் தொடர்ச்சியாக பேசி வந்துள்ளதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், PTI
தீவிரம் அடையும் விசாரணை
கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு ஜமேசா முபின் தன்னுடைய எண்ணிலிருந்து அடிக்கடி பேசிய தரவுகளின் அடிப்பையில் தனிப்படை போலீசார் அக்டோபர் மாதமே உமர் பாரூக்கிடம் விசாரணை நடத்தியிருந்தனர்.
ஜமேசா முபின் அவருடைய நண்பர்களுடம் குன்னூர் சென்று சில நாட்கள் உமர் பாரூக் இல்லத்தில் தங்கியுள்ளார்.
"குன்னூரில் உள்ள உமர் பாரூக் இல்லத்தில் தான் தாக்குதல் நடத்துவதற்கான சதித்திட்டங்கள் தீட்டப்பட்ட்டுள்ளன. அதில் உமர் பாரூக் மற்றும் முகமது தௌபிக் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
தீவிரவாத செயல்களில் ஈடுபட ஜமேசா முபினுக்கு உதவியாக இருந்துள்ளனர். முகமது தௌபிக் இல்லத்தில் குற்றத்தை நிரூபிக்க கூடிய தீவிர இஸ்லாமிய கருத்துக்களை கொண்ட புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் இருந்தன.
வெடிகுண்டு தயாரிப்பதற்கான கைப்பட எழுதிய குறிப்புகளும் கைப்பற்றப்பட்டுள்ளன" என என்ஐஏ வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும் என்ஐஏ தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












