கோவை கார் வெடிப்பு: "இந்து, முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது"

கோவை கார் வெடிப்பு
    • எழுதியவர், பி.சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

கோவை கார் வெடிப்பு சம்பவத்தை பயன்படுத்தி இந்து, முஸ்லிம் ஒற்றுமையை யாராலும் பிரிக்க முடியாது என்று இந்து, மத முஸ்லிம் மத பெரியர்கள் கூடி கலந்துரையாடிய பிறகு தெரிவித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில், "கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்கள் தவறு செய்வதாக இருந்தால் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்ட பகுதியில் முகத்தை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டு செயல்படுவார்களா" என்று அவர்களின் குடும்பத்தினர் கேள்வி எழுப்புகின்றனர்.

கோவை உக்கடம் பகுதியில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்பவர் உயிரிழந்த விவகாரத்தை தற்போது தேசிய புலனாய்வு முகமை விசாரித்து வருகிறது. இந்த வழக்கை என்ஐஏ ஏற்கும் முன்பே கோவை காவல்துறை விசாரணை நடத்தி 6 பேரை கைது செய்திருந்தது.

இதில் இஸ்மாயில் சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஃபிரோஸ் இஸ்மாயில், நவாஸ் இஸ்மாயில், முகம்மது ரியாஸ் ஆகியோர் சம்பவத்துக்கு முந்தைய நாள் முபினின் வீட்டில் இருந்து சிலிண்டர் மற்றும் சில பொருட்களை காரில் ஏற்ற உதவும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்தது. இதன் அடிப்படையில்தான் அவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

நடந்த சம்பவத்தைத் தொடர்ந்து ஊடகங்களிடம் பேசுவதை கைதான சந்தேக நபர்களின் குடும்பங்கள் தவிர்த்து வந்தன. இந்த நிலையில், அதில் உள்ள சிலர் தற்போது ஊடகங்களிடம் கருத்துக்களை பகிர்ந்துகொள்ள முன்வந்தனர்.

ஜமேஷா முபினின் வீட்டில் உள்ள சிலிண்டர் மற்றும் சில பொருட்களை காரில் ஏற்ற உதவியதாக கூறப்படுவோரில் இஸ்மாயில் சகோதர்கள் முக்கியமானவர்கள் என்று காவல்துறை தரப்பு கூறுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் தமது பிள்ளைகளுக்கு எந்த தொடர்பும் இல்லை என்கிறார் அவர்களின் தாயாரான மைமூன் பேகம்.

""என்னுடைய கடைசி பையனுக்கு பள்ளி புத்தகம் வாங்குவது தொடர்பாக ஜமேஷா முபினுடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. வீட்டை காலி செய்ய வேண்டும் என்று முபின் சொன்னதால் என் பிள்ளைகளை உதவிக்காக அனுப்பி வைத்தேன்," என்று மைமூன் கூறினார்.

போலீஸ் சந்தேகத்துக்கு என்ன காரணம்?

கோவை சம்பவம்

இதில் ஃபிரோஸ் என்பவர் 2020ஆம் ஆண்டுவரை துபாயில் பணியாற்றியவர். அவரது நண்பர்களில் ஒருவர் முகம்மது ரஷீத். இந்த முகம்மது ரஷீதுக்கு 2019ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த ஈஸ்டர் வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை சந்தேக்கிறது.

இத்துடன் தற்போது என்ஐஏ கைது செய்துள்ள நான்கு பேரும் சித்தாந்த ரீதியாக ஒரே மாதிரியாக சிந்திக்கக் கூடியவர்கள் என்பதால் அது குறித்து அடிக்கடி தங்களுக்குள்ளாக பரஸ்பரம் பாராட்டிக் கொள்பவர்கள் என்றும் காவல்துறை தரப்பு கூறுகிறது. அந்த அடிப்படையில் இவர்கள் ஒரு ஸ்லீப்பர் செல் போல இயங்கினார்களா அல்லது இவர்களை யாரேனும் மூளைச்சலவை செய்தார்களா என்ற கோணத்தில் புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கில் தேசிய புலனாய்வு முகமை புலனாய்வாளர்கள் விசாரணை நடத்தி வந்தாலும், குற்றச்செயல், குற்றச்சதி தொடர்பான சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையின் க்யூ பிரிவு அதிகாரிகள் தனியாகவும் தேவைப்படும்போது என்ஐஏ புலனாய்வுக்கும் உதவியாக விசாரணையை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சந்தேகம், ஜமேஷா முபின் வாங்கி சிறிய ரக கார் தொடர்பானது. அந்த கார் 10 பேரின் கைகளுக்கு மாறி பிறகு மலிவான விலைக்கு முபின் வசம் வந்துள்ளது. அதுவும் அந்த காரை முபினுக்கு விற்க உதவியவர் முகம்மது தால்கா. இந்த நபரின் தந்தை நவாப் கான், 1998ஆம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் தண்டிக்கப்பட்டு தற்போதும் சிறையில் இருப்பவர். எனவே, இந்த கோணத்தையும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

காரை விற்றவர் குடும்பம் எழுப்பும் கேள்வி

கோவை சம்பவம்

இருப்பினும், புலனாய்வாளர்களின் இந்த கூற்றை திட்டவட்டமாக மறுக்கிறார் தால்காவின் தாயார் ஹஃப்சத் பீவி. எனது பிள்ளை சிறிய அளவில் கார்களை வாங்கி விற்கும் வியாபாரம் செய்து வருபவன். அதனால் தமது விற்பனை விவரத்தை சரியாக பராமரிப்பது இல்லை. விற்கும் வண்டிக்கு கமிஷன் மட்டுமே வாங்குவான். அந்த கார் முபின் கைக்கு போகும் முன்பு 9 பேர் வசம் கைமாறியிருக்கிறது. ஆனால், இதை சந்தேகமாகக் கருதி அவனை போலீஸார் பிடித்துச் சென்று விட்டனர்," என்கிறார் ஹஃப்சத் பீவி.

இதேவேளை முபினின் உறவினரான அஃப்சர் கான், ஆன்லைன் மூலம் குண்டுவெடிப்புக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை வாங்குவதில் உதவியதாக போலீஸ் தரப்பில் சந்தேகிக்கப்படுகிறது. ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து நைட்ரோ கிளிசரின், PETN பவுடர், கருப்புத்தூள், சல்ஃபர், பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சிவப்பு பாஸ்பரஸ் உள்ளிட்ட 109 பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக என்ஐஏ முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்கள் முபினுக்கு எப்படி வந்திருக்கும் என்ற கோணத்தில் விசாரணை நடத்திய புலனாய்வாளர்கள், சில அதிர்ச்சியூட்டும் தகவல்களை பகிர்ந்துள்ளனர்.

அதன்படி, சம்பவ நாளன்று கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்குச் சென்ற புலனாய்வாளர்கள், அக்டோபர் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் விசாரணை நடத்தினர்.

அந்த பகுதியில் கார் வெடித்த சம்பவத்தில் தமது மகன் தால்காவுக்கும் இதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று தால்காவின் தாயார் ஹஃப்சத் பிவி கூறினார். இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய அவர், வெடிப்பு சம்பவத்தில் தீயில் கருகிய காரை தால்கா தமது கூட்டாளி முகமது மீரான் குட்டியுடன் சேர்ந்தே முபினுக்கு விற்றுள்ளதாக கூறினார்.

இதற்காக முதலில் 16 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது. அதன் பிறகு பல முறை கட்டாயப்படுத்தியதும் மீதமுள்ள 10 ஆயிரம் ரூபாயை கொடுத்ததாகவும் தெரிவித்தார். உண்மையில் இப்படியொரு பேரம் நடந்த தகவலையே தாங்கள்தான் காவல்துறையிடம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார். இதையடுத்து தால்காவை சில இடங்களுக்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். பிறகு முபினின் வீட்டை தால்காதான் காட்டினார். அன்று மாலையில் அவரை விடுவித்தனர். ஆனால், மீண்டும் அக்டோபர் 24ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பிறகு தால்காவையும் காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்து விட்டனர் என்கிறார் ஹஃப்சத்.

தால்காவின் தந்தை வேறொரு வழக்கில் 1993இல் கைதாகி 1998ஆம் ஆண்டில் நடந்த கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திலும் அவர் குற்றவாளி என உறுதிப்படுத்தப்பட்டு 29 ஆண்டுகளாக சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். அப்போது தால்கா 5 மாத குழந்தையாக இருந்தார். தந்தையின் விடுதலைக்காக நடந்த போராட்டத்திலும் அவன் கலந்து கொண்டதில்லை. இப்படிப்பட்ட சூழலில் முழு ஆவணங்களுடன் கூடிய ஒரு காரை அவன் விற்றது தவறா? என கேள்வி எழுப்பினார் ஹஃப்சத் பீவி.

இந்த விவகாரத்தில் தால்காவின் தந்தை மீதான வழக்கை வைத்து, இப்போது எனது மகன் பழிவாங்கப்படுகிறானா என்ற சந்தேகம் எழுகிறது என்கிறார் ஹஃப்சத் பீவி.

கோவை சம்பவம்

சந்தேக நபர்களில் இஸ்மாயில் சகோதரர்கள் முக்கியமானவர்கள். இந்த சகோதரர்களின் தாயார் மைமூன் பேகம். கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு இவரது கணவர் இறந்து விட்டார்.

இவரது மூத்த மகனின் பெயர் ஃபிரோஸ் இஸ்மாயில். அவருக்கு ஐந்து பிள்ளைகள் உள்ளனர். மற்றொரு சகோதரர் பெயர் நவாஸ் இஸ்மாயில். "இந்த இருவரும் எந்த தவறும் செய்யவில்லை. அவர்கள் தவறு செய்திருப்பதாக தெரிய வந்தால் நிச்சயம் நானே நீதிமன்றத்தில் ஒப்படைத்திருப்பேன். எனது பிள்ளைகள் பெயர் இந்த வழக்கில் தொடர்புபடுத்தப்படுவதாக அறிந்தபோது, அவர்களை நானேதான் போலீஸிடம் தகவல் தெரிவிக்க வைத்தேன். கார் வெடிப்பு சம்பவத்தில் இறந்து போனது ஜமேஷா முபின் என்பதை நாங்கள் சொல்லித்தான் காவல்துறையே அறிந்தது. எனது மூத்த மகனின் பிள்ளைக்கு நோட்டு புத்தகம் வாங்கும்போதுதான் ஜமேஷா முபினுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டது," என்கிறார் மைமூன் பேகம்.

டான்பாஸ்கோ அன்பு இல்லம் அருகே அக்டோபர் 22ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் தனது வீட்டிற்கு அருகே வந்து பெரோஸை அழைத்தார் ஜமேஷா முபின். வீட்டை காலி செய்ய உதவிடும்படி அப்போது அவர் கேட்டுள்ளார். இதய பிரச்னை இருப்பதால் கனமான பொருட்களை சுமக்க முடியாது என்று அவரிடம் முபின் தெரிவித்தார். இதையடுத்து ஃபிரோஸுக்கு வேலை உள்ளதாகவும் இரவில் அனுப்பி வைப்பதாக தாம் தான் கூறியதாகவும் புலனாய்வாளர்களிடம் மைமூன் கூறியுள்ளார்.

பிறகு வீட்டை காலி செய்ய புறப்பட்டபோது நவாஸ் சும்மாதான் இருக்கிறான், அவனையும் ஃபிரோஸின் நெருங்கிய நண்பர் ரியாஸையும் அழைத்துச் செல்லும்படி ஜமேஷா முபினிடம் கூறியதாக மைமூன் பேகம் தெரிவித்தார்.

காணொளிக் குறிப்பு, கோவை கார் வெடிப்பு வழக்கில் கைதான ஐவர் மீது பயங்கரவாத தடுப்பு வழக்குப்பதிவு

இத்தனைக்கும் முபினின் வீடு கூட ஃபிரோஸுக்கு தெரிந்திருக்கவில்லை. முபினின் சித்தி பையன் அசாருதீன் உக்கடம் ஜி எம் நகர் பேக்கரியில் இருந்து ஃபிரோஸுக்கு முபினின் வீட்டை காட்டி விட்டு சென்றுள்ளார். அவர் பொருள் எடுத்து வைக்க வரவில்லை.

இதையடுத்து, முபினின் வீட்டிற்கு சென்ற ஃபிரோஸ், நவாஸ், ரியாஸ் ஆகியோர், வீட்டை காலி செய்யும்போது அதில் உள்ள மின்விசிறி, பீரோ போன்றவற்றை எடுக்காமல் ஏன் சிலிண்டரை மட்டும் எடுக்கிறாய் என முபினிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர், எனது மனைவி வந்தவுடன் நாளை எடுத்துக்கொள்வேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இரண்டு சிலிண்டர்கள் மற்றும் சில பொருட்களை எடுத்து காரில் வைத்துவிட்டு வந்து விட்டனர்.

என் மகன்கள் தவறு செய்பவர்களாக இருந்தால், முகத்தை மறைந்திருப்பார்கள். முகத்தை மறைக்காமல்தான் பொருட்களை எடுத்து வைப்பார்களா என்று மைமூனும் கேள்வி எழுப்புகிறார்.

மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் 9.30 மணிக்கு டிவியில் பார்த்து தான் முபின் சென்ற கார் வெடித்த சம்பவத்தை எனது மகன்கள் பார்த்து தெரிந்து கொண்டனர். சந்தேகமாக இருக்கிறது என என்னிடம் ஃபிரோஸ் சொன்னதும் நாங்கள் உளவுப்பிரிவு ஆய்வாளருக்கு தொலைபேசி மூலம் தகவல் கொடுத்தோம். தவறு செய்திருந்தால் எனது பிள்ளைகளே இப்படி செய்திருப்பார்களா என்று கேட்கிறார் மைமூன் பேகம்.

இதன் பிறகு காவல்துறையினர் முபினின் வீட்டை காண்பிக்கும்படி சொல்லி எனது பிள்ளைகளை அழைத்துச் சென்றனர். அன்று மாலை 6 மணி முதல் 10 மணி வரை மாநகர காவல் ஆணையர் விசாரணை நடத்திய பிறகு எனது பிள்ளைகளை திருப்பி அனுப்பினர். அன்றைய தினம் காவல்துறையினர் வந்து பழுதடைந்த லேப்டாப்பையும் மூணாவது மகனின் மொபைல் டேப்பையும் கொண்டு சென்றனர். இதையடுத்து இரண்டு பிள்ளைகளை கைது செய்து விட்டதாக ஊடகங்கள் மூலம் தெரிந்து கொண்டேன் என்கிறார் மைமூன் பேகம்.

மூன்றாவது நபர் கைது எப்படி நடந்தது?

கோவை

பட மூலாதாரம், NIA

காரில் சிலிண்டர் வைக்க உதவியவர்களில் ஃபிரோஸின் நெருங்கிய நண்பர் ரியாஸும் ஒருவர். அவரும் இப்போது போலீஸ் காவலில் இருக்கிறார்.

2016 ஆம் ஆண்டில் என் ஐ ஏ சோதனையின் போது உக்கடத்தில் ரஷித் அலி கைது செய்யப்பட்டார். ரஷித் அலியின் செல்போனில் என் மகன் நவாஸின் செல்போன் எண் இருந்ததால், அவனிடம் விசாரித்து விட்டு அனுப்பியுள்ளனர்.

நவாஸ் தோல் பிரச்னை காரணமாக திருச்சூரில் ஹிஜாமா சிகிச்சை பெற்று வந்தார். திருச்சூர் போகும் போது இரண்டு மாதங்களுக்கு முன்பு வியூர் சிறையில் இருக்கும் ரஷித் அலியை பார்த்துள்ளதாக தெரிவித்தார். நவாஸ் இளங்கலை அனஸ்தீஸ்யா படித்துவிட்டு எம்பிஏ முடித்து விட்டு தற்போது வெளிநாட்டில் வேலை தேடி வருகிறார்.

இந்த நிலையில், தனது மகன் முகமது ரியாஸின் தாயார் ஜுனைத் பேகம் பிபிசி தமிழிடம் பேசும்போது, "பெரோஸ் மற்றும் நவாஸ் உடன் வீடு காலி செய்ய பொருள் எடுத்து வைக்கும் போது, நான் செல்போனில் எங்கே இருக்கே என விசாரித்தேன். அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக என்னிடத்தில் தெரிவித்தவன். அதுபோலவே 30 நிமிடங்களில் வீட்டுக்கு வந்த பிறகு அயர்ந்து தூங்கி விட்டான். மறுநாள் காலையில் ஃபிரோஸிடம் இருந்து செல்பேசியில் அழைப்பு வந்து அதில் பேசிய பிறகே கார் வெடிப்பு சம்பவம் பற்றியே ரியாஸுக்கு தெரிய வந்ததாக அவரது தாயார் கூறுகிறார்.

ஜமேஷா முபின் வீட்டில் என்ன இருந்தது?

இதற்கிடையே, ஜமேஷா முபின் வீட்டில் காவல்துறையினர் சோதனையிட்ட போது சந்தேகத்திற்கு உரிய வகையில் இருந்த சில குறிப்புகள் அடங்கிய காகிதம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்றில் ஹதீஸ் குறித்தும் ஜிகாத் குறித்தும் எழுதப்பட்டுள்ளது. யாருக்கெல்லாம் ஜிகாத் கடமை உண்டு, யாருக்கெல்லாம் இல்லை என்பது குறித்தும் அந்த குறிப்புகளில் எழுதப்பட்டுள்ளது. அல்லாவின் இல்லத்தின் மீது கை வைத்தால் வேரறுப்போம் என்றும் சிலேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

என்ஐஏ
படக்குறிப்பு, முபின் எழுதியதாக சந்தேகிக்கப்படும் குறிப்புகள்

இது தவிர அரபி மொழியில் சில வாசகங்களும் சிலேட்டில் எழுதப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த நாளில் காவல் துறை கைப்பற்றிய ஆவணங்கள் குறித்த தகவல்கள் நேற்று வெளியாகின. இது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், கோவையில் தொடரும் பதற்றமான சூழலுக்கு முடிவு காணும் வகையில் இந்து, முஸ்லிம் மதப் பெரியவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோட்டை மேட்டில் உள்ள நூறாண்டு பழமை வாய்ந்த 3 ஜமாத் சார்பில் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் கோட்டை சங்கமேஸ்வரன் கோவிலில், அதன் நிர்வாகிகளை சந்தித்து மதப் பெரியவர்கள் கலந்துரையாடினர்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம்

X பதிவின் முடிவு

இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஜமாத் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் இனயத்துல்லா, "இஸ்லாம் எப்போதும் வன்முறையை தூண்டும் மார்க்கம் அல்ல. நாங்கள் அமைதியை போதிக்கிறோம். நாங்கள் அனைத்து மக்களுடன் நல்லிணகத்தை பேணவே விரும்புகிறோம். ஜமாத்கள் ஒன்றிணைந்து அனைத்து மக்களுடன் இணைந்து நற்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டு செயலாற்ற உள்ளோம். எவ்விதமான பயங்கரவாதத்திற்கும் இடம் கொடுக்க மாட்டோம். இந்து, முஸ்லிம் ஒற்றுமையை எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. அரசியல் தலைவர்கள் மதத்தை தங்களுடைய அரசியலுக்கு பயன்படுத்த வேண்டாம். நாங்கள் ஆன்மிகவாதிகள். எங்களை அமைதியாக வாழவிடுங்கள்," என்று கேட்டுக் கொண்டார்.

அனைத்து ஜாமத், இஸ்லாமிய அமைப்புகள், கட்சிகளின் ஒருங்கிணைப்பாளர் சபீர் அலி, கோவை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். காவல் துறையின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதோடு, மதநல்லிணக்கத்தை ஏற்படுத்த அனைவரும் விரும்புகிறோம். அதேசமயம், இந்த விவகாரத்தில் நிரபராதிகள் தண்டிக்கப்படக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்," என்கிறார்.

முபின் மனைவி கொடுத்த தகவலால் துலங்கிய துப்பு

இதற்கிடையே, ஜமேஷா முபின் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சிலிண்டர் வைக்கப்பட்டிருந்த கோட்டை மேடு வீட்டுக்கு குடி வந்ததாக போலீஸாருக்கு தெரிய வந்துள்ளது. முபினின் மனைவி மற்றும் உறவினரிடம் புலனாய்வாளர்கள் பேசியபோது, பொருளாதாரத்தில் பின் தங்கி இருந்தாலும் முபின் பணத்திற்கு ஆசைப்பட்டதில்லை. அவர் மிகவும் அமைதியானவர். 2019ஆம் ஆண்டு என்ஐஏ சோதனைக்கு பிறகு அவரை யாராவது ஒருவர் மூளச்சலவை செய்து இச்சம்பவத்தை நடத்தி இருக்கலாம் என குடும்பத்தினர் சந்தேகிப்பதாக தங்களிடம் தெரிவித்ததாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

கோட்டைமேடு பகுதிக்கு குடியேறும் முன்பு முபின் உக்கடம் அல் அமின் காலனி பகுதியில் வசித்து வந்திருக்கிறார். ஜமேஷா முபினுக்கும் உள்ளூரைச் சேர்ந்த நஸ்ரத்துக்கும் 2017இல் திருமணம் நடந்துள்ளது. தெரிந்த உறவினர் மூலமாக ஏற்பட்ட அறிமுகத்துக்குப் பிறகு இந்த திருமண ஏற்பாடு கைகூடியது.

கோவை சம்பவம்

பட மூலாதாரம், ANI

முபினின் வழக்கமான செயல்பாடுகள் சந்தேகப்படும் வகையில் இருந்ததில்லை என அவரது மாமியார் குர்ஷித் கூறுகிறார்.

நஸ்ரத்தின் தாயார் குர்ஷித் கூறும் போது, தனது மகளுக்கு திருமணமாகி 5 வருடங்கள் ஆகின்றன. முதலில் அவரது பெற்றோருடன் இருந்த முபின் பின்னர் தங்கள் வீட்டின் அருகே வசித்து வந்தார். குழந்தைகளை முபின் அடித்ததில்லை. அவர் அது போன்று செய்வாரா என்பதும் தெரியவில்லை. புத்தக கடைக்கு வேலைக்கு சென்ற அவர், நெஞ்சு வலி காரணமாக பிறகு அந்த வேலைக்கு செல்லவில்லை. கடந்த ஒரு மாதமாகதான் கார் ஒட்டி பழகினார். 5 வேளை தொழுகை, அடிக்கடி குர்ஆன் வசனம் ஓதிக் கொண்டு இருப்பார். அதிகமாக பேச மாட்டார் என்று கூறினார்.

அவரது உறவினர் அசாருதீன் மட்டுமே அடிக்கடி வீட்டிற்கு வந்து போவார். இந்த தகவலை ஜமேஷா முபீனின் மனைவி நஸ்ரத் புலனாய்வாளர்களிடம் தெரிவித்திருக்கிறார். அதன் பிறகே அசாருதீன், பிறகு அஃப்சர் கான் என ஒருவர் பின் ஒருவராக புலனாய்வாளர்களின் கைது நடவடிக்கை விரிவடைந்தது. விசாரணையில் முபினுக்கு வெடிமருந்துகள் வாங்கிக் கொடுத்ததில் முக்கியமானவர்களாக இருவரும் செயல்பட்டதாக தெரிய வந்திருப்பதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

காணொளிக் குறிப்பு, "தப்பு செஞ்சா முகத்தை காட்டுவாங்களா?" - கோவை சம்பவத்தில் கைதானவர்களின் குடும்பங்கள்
1px transparent line

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: