கோவை கார் வெடிப்பு: சம்பவ பகுதியில் என்ஐஏ - ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாம்

கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பான விசாரணையை தமிழக காவல்துறையின் தனிப்படை மேற்கொண்டு வந்த நிலையில், அந்த சம்பவத்தின் தீவிரத்தை ஆராய்வதற்காக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கோவையில் முகாமிட்டுள்ளனர். இந்த நிலையில், கார் வெடிப்பு சம்பவத்தை என்ஐஏ விசாரணைக்கு மாற்ற மத்திய அரசுக்கு பரிந்துரைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஜமேசா முபினுடன் தொடர்புடையவர்களிடம் என்.ஐ.ஏ அதிகாரிகள் இன்று ஏற்கெனவே விசாரணையை தொடங்கினர்.

கோயம்புத்தூர் சம்பவத்தை தொடர்ந்து மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்த ஆலோசனை கூட்டம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. சென்னையில் அரசு தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு உள்ளிட்ட மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றிட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார். கோவை மாநகரின் பாதுகாப்பு மேலும் வலுப்படுத்திட கரும்புக்கடை, சுந்தராபுரம் மற்றும் கவுண்டம்பாளையம் ஆகிய மூன்று இடங்களில் புதிய காவல் நிலையங்களை அமைத்திடவும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

கோவை கார் வெடிப்பு: என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்த மு.க. ஸ்டாலின்

மாநிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் வருங்காலங்களில் நடைபெறாமல் தடுத்திடும் வகையில் காவல்துறையில் ஒரு சிறப்பு படையை உருவாக்கிடவும், கோவை உட்பட தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலும், மக்கள் அதிகம் வசிக்கக்கூடிய முக்கிய பகுதிகளிலும், கூடுதல் நவீன கண்காணிப்புக் கேமராக்களை விரைவில் பொருத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் மு.க. ஸ்டாலின் பரிந்துரைத்துள்ளார்.

மாநிலத்தின் உளவு பிரிவில் கூடுதல் காவல்துறை அலுவலர்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளதுடன் இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவரைப் பற்றியும், அவர்களுடன் தொடர்பு வைத்திருப்பவர்களைப் பற்றியும் நுண்ணிய தகவல்களை அளிப்போருக்கு தக்க பாதுகாப்பினை வழங்கவும் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் என்று தமிழ்நாடு அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.

ஜமேசா முபின் உறவினரிடம் விசாரணை

இதனிடையே உக்கடம் ஹவுசிங் போர்டு பகுதியில் ஜமேசா முபின் உறவினர் அப்சர் கானை உக்கடம் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர்.

அப்சர் கானின் உறவினர் பஷீர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "அப்சர் கான் கடந்த சில நாட்களுக்கு முன்பு முபினை சந்தித்துள்ளார். அப்போது முபினுக்கு நெஞ்சு வலியால் உடல்நலம் சரியில்லாததால் பார்ப்பதற்காக சென்றுள்ளார்.

நேற்று முன்தினமே காவல்துறையினர் அழைத்து சென்று விசாரித்துள்ளனர். தற்போது மீண்டும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். அன்றைய தினமே வீடு முழுவதும் சோதனையிட்டு லேப்டாப் ஒன்றை பறிமுதல் செய்து சென்றுள்ளனர்" என்றார்.

ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை

அதன்பின் பிபிசி தமிழிடம் பேசிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் பஷீர் அகமது, "கோவையில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ள சம்பவம் உளவுத்துறையின் தோல்வியே. இது போன்ற தீவிரவாத செயல்பாடுகளை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம். மற்றபடி கோவை அமைதியாக தான் உள்ளது. கோவையில் தீவிரவாதம் அதிகரித்து வருவதாக சித்தரிப்பது மிகவும் தவறானது. கடந்த 20 ஆண்டுகளாக சமூகத்தில் தீவிரமான எண்ணங்கள் உருவாகுவதை தடுப்பதற்கு நாங்கள் தொடர்ந்து பணியாற்றி வருகிறோம்" என்றார்.

கோவை மாநகர் உக்கடத்தில் சங்கமேஸ்வரர் கோவில் அருகே கடந்த ஞாயிற்றுக்கிழமை மாருதி கார் சிலிண்டர் வெடித்த வழக்கு விசாரணை மூன்றாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்து சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைந்துள்ளனர். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் என கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) விசாரிக்க வேண்டும் என பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை, வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். என்ஐஏ விசாரணை தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த பாலகிருஷ்ணன் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் ஆதியோர் ஜமாஅத் கூட்டமைப்பினருடன் ஆலோசனை நடத்தினர்.

ஜமாஅத் நிர்வாகிகளுடன் ஆலோசனை
படக்குறிப்பு, பாலகிருஷ்ணன், கோவை மாநகர காவல்துறை ஆணையர்

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், "கோவை சம்பவத்தைத் தொடர்ந்து சமூக பதற்றம் உருவாகி விடக்கூடாது என்பதற்காக ஜமாஅத் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள் உடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை கலந்துரையாடல் நடத்தியது. இதில் ஜமாஅத் நிர்வாகிகள் சிலிண்டர் வெடி விபத்தை ஒருமனதாக கண்டித்தனர். இத்தகைய செயல்களுக்கு எப்போதும் ஆதரவில்லை என்றும் தெரிவித்தனர். கடந்த நான்கு மாதங்களில் மூன்றாவது முறையாக இது போன்ற கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அமைதியான சூழல் நிலவ அனைவரின் ஒத்துழைப்பும் அவசியமாகிறது. ஜமாத் கூட்டமைப்பினரும் அதற்கு முழு ஆதரவு தருவதாக தெரிவித்தனர். அனைத்து மத அமைப்புகள் மற்றும் இயக்கங்கள் உடன் இது போன்ற கலந்துரையாடல்கள் தொடர்ந்து நடத்தப்படும்" என்றார். மாவட்ட ஆட்சியர் சமீரன் பேசுகையில், "ஜமாஅத் கூட்டமைப்பினர் ஒரு மனதாக இந்த சம்பவத்தை கண்டித்துள்ளனர். மேலும் எந்த தகவல் கிடைத்தாலும் மாவட்ட நிர்வாகத்திற்கும் காவல்துறைக்கும் தெரிவிக்குமாறு கூறியுள்ளோம். மாவட்ட நிர்வாகம் மத நல்லிணக்க கூட்டம் உள்ளிட்ட நம்பிக்கையை உருவாக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம்" என்றார்.

கோவை குண்டுவெடிப்பு
படக்குறிப்பு, இனாயதுல்லா

ஜமாஅத் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் இனயத்துல்லா பேசுகையில், "இந்த சம்பவம் எங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற செயல்களை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. உளவுத்துறையும் என்.ஐ.ஏ அமைப்பும் இதை முன்கூட்டியே பிடிக்காமல் விட்டது அதிர்ச்சியாக இருந்தது. மாவட்ட அளவிலும் சரி ஒவ்வொரு காவல் நிலைய அளவிலும் சரி ஜமாத் கூட்டமைப்பு இணைந்து பிரெண்ட்ஸ் ஆப் போலீஸ் மூலம் சமூகத்தில் தனித்திருக்கும் இளைஞர்களை கண்டறிந்து அவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதத்தில் இணைந்து செயல்பட உள்ளோம்" என்றார்.

வெடிப்பு நடந்த இடத்துக்கு வந்த வானதி சீனிவாசன்

சம்பவம் நிகழ்ந்த கோட்டைமேடு பகுதி கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. இந்த தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள வானதி சீனிவாசன் இன்று சம்பவம் நடந்த இடத்திற்கு வருகை தந்தார்.

வானதி சீனிவாசன்

சங்கமேஸ்வரர் கோவிலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் சிறப்பு வழிபாடு ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது. அதில் வானதி சீனிவாசன், கோவை மாநகர மாவட்ட பாஜக தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த வானதி சீனிவாசன் முதல்வர் மு.க ஸ்டாலின் அமைதி காத்து தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறார் என கடுமையாகச் சாடினார்.

அப்போது பேசியவர், "முதலில் உக்கடத்தில் நிகழ்ந்தது சிலிண்டர் விபத்து என்றுதான் அனைவரும் நினைத்தோம். ஆனால் விசாரணையின் போது வெடி பொருட்கள் இருப்பது தெரிய வந்தது. இதை ஒரு தனித்த சம்பவமாக பார்க்க முடியாது. இதன் பின்னர் மிகப்பெரிய நெட்வொர்க் இயங்கி வருகிறது.

ஆனால் இந்த சம்பவத்தை முதல்வர் மு.க ஸ்டாலின் இன்னும் கண்டிக்காதது வருத்தம் அளிக்கிறது. இப்போது மட்டுமல்ல, கடந்த மாதம் பாஜகவினர் வீடுகள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்ட போதும் முதல்வர் கண்டிக்கவில்லை. முதல்வர் மௌனம் காப்பது தீவிரவாத அமைப்புகளை ஆதரிக்கிறாரோ என்கிற சந்தேகம் எழுப்புகிறது.

திமுக அமைச்சர்கள் மற்றும் தலைவர்கள் பலருமே சிறுபான்மையினர் வாக்குகளால் தான் தாங்கள் வெற்றி பெற்றதாக பேசுகின்றனர். அதனால்தான் முதல்வர் இந்த குற்றங்களை கண்டிக்காமல் இருக்கிறாரோ என தோன்றுகிறது.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு: என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவையில் முகாம்

தீபாவளி உள்ளிட்ட இந்து பண்டிகைகளுக்கு முதல்வர் வாழ்த்து தெரிவிப்பதில்லை. தங்கள் சிறுபான்மையினர் வாக்கு வங்கி பாதிக்கப்பட்டுவிடுமோ என அமைதி காக்கின்றனர்.

சிறு சிறு நிகழ்வுகளுக்கு கூட கருத்து தெரிவிக்கும் களத்திற்கு செல்லும் திமுகவினர் ஒருவர் கூட இங்கு வரவில்லை. இது உளவுத்துறையின் தோல்வி. முதல்வர் இங்கு வராமல் இந்த சம்பவம் பற்றி வாய் திறக்காமல் இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக முதல்வர் கௌரவம் பார்க்காமல் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமையிடம் ஒப்படைக்க வேண்டும். கைது செய்யப்பட்டவர்களை என்.ஐ. ஏ அமைப்பு ஏற்கனவே விசாரித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு சர்வதேச தொடர்பு இருப்பதால் இந்த வழக்கை என் ஐ ஏ விசாரிப்பது தான் சரி. தமிழக மண்ணில் பயங்கரவாதத்தை ஒழிக்க பாஜக என்ன செய்யும் என்பதை இன்று மாலை தெரிவிக்கிறோம்.

மாநில முதல்வர் கோவைக்கு வருகை தர வேண்டும். உளவுத்துறைக்கும் காவல்துறைக்கும் சரியான உத்தரவு வழங்க வேண்டும். மக்களுக்கு நம்பிக்கை அளிக்க வேண்டும்." என்றார்.

இலங்கை
காணொளிக் குறிப்பு, சிதம்பரம்: 13 வயது சிறுமிக்கு குழந்தை திருமணம் – போலீஸ் கண்டுபிடித்தது எப்படி?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: