தட்கல் முன்பதிவில் ஒரு சில நிமிடங்களில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்வது எப்படி? ஐஆர்சிடிசி ஆய்வில் அதிர்ச்சித் தகவல்

தட்கல் முன்பதிவு, ரயில்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
    • பதவி, பிபிசி தமிழ்

"கடந்த ஏப்ரல் 7 அன்று கோவையில் ஒரு திருமண நிகழ்வுக்கு செல்வதற்குத் திட்டமிட்டிருந்தேன். ரயிலில் பயணிப்பதற்கு இருமுறை தட்கல் முன்பதிவுக்கு முயற்சி செய்தேன். ஆனால், அது அவ்வளவு எளிதாக இல்லை. வேறு வழியின்றி தனியார் பேருந்தில் பயணித்தேன்" எனக் கூறுகிறார், செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூரில் வசிக்கும் சரவணன் கார்த்திகேயன்.

"தன்னைப் போல, அவசர பயணம் மேற்கொள்ள நினைக்கும் எவருக்கும் தட்கல் டிக்கெட் விரைவாக கிடைப்பதில்லை" எனவும் அவர் குறிப்பிட்டார்.

தட்கல் முன்பதிவில் கோடிக்கணக்கான போலி பயனர்களால் தனி நபர்கள் அதிகம் சிரமப்படுவதாக கூறுகிறது, ரயில்வே நிர்வாகம்.

இதைக் களைவதற்கு விரைவில் இ-ஆதார் நடைமுறையை அமல்படுத்த உள்ளதாகக் கூறுகிறார், இந்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ். இதனால் ரயில் டிக்கெட் பெறுவதில் உள்ள மோசடிகள் களையப்படுமா?

ரயில் டிக்கெட் முன்பதிவில் சுமார் 2.5 கோடி போலி பயனர்களை நீக்கியுள்ளதாக, இந்திய ரயில்வே உணவு வழங்கல் மற்றும் சுற்றுலா கழகம் (IRCTC) புதன்கிழமையன்று (ஜூன் 4) அன்று தெரிவித்தது.

இந்திய ரயில்வே ஆன்லைன் தளத்தின் மூலம் தினந்தோறும் சுமார் 2,25,000 பயணிகள் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதாக, ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு, தட்கல் புக்கிங், முறைகேடு, ரயில்வே, தெற்கு ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தட்கல் புக்கிங் முறைகேடு

ஐஆர்சிடிசி ஆய்வில் தெரியவந்தது என்ன?

ஆனால், தட்கல் முன்பதிவு தொடங்கிய ஒரு சில நிமிடங்களில் பெருமளவு டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிடுவதால், இதுகுறித்த ஆய்வை ஐஆர்சிடிசி நடத்தியுள்ளது.

'மே 24 முதல் ஜூன் 2 வரை தட்கல் டிக்கெட் முன்பதிவை ஆராய்ந்தபோது, 108,000 ஏ.சி வகுப்பு டிக்கெட்டுகளில் 5615 டிக்கெட்டுகள் மட்டுமே முதல் 1 நிமிடத்தில் முன்பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது நிமிடத்தில் 22,827 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டன' எனக் கூறுகிறது ஐஆர்சிடிசி.

அடுத்த 10 நிமிடங்களுக்குள் 67,159 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறும் ஐஆர்சிடிசி, 'இது முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளில் 62.5 சதவீதம். மீதமுள்ள 37.5 சதவீத டிக்கெட்டுகள் ரயில் புறப்படுவதற்கான விளக்க அட்டை (chart) தயாரிப்பதற்கு முன்பான 10 நிமிடங்களில் முன்பதிவு செய்யப்பட்டன' எனக் கூறியுள்ளது.

ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு, தட்கல் புக்கிங், முறைகேடு, ரயில்வே, தெற்கு ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிக்கெட் முன்பதிவு

'முதல் ஒரு நிமிடம் தான் இலக்கு'

இதே காலகட்டத்தில் (மே 24 முதல் ஜூன் 2) ஏ.சி அல்லாத பிரிவில் உள்ள தட்கல் முன்பதிவு நிலவரத்தை ஐஆர்சிடிசி ஆராய்ந்துள்ளது.

'தட்கல் திறக்கப்பட்ட பிறகு தினசரி 118,567 டிக்கெட்டுகள் ஆன்லைனில் முன்பதிவு செய்யப்பட்டன. இவற்றில் முதல் நிமிடத்தில் 4724 டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டது. இரண்டாவது நிமிடத்தில் 20,786 டிக்கெட்டுகளும் 1 மணி நேரத்துக்குள் 84.02 சதவீத டிக்கெட்டுகளும் விற்பனையானது' எனக் கூறுகிறது, ஐஆர்சிடிசி.

தட்கல் திறக்கப்பட்ட 8 முதல் 10 மணிநேரத்துக்குப் பிறகு சுமார் 12 சதவீதம் அளவுக்கு டிக்கெட்டுகள் விற்கப்படுவதாக ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. இதில், முதல் ஒரு நிமிடத்தில் டிக்கெட் பெறுவதன் பின்னணியில் தானியங்கி கருவிகள் (Automated tool) பயன்படுத்தப்படுவதாக ஐஆர்சிடிசி குறிப்பிட்டுள்ளது.

6 மாதங்களில் 2.4 கோடி பயனர்கள் நீக்கம்

ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு, தட்கல் புக்கிங், முறைகேடு, ரயில்வே, தெற்கு ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 2.4 கோடிக்கும் அதிகமான பயனர்களை நீக்கியுள்ளது ஐஆர்சிடிசி

இதன்மூலம் தட்கல் முன்பதிவில் போலி பயனர் கணக்குகளைப் பயன்படுத்தி மோசடி நடப்பதையும் கண்டறிந்துள்ளது ஐஆர்சிடிசி. அந்த வகையில், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் 2.4 கோடிக்கும் அதிகமான பயனர்களை நீக்கியுள்ளதாகவும் செய்திக் குறிப்பில் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது.

சந்தேகத்துக்குரிய சுமார் 2 மில்லியன் பயனர்களின் கணக்குகளை ஆதார் மற்றும் பான் கார்டு மூலம் சோதனை செய்து வருவதாகக் கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், "இதில் போலி பயனர்கள் கண்டறியப்பட்டால் அவர்களின் கணக்குகள் முடக்கப்படும்" எனக் கூறியுள்ளது.

"தட்கல் முன்பதிவு, ஏ.சி பெட்டிக்கு காலை 10 மணிக்கும் ஏ.சி அல்லாத பெட்டிகளுக்கு 11 மணிக்கும் திறக்கப்படுகிறது. முன்பதிவு திறக்கப்பட்ட பத்து நிமிடங்களுக்குப் பிறகே ஐஆர்சிடிசி முகவர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுகிறது. கவுன்டர் சென்றாலும் இதே நிலை தான்" எனக் கூறுகிறார், சென்னையை சேர்ந்த ஐஆர்சிடிசி முகவர் அலெக்ஸ்.

போலி பயனர்கள் பெருகுவது ஏன்?

ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு, தட்கல் புக்கிங், முறைகேடு, ரயில்வே, தெற்கு ரயில்வே

பட மூலாதாரம், Senthamilsevan

படக்குறிப்பு, தெற்கு ரயில்வே முதுநிலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ்ச்செல்வன்

முகவர்களுக்கான நேர எல்லையாக இது வரையறுக்கப்பட்டுள்ளதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், "10.02 மணிக்கெல்லாம் பெருமளவு டிக்கெட் விற்றுத் தீர்ந்துவிடுகிறது. 10 நிமிடங்களைத் தாண்டிவிட்டால் எந்தப் பயனும் இல்லை. சர்வர் முடங்கிவிடுவதால் கூடுதல் கட்டணம் கொடுத்து டிக்கெட் பெறும் நிலை ஏற்படுகிறது" என்கிறார்.

ஒரு பயனர் முகவரியில் இருந்து தொடர்ந்து அதிக பிஎன்ஆர் எண்கள் பெறப்பட்டால் அதனை ஐஆர்சிடிசி முடக்கிவிடுவதாகக் கூறும் அலெக்ஸ், "இதை இருவிதமாக ஐஆர்சிடிசி செயல்படுத்துகிறது. முதல் ஒரு நிமிடத்தில் யார் அதிக டிக்கெட் முன்பதிவு செய்கிறார்கள் எனக் கவனிக்கின்றனர். அடுத்து வங்கிக் கணக்கைப் பார்க்கின்றனர்" எனக் கூறுகிறார்.

"தனி நபரிடம் ஐந்துக்கும் மேற்பட்ட ஐஆர்சிடிசி பயனர் கணக்குகள் இருந்தாலும் அவர் ஒரே ஒரு வங்கிக் கணக்கை மட்டுமே பயன்படுத்துவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அதை வைத்து போலி கணக்கு என அடையாளப்படுத்தி நீக்குகின்றனர்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

சென்னையில் ஐஆர்சிடிசியின் முதன்மை முகவர்களின்கீழ் (Principle agents) நூற்றுக்கணக்கான முகவர்கள் செயல்படுவதாகக் கூறும் அலெக்ஸ், "தனியார் செயலிகளும் டிக்கெட் முன்பதிவில் ஈடுபடுகின்றன. சிலர் மென்பொருள் மூலம் அதிக டிக்கெட்டுகளை பெறுகின்றனர். இதனால் டிக்கெட் பெற நினைக்கும் பொதுமக்கள் ஏமாற்றமடைகின்றனர்" என்கிறார்.

தனி நபர் ஒருவரின் ஐஆர்சிடிசி கணக்கில் இருந்து மாதம்தோறும் ஆறு முறை டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான நடைமுறை உள்ளது. "உறவினர்களுக்கு ஆறு முறைக்கு மேல் டிக்கெட் பெற முடியாது. சிலர் செய்யும் தவறுக்காக தொடர் பயணம் மேற்கொள்கிறவர்களையும் இது வெகுவாக பாதிக்கிறது" எனக் கூறுகிறார், திருப்போரூரில் வசிக்கும் சரவணன் கார்த்திகேயன்.

"விமானப் பயணத்துக்கு டிக்கெட் பெறுவது எளிதாக உள்ளது. ஆனால், ஐஆர்சிடிசி தளத்தில் ஒருமுறை டிக்கெட் பெறவே கடுமையாக போராட வேண்டியுள்ளது" எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

தெற்கு ரயில்வே முதுநிலை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தமிழ்ச்செல்வனிடம் இதுதொடர்பாக பிபிசி தமிழ் பேசியது. "ஆன்லைன் முன்பதிவு ஐஆர்சிடிசி மூலம் நடக்கிறது. அது தெற்கு ரயில்வேயின் கட்டுப்பாட்டில் இல்லை. எதாவது குறைகள் வந்தால் அதை ஐஆர்சிடிசியின் கவனத்துக்கு அனுப்பி வைப்போம்" என்று மட்டும் பதில் அளித்தார்.

மில்லி நொடிகளில் டிக்கெட் - எப்படி நடக்கிறது மோசடி?

ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு, தட்கல் புக்கிங், முறைகேடு, ரயில்வே, தெற்கு ரயில்வே
படக்குறிப்பு, திருப்போரூரில் வசிக்கும் சரவணன் கார்த்திகேயன்

"தனி நபர் ஒருவர் டிக்கெட் முன்பதிவு செய்ய நினைத்தால் பெயர், பாலினம், முகவரி ஆகியவற்றை தட்டச்சு செய்வதற்கு ஒரு நிமிடம் தேவைப்படும். ஆனால், முன்கூட்டியே வடிமைக்கப்பட்ட மென்பொருள் மூலம் மில்லி நொடிகளில் டிக்கெட் முன்பதிவு செய்யப்படுகிறது" எனக் கூறுகிறார், தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர்.

பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பாட் (bot) எனக் கூறப்படும் மென்பொருளைப் பயன்படுத்தி ஒரேநேரத்தில் லட்சக்கணக்கில் முன்பதிவு கோரிக்கைகள் வரும்போது ஐஆர்சிடிசி சர்வர் முடங்கிவிடுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 2.5 கோடி பயனர்களை ஐஆர்சிடிசி நீக்குகிறது என்றால் முன்பதிவு டிக்கெட் பெறுவதில் உள்ள பிரச்னைகளை உணர்ந்து கொள்ள முடியும்" என்கிறார் அவர்.

"இதைக் கண்டறிவதற்கு ஏன் இவ்வளவு காலதாமதம்?" எனக் கேட்டபோது, "போலி பயனர்களை ரயில்வே பாதுகாப்புப் படை கண்டறிந்து அவ்வப்போது நடவடிக்கை எடுக்கிறது. ஐஆர்சிடிசி நிர்வாகமும் மாநில போலீஸின் சைபர் பிரிவை அணுகுகிறது. தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" எனக் கூறினார்.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ரயில் டிக்கெட் முன்பதிவு மோசடிகள் தொடர்பாக தேசிய சைபர் குற்றப் பிரிவு இணையதளத்தில் கடந்த சில மாதங்களில் சுமார் 130க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளதாக செய்திக் குறிப்பில் கூறியுள்ள ரயில்வே நிர்வாகம், இதுதொடர்பாக, 6,800க்கும் அதிகமான இமெயில் முகவரிகள் முடக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

ஐஆர்சிடிசி தளத்தில் 130 மில்லியனுக்கும் அதிகமான சந்தாதாரர்கள் உள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறுகிறது. 'இவர்களில் 12 மில்லியன் நபர்களின் பயனர் கணக்குக்கான ஆதார் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதர கணக்குகளுக்கும் சரிபார்ப்புப் பணிகள் தொடங்கியுள்ளன' என்கிறது.

ஒவ்வொரு மாதமும் 2 அல்லது 3 பேர் பயனர் ஐ.டி மூலம் மோசடி செய்ததாக கைதாகும் சம்பவங்கள் நடப்பதாகக் கூறுகிறார், இந்திய ரயில்வே பயணியர் ஆலோசனைக் குழுவின் முன்னாள் உறுப்பினர் என்.கே.ரவிச்சந்திரன்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "கைதாகும் நபர்களை ரயில்வே நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அபராதம் விதிக்கின்றனர். எளிய மக்களை இது நேரடியாக பாதிப்பதில்லை என்பதால் ரயில்வே வாரிய கூட்டங்களில் விவாதிக்கப்படுவதில்லை" என்கிறார்.

மோசடிகளைக் களைய இ-ஆதார் உதவுமா?

ஐஆர்சிடிசி, டிக்கெட் முன்பதிவு, தட்கல் புக்கிங், முறைகேடு, ரயில்வே, தெற்கு ரயில்வே

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ண

ரயில் டிக்கெட் முன்பதிவில் நடக்கும் குளறுபடிகளை சரிசெய்வதற்கு இ-ஆதாரை பயன்படுத்த உள்ளதாக, ஜூன் 4 அன்று தனது எக்ஸ் பக்கத்தில் இந்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதிவிட்டிருந்தார்.

'இதன்மூலம் உண்மையான பயனர்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை பெறுவதற்கு உதவும்' எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதுதொடர்பாக ஐஆர்சிடிசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'ஆதார் சரிபார்க்கப்பட்ட கணக்குகள் மட்டுமே ஆன்லைன் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதற்கு அனுமதிக்கப்படும். அதற்கு ஓடிபி தேவைப்படும் என்பதால் விதிகள் கடுமையாக்கப்பட உள்ளன' எனக் கூறியுள்ளது.

இதே முறையை கவுன்டரில் டிக்கெட் பெறுவதற்கும் விரைவில் பயன்படுத்த உள்ளதாகவும் ஐஆர்சிடிசி தெரிவித்துள்ளது. "ஆனால், இது டிக்கெட் முன்பதிவில் தாமதத்தை ஏற்படுத்தும்" எனக் கூறுகிறார் ஐஆர்சிடிசி முகவர் அலெக்ஸ்.

"முன்பதிவின்போது ஆதாரை உறுதிப்படுத்துவதற்கு ஓடிபி மூலம் எண்ணைப் பெறுவது சாத்தியமற்றது. பலநேரங்களில் ஓடிபி பெறுவதில் தாமதம் ஏற்படுகிறது. அதன்பிறகு பணத்தை செலுத்தி டிக்கெட் பெற வேண்டும். அது அவ்வளவு எளிதாக இருக்காது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

"மாறாக, ஒரு பயனர் முகவரியில் அவரது குடும்பத்தில் யாருக்கெல்லாம் டிக்கெட் தேவையோ அதை முன்கூட்டியே பதிவு செய்து வைக்கும் நடைமுறையைக் கொண்டு வந்தால், அவர்களுக்கு மட்டுமே டிக்கெட் பெற முடியும். இது டிக்கெட் பெறுவதை எளிதாக்கும்" என்கிறார், அலெக்ஸ்.

X பதிவை கடந்து செல்ல
X பதிவை அனுமதிக்கலாமா?

இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.

எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது

X பதிவின் முடிவு

இதனை மறுக்கும் தெற்கு ரயில்வே உயர் அதிகாரி ஒருவர், "ஆதார் அமல்படுத்தப்பட்டால் தனிநபர்களுக்கு முக்கியத்துவம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதை வணிகமாக பார்க்கும் நிறுவனங்களுக்கு மட்டுமே பாதிப்பு ஏற்படும்" எனக் கூறுகிறார்.

தனிநபர்களுக்கு வடிமைக்கப்பட்ட மென்பொருள்கள் தேவையில்லை எனக் கூறும் அவர், "இது கிரிமினல் குற்றம் என்பதால் அதற்காக செலவு செய்ய யாரும் முன்வர மாட்டார்கள்" என்கிறார்.

"மனித வேகம் என்பது மில்லி நொடியில் செயல்பட முடியாது. ஆனால், வடிமைக்கப்பட்ட மென்பொருளால் அது சாத்தியம். அதற்கான வாய்ப்புகளை நீக்கும்போது டிக்கெட் முன்பதிவு எளிதாகும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.

எஸ்எம்எஸ் மூலம் ஓடிபி வரும் நேரம் ஆகியவற்றைக் கணக்கிட்டு முன்பதிவு திட்டமிடப்பட உள்ளதாகக் கூறிய தெற்கு ரயில்வே உயர் அதிகாரி, "சோதனை அடிப்படையில் இதைச் செயல்படுத்த உள்ளனர். இதன் முடிவுகளை வைத்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" எனக் கூறினார்.

"ஆதார் பரிசோதனையின் நோக்கம் என்பது முன்பதிவு டிக்கெட்டுகளைக் கட்டுப்படுத்துவதற்காக அல்ல. உண்மையான பயனர்களுக்கு டிக்கெட் கிடைப்பதை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது" எனவும் அவர் குறிப்பிட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு