14 வயது சிறுமியை மணம் முடித்த 25 வயது நபர் விடுதலை - உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? போக்சோ வழக்கு என்ன ஆனது?

- எழுதியவர், நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
போக்சோ வழக்கில் கைதாகி, 20 ஆண்டுகள் தண்டனை உறுதி செய்யப்பட்ட இளைஞரை உச்ச நீதிமன்றம் சமீபத்தில் விடுதலை செய்துள்ளது.
மே 23 அன்று உச்ச நீதிமன்றத்தின், நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு போக்சோ குற்றவாளி ஒருவரை விடுதலை செய்து அறிவித்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது.
போக்சோ வழக்கின் தன்மை, அதன் நிலை, குழந்தை திருமணங்கள் தொடர்பான தரவுகளை சேகரித்து, உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில் நிகழ் நேர (real time dash board) கண்காணிப்பு அமைப்பை உருவாக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்துள்ளது.
அரசியல் சாசன பிரிவு 142-ஐ பயன்படுத்தி, குற்றவாளியை விடுதலை செய்த நீதிமன்றம், "இந்த வழக்கு ஒரு முன்மாதிரியாக இருக்கக் கூடாது. இருக்காது. இது, நம்முடைய சமூகம் மற்றும் நீதித்துறையின் தோல்வியின் பிரதிபலிப்பு," என்று மேற்கோள்காட்டியது.
(2018-ஆம் ஆண்டில்) 14 வயது சிறுமியைத் திருமணம் செய்த 25 வயது மதிக்கத்தக்க நபர் வழக்கில் இருந்து வெளிவந்தது எப்படி? பாலியல் கல்வியை மாணவர்களுக்கு கற்றுத் தர வேண்டிய கட்டாயம் இருப்பது குறித்து உச்ச நீதிமன்றம் தெரிவித்தது என்ன? இந்த வழக்கில் நடந்தது என்ன?
இது ஏன் மாறுபட்ட வழக்காக கருதப்படுகிறது?
2018-ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில், 25 வயது மதிக்கத்தக்க ஆணுடன், 14 வயது சிறுமி வாழ்ந்து வந்துள்ளார். அவரின் தாயார் அந்த நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்து, அந்த மகளை தன்னுடன் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். ஆனால் சில மாதங்களுக்குப் பிறகு மீண்டும் அந்த பெண் குற்றம் சுமத்தப்பட்ட நபருடன் சேர்ந்து வாழ்ந்தார். பின்னர் திருமணம் செய்து கொண்டனர்.
விரைவில் அவர் பெண் குழந்தைக்கு தாயானார். ஆனால் 2021-ஆம் ஆண்டு அந்த இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் செய்த குற்றங்களுக்காக போக்சோ மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகளின் கீழ் மொத்தமாக 29 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.
ஆனால் அந்த தண்டனைக்கு எதிராக அந்த சிறுமி, சட்டப் போராட்டம் நடத்தியுள்ளார். கைது செய்யப்பட்ட அந்த இளைஞரை மீட்பதற்காக ரூ. 1,35,000 வரை செலவிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றம் தன்னுடைய தீர்ப்பில், "சட்டம் இதை ஒரு குற்றமாக கருதுகிறது. ஆனால் பாதிக்கப்பட்ட பெண் அவ்வாறு கருதவில்லை. அவருக்கு இழைக்கப்பட்ட குற்றம் அவருக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஆனால், வழக்கிற்கு பிறகு காவல் மற்றும் நீதித்துறை, அந்த நபரை விடுதலை செய்வதற்காக அப்பெண் நடத்திய போராட்டம், மகளுக்கு சிறப்பானதை செய்ய வேண்டும் என்ற எண்ணம், பொருளாதார சிக்கல்கள் போன்றவை தான் அவரை பாதித்துள்ளது.
தன்னை 'பாதிக்கப்பட்ட பெண்ணாக' கருத விரும்பாத பெண்ணுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் உறுதி செய்ய வேண்டும். இது அவரின் குடும்பத்தை பாதுகாக்கும் என்றால், அந்த பெண்ணுக்குப் பிறந்த குழந்தையின் நலனை கருத்தில் கொண்டு அந்த உதவிகள் வழங்கப்படும்," என்று குறிப்பிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
வழக்கில் நடந்தது என்ன?
மேற்கு வங்க மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டு தன்னுடைய 14 வயது மகளைக் காணவில்லை என்று பெண் ஒருவர் புகார் மனு அளிக்கிறார்.
விசாரணையின் போது, குற்றம் சுமத்தப்பட்ட 25 வயதான நபரின் தூண்டுதலின் பேரிலே அந்த சிறுமி வீட்டைவிட்டு வெளியேறியதாக தெரிய வந்தது. புகார் அளித்து விசாரணை துவங்கிய பிறகு, அந்த சிறுமி குற்றம் சாட்டப்பட்டவரின் வீட்டில் இருந்து அழைத்துவரப்பட்டு, மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு அரசு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருக்கிறார். ஆனால் எந்தவித பாதுகாப்பும் அந்த சிறுமிக்கு வழங்கப்படாத சூழலில், அவருடைய தாயார் அவரை அரசு இல்லத்தில் இருந்து அழைத்து வந்து வீட்டில் வைத்திருக்கிறார்.
ஆனால் 2019-ஆம் ஆண்டு அந்த சிறுமி, குற்றஞ்சாட்டப்பட்ட நபரின் வீட்டிற்கு சென்று வாழ ஆரம்பித்திருக்கிறார். இந்த சூழலில் அவர் கர்ப்பம் அடைந்து ஒரு பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். அதே சமயத்தில் அந்த நபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
போக்சோ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட சிறப்பு நீதிபதி, விசாரணைக்குப் பிறகு குற்றவாளிக்கு போக்சோ சட்டம் பிரிவு 6-ன் கீழ் 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்தார். மேலும், இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 363-ன் கீழ் (கடத்தல் குற்றங்களுக்காக பதிவு செய்யப்படும் பிரிவு) 4 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 366-ன் கீழ் (18 வயது பூர்த்தி அடையாத பெண்ணை கடத்துதல் மற்றும் திருமணம் செய்ய நிர்பந்திக்கும் குற்றங்களுக்காக பதியப்படும் பிரிவு) ஐந்தாண்டுகள் கடுங்காவல் தண்டனையையும் வழங்கினார்.

பட மூலாதாரம், Getty Images
தண்டனையை நிறுத்தி வைத்த உயர் நீதிமன்றம்
இந்த தீர்ப்புக்கு எதிராக கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் குற்றவாளி. 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 18 அன்று, சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நிறுத்தி வைத்து, குற்றவாளியை வழக்கில் இருந்து விடுதலை செய்து அறிவித்தது.
இது தொடர்பான தீர்ப்பை வழங்கும் போது, கொல்கத்தா உயர் நீதிமன்றம், சில அவதானிப்புகளை கவனத்தில் கொண்டது. முதலில் இந்திய தண்டனைச் சட்டம் 363 மற்றும் 366 பிரிவில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களில் இருந்து குற்றவாளியை விடுதலை செய்தது.
" போக்சோ சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட நீதிபதி, குற்றவாளிக்கும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் இடையே திருமணம் நடைபெற்றது என்பதை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை என்பதை தன்னுடைய தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். எனவே குழந்தை திருமண சட்டம் 2006, பிரிவு 9-ன் கீழ் அவர் மீது சாட்டப்பட்ட குற்றம் நிரூபிக்கப்படவில்லை. ஐ.பி.சி. 363 மற்றும் 366 - ன் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் இருந்து குற்றவாளி விடுவிக்கப்படுகிறார்," என்று குறிப்பிட்டிருந்தது.
பாதிக்கப்பட்ட பெண்ணின் நலனை கருத்தில் கொண்டு போக்சோ வழக்கில் இருந்து குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாகவும் அறிவித்தது உயர் நீதிமன்றம். அதில், "பாதிக்கப்பட்ட பெண்ணின் தாயார் அவரின் மகளையும் பேத்தியையும் கைவிட்டுவிட்டார். வேறு வழியேதுமின்றி, அந்த சிறுமி குற்றவாளியின் குடும்பத்தினருடனே வாழ்ந்து வந்தார்," என்றும் குறிப்பிட்டிருந்தது.
இந்த விவகாரத்தில் தாமாக முன்வந்து விசாரணை செய்த உச்ச நீதிமன்றம், கொல்கத்தா உயர் நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைத்தது. வழக்கறிஞர்கள் மாதவி திவான் மற்றும் லிஸ் மேத்யூ ஆகியோரை "அமிக்கஸ் கியூரியாக" நியமனம் செய்து வழக்கின் தன்மை குறித்து அறிக்கையை சமர்ப்பிக்க உத்தரவு பிறப்பித்தது.

பட மூலாதாரம், Getty Images
அமிக்கஸ் கியூரியின் பரிந்துரைகள்
"பெற்றோர் மற்றும் அரசிடம் இருந்து சிறுமிக்கு தேவையான எந்த உதவியும் கிடைக்கவில்லை. பாதிக்கப்பட்ட சிறுமியை பாதுகாக்கும் பொறுப்பை சரியாக செய்ய அரசாங்கம் தவறிவிட்டது. தன்னுடைய எதிர்காலம் குறித்து எந்தவிதமான முடிவையும் எடுக்க வாய்ப்புகள் ஏதுமற்ற சூழலில் அவர் குற்றவாளியின் வீட்டிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது," என்று குறிப்பிட்டிருந்தனர்.
"முறையான விழிப்புணர்வு இருந்தால் இதுபோன்ற பிரச்னைகள் ஏற்படாமலே தவிர்த்திருக்க இயலும். சாத்தியா சாலா, ஹெல்லோ ஷஹேலி போன்ற டிஜிட்டல் தளங்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியத்திற்கு இடையே இருக்கும் இடைவெளியை நிரப்ப உருவாக்கப்பட்டது. இத்தகைய முன்னெடுப்புகள் இந்தியாவில் இருந்தும் கூட, யுனெஸ்கோவின் தி ஜேர்னி டுவார்ட்ட்ஸ் காம்ப்ரெஹென்சிவ் செக்சுவாலிட்டி எஜூகேஷன்: க்ளோபல் ஸ்டேட்டஸ் ரிப்போர்ட் (2021) அறிக்கையின் படி, எச்.ஐ.வி மற்றும் பாலியல் சார்ந்த கல்விகள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கே வழங்கப்படுகிறது.
முறையான கொள்கை சீர்திருத்தங்கள், மேம்படுத்தப்பட்ட ஆசிரியர் பயிற்சி மற்றும் பாடத்திட்டங்கள் இல்லையெனில் இந்தியா பதின் பருவ ஆரோக்கிய சீர்கேடுகள், தவறான தகவல்கள், பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான கல்வி குறித்து நிலவும் தவறான பார்வையால் இந்தியா அவதிப்பட்டுக் கொண்டிருக்கும். எனவே விரிவான பாலியல் சார் கல்வியை இந்தியாவில் அறிமுகம் செய்ய வேண்டும்," என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதற்கான குழு ஒன்றை உருவாக்க பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை வாயிலாக மத்திய அரசுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது உச்ச நீதிமன்றம்.
பாலியல் கல்வியை செயல்படுத்தல், ஆலோசனை சேவைகள், போக்சோ வழக்குகளின் நிலை, குழந்தை திருமணங்கள் போன்றவற்றை கண்காணித்தல் உள்ளிட்ட முக்கிய விவகாரங்களின் நிகழ்நேரத் தரவைச் சேகரிப்பதன் மூலம், அரசு இது போன்ற முக்கியப் பிரச்சினைகளைக் கையாள்வதில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்த இயலும்," என்றும் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
மனித உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்ட வழக்கு
"பொதுவாக இது போன்ற வழக்குகளில், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதோடு, குற்றவாளிக்கு கடுமையான தண்டனையே உறுதி செய்யப்படும். ஆனால் இந்த வழக்கை ஒரு குற்றவழக்காக கருதாமல், மாறாக மனித உணர்வுகளின் அடிப்படையில் பார்க்கப்பட்ட வழக்காக அமைந்திருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண்ணின் மன நலனையும் குடும்ப நலனையும் கருத்தில் கொண்டு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது," என வழக்கறிஞர் சுவகதா ரகா தெரிவித்தார்.
கர்நாடகாவில் போக்சோ வழக்குகளில் வாதிடும் அவர், உச்ச நீதிமன்றம் பாலியல் கல்வியை அறிமுகம் செய்வதற்கான குழு ஒன்றை அமைக்க உத்தரவு பிறப்பித்திருப்பதை வரவேற்றார்.
"பதின் பருவ குழந்தைகள், தேவையற்ற மன அழுத்தத்தை எதிர்கொள்வதற்கும், 'ரொமாண்டிக் உறவில்' ஈடுபட்ட காரணத்திற்காக சிறை செல்வதை குறைக்கவும் பாலியல் கல்வி கட்டாயம் உதவும். மத்திய அரசு இதற்காக அதிக நிதியை ஒதுக்கீடு செய்து, இது போன்ற விவகாரங்களில் குழந்தைகள் சிக்கிக் கொள்வதை தடுக்க உதவ வேண்டும்," என்று தெரிவித்தார்.
இது தொடர்பாக மேற்கொண்டு பேசிய, சென்னை மகளிர் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக பணியாற்றும் ஆர்த்தி பாஸ்கரன், "சில நேரங்களில் பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் அடையும் போதோ, அல்லது அவருக்கு குழந்தை பிறக்கும் போதோ சிக்கல்கள் நீடிக்கின்றன. இது போன்ற தேவையற்ற மன உளைச்சலை தவிர்க்க, இத்தகைய கல்வி கட்டாயம் உதவும்," என்று கூறினார்.

"போக்சோ சட்டத்தில் மாற்றங்கள் வேண்டும்"
போக்சோ வழக்குகளைப் பொருத்தமட்டில், சென்னை நீதிமன்றங்கள் மாறுபட்ட அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்றும் சுட்டிக் காட்டுகிறார் ஆர்த்தி.
"சிறார்/சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் சுரண்டல்கள் மற்றும் வன்முறை போன்ற வழக்குகள் மட்டுமே போக்சோ நீதிமன்றங்களில் நடைபெறுகின்றன. ஆனால் வீட்டில் இருந்து வெளியேறும் பதின்பருவ காதலர்கள் தொடர்பான வழக்கை தீர்த்து வைக்கவே அவர்கள் மகளிர் நீதிமன்றத்தை நாடி வருகின்றனர்.
பதின்ம வயதில் தோன்றும் காதல்கள் குறித்து சென்னை நீதித்துறையில் ஒரு நல்ல புரிதல் இருக்கின்ற காரணத்தால், இதில் சம்பந்தப்பட்ட சிறார் மற்றும் சிறுமிகளுக்கு தேவையான மன நல ஆலோசனை வழங்கப்படுகிறது. சிலர் 18 வயதான பிறகு திருமணம் செய்து கொள்வோம் என்று கூறுகின்றனர். சில பெற்றோர்கள், அவசரப்பட்டு வழக்கு பதிவு செய்துவிட்டோம் குழந்தைகளின் எதிர்காலம் கெட்டுவிடும் என்று கோரிக்கை வைத்து வழக்கை ரத்து செய்ய முன்வருவார்கள்.
சில நேரங்களில் வழக்கில் சம்பந்தப்பட்ட பதின்பருவ பெண், பதின்பருவ ஆணைக் காட்டிலும் வயதில் மூத்தரவாக இருப்பார். இது போன்ற 'க்ரே ஏரியாக்கள்' வரும் போது, இரு தரப்பின் நலனையும் கருத்தில் கொண்டே வழக்குகள் முடித்து வைக்கப்படுகிறது," என்று கூறுகிறார் ஆர்த்தி.
2021-ஆம் ஆண்டே சென்னை உயர் நீதிமன்றம், போக்சோ சட்டத்தின் நோக்கம் காதல் வயப்படும் பதின்ம வயதினரை சிறையில் அடைப்பதில்லை. இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர்கள், இந்த சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்த வண்ணம் இருக்கின்றனர். எனவே இந்த சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று கூறியது.
"ஆனால் எக்காரணம் கொண்டும் ஒன்றுக்கும் மேற்பட்ட சிறுமிகளை பாலியல் ரீதியாக சுரண்டுபவர்கள், ஏற்கனவே திருமணம் செய்து கொண்ட நபர் குற்றவாளியாக கைது செய்யப்படும் போது, சரித்திர பதிவேட்டுக் குற்றவாளியாக இருக்கும் போது, கடுமையான தண்டனைகள் அவர்களுக்கு உறுதி செய்யப்படும்," என்றும் ஆர்த்தி கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
"கொள்கை அளவிலான மாற்றங்கள் நன்மை அளிக்கும்"
"உச்ச நீதிமன்றம் தரவுகளை சேகரித்து, போக்சோ வழக்குகளின் தன்மை குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது நிச்சயமாக வரவேற்கக் கூடியது," என்று கூறுகிறார் கோவை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழுவில் பணியாற்றும் ஹஃப்சா.
"பதின்பருவ காதல் விவகாரங்களில் சிறார் பள்ளிகளுக்கு செல்லும் பதின்ம வயது ஆண்களின் நிலையும் பிரச்னைக்குள்ளானதாகவே உள்ளது. அவர்கள் சிறார் சீர் திருத்தப் பள்ளியில் இருக்கும் போதும் சரி, வெளியே வந்து பிறகும் சரி அவர்களை பார்க்கும் சமூகத்தின் பார்வை அவர்களை குற்றவாளிகளாகவே கருதுகிறது.
இயற்கையாக நடக்கும் ஒரு உறவில், அவர் குற்றவாளியாக கருதப்படுதல் காலத்திற்கும் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், ஆசிரியர்களுக்கு இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்துகின்றோம். அது போன்று 'கம்யூனிட்டி அவுட் ரீச்' திட்டங்களையும் செயல்படுத்துகின்றோம். இது பதின்பருவத்தில் காதல் வயப்படும் இரு தரப்பினரையும் இயல்பான மக்களாக நடத்த பெரிய அளவில் உதவும் என்று நம்புகின்றோம். உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகள் செயல்முறைக்கு வரும் போது, பெரிய அளவில் மாற்றங்களை அது உருவாக்கும்," என்றும் ஹஃப்சா கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












