பொது சிவில் சட்டத்தால் முஸ்லிம்களுக்கு என்ன பாதிப்பு ஏற்படும்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி நியூஸ்
அமெரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பிய பின், பிரதமர் நரேந்திர மோதி நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கினார்.
பிரதமரின் இந்த பேச்சுக்கு எதிர்கட்சிகளிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் வரத் தொடங்கின. அதைத் தொடர்ந்து மீண்டும் நாடு முழுவதும் இது ஒரு விவாதப் பொருளாக மாறியுள்ளது.
பொது சிவில் சட்டத்தைக் கொண்டு வர ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற கோஷத்தை பாஜக முன்வைக்கிறது. இதன் காரணமாக முஸ்லிம் சமூகம் தனது தனிநபர் சட்டம் குறித்து ஆழ்ந்த கவலையில் மூழ்கி உள்ளது.
பொது சிவில் சட்டத்தை எதிர்க்கும் சூழல் சமூகத்திற்குள் உருவாகி வருவதாகவும், வாட்ஸ்அப் குழுக்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் மக்கள் தங்கள் கருத்தை சட்ட ஆணையத்திற்கு விரைவில் தெரிவிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தின் மத்தியில், 22வது சட்ட ஆணையம் ஒரு மாதத்திற்குள் பொது சிவில் சட்டம் பற்றிய பொதுக்கருத்துக்களைக் கேட்டுள்ளது.
இந்த ஆணையம் தனது அறிக்கையை இம்மாத மத்தியில் வெளியிடலாம். அதில் பொதுக் கருத்துக்களின் அடிப்படையில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தலாமா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
முன்னதாக, 21ஆவது சட்ட ஆணையம், "பொது சிவில் சட்டம் தேவையற்றது," என்று கூறியிருந்தது.
முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் நீண்ட வரலாறு
பல சமூகங்கள் பொது சிவில் சட்டத்தை எதிர்க்கின்றன. இதில் முஸ்லிம்கள் மிகப்பெரும் சிறுபான்மை சமூகமாக உள்ளனர்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்தினால் இச் சமூகத்தின் ஷரியா அடிப்படையிலான முஸ்லீம் தனிநபர் சட்டம் ஒழிக்கப்படும் என்று அவர்கள் அஞ்சுகிறார்கள்.
முஸ்லிம் தனிநபர் சட்டம் பல ஆண்டுகளாக சர்ச்சையில் உள்ளது. ஆனால் இஸ்லாமிய மதத் தலைவர்கள் கூறுகையில், முஸ்லிம் தனிநபர் சட்டம் குறித்து போதுமான தகவல்களைத் தெரிந்து கொள்ளாததால் அது தொடர்பாக பொதுமக்களிடையே பல தவறான கருத்துக்கள் எழுந்துள்ளன என்கின்றனர்.
ஆரம்ப இஸ்லாமிய காலம் (7-12 ஆம் நூற்றாண்டு)
இஸ்லாம் 7 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தது. அந்த மதத்தைப் பின்பற்றுபவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸில் (முஹம்மது நபியின் கூற்றுகள் மற்றும் நடைமுறைகள்) இடம்பெற்றிருக்கும் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றி வருகின்றனர்.
திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் குடும்பத் தகராறுகள் போன்ற விஷயங்களில் தனிப்பட்ட இஸ்லாமிய சட்டக் கோட்பாடுகளைப் பயன்படுத்தினாலும், இந்தியாவில் முஸ்லீம் சமூகம் பெரும்பாலும் உள்ளூர் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை சார்ந்துள்ளது.
முஸ்லிம் தனிநபர் சட்டம் இஸ்லாமிய கொள்கைகளின் அடிப்படையில் ஒரு தனித்துவமான சட்ட அமைப்பாக உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
13 மற்றும் 16ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையே இருந்த டெல்லி சுல்தானகம்
13 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவில் முஸ்லீம் ஆட்சி தொடங்கியது.
அப்போது டெல்லி சுல்தானின் ஆட்சிக்கு உள்பட்ட பகுதியில் இஸ்லாமிய சட்டத்தை உள்ளடக்கிய ஒரு வாழ்க்கை முறை தொடங்கியது.
இஸ்லாமியக் கொள்கைகளின் அடிப்படையில் நீதி வழங்குவதற்காக காஜிகள் (இஸ்லாமிய நீதிபதிகள்) நியமிக்கப்பட்டனர்.
ஹனாஃபி ஸ்கூல் ஆஃப் லா மற்றும் இஸ்லாமிய சட்ட வல்லுநர்கள் மற்றும் அறிஞர்களின் விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம் தனிநபர் சட்டம் தொடர்ந்து வளர்ந்து வந்தது.

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம் சட்ட நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள்?
டாக்டர் தாஹிர் மஹ்மூத் இஸ்லாமிய சட்டம் மற்றும் இந்திய குடும்ப சட்டங்கள் குறித்து நன்கு அறிந்து வைத்துள்ள நிபுணர்.
அவர் இந்திய சட்டங்கள் மற்றும் அரசியலமைப்பு பற்றிய பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவற்றில் "இந்தியாவில் முஸ்லீம் சட்டம்" மற்றும் "இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள முஸ்லிம் சட்டம்" ஆகிய இரண்டு புத்தகங்களின் உதவியுடன் நீதிமன்றங்கள் பல தீர்ப்புகளை வழங்கியுள்ளன.
கியாசுதீன் பால்பன் காலத்திலிருந்து ஒவ்வொரு காலகட்டத்திலும் தொடர்ந்து இந்த சட்டங்கள் எழுதப்பட்டு வந்துள்ளன என்று அவர் கூறுகிறார்.
டெல்லி சுல்தானகம் இருந்த போது இஸ்லாமிய நீதிமன்றங்கள் இருந்தன. முகலாயர்களின் காலத்தில் இந்த நீதிமன்றங்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருந்தது. அவுரங்கசீப்பின் ஆட்சிக்காலத்தில் இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட 'ஃபத்வா-இ-ஆலம்கிரி' என்ற சட்டங்கள் கிடைத்தன.
இந்த சட்டங்கள் ஒரு குழு அமைக்கப்பட்டு அக்குழுவினரால் எழுதப்பட்டன. ஆனால் அதிகாரப்பூர்வமாக அவை உருவாக்கப்படவில்லை.
இது குறித்துப் பேசும் டாக்டர் மஹ்மூத், "முகலாயர்களின் காலத்தில், சிவில் வழக்குகளின் நீதிமன்றங்கள் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் அந்தஸ்தைக் கொண்டிருந்தன. மேலும், அந்த காலகட்டத்திலும் நீதிமன்றங்களுக்கு உயர் முன்னுரிமை அளிக்கப்பட்டது. இன்றைய உச்ச நீதிமன்றத்தைப் போலவே, அப்போதும் ஒரு நீதிமன்றம் இருந்தது. அதில் பேரரசர் தான் தலைமை நீதிபதியாக இருந்தார்," என்கிறார்.

முகலாயப் பேரரசு (16 - 18 ஆம் நூற்றாண்டு)
இந்தியாவில் முகலாயர்களின் காலம் 1526 இல் தொடங்கியது. முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் வளர்ச்சியில் முகலாயப் பேரரசு குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கொண்டிருந்தது.
அக்பர், தீன்-இ இலாஹி என்ற பெயரில் ஒரு தனி மதத்தைத் தொடங்கினார். அதன் நோக்கம் வெவ்வேறு மத நடைமுறைகளை ஒன்றிணைப்பதாகும்.
சட்ட நிபுணரான பேராசிரியர் பைசான் முஸ்தபா தற்போது யூடியூப்பில் முஸ்லிம் தனிநபர் சட்டம் மற்றும் பொது சிவில் கோட் பற்றிய தொடரை நடத்தி வருகிறார். அதில் முஸ்லிம் தனிநபர் சட்டத்தின் வரலாற்றை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
முஸ்லிம் ஆட்சியாளர்கள் ஷரியா சட்டத்தை கடுமையாக அமல்படுத்தவில்லை என்றும், இந்துக்களின் மத சடங்குகளில் தலையிடவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்.
அவரது காணொளி ஒன்றில், "1206 முதல் 1526 வரையிலான டெல்லி சுல்தானாக இருந்தாலும் சரி, 1526 முதல் ஆங்கிலேயர்களின் வருகை வரையிலான முகலாய ஆட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் இந்து சட்டத்தில் தலையிடவில்லை. இந்துக்களுக்கு மத சுதந்திரம் அளித்தனர்," எனத்தெரிவித்துள்ளார்.
மேலும், "பஞ்சாயத்துகளின் முடிவுகளில் அரசு தலையிடவில்லை. வழக்கத்தில் இருந்த சட்டங்கள் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டன. பொதுமக்கள் மீது இஸ்லாமிய சட்டம் திணிக்கப்படவில்லை," என்றும் தெரிவித்துள்ளார்.
இது மட்டுமின்றி, "ஔரங்கசீப் இஸ்லாமிய வல்லுனர்கள் 40 பேரை அழைத்து ஆலோசனை நடத்தி 'ஃபத்வா-இ-ஆலம்கிரி' என்ற சட்டப் புத்தகத்தை எழுதினார். அது அரசு உத்தரவின் மூலம் எதையும் செய்ய முடியும் என்பதற்கு மாற்றாக இருந்தது என்று பேராசிரியர் பைசான் முஸ்தபா கூறுகிறார்.
முகலாயர்கள் ஷரியாவை அதன் உண்மையான வடிவத்தில் ஒருபோதும் அமல்படுத்தவில்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஆட்சி காலம் (18-20ஆம் நூற்றாண்டுகள்)
18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களின் வருகைக்குப் பிறகு, இந்தியாவில் சட்ட அமைப்பில் முக்கிய மாற்றங்கள் ஏற்பட்டன.
பேராசிரியர் பைசான் முஸ்தபாவின் கூற்றுப்படி, ஆங்கிலேயர்கள் இந்தியாவுக்கு வந்தபோது, இந்தியாவில் மதச் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருந்ததாக அவர்கள் நம்பினர்.
"ஆங்கிலேயர்கள் அப்போது தனிப்பட்ட சட்டத்தை உருவாக்கினார்கள். இரண்டு பேருக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால், அவர்கள் இருவரும் இந்துக்கள் என்றால் இந்து சாஸ்திரங்களின் அடிப்படையிலும், இருவரும் முஸ்லிம்கள் என்றால், அது முஸ்லிம் சட்டத்தின் அடிப்படையிலும் தீர்மானிக்கப்படும் என அந்த சட்டத்தில் கூறப்பட்டிருந்தது," என்கிறார் அவர்.
18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பண்டிதர்கள் மற்றும் உலமாக்களிடம் கலந்தாலோசிக்காமல் சட்டங்களை தாங்களே முடிவு செய்ய ஆங்கிலேயர்கள் விரும்பினர். இதற்காக, "இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் மத நூல்களை மொழிபெயர்க்கும் பணிகளை ஆங்கிலேயர்கள் தொடங்கினர். இங்கே நாம் புரிந்து கொள்ளவேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நூல்களின் அடிப்படையில்தான் சட்டங்கள் இயற்றப்பட்டன.
ஆங்கிலேயர்கள் இந்த காலகட்டத்தில் ஹனாஃபி பள்ளியின் அல்-ஹிதாயா என்ற சட்டப் புத்தகத்தின் அடிப்படையில் முடிவுகளைக் கேட்கத் தொடங்கினர். இந்த புத்தகம் அரபு மொழியில் இருந்தது. இது முதலில் பாரசீக மொழியிலும் பின்னர் ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது.
இந்த சட்ட புத்தகம் 1791 இல் சார்லஸ் ஹாமில்டன் என்ற ஆங்கிலேயரால் மொழிபெயர்க்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம் தனிநபர் சட்டச் சட்டம் எப்படி உருவாக்கப்பட்டது?
"என்னைப் பொறுத்தவரை, இந்த மொழிபெயர்ப்பு ஒரு அரசியல் சார்ந்த முயற்சியே ஆகும். இதில் பல தவறுகள் இருந்தன. ஆங்கில நீதிமன்றங்கள் சார்லஸ் ஹாமில்டனின் அல்-ஹிதாயாவின்படியே அனைத்து தீர்ப்புகளையும் அளித்தன," எனக்கூறுகிறார் பேராசிரியர் முஸ்தபா.
"இந்தியாவுக்கு வந்து வழக்கறிஞர்களாகப் பணியாற்றிய ஆங்கிலேயர்களுக்கு இந்த புத்தகம் கட்டாயமாக்கப்பட்டது. எனவே இன்று இருக்கும் முஸ்லீம் தனிநபர் சட்டம் இஸ்லாமிய சட்டம் அல்ல, அந்த சட்டம் இந்த தவறாக மொழிபெயர்க்கப்பட்ட அல்-ஹிதாயாவை அடிப்படையாகக் கொண்டது."
டாக்டர் தாஹிர் மஹ்மூத்தின் கூற்றின் படி, ஆங்கிலேயர்கள் வந்தபோது, அனைத்து சமூகத்தினரிடையேயும் பழக்கவழக்கங்கள் ஒரே மாதிரியாக இருந்ததை அவர்கள் புரிந்துகொண்டு உள்ளூர் வழக்கப்படி முடிவுகளை எடுக்கத் தொடங்கினர்.
இதற்கிடையே, "1873 இன் 'மெட்ராஸ் சிவில் நீதிமன்றச் சட்டம்' மற்றும் 1876 ஆம் ஆண்டின் 'அவத் சட்டங்கள்,' மதச் சட்டங்களை விட உள்ளூர் பழக்கவழக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என வலியுறுத்துகின்றன," என்று டாக்டர் மஹ்மூத் கூறுகிறார்.
இந்நிலையில், உள்ளூர் நடைமுறைகளில் பெண்களுக்கு எந்த உரிமையும் வழங்கப்படாததாலும், பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடைக்காததாலும் ஏராளமான பெண்கள் இதில் பாதிக்கப்பட்டனர். ஆனால், முஸ்லிம்களில் பெண்களுக்கு சொத்தில் பாதிப் பங்கு கிடைப்பது வழக்கமாக இருந்துவருகிறது.
இந்த சட்டங்கள் இந்து சட்டத்தின்படி இருந்தன என்பது மட்டுமின்றி ஷரியாவுக்கு முற்றிலும் எதிராக இருந்தன. டாக்டர் தாஹிர் மஹ்மூத், "உலமாக்கள் இந்த சட்டத்துக்கு எதிராக ஒரு பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இதையடுத்தே 1937 இல் முஸ்லிம் தனிநபர் சட்டம் இயற்றப்பட்டது" என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Getty Images
இந்தியாவில் முஸ்லீம் தனிநபர் சட்டம், 1937 இன் முஸ்லீம் தனிநபர் சட்டத்தால் நிர்வகிக்கப்படுகிறது. முஸ்லிம்கள் மத்தியில் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை மற்றும் பராமரிப்பு போன்ற விஷயங்களில் இஸ்லாமிய சட்டத்தின் பயன்பாட்டை இந்த சட்டம் அங்கீகரிக்கிறது.
ஆனால் இந்த சட்டம் 1935 இல் இன்றைய பாகிஸ்தானில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தில் கொண்டுவரப்பட்டது.
"தற்போதைய பாகிஸ்தான் மாகாணத்தின் எல்லையில் ஒரு சட்டம் உருவாக்கப்பட்டது. அதன் பெயர் முஸ்லீம் தனிநபர் சட்டம் (ஷரியத்) சட்டம் 1935. அந்தச் சட்டத்தில் இருந்த அனைத்து விதிகளும் அகற்றப்பட்டு 1937 சட்டம் செயல்படுத்தப்பட்டது" எனக்கூறுகிறார் டாக்டர் தாஹிர் மஹ்மூத்.
சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்
1947 இல் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு, இந்திய அரசியலமைப்பு 1950 இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில், மத சுதந்திரம் மற்றும் மதத்தைப் பின்பற்றுவதற்கும் பரப்புவதற்கும் உரிமை மற்றும் சுதந்திரம் ஆகியவை அளிக்கப்பட்டுள்ளன.
1937 ஆம் ஆண்டு சட்டத்தில் முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் எந்த ஒரு சட்டமும் குறியிடப்படவில்லை என்பதை இங்கு குறிப்பிட வேண்டும்.
இதை எளிய வார்த்தைகளில் விளக்கும் டாக்டர் தாஹிர் மஹ்மூத், "1937-ம் ஆண்டு முஸ்லீம் தனிநபர் சட்டச் சட்டத்தில், இரு தரப்பினரும் முஸ்லிம்களாக இருந்தால், ஷரியத்தின்படி முடிவு எடுக்க வேண்டும் என்று மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் இரண்டு சிறிய பிரிவுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. தனிநபர் சட்டம் இதில் இடம்பெறவில்லை,'' என்று கூறுகிறார்.
“திருமணம், விவாகரத்து, சொத்து, வாரிசுரிமை தொடர்பான விவகாரங்களில் இரு தரப்பினரும் முஸ்லிம்களாக இருந்தால், ஷரீயத்தின் படி முடிவு எடுக்கப்படும். இல்லையெனில் நாட்டின் பொதுச் சட்டம் தான் பொருந்தும்."
இந்த சூழ்நிலையில், நீதிமன்றங்கள் இஸ்லாமிய அறிஞர்களின் புத்தகங்களிலிருந்து வழிகாட்டுதலைப் பெறுகின்றன. டாக்டர் தாஹிர் மஹ்மூத் கூறுகிறார், "சுன்னி முஸ்லிம்களின் மிகவும் பிரபலமான புத்தகங்கள் அல்-ஹிதாயா மற்றும் ஃபதாவா-இ-ஆலம்கிரி. நீதிமன்றங்கள் இந்த புத்தகங்களின் உதவியுடன் மட்டுமே முடிவுகளை வழங்குகின்றன."
ஷியா முஸ்லிம்களின் விஷயத்தில், அவர்களின் புத்தகத்தின் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட்டன.
தற்போது நீதிமன்றங்கள் டாக்டர் தாஹிர் மஹ்மூத்தின் புத்தகங்களின் அடிப்படையில் தீர்ப்புகளை வழங்குகின்றன.
டாக்டர் மெஹ்மூத்தின் கூற்றுப்படி, அவரது புத்தகத்தை மேற்கோள் காட்டி நீதிமன்றங்கள் இதுவரை 67 வழக்குகளில் தீர்ப்பு வழங்கியுள்ளன. இது தவிர, சர் தின்ஷா பர்துன்ஜி முல்லா மற்றும் ஆசிப் அலி அஸ்கர் ஃபைசி ஆகியோரின் இஸ்லாமிய சட்ட புத்தகங்களின் அடிப்படையிலும் நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்குகின்றன.

பட மூலாதாரம், Getty Images
முஸ்லிம் தனிநபர் சட்டத்தில் சீர்திருத்தம் வேண்டும் என கோரிக்கை
பொது சிவில் சட்டம் குறித்த பல ஆண்டுகளாக பாஜகவின் தனத தேர்தல் அறிக்கையில் தெரிவித்துவருகிறது.
பாஜக அரசு அதை விரைவில் செயல்படுத்த விரும்புவதாகவும், தற்போது கிடைத்துள்ள தகவல்களின் படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலேயே ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்படும் என்றும், அதை நிறைவேற்ற ஆளும் கட்சி அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும் என்றும் தெரியவருகிறது.
இந்தியாவில், வெவ்வேறு மத சமூகங்கள் குடும்ப விஷயங்களில் தங்கள் சொந்த தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றுகின்றன. அவை அந்தந்த மத நூல்கள் மற்றும் பழக்கவழக்கங்களை அடிப்படையாகக் கொண்டவை.
இந்த தனிப்பட்ட சட்டங்கள் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் பரம்பரை உள்ளிட்ட பிற குடும்ப விஷயங்களை நிர்வகிக்கின்றன, எனவே வெவ்வேறு மத சமூகங்களுக்கு வெவ்வேறு தனிப்பட்ட சட்டங்கள் உள்ளன.
பொது சிவில் சட்டம் என்பது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான தனிநபர் சட்டம் பொருந்தும் என்பதே ஆகும்.
இந்தச் சட்டம் அதன் வேர்களை இந்திய அரசியலமைப்பின் 44 வது பிரிவில் கொண்டுள்ளது. இது அனைத்து குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான சட்டத்தைப் பரிந்துரைக்கிறது. இருப்பினும் பொது சிவில் சட்டத்தை செயல்படுத்துவது பல ஆண்டுகளாக இந்தியாவில் விவாதத்திற்கு உட்பட்ட விஷயமாகவே இருந்துவருகிறது.

பட மூலாதாரம், Getty Images
பொது சிவில் சட்டத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் முன்வைக்கப்படும் வாதங்கள்
பொது சிவில் சட்டத்தின் ஆதரவாளர்கள் பாலின சமத்துவம், மதச்சார்பின்மை மற்றும் சமூக ஒற்றுமை ஆகியவற்றில் பாரபட்சமான நடைமுறைகளை அகற்றி அனைத்து குடிமக்களுக்கும் சம உரிமைகளை உறுதி செய்வதன் மூலம் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர்.
பொது சிவில் சட்டம் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் என்றும் பல்வேறு மத சமூகங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை நிலைநாட்டும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.
மறுபுறம், இச்சட்டத்தின் எதிர்ப்பாளர்கள், தனிப்பட்ட சட்டங்கள் மத சுதந்திரம் மற்றும் கலாச்சார அடையாளத்தின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்று வாதிடுகின்றனர். ஒரே மாதிரியான சட்டத்தை அமல்படுத்துவது சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை மீறுவதாக இருக்கும் என்றும், அவர்களின் தனித்துவ அடையாளத்தை மோசமாக பாதிக்கும் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
பாரதிய முஸ்லீம் மஹிளா என்ற அமைப்பை ஜக்கியா சோமன் என்பவர் நடத்தி வருகிறார். முஸ்லிம் பெண்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்காக பல ஆண்டுகளாக முஸ்லீம் தனிநபர் சட்டத்தை சீர்திருத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டு வருகிறார்.
"சீர்திருத்தம் தேவை. சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும். முஸ்லிம் குடும்ப சட்டம் கொண்டுவரப்படவேண்டும். ஆனால் அவர்கள் அந்தச் சட்டத்தைக் கொண்டுவர அவர்கள் அனுமதிக்கவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக இதை நாங்கள் கோரி வருகிறோம். இந்த சீர்திருத்தங்களை முஸ்லிம் தனிநபர் வாரியம் அறிமுகப்படுத்தும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனவே, நாங்கள் பொது சிவில் சட்டத்தை அனுமதிப்போம். பொது சிவில் சட்டத்தை உருவாக்குவதில் நாங்களும் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது. முஸ்லிம் பெண்களையும் அரசாங்கம் கேட்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்," என்கிறார் அவர்.

'வரதட்சணை தொடர்பான சட்டங்களில் மாற்றம் வர வேண்டும்'
இந்த அமைப்பின் கோரிக்கைகளை பட்டியலிட்ட அவர், "எல்லோருக்கும் இருக்கும் 18 மற்றும் 21 வயது திருமண வயது எங்களுக்கும் இருக்க வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை. ஆனால் இங்கே ஒரு சிறுமி வயதுக்கு வந்த உடனேயே திருமணத்திற்கு தகுதி பெறுகிறார்," என்கிறார்.
“திருமணம் என்பது ஒரு சமூக உடன்படிக்கை என்று இஸ்லாம் கூறுகிறது. அப்படி என்றால் 13 வயது சிறுமியை சமூக உடன்படிக்கையில் ஈடுபடும் திறன் கொண்டவளாக எப்படி ஏற்றுக்கொள்வது? அவர் ஒரு சிறுமி. அவர் சமூக உடன்படிக்கையைப் புரிந்து கொள்ள போதுமான திறன் இருக்காது. திருமணம் என்பது வாழ்க்கையில் ஒரு மிக முக்கியமான விஷயம், அதைக் கையாள போதுமான முதிர்ச்சி தேவை."
அவர்களின் கோரிக்கை குறித்து மீண்டும் பேசத் தொடங்கும் ஜக்கியா சோமன், “வரதட்சணை பற்றி குரானில் கூறப்பட்டுள்ளதை சட்டப்பூர்வமாக செயல்படுத்த வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். ஆனால் 90 சதவிகித திருமணங்களின் போது மெஹர் எனப்படும் மணமகளுக்கு அளிக்கப்படும் சொத்துக்கள் அளிக்கப்படுவதில்லை. சில நேரங்களில் மிகவும் குறைவாக அளிக்கப்படுகிறது.
மெஹர் என்பது அல்லாஹ்வால் கொடுக்கப்பட்ட உரிமை. ஆனால் எங்களுக்கு அது கிடைப்பதில்லை. இது தொடர்பாக சட்டங்கள் இயற்றப்பட வேண்டும் என்றும், முஸ்லிம் பெண்கள் குறைந்தபட்சம் ஒரு மணமகனின் ஒரு வருட சம்பளம் அல்லது சம்பாத்தியத்தைப் பெற வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம்.
மேலும், பெண்ணின் சம்மதம் இல்லாமல் திருமணம் நடக்கக் கூடாது. அவருடைய சம்மதத்திற்கும் சட்ட அந்தஸ்து வழங்கப்பட வேண்டும். இது குரானிலும் உள்ளது. மேலும் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்த பொறுப்புக்கள் தாயிடம் இருக்க வேண்டும். அதற்கும் சட்டம் இயற்ற வேண்டும். இது தவிர இன்றைய சூழலில் நான்கு விதமான திருமணங்களுக்கு அனுமதி கொடுக்கக்கூடாது. முன்னர் அனுமதி வழங்கப்பட்டபோது இருந்த நிலை தற்போது இல்லை,“ என்கிறார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது எளிதாக இருக்குமா?

பட மூலாதாரம், Getty Images
டாக்டர் தாஹிர் மெஹ்மூத்தின் கூற்றுப்படி, பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றுவது மற்றும் செயல்படுத்துவது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் அது அனைத்து வகையான பாகுபாடுகளையும் முடிவுக்குக் கொண்டுவந்தால், அது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.
“மத பாகுபாடு இல்லாத, பாலின பாகுபாடு இல்லாத, பெண்களுக்கு எதிரான பாகுபாடு இல்லாத, ஒரு மசோதா வந்தால், அதை நிச்சயமாக அமல்படுத்த வேண்டும்,” என்று கூறினார்.
ஆனால் வரைவு மசோதாவைப் பார்த்த பிறகே பொது சிவில் சட்டம் பற்றிய முழுமையான கருத்தைத் தெரிவிக்க முடியும் என்கிறார்.
பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள சிரமங்களைப் பார்த்து, “இந்து சட்டத்தில் கூட்டுக் குடும்பம் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்களிடையே கூட்டுக் குடும்பம் அங்கீகரிக்கப்படவில்லை. கூட்டுக் குடும்பத்தின் மீதான வரிச் சட்டம் வேறு- வரி விகிதங்கள் வேறு,” என்று கூறுகிறார். "எனவே இந்தச் சட்டம் அதை அனைவருக்கும் கொடுக்கவேண்டும் அல்லது யாருக்கும் கொடுக்கக்கூடாது. அப்போதுதான் சட்டத்தில் சமத்துவம் இருக்கும்."
மேலும் பேசிய டாக்டர் தாஹிர் மஹ்மூத், "இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது பெரும் பிரச்சினையாக இருக்கும். இதற்கு தீர்வுகளை அளிப்பது அவ்வளவு எளிதானது அல்ல. எனவே இது இப்படியே தொடரும். 2024 க்குள் இச்சட்டத்தை நிறைவேற்றுவது மிகவும் கடினம்," என்கிறார்.
பேராசிரியர் பைசான் முஸ்தபா, "ஒரே நேரத்தில் இவை அனைத்தையும் அமல்படுத்துவதற்கு சாத்தியமில்லை. முதலில் இந்த சட்டம் தொடர்பான முன்வரைவு தேவை. அதை இன்னும் யாரும் பார்க்கவில்லை. அதைப் படித்துப் பார்த்த பின் தான் எதுவும் சொல்ல முடியும்," என்கிறார்.
இந்த சட்டத்தை படிப்படியாக அமல்படுத்த வேண்டும் என்று ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள். வாக்கு வங்கியை மனதில் வைத்து இந்தச் சட்டத்தை அமல்படுத்தினால் அது எப்போது வேண்டுமானாலும் அமல்படுத்தப்படும். ஆனால் சமூக நீதியை நோக்கமாகக் கொண்டால், அதை மெதுவாகத் தான் அமல்படுத்தமுடியும் என்று அவர் கூறுகிறார்

பட மூலாதாரம், Getty Images
சமூக ஆர்வலர் ஜக்கியா சோமனும் அரசின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.
அவர் கூறுகிறார், "இன்று, முஸ்லீம்கள் மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு எதிரான பாகுபாடு அதிகபட்சமாக உள்ளது. முஸ்லிம்கள் மட்டுமே, எழுதப்பட்ட தனிப்பட்ட இல்லாத சமூகமாக உள்ளனர். எனவே பொது சிவில் சட்டம் அறிமுகம் செய்யப்படும் போது முஸ்லிம்கள் பயனடைவார்கள். இருப்பினும், முஸ்லிம் பழமைவாதிகளுக்கு அது பிடிக்காது. பெண்களை அடக்க விரும்புபவர்கள், அது எந்த மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் இந்தச் சட்டம் இயற்றப்படும்போது அதை எதிர்ப்பார்கள்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












