பொது சிவில் சட்டம்: எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடு என்ன? பா.ஜ.க. வியூகம் பலிக்குமா?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், பிரியங்கா ஜா
- பதவி, பிபிசி நியூஸ்
பொது சிவில் சட்டம் குறித்துப் பேசி நாட்டில் பெரும் விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்துள்ளார்.
அதன்பிறகு சில அரசியல் கட்சிகள் UCC (Uniform Civil Code) எனப்படும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவும், சில கட்சிகள் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன.
அதே நேரத்தில், சில கட்சிகள் பொது சிவில் சட்டத்தின் முன்வரைவு வெளிவந்த பிறகு தங்கள் நிலைப்பாட்டை முடிவு செய்வதாகவும் கூறியுள்ளன.
பொது சிவில் சட்டம் என்பது திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, தத்தெடுப்பு உள்ளிட்ட பல விஷயங்களில் நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும் ஒரே விதமான நடைமுறையை அறிமுகப்படுத்தும் நோக்கில் வடிவமைக்கப்படும் ஒரு சட்டம் ஆகும்.
2024-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயல்படும் முயற்சிகளை மேற்கொள்ளும் நேரத்தில் பிரதமர் மோடி, இந்த விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை முறியடிக்கும் நோக்கில், அடுத்த தேர்தலுக்கான ஒரு வியூகமாக பொது சிவில் சட்டத்தை பா.ஜ.க. பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
சுமார் 10 மாதங்களுக்குப் பிறகு நடைபெற உள்ள பொதுத் தேர்தலில், பொது சிவில் சட்டம் குறித்து பல்வேறு கருத்துகளைக் கொண்ட எதிர்க்கட்சிகள் பொதுவான உடன்படிக்கைக்கு வரும் வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
பொது சிவில் சட்டம் - எதிர்க்கட்சிகளுக்குள் முரண்

பட மூலாதாரம், Getty Images
பொது சிவில் சட்டத்தின் முன்வரைவைப் பார்த்த பின்பே அதற்கு ஆதரவளிப்பது குறித்து தீர்மானிக்கப்படும் என ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. ஆம் ஆத்மி கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான சந்தீப் பதக், தனது கட்சி அதற்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆனால் வரைவுக்காக காத்திருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியும் தற்போது பொது சிவில் சட்ட முன்வரைவுக்காக காத்திருக்கிறது.
இவை தவிர திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, ஐக்கிய ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் பொது சிவில் சட்டம் குறித்து தங்கள் கருத்தை தெரிவித்துள்ளன.
கடந்த காலங்களில் பாஜகவின் கூட்டணி கட்சியாக இருந்த ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் கே.சி. தியாகி, பொது சிவில் சட்டம் ஒரு நுட்பமான பிரச்சினை என்றும், அதில் ஒருமித்த கருத்தை உருவாக்க முயற்சிக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணிக் கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி எம்பி மனோஜ் ஜா, பொது சிவில் சட்டத்தை இந்து-முஸ்லிம் பிரச்னையாக மட்டும் பார்க்கக்கூடாது என்றும், பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள் உள்ளிட்ட அனைத்து கோணங்களில் இருந்தும் பார்க்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொது சிவில் சட்டத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. அக்கட்சி பொது சிவில் சட்டத்தை எதிர்க்கப் போவதுமில்லை, ஆதரிக்கப் போவதுமில்லை என அறிவித்துள்ளது.
சிவசேனாவும் (உத்தவ் தாக்கரே பிரிவு) பொது சிவில் சட்டம் (UCC) தொடர்பான சட்ட முன்வரைவுக்குப் பிறகு தனது நிலைப்பாட்டை முடிவு செய்யும் என்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து எழுந்துள்ள கேள்விகளை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி நிராகரித்துவிட்டது.
அடுத்த மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்ட ஜூன் 23 அன்று பாட்னாவில் நடைபெற்ற 15 கட்சிகளின் கூட்டத்தில் இந்தக் கட்சிகள் அனைத்தும் ஒரே கருத்துகளைக் கொண்டிருந்தன.
டெல்லியில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள அவசரச் சட்டம் விவகாரத்தில் ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகளுக்கு இடையே மோதல் நிலவி வருகிறது.
இது போன்ற நிலையில், UCC விவகாரம் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையின் சிக்கல்களை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஆதரவுக்குக் காரணம் என்ன?
ராஜ்யசபா எம்.பி., சந்தீப் பதக், செய்தியாளர்களிடம் பேசுகையில், பொது சிவில் சட்டத்தை ஆம் ஆத்மி கட்சி ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அரசமைப்புச் சட்டத்தின் 44 வது பிரிவும் நாட்டில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படவேண்டும் எனக்கூறுகிறது என்று அவர் வாதிட்டார்.
மேலும், "இந்தப் பிரச்சனை அனைத்து மதங்கள் மற்றும் பிரிவுகளுடன் தொடர்புடையது என்பதால், இது குறித்து அனைத்து மதத்தினரிடமும், அனைத்து பிரிவினரிடமும், அனைத்து அரசியல் கட்சிகளிடமும் விரிவான விவாதம் நடத்த வேண்டும் என விரும்புகிறோம். சில விவகாரங்கள் இப்படித்தான் இருக்கின்றன. இது போன்ற அடிப்படை பிரச்சினைகளில் சர்வாதிகார போக்கில் அரசு செயல்பட்டால் அது சரியாக இருக்காது," என்றார்.
இதுகுறித்து அனைவரிடமும் பேசி ஒருமித்த கருத்தை ஏற்படுத்த அரசு முயல வேண்டும் என்றும், அனைத்து மக்களின் சம்மதமே இந்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்த ஒரே வழியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
காங்கிரஸ் கட்சி என்ன சொன்னது?

பட மூலாதாரம், ANI
பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு சனிக்கிழமையன்று கூடி இது குறித்து விவாதித்தது. காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவின் தலைவராக சோனியா காந்தி பதவி வகித்துவருகிறார்.
இந்த கூட்டத்தில் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜெய்ராம் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்திற்கு பிறகு கட்சியின் தகவல் தொடர்பு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "பொது சிவில் சட்ட முன்வரைவின் மீது விவாதம் நடந்தால் அதில் பங்கேற்று வரைவறிக்கையில் உள்ள அம்சங்கள் குறித்து விவாதிப்போம். தற்போதைய நிலைமையில் சட்ட ஆணையத்திடம் இருந்து பொது அறிவிப்பு வந்துள்ளது என்பதைத் தவிர வேறு எதுவும் நடக்கவில்லை" என்றார்.
ஜூன் 14ஆம் தேதி, ஒரே மாதிரியான சிவில் சட்டம் குறித்து பொதுமக்கள் மற்றும் மத அமைப்புகளின் கருத்தை சட்ட ஆணையம் கேட்டிருந்தது.
கட்சியின் நிலைப்பாட்டை விவாதித்த கட்சியின் தலைவரும், மாநிலங்களவை எம்.பி.யுமான பிரமோத் திவாரி பிபிசியிடம் பேசுகையில், "இது விலைவாசி உயர்வு, ஊழல் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற பிரச்சினைகளில் இருந்து கவனத்தைத் திசைதிருப்ப பாஜகவின் தந்திரம்" என்று கூறினார். பாஜக சார்பு அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார்.
பொது சிவில் சட்டம் தொடர்பான காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அவர், "இச்சட்டத்தில் 140 கோடி இந்தியர்களின் நலன்கள் உறுதி செய்யப்படவேண்டும். அவர்களில் இந்து, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவ என்ற பாகுபாடு பார்க்காமல் மத சுதந்திரம், பழக்கவழக்கங்கள், பழங்குடியினராக இருந்தாலும் அவர்களுடைய கலாசாரத்தில் எந்தத் தலையீடும் இல்லாமல் இருக்க வேண்டும்." என்று தெரிவித்தார். அப்படி இல்லை எனில் பொதுசிவில் சட்டத்துக்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவிக்கும் என்றும் கூறினார்.
ஆனால் எதிர்க்கட்சி ஒற்றுமையில் பொது சிவில் சட்டம் ஒரு பெரிய சிக்கலை ஏற்படுத்த முடியுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த போது, தேசிய ஜனநாயக கூட்டணியின் சங்மாவின் நிலைப்பாட்டை சுட்டிக்காட்டுகிறார்.
மேகாலயாவில் தேசிய மக்கள் கட்சியும், பாஜகவும் இணைந்து ஆட்சியை நடத்தி வரும் நிலையில், முதலமைச்சராக சங்மா பதவி வகிக்கிறார்.
இந்தியாவின் பழங்குடி மக்கள் தொகையில் 12 சதவீதம் பேர் வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் நிலையில், 200க்கும் மேற்பட்ட பழங்குடி சமூகங்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களை இந்த பொது சிவில் சட்டம் பறித்துவிடும் ஆபத்து இருக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சங்மாவின் விமர்சனத்தை மேற்கோள்காட்டிப் பேசும் பிரமோத் திவாரி, "அவர் (சங்மா) பொது சிவில் சட்டம் வந்தால் எதிர்ப்போம் என்று கூறுகிறார். அதேபோல், எதிர்க்கட்சிகளில் உள்ள ஒவ்வொருவருக்கும் அவரவர் கருத்துகள் இருக்கும். அந்த சட்டத்தின் வரைவறிக்கை பாராளுமன்றத்திற்கு வரும்போது, என்ன செய்வது என்று நாங்கள் அனைவரும் ஒன்றாக முடிவெடுப்போம்," என்கிறார்.
ஆம் ஆத்மி குறித்து காங்கிரசில் இரட்டை நிலைப்பாடா?

பட மூலாதாரம், Getty Images
டெல்லியில் மாநில அரசின் உரிமைகளைப் பறிப்பதாகக் கூறப்படும் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிரான ஆம் ஆத்மியின் மசோதாவும் காங்கிரஸ் கட்சியுடனான மோதலுக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்துள்ளது.
உண்மையில், டெல்லி மாநில அரசுக்கு கீழ் உள்ள அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே இருக்கவேண்டும் என இந்த ஆண்டில், உச்ச நீதிமன்றம் டெல்லி அரசுக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பை வழங்கியது,
ஆனால், மத்திய அரசு இந்த உரிமையை மீண்டும் ஒரு அவசர சட்டத்தின் மூலம் டெல்லி மாநில துணைநிலை ஆளுனரிடம் கொண்டு வந்தது.
இதையடுத்து, தற்போதைய நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் ஒரு மசோதாவைக் கொண்டு வந்து இந்த அவசரச் சட்டத்தை நிறுத்த அரவிந்த் கெஜ்ரிவால் எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இதற்காக எதிர்க்கட்சி தலைவர்களையும் அவர் தொடர்ந்து சந்தித்து பேசினார்.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் பாட்னாவில் நடைபெற்ற கூட்டத்தின்போதும், அவசரச் சட்டம் தொடர்பான பிரச்னையே மேலோங்கி இருந்தது.
இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தவிர மற்ற அனைத்து எதிர்க்கட்சிகளும் தங்களுக்கு ஆதரவளித்ததாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது.
எனினும், இந்த மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும் போது, அது குறித்து பார்த்துக்கொள்ளலாம் என்று காங்கிரஸ் கூறுகிறது.
முன்னாள் காங்கிரஸ் எம்பியும், டெல்லி முன்னாள் முதல்வருமான ஷீலா தீட்சித்தின் மகன் சந்தீப் தீட்சித்தும் இதே போன்ற கருத்தைத் தான் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லி ஒரு யூனியன் பிரதேசம் என்று சொல்கிறார்கள். இங்கும் மாநிலங்களைப் போல அதிகாரம் கேட்டால், அதை யூனியன் பிரதேசம் என எப்படிக்கருத முடியும்? மத்திய அரசின் அவசரச் சட்டம் யூனியன் பிரதேசத்தின் கூட்டாட்சிக் கட்டமைப்பிற்கு எதிரானது அல்ல.
பொது சிவில் சட்டம் போன்ற மாபெரும் விஷயங்களைப் பற்றி விவாதிக்கும் போது, ஆம் ஆத்மி கட்சியின் மாறுபட்ட போக்கைக் குறிப்ட்டுப் பேசிய அவர், எந்த சித்தாந்தமும் இல்லாமல் ஆம் ஆத்மி செயல்படுவதாக புகார் தெரிவிக்கிறார்.
மேலும், பொது சிவில் சட்டம் போன்ற பெரிய பிரச்சினையில் அக்கட்சி யாரிடமும் பேசக்கூட முயற்சிக்கவில்லை. இப்போது அவர்களுடைய நிலைப்பாடு பற்றி யாரும் கருத்து கேட்கவில்லை. சட்ட ஆணையம் பொதுமக்கள், சமூக அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகளிடம் கருத்து கேட்டுள்ளது என்கிறார்.
"ஆம் ஆத்மி கட்சியின் பிரச்னை என்னவென்றால், மற்ற கட்சிகளைப் போல அல்லது குறைந்த பட்சம் காங்கிரஸ் கட்சியைப் போல, அவர்களுக்கென்று ஒரு நிலைப்பாடு இல்லை என்பது தான். இந்த நேரத்தில் அவர்களின் நிலைப்பாட்டை தீர்மானிப்பது அவர்களின் வேலை. பொது சிவில் சட்டத்தை ஆதரிப்பதன் மூலம் அவர்களுக்கு முஸ்லிம்களின் வாக்குகள் கிடைக்காத போது அவர்களும் எதிர்க்கத் தொடங்குவார்கள்," என்று சந்தீப் தீட்சித் கூறுகிறார்.
திரிணாமுல் காங்கிரஸ் விளக்கம்

பட மூலாதாரம், ANI
இதற்கிடையே எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து எழுப்பப்படும் கேள்விகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பதிலளித்துள்ளது.
எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றையொன்று 100 சதவிகிதம் ஒத்துப்போகவேண்டும் என்ற அவசியமில்லை என்று அக்கட்சியின் ராஜ்யசபா எம்பி டெரெக் ஓ'பிரையன் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.
"பாட்னா கூட்டத்திற்குப் பிறகு நடைபெறும் இரண்டாவது கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் அவற்றிற்கிடையே நிலவும் முரண்பாடுகள் குறித்து 100% உடன்பாடு காணும் வகையில் விவாதிக்கப்படும். சில விஷயங்களில் அனைத்து எதிர்க்கட்சிகளும் உடன்பட முடியாது. பரந்த விஷயங்களில் கட்சிகளின் நிலைப்பாடு தெளிவாக இருக்கும்."
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து பிரிந்து காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்த சிவசேனா கட்சி, எப்பொழுதும் பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவளித்து வருகிறது.
இப்போது இரண்டு பிரிவுகளாகப் பிரிந்துள்ள சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே கோஷ்டியின் எம்பி ராகுல் ஷெவ்லே, பாலாசாகேப் தாக்கரேவின் கனவு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தான் என்று கூறியுள்ளார். பொது சிவில் சட்டத்திற்கு தமது கட்சி முழுமையாக ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் உத்தவ் தாக்கரே பிரிவு சிவசேனா என்ன நிலைப்பாட்டை எடுக்கும்?

பட மூலாதாரம், ANI
ராமர் கோவில், ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370 நீக்கம் போன்ற விஷயங்களில் பாஜகவை ஆதரித்த உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சி, தற்போது இதுவரை எந்த தெளிவான பதிலையும் அளிக்கவில்லை.
இருப்பினும் உத்தவ் தாக்கரே கட்சி பொது சிவில் சட்டத்துக்கு ஆதரவளிக்கும் என்றே நம்பப்படுகிறது.
அக்கட்சியின் எம்பி பிரியங்கா சதுர்வேதி பிபிசியிடம் பேசிய போது, "பொது சிவில் சட்டம் மதத்தைப் பொருட்படுத்தாமல் நீதி, சமத்துவம் பற்றி பேசினால், நாங்கள் அதை ஆதரிப்போம். ஆனால் அது பாஜகவின் சித்தாந்தத்தின் அரசியல் வடிவமாக மாறினால், அது சமூகத்தில் வெறுப்பையும் பிளவையும் உருவாக்கும்," என்று கூறினார். இருப்பினும் ஒரு வரைவறிக்கை வரும் வரை நாம் எதைப்பற்றியும் பேசிக்கொண்டிருக்க முடியாது என்றார் அவர்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை பொது சிவில் சட்டம் எவ்வாறு பாதிக்கும் என்பது குறித்து பிரியங்கா சதுர்வேதி பேசுகையில், "கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ள முடிவெடுத்திருக்கும் கட்சிகளின் ஒன்றுமை எப்படி இருக்க வேண்டும், அதன் வடிவம் என்ன என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் பற்றி நாங்கள் விவாதித்து வருகிறோம். ஜனநாயகம், அரசியலமைப்பு, கூட்டாட்சித் தத்துவம் ஆகியவை பற்றி விவாதிக்கிறோம்," என்றார்.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் சிக்கலா?

பட மூலாதாரம், Getty Images
சிவசேனா, காங்கிரஸ் அல்லது திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான கட்சிகள் பொது சிவில் சட்டம் பற்றி ஒவ்வொருவரும் வெவ்வேறு கருத்துகளைக் கொண்டிருக்கலாம் என அனைத்து கட்சிகளும் கருதுகின்றன.
அரசியல் ஆய்வாளர் ரஷீத் கித்வாய் இது குறித்துப் பேசுகையில், நமது நாட்டு அரசியலில் ஒரு பிரச்சினையால் மற்றொரு பிரச்னை தடம் புரளும் அளவுக்கு எதுவும் நேராது. எல்லா விஷயங்களும் எப்போதும் போல் தொடர்ந்து கொண்டிருக்கும் என்றார்.
பொது சிவில் சட்டத்தில் எதிர்க்கட்சிகளுக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகள் இருக்கும் என்றும், ஆனால் எதிர்க்கட்சி ஒற்றுமையும் அப்படியே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இருப்பினும், பொது சிவில் சட்டம் என்ற பிரச்னையில், காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு தற்போதைக்கு எதுவுமே இல்லை என முடித்துவைக்கப்பட்டுள்ளது. சட்ட முன்வரைவு வந்த பிறகே தனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை அக்கட்சி தொடங்கும்.
இது போன்ற சூழ்நிலையில், சட்ட முன்வரைவு இல்லாமல் பொது சிவில் சட்டத்துக்கு கொள்கை ரீதியிலான ஆதரவை வழங்கி ஆம் ஆத்மி கட்சி அவசரம் காட்டியுள்ளதா என்ற கேள்வியும் எழுகிறது.
இது குறித்து மூத்த பத்திரிக்கையாளர் ரஷித் கித்வாய் கூறும்போது, “இது அவர்களின் (ஆம் ஆத்மி) அரசியல் சூழ்ச்சி. இதன் மூலம், அவசரச் சட்டத்துக்கு எதிரான மசோதாவில் எங்களுக்கு ஆதரவளிக்கவில்லை என்றால், இது போன்ற பிரச்னையில் நாங்கள் ஒதுங்கியே இருப்போம் என்பதைக் காட்ட முயல்கின்றனர்," என்றார்.
தற்போது பொது சிவில் சட்டத்தின் அரசியல் அம்சம் பற்றி விவாதிக்கப்பட்டு வருவதாகவும், இறுதியில் அது எப்படி நடக்கும் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் ரஷித் கித்வாய் கூறுகிறார்.
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அரசுக்கு கடினம் என்றும் அவர் கூறுகிறார். இப்படிப்பட்ட சூழ்நிலையில், பா.ஜ.க., பொது சிவில் சட்டத்தை கொண்டு வர விரும்புகிறது என்ற ஒரு பிம்பத்தை பொதுமக்கள் மத்தியில் உருவாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் எதிர்க்கட்சிகள் இதை அனுமதிக்கவில்லை.
ஆனால், பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்களில் சிக்கித் தவிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளை பகடைக் காய்களாக பிரதமர் மாற்றியுள்ளார்.
தேசியவாத காங்கிரஸ், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் போன்ற கட்சிகள் காங்கிரஸிலிருந்து பிரிந்து உருவாக்கப்பட்டு தற்போது பல்வேறு சித்தாந்தங்களால் பல மாநிலங்களில் காங்கிரசை விட வலுவான நிலையில் உள்ளன.
இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்று வரும்போது, பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்தக் கட்சிகள் ஒன்றாகவே காணப்படுகின்றன.
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையே ஒரு வகையான பொய்மை என்கிறார் ரஷீத் கித்வாய்.
மேலும், "எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை என்பது உண்மையில் அக்கட்சிகளுக்குள் இருக்கும் போட்டி என்பதே உண்மை. அது காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் என எந்தக் கட்சியாக இருந்தாலும் அவர்களுக்குள் ஒருவருக்கொருவர் போட்டி மனப்பான்மையுடன் இருக்கின்றனர். அதன் மத்தியில், பாஜகவுக்கு எதிரான அனைத்து கட்சிகளும் தனித்தனியே பிரிந்திருக்க வேண்டும் என்பதே நோக்கம்," என்கிறார் அவர்.
“அப்படிப்பட்ட சூழ்நிலையில், சமூகப் பிரச்னைகள், பொருளாதாரப் பிரச்னைகளில் எல்லாக் கட்சிகளும் ஒத்துப் போவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 272 இடங்கள் (பெரும்பான்மை) கிடைக்கக் கூடாது என்பதுதான் அவர்களின் ஒரே நோக்கம். அந்த நோக்கம் நிறைவேற வேண்டுமென்றால் அனைவரும் இணைந்து ஒரே மேடைக்கு வரவேண்டும். ஆனால் அது சாதாரண விஷயமல்ல. அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கு முன்பாக இந்த கட்சிகள் ஒன்றிணைவது மிகப்பெரிய சோதனையாகவே இருக்கும்."
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












