எதிர்க்கட்சிகளுக்கு நெருக்கடி, பொது சிவில் சட்டம்: நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே நடத்த தயாராகிறதா பா.ஜ.க.?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
மகாராஷ்டிராவில் திடீர் அரசியல் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சி உடைந்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் ஆளும் பா.ஜ.க. கூட்டணிக்குச் சென்று, துணை முதலமைச்சர் பதவியையும் பெற்றுள்ளார். தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டிருப்பது மகாராஷ்டிராவில் மட்டுமின்றி தேசிய அரசியலிலும் உற்று நோக்கப்படுகிறது. குறிப்பாக, அடுத்த நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.க.வுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்றிணைக்கும் பணியில் முக்கிய பங்காற்றிய சரத் பவாருக்கு இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மூலம் திமுகவுக்கும், அஜித் பவார் மூலம் சரத் பவாருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்களையும் கிளப்பி நாடாளுமன்ற தேர்தலை முன்கூட்டியே சந்திக்க பா.ஜ.க. ஆயத்தமாகி வருவதாக அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
தேசியவாத காங்கிரசில் 2 மாதங்களாக சலசலப்பு
தேசியவாத காங்கிரசுக்கு அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்த போதில் இருந்தே இதுபோன்ற நிலை எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்றே கூறப்பட்டு வந்தது. அதனால்தான், தனக்குப் பின் மகள் சுப்ரியா சுலேதான் கட்சித் தலைவர் என்று அறிவித்த சரத் பவார், உடனே அதிலிருந்து பின்வாங்கிக் கொண்டு சுப்ரியா சுலேவையும், பிரபுல் படேலையும் செயல் தலைவர்களாக அறிவித்தார். கட்சித் தலைவராக தாமே நீடிக்கப் போவதாகவும் அவர் கூறினார். இதனால், மகாராஷ்டிர அரசியலில் சலசலப்பு சிறிது காலத்தில் முடிவுக்கு வந்தாலும், அஜித் பவாரின் மவுனம் கவனம் ஈர்க்கும் ஒன்றாகவே இருந்து வந்தது.
ஏனெனில், 2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க.வுக்குத் தாவிய அவர், ஒரு சில நாட்களிலேயே தேசியவாத காங்கிரசுக்கு திரும்பியவர். அஜித் பவார் மகாராஷ்டிர அரசியலில் இதுபோன்றதொரு அதிர்வலைகளை ஏற்படுத்துவார் என முன்பே கணிக்கப்பட்டிருந்து. அஜித் பவாரை தொடர்பு கொள்ள முடியவில்லை; அஜித் பவார் கலகம் செய்யப்போகிறார் என்றெல்லாம் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன.
பா.ஜ.க. அணியில் அஜித் பவார் - துணை முதல்வரானார்
அதிருப்தியில் உள்ள அஜித் பவார், கட்சி எம்.எல்.ஏக்களை சந்தித்து தனியாக பேச இருப்பதாகவும், ஆளும் பாஜக - ஷிண்டே சிவசேவா கூட்டணி ஆதரவு அளிக்கப் போவதாகவும் ஏப்ரல் மாதம் செய்திகள் வெளியாகின. ஆனால், எம்.எல்.ஏக்கள் கூட்டத்திற்கு தான் ஏற்பாடு செய்யவில்லை, அதுகுறித்து வெளிவரும் செய்திகள் அனைத்தும் பொய்யானது என்று ட்விட்டர் வாயிலாக அஜித்பவார் மறுப்பும் தெரிவித்திருந்தார். ஆனால், இரண்டே மாதங்களில் அந்த கணிப்புகளை எல்லாம் உண்மை என்று நிரூபித்துக் காட்டியிருக்கிறார் அஜித் பவார்.
மகாராஷ்டிராவில் முதலமைச்சர் ஏக்நாத் ஷின்டே தலைமையிலான ஆளும் பா.ஜ.க. - சிவசேனா கூட்டணிக்கு அஜித்பவர் தனது ஆதரவை உறுதிப்படுத்தி, துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். அவருடன் சென்ற 8 எம்.எல்.ஏ.க்களும் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மொத்தமுள்ள 54 எம்.எல்.ஏ.க்களில் 40 பேர் அஜித் பவாருக்கு ஆதரவு அளிப்பதாக கூறப்படுகிறது.

உத்தவ் தாக்கரேவின் நிலை சரத்பவாருக்கும் வருமா?
2019-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், தேசியவாத காங்கிரஸ் அஜித் பவாரால் இரண்டாவது முறையாக பிளவுபட்டுள்ளது. இரண்டு முறையுமே பா.ஜ.க. முகாமுக்குத் தாவிய அவர் துணை முதலமைச்சராகவே பதவி பெற்றுள்ளார். முதல் முறை சொந்தக் கட்சிக்கு திரும்பி வந்த அஜித் பவார் இம்முறை அப்படி செய்வாரா என்று தெரியவில்லை. கடந்த 2 ஆண்டுகளில் மகாராஷ்டிராவில் பிளவுபடும் இரண்டாவது கட்சி தேசியவாத காங்கிரஸ் ஆகும். கடந்த ஆண்டு சிவசேனாவில் ஏற்பட்ட பிளவுதான் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் - சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசுக்கு முடிவுரை எழுதியது.
சிவசேனாவில் கணிசமான எம்.எல்.ஏ.க்களுடன் இருந்து வெளியேறிய ஏக்நாத் ஷின்டே, பா.ஜ.க. கூட்டணியில் சேர்ந்து முதலமைச்சரானதுடன், தேர்தல் ஆணையத்தை அணுகி இன்று ஒட்டுமொத்த கட்சியையுமே உத்தவ் தாக்கரேவிடம் இருந்து தன் வசமாக்கிவிட்டார். கிட்டத்தட்ட அதேபோன்ற நிலையே தற்போது தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கும் ஏற்பட்டிருக்கிறது.
பா.ஜ.க. நடத்தும் ஆபரேஷன் லோட்டஸின் ஒரு பகுதி இது என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியுள்ளது. அஜித் பவாருக்கு எந்தவித ஆதரவையும் தேசியவாத காங்கிரஸ் அளிக்கவில்லை, கட்சியின் தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், பெண் தலைவர்கள் அனைவரும் சரத்பவார் பக்கமே இருக்கிறார்கள் என்று அக்கட்சியின் செய்திதொடர்பாளர் மஹேஷ் பாரத் டபசே தெரிவித்துள்ளார்.

"எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்வதை துரிதப்படுத்தும்"
உத்தவ் தாக்கரேவுக்கு ஏற்பட்ட நிலைமை, சரத்பவாருக்கு ஏற்படுமா? என்று மகாராஷ்டிர அரசியலில் உற்றுநோக்கப்படும் நிலையில், தேசிய அரசியலில் பா.ஜ.க.வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி என்னவாகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், அடுத்த நாடாளுமன்ற தேர்தலை குறிவைத்து எதிர்க்கட்சிகளை தேசிய அளவில் ஒருங்கிணைக்கும் பணியில் அவர் முக்கிய பங்காற்றி வந்தார். சொந்தக் கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, தேசிய அரசியலில் அவரை கவனம் செலுத்த அனுமதிக்குமா? இதனால், எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி பின்னடைவை சந்திக்குமா என்பது போன்ற அடுக்கடுக்கான கேள்விகள் அரசியல் அரங்கில் எழுந்துள்ளன.
இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் கார்த்திகேயனிடம் கேட்ட போது, "பா.ஜ.க.வுக்கு தனது சொந்த பலத்தில் நம்பிக்கை இல்லை என்பதையே இதுபோன்ற நடவடிக்கைகள் காட்டுகின்றன. தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது மூலம் திமுகவுக்கு நெருக்கடி கொடுக்க முனைந்தார்கள். தற்போது, அதேபோன்ற உத்தியை மகாராஷ்டிராவில் கையில் எடுத்துள்ளார்கள். மறுபுறம், மக்களிடையே எடுத்துச் சொல்ல சாதனைகள் ஏதும் இல்லை என்பதால் பொது சிவில் சட்டம் குறித்த விவாதத்தை வேண்டுமென்றே உண்டாக்குகிறார்கள். இது பா.ஜ.க. பலவீனமாக இருப்பதை வெளிப்படுத்துகிறது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "பா.ஜ.க.வின் எண்ணம் இம்முறை ஈடேறாது. கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்து பணிய வைக்கும் தந்திரம் அக்கட்சிக்கு கைகொடுக்காது. ஏனெனில், நாளை தங்களுக்கும் அதுபோன்ற நிலை வரலாம் என்று கருதி பிரிந்து கிடக்கும் எதிர்க்கட்சிகள் ஒன்று சேரவே இது உதவும். நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து விடக் கூடாது என்று பா.ஜ.க. கருதுகிறது.
மோடிக்கு எதிராக ராகுல்காந்தியையோ அல்லது வேறு யாரையுமோ எதிர்க்கட்சிகள் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது தங்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் அக்கட்சி நினைக்கிறது. ஆனால், இந்த விஷயத்தில் எதிர்க்கட்சிகள் சாதுர்யமாக செயல்பட்டு, பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வார்கள் என்று கருதுகிறேன். ஏனென்றால், தொடக்கம் முதலே எதிர்க்கட்சிகள் முகாமில் அதுபோன்ற கருத்தே தொடர்ந்து முன்வைக்கப்படுகிறது. ஆகவே, அடுத்த நாடாளுமன்ற தேர்தல் பா.ஜ.க.வுக்கு கடும் சவாலாகவே இருக்கும்" என்று கூறினார்.
இந்தாண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல்?

அதே கருத்தை ஆமோதித்த மற்றொரு மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம், "கட்சிகளை பிளவுபடுத்தும் பா.ஜ.க.வின் அரசியல் தந்திரம் எதிர்க்கட்சிகளை மேலும் ஒன்றுபடவே செய்யும். எதிர்க்கட்சிகள் கூட்டணியில் அதிகமாக ஒட்டாமல் இருந்து வரும் திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி போன்ற கட்சிகள் கருத்து வேறுபாடுகள், ஈகோவை கைவிட்டு அந்த கூட்டணியில் விரைவில் ஐக்கியமாக வாய்ப்புள்ளது. இதனால், மேற்குவங்கம், அரியானா, டெல்லி போன்ற மாநிலங்களில் பா.ஜ.க.வின் திட்டம் எடுபடாமல் போக வாய்ப்புள்ளது.
அவை போக, அஜித்பவார் ஒரு நம்பத்தன்மையற்ற அரசியல்வாதி. 2019-ம் ஆண்டிலேயே அவர் அதனை நிரூபித்திருக்கிறார். அவரை பின்தொடர்ந்து செல்வதாக கூறப்படும் எம்.எல்.ஏ.க்கள் அதே நிலைப்பாட்டில் தொடர்வார்களா என்பது கேள்விக்குறியே. அஜித் பவாரே கூட தனது நிலைப்பாட்டை எந்த நேரத்திலும் மாற்றிக் கொள்ளக் கூடும். அத்துடன், மராத்வாடா சமூகத்தில் சரத்பவார் செல்வாக்கு மிக்க தலைவர். அவரை ஒதுக்கிவிட்டு வாக்குகளைப் பெறுவது என்பது கடினமான காரியம். சரத்பவாரை அவ்வளவு எளிதில் ஓரங்கட்டிவிட முடியாது " என்றார்.
தேசிய அரசியலில் நாடாளுமன்ற தேர்தல் மேகங்கள் சூழ்ந்து வரும் நிலையில், திமுக, தேசியவாத காங்கிரசுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி, பொது சிவில் சட்டம் குறித்த விவாதங்களை சுட்டிக்காட்டிய அவர், "இவையெல்லாம் நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வருவதற்கான அறிகுறிகள். 2004-ம் ஆண்டும் வாஜ்பாய் பிரதமராக இருந்த போதும் இதேபோல்தான் 6 மாதங்கள் முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பா.ஜ.க. தீர்மானித்தது. கடந்த 2 தேர்தல்களைப் போலல்லாமல் களச் சூழல் சவாலாக தென்படுவதால், எதிர்க்கட்சிகள் ஒன்று சேரும் முன்பே தேர்தலை நடத்தி விட பா.ஜ.க. திட்டமிடுவதாக தெரிகிறது. ஆகவே, இந்த ஆண்டு இறுதியில் நாடாளுமன்ற தேர்தல் நடத்தப்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை" என்று தெரிவித்தார்.
முன்கூட்டியே நாடாளுமன்ற தேர்தலா? பா.ஜ.க. மறுப்பு

பட மூலாதாரம், TWITTER/KARU.NAGARAJAN
நாடாளுமன்றத்திற்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்படலாம் என்ற அவரது கருத்து குறித்து பா.ஜ.க. தரப்பின் கருத்தை அறிய முற்பட்டோம். இதற்காக, பா.ஜ.க.வின் தமிழக துணைத் தலைவர் கரு.நாகராஜனிடம் பேசிய போது, "பா.ஜ.க. பலவீனமாக இருப்பதாக கருதுவதால்தான் மற்ற கட்சிகளை பிளவுபடுத்துகிறது, எதிர்க்கட்சிகளை ஒன்றுசேர விடாமல் செய்வதில் குறியாக இருக்கிறது என்பன போன்ற குற்றச்சாட்டுகள் பொருத்தமற்றவை.
ஏனென்றால், நாடு முழுவதும் முன்னெப்போதையும் காட்டிலும் பா.ஜ.க. தற்போது மிகுந்த பலத்துடன் இருக்கிறது. மகாராஷ்டிராவில் கூட, பா.ஜ.க.தான் கடந்த சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வந்தது. நாடாளுமன்ற தேர்தலில் அதிக தொகுதிகளை பா.ஜ.க.வே வென்றது.
பா.ஜ.க. மிகுந்த வலிமையுடன் திகழும் போது மற்ற கட்சிகளை பிளவுபடுத்த வேண்டிய அவசியம் இல்லை. அதேநேரத்தில் விரும்பி வருபவர்களை ஏற்பதில் எங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை. நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே வரும் என்று கூறுவது அடிப்படை ஆதாரமற்றது. தவறான கணிப்பு" என்று கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












