உத்தராகண்டில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம் - திருமணம், விவாகரத்துக்கான விதிகள் என்ன?

பட மூலாதாரம், ANI
சுதந்திர இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை நிறைவேற்றிய முதல் மாநிலமாக உத்தராகண்ட் உருவெடுத்துள்ளது.
உத்தராகண்ட் மாநில பா.ஜ.க அரசு, கடந்த செவ்வாயன்று (ஜனவரி 6) மாநில சட்டசபையில் பொது சிவில் சட்ட (Uniform Civil Code - UCC) மசோதாவை அறிமுகப்படுத்தியது.
அந்த மசோதா சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து சட்டசபை கூட்டத்தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 6 ஆம் தேதி காலை, உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இந்த மசோதாவை சட்டசபையின் தாக்கல் செய்தார். மசோதாவை படித்து புரிந்து கொள்ள கால அவகாசம் அளிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்ததையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மேலும் பல உறுப்பினர்கள் இதை பரிசீலிக்க விரும்பியதால், இந்த மசோதா மீதான விவாதம் பிப்ரவரி 7 ஆம் தேதி அதாவது இன்றும் தொடர்ந்தது.
இந்த மசோதா அமலுக்கு வரும் போது, உத்தராகண்டில் வசிக்கும் அனைத்து மதத்தினருக்கும், விவாகரத்து, திருமணம் போன்ற அனைத்து விஷயங்களிலும் ஒரே சட்டம் பொருந்தும்.
2022-ஆம் ஆண்டு உத்தராகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகுதான் பா.ஜ.க இதற்கான முயற்சிகளைத் தொடங்கியது.
அதற்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அக்குழு 479 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையை மாநில அரசிடம் சமர்பித்தது.
மசோதா என்ன சொல்கிறது?
உத்தராகண்ட் சட்டப் பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘பொது சிவில் சட்டம், உத்தரகாண்ட், 2024’ மசோதா, திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை, லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றை மட்டுமே குறிக்கிறது.
உத்தராகண்ட் மாநிலத்தில் வசிக்கும் அனைத்து ஜாதி, மதத்தினருக்கும் இது பொருந்தும் என்று மசோதா தெளிவாகக் கூறுகிறது. மத்திய அல்லது மாநில அரசு ஊழியர்களுக்கும் இது பொருந்தும். மாநில அல்லது மத்திய அரசின் திட்டங்களின் பயனாளிகளுக்கும் இது பொருந்தும் என்று மசோதா கூறுகிறது.
ஆனால், பட்டியல் பழங்குடியின மக்கள் இந்த மசோதாவின் வரம்பிற்குள் வரமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
திருமணம் தொடர்பான விதிகள் என்ன?
இந்த உத்தராகண்ட் பொது சிவில் மசோதாவின்படி, திருமணம் ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே மட்டுமே இருக்க முடியும். இந்த மசோதாவில் திருமணம் மற்றும் விவாகரத்து குறித்தும் விரிவாக பேசப்பட்டுள்ளது.
- திருமணத்தின் போது மணமகனுக்கு உயிருடன் இருக்கும் மனைவியோ அல்லது மணமகளுக்கு உயிருடனுள்ள கணவனோ இருக்கக்கூடாது.
- திருமணத்தின் போது ஆணுக்கு 21 வயதும், பெண்ணுக்கு 18 வயதும் நிறைவடைந்திருக்க வேண்டும்.
- வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் மதச் சடங்குகளின்படி திருமணம் செய்து கொள்ளலாம்.
- எந்த சடங்காக இருந்தாலும் திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமாக இருக்கும்.
- திருமணம் பதிவு செய்யப்படாவிட்டால், அந்தத் திருமணம் செல்லாது.
விவாகரத்து குறித்த விதிகள் என்ன?
இந்த மசோதாவின்படி, கணவன்-மனைவி இடையே ஏதேனும் தகராறு ஏற்பட்டால், அதற்காக நீதிமன்றத்தை அணுகலாம். அது சட்டப்படி தீர்க்கப்படும்.
அதுமட்டுமின்றி பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து பெற நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டும்.
இந்த மசோதாவின் கீழ், ஒருவர் எப்போது விவாகரத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்பதற்கு பல விதிகள் கொடுக்கப்பட்டுள்ளன.
- கணவன்-மனைவி இருவரில் ஒருவர் வேறொருவருடன் உடல் ரீதியான தொடர்பு வைத்திருந்தால்.
- கணவன் அல்லது மனைவி கொடூரமாக நடந்து கொண்டால்.
- திருமணத்திற்குப் பிறகு குறைந்தது இரண்டு வருடங்கள் இருவரும் தனித்தனியாக வாழ்ந்தால்.
- ஒருவர் மதம் மாறியிருந்தால் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவராக இருந்தால்.
- அவர்களில் யாரேனும் ஒருவருக்கு பால்வினை நோய் இருந்தால் அல்லது ஏழு ஆண்டுகளாக ஒருவரையொருவர் தொடர்பு கொள்ளாமல் இருந்தால்.
- திருமணமாகி ஒரு வருடத்திற்குள் விவாகரத்து கோருவது தடை செய்யப்படும். ஆனால் அரிதான சந்தர்ப்பங்களில் அதை தாக்கல் செய்யலாம்.
- விவாகரத்து என்பது ஒருவருடைய பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி செய்ய முடியாது.

பட மூலாதாரம், ANI
லிவ்-இன் உறவுகளுக்கான விதிகள் என்ன?
இந்த பொது சிவில் சட்டம் கொண்டுவரும் முயற்சிகளோடு சேர்த்து, லிவ்-இன் எனப்படும் திருமணம் இல்லாமல் சேர்ந்து வாழும் உறவுகள் மீது சட்டமியற்றுவதற்கு முதல்முறையாக ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
- இந்த பொது சிவில் மசோதா, லிவ்-இன் உறவுகளில் இருப்பவர்கள் அல்லது அவ்வாறு செய்யத் தயாராகி வருபவர்களுக்கும் விதிகளை வகுக்கிறது. லிவ்-இன் உறவில் உள்ளவர்கள், மாவட்டப் பதிவாளரிடம் தங்கள் உறவை அறிவிக்க வேண்டும்.
- மேலும், மாநிலத்திற்கு வெளியே வசிக்கும் உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தமது சொந்த மாவட்டத்தில் தங்களுக்கு உள்ள உறவுகள் பற்றிய தகவல்களை வழங்கலாம்.
- லிவ்-இன் உறவில் இருந்து பிறக்கும் குழந்தை அதிகாரப்பூர்வமாக கருதப்படும்.
- அது தவிர சிறார்களும் திருமணமானவர்களும் லிவ்-இன் உறவில் வாழ அனுமதி இல்லை. அப்படி வாழ்வதற்கு யாரையும் கட்டாயப்படுத்தவும் கூடாது.
- 21 வயதிற்குட்பட்ட இளைஞர்கள் லிவ்-இன் உறவில் இருக்கவேண்டுமெனில் முதலில் தங்கள் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டும்.
- ஒரு மாதத்துக்கும் மேலாக லிவ்-இன் உறவில் வாழ்ந்து, அதை தெரிவிக்காத இளைஞர் அல்லது இளம் பெண்ணுக்கு மூன்று மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது 10,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்.
- லிவ்-இன் உறவை முடிவுக்கு கொண்டு வரவும், ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.

பட மூலாதாரம், ANI
பொது சிவில் சட்டம் ஏன் உத்தராகண்டில் மட்டும் கொண்டுவரப்பட்டது?
இந்த மசோதாவை அறிமுகப்படுத்தியதையடுத்து உத்தராகண்ட் அமைச்சர் சத்பால் மகராஜ், முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு வாழ்த்து தெரிவித்துப் பேசினார்.
அப்போது அவர், “சபையில் விவாதிக்கப்பட்டு, அனைத்து உறுப்பினர்களும் ஆர்வத்துடன் பங்கேற்று, தேவபூமியான உத்தராகண்டில் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மசோதா நிறைவேற்றப்படுகிறது. பெண்களுக்கு மரியாதை கிடைக்கும் வகையில், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கில், இந்த மசோதா நிறைவேற்றப்படும். இதில் பல விதிகள் உள்ளன. இது உத்தராகண்ட் மாநிலத்தில் இருந்து துவங்குகிறது. முதல்வர் புஷ்கர் சிங் தாமியை வாழ்த்துகிறேன்,” என்றார்.
ஆனால், நாட்டின் 17 மாநிலங்களில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருக்கும் நிலையில், உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் மட்டும் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த மசோதா உத்தராகண்டில் ஏன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது, குறிப்பாக ஏன் பொதுத்தேர்தலுக்கு முன் கொண்டுவரப்பட்டது என்பன மீது அரசியல் விவாதங்களும் எழுந்துள்ளன. அவற்றுக்கு பதில் காண, பிபிசி ஹிந்தியின் நிருபர் அனந்த் ஜனானே மூத்த பத்திரிகையாளர்களுடன் உரையாடினார்.
இதற்கு பதிலளித்த மூத்த பத்திரிக்கையாளர் நீரஜா சவுத்ரி, “பொது சிவில் சட்டம் என்பது பா.ஜ.க.வின் முக்கிய குறிக்கோள். அது இன்னும் முழுமையடையவில்லை. முன்னதாக, அவர்கள் இதில் முதல் பரிசோதனையைச் செய்தபோது, பழங்குடியினரிடமிருந்து நிறைய எதிர்ப்பைச் சந்திக்க வேண்டியிருந்தது,” என்றார்.
"அப்படிப்பட்ட சூழ்நிலையில், இதை உடனடியாக அமல்படுத்த வேண்டாம் என்று அவர்கள் முடிவு செய்தனர். பழங்குடியினர் பா.ஜ.க.வின் முக்கியமான வாக்கு வங்கி என்பதால், பழங்குடியினருக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. உத்தராகண்டில் முஸ்லிம் மக்களும் அதிகம் இல்லை. இதுபோன்ற சூழ்நிலையில், இங்கே இந்த மசோதாவைக் கொண்டுவருவது ஒரு பரிசோதனை முயற்சி," என்றார்.
அதேபோல், உத்தரகாண்டில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம் பா.ஜ.க என்ன சாதிக்க நினைக்கிறது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த நீரஜா சவுத்ரி, “உத்தராகண்டில் இந்த மசோதாவை பரிசோதித்துப் பார்க்க பா.ஜ.க விரும்புகிறது. இதற்கு என்ன எதிர்விளைவுகள் என்பதையும், ஒரு சமூகத்தை மட்டும் ஒதுக்கி வைத்தோ, அல்லது குறிப்பிட்ட சமூகங்களுக்கு மட்டும் இது பொருந்தும் என்று கூறியோ, பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடியுமா, நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைகள் முன் இது நிற்குமா, என்ற சட்ட அம்சங்களையும் பா.ஜ.க ஆராய விரும்புகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், இது ஒருவகையான பரிசோதனைதான். ஆனால் அதே நேரத்தில் தாங்கள் இதில் தீவிரமாக இருப்பதாகவும் காட்டவும் பா.ஜ.க முயற்சி மேற்கொண்டுள்ளது,” என்றார்.

பட மூலாதாரம், ANI
இந்து பெரும்பான்மை மாநிலம் உத்தராகண்ட்
உத்தராகண்ட் மாநில மக்கள் தொகையில், முஸ்லிம்களின் பங்கு சுமார் 13%. உத்தரபிரதேசத்துடன் ஒப்பிடும்போது இது 6% குறைவு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் உத்தராகண்ட் மாநிலத்தை பா.ஜ.க தேர்வு செய்தது ஏன்?
இந்த கேள்விக்கு பதிலளித்தார் ‘அமர் உஜாலா’ பத்திரிகையின் டேராடூன் ஆசிரியர் தினேஷ் ஜுயால்.
“முதலில் உத்தரகாண்ட் ஒரு சிறிய மாநிலம். இரண்டாவது விஷயம், ஒருவகையில் இது ஒரு இந்து மாநிலம். இங்கே சார்தாம் போன்ற இந்துக்களின் புனித தலங்கள் உள்ளன. ஒருவகையில் இது இந்துக்களின் கோட்டை. சமவெளிப் பிரதேசத்தில் சிறிய அளவில் இஸ்லாமிய மக்கள் வாழ்கின்றனர். அத்தகைய சூழ்நிலையில், இங்கு பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு வர வாய்ப்பில்லை,” என்றார்.
உத்தராகண்ட் மாநிலத்தின் இஸ்லாமிய மக்கள்தொகை நகரங்களில் அதிகமாகக் காணப்படுகிறது. இம்மாநிலத்தின் பெரும்பாலான இஸ்லாமிய மக்கள் டேராடூன், ஹரித்வார் மற்றும் உதம் சிங் நகர் போன்ற சமதள மாவட்டங்களில் வாழ்கின்றனர். இதனுடன், ஹல்த்வானி நகரங்களிலும் இஸ்லாமிய மக்கள் வசிக்கின்றனர்.
அதேசமயம், சமவெளி முதல் மலைகள் வரை அனைத்து இடங்களிலும் இந்து மக்கள் உள்ளனர். அங்கு பா.ஜ.க தனது இருப்பை வலுப்படுத்தும் நோக்கில் செயல்படுகிறது, என்கிறார் ஜுயால்.
மேலும் பேசிய ஜுயால், “மாநிலத்தை இந்துமயமாக்குவதற்கு ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க வலுவான முயற்சிகளை மேற்கொண்டுள்ளன. பெண்களையும், முன்னாள் ராணுவத்தினரையும் கவரும் வகையில் அரசு மட்டத்தில் செய்யப்பட்ட வேலைகளால் இங்கு மோதி அலை வீசுகிறது. விவசாயம் அதிக வருமானம் ஈட்டித்தராத மலைப்பகுதிகளில், அரசின் திட்டங்களின் மூலம அடைந்த பலன்களால், மக்கள் பா.ஜ.க அரசு மீது நல்ல அணுகுமுறையைக் கொண்டுள்ளனர்,” என்றார் அவர்.
இது பாஜக-வின் தேர்தல் உத்தியா?
இவை அனைத்தும் இருந்தும், 2024 பொதுத்தேர்தலை மனதில் வைத்துதான் தேர்தல் பிரச்சாரம் தொடங்கும் முன் இந்த மசோதாவை தாக்கல் செய்ய பா.ஜ.க முடிவு செய்ததா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.
இந்தக் கேள்விக்கு பதிலளித்த நீரஜா சௌத்ரி, இது முழுக்கமுழுக்க பா.ஜ.க தாம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருக்கிறது என்பதைக் காடுவதற்கான முயற்சி, என்றார்.
“உத்தராகண்ட் மாநிலத்தில் இச்சட்டம் நிறைவேற்றப்பட்டால், தனது வாக்குறுதியில் மிகத்தீவிரமாக இருப்பதாக பா.ஜ.க தேர்தல் களத்தில் சொல்லலாம். ஏனெனில் இது கருத்துப் போர். அத்தகைய சூழலையை உருவாக்கவே பா.ஜ.க முயற்சிசெய்து வருகிறது,” என்றார்.
ஆனால், வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.க.வின் தேர்தல் வியூகத்திற்கு பொது சிவில் சட்டம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்ற கேள்வியும் எழுகிறது.
இதற்கு பதிலளித்த ஜுயால், “வரும் தேர்தலில் முழு பலத்துடன் வெற்றி பெற பா.ஜ.க விரும்புகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில், ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை விறுவிறுப்பாக நடத்தும் அதே வேளையில், மறுபுறம் தேர்தலுக்குத் தயாராக எதிர்க்கட்சிகளுக்கு நேரம் கொடுக்க பா.ஜ.க விரும்பவில்லை,” என்றார்.
“பீகாரில் இருந்து ஜார்கண்ட் மற்றும் டெல்லி வரை இதற்கான உதாரணங்களைக் காணலாம். ஆனால், இதையும் மீறி, ஏதோ ஒன்று குறைவதாக பா.ஜ.க உணர்கிறது. எனவே, பொது சிவில் சட்ட விவகாரத்தில் இந்து-முஸ்லிம் பிளவை உருவாக்கவும் விரும்புகிறது," என்றார் ஜுயால்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












