ஹிட்லரிடம் இருந்து 669 யூத குழந்தைகளை இவர் எப்படி காப்பாற்றினார் தெரியுமா?

நிகோலஸ் வின்டன்

பட மூலாதாரம், PA

படக்குறிப்பு, 1938 இல் செக்கோஸ்லோவாக்கியாவை விட்டு வெளியேற வின்டன் 669 குழந்தைகளுக்கு உதவினார்.

ஹிட்லரின் படையினர் செக்கோஸ்லோவாக்கியாவின் வடக்குப் பகுதியான சூடேட்டென்லாந்தை ஆக்கிரமிக்கத் தொடங்கியதைக் கண்டு, ஆயிரக்கணக்கான யூத குடும்பங்கள், தலைநகரான ப்ராக் நோக்கி பயத்தில் வெளியேறினர். அவர்கள் நீண்ட காலத்திற்கு பாதுகாப்பாக இருக்க மாட்டார்கள் என்று அவர்களுக்கு தெரியும். குறைந்தபட்சம் அவர்கள் இன்னும் சில வாரங்களே உயிர்வாழ முடியும்.

இங்கிலாந்து தொழிலதிபர் நிகோலஸ் வின்டனின் திட்டத்தினால் பல குடும்பங்களுக்கு விடிவு காலம் கிடைத்தது. 1938 ஆம் ஆண்டில், வின்டன் ஒருங்கிணைத்த திட்டத்தால் செக்கோஸ்லோவாக்கியாவில் இருந்து 669 யூத குழந்தைகளை இங்கிலாந்தில் உள்ள பராமரிப்பு முகாம்களில் சேர்க்க முடிந்தது.

இவரின் இந்த செயல், போரின்போது குறைந்தது 1,200 யூதர்களை போலந்து மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவில் உள்ள தனது தொழிற்சாலைகளில் பணியமர்த்தி உயிரைக் காப்பாற்றிய ஜெர்மன் குடிமகன் ஆஸ்கர் ஷிண்ட்லரின் செயல்களுடன் ஒப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் ஷிண்ட்லரின் கதையைப் போலல்லாமல், வின்டன் 50 ஆண்டுகளுக்கும் மேலாக மறக்கப்பட்டிருந்தார். 1988-இல் அவரது மனைவி கிரேட், ஹோலோகாஸ்ட் ஆராய்ச்சியாளர் ஒருவருடன் இணைந்து, அரை நூற்றாண்டுக்கு முன்பு தனது கணவர் காப்பாற்றிய குழந்தைகளின் பெயர்ப் பட்டியலை பகிர்ந்தபோதுதான், இவர் கதை வெளிச்சத்துக்கு வந்தது.

விண்டனின் வீரச் செயல் பற்றிய கதை, ஆண்டனி ஹாப்கின்ஸ் கதாநாயகனாக நடிக்கவிருக்கும் '‘ஒன் லைப்" என்ற படத்தின் மூலம் திரையில் வெளியாக இருக்கிறது.

நிகோலஸ் வின்டன்
படக்குறிப்பு, அந்தோனி ஹாப்கின்ஸ் "எ லைஃப்" படத்தில் வின்டனாக நடிக்கிறார்.

பனிச்சறுக்கு பயணமில்லை

நிகோலஸ் வின்டன், 1909 ஆம் ஆண்டு யூத வம்சாவளியைச் சேர்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார்.

அவர்கள் தங்கள் குடும்பப்பெயரை வெர்டைமரில் இருந்து வின்டன் என மாற்றி, ஆங்கிலிகன் தேவாலயத்தில் நிக்கோலஸிற்கு ஞானஸ்நானம் செய்தனர்.

ஐரோப்பாவில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்ததால், உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் வசிக்கும் அவரது உறவினர்களிடமிருந்து நிக்கோலஸிற்கு, ஐரோப்பாவில் யூத மக்களின் மீது நாஜிக்களின் ஆதிக்கம் ஏற்படுத்தும் விளைவுகளைப் பற்றி ஒரு தனி கண்ணோட்டம் கிடைத்தது.

அதனால்தான் 1938-இல் அவர் தனது நண்பரான மார்ட்டின் பிளேக்கிடமிருந்து பெற்ற கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக திட்டமிட்டிருந்த அவரது பனிச்சறுக்கு (Skiing) பயணத்தை ரத்து செய்தார்.

"என்னிடம் மிகவும் சுவாரஸ்யமான வேலை இருக்கிறது. எனக்கு உங்கள் உதவி தேவை. ஸ்கீயிங் பொருட்களை கொண்டு வருவதைப் பற்றி கவலைப்பட வேண்டாம்" என்று பிராகிலிருந்து பிளேக் எழுதினார். அங்கு அவர் செக்கோஸ்லோவாக்கியாவின் இங்கிலாந்து அகதிகள் குழுவில் பணியாற்றினார். இந்த அழைப்பு இதற்கு முன்னெப்போதுமில்லாத மனிதாபிமான நெருக்கடி குறித்து விண்டனை ஆராயச் செய்யும்.

நிகோலஸ் வின்டன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, செக்கோஸ்லோவாக்கியாவின் சூடேட்டென்லாண்ட் பகுதியில் உள்ள ஜெர்மன் மொழி பேசும் மக்கள் ஹிட்லரை இரு கரம் நீட்டி வரவேற்றனர்.

ஹிட்லரிடம் இருந்து 669 யூத குழந்தைகளை காப்பாற்றியது எப்படி?

வின்டன் ப்ராக் வந்தபோது, கடும் பனிக்காலத்தில் போரினால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான அகதிகள் முகாம் நிரம்பியிருப்பதைக் கண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் வரும் சூழ்நிலைகளை கண்டதே அவரை ஒரு திட்டத்தை வகுக்க நேரிட்டது.

வின்டன் செல்வாக்கு மிகுந்த இங்கிலாந்து குடிமகனாக இருப்பதால், இளைய அகதிகளை ஐக்கிய ராஜ்யத்திற்கு (United Kingdom) அனுப்பிவைக்க முடியும் என்று உறுதியாக நம்பினார்.

விண்டனும் அவரது சக பணியாளர்களுமான மார்ட்டின் பிளேக் மற்றும் டோரீன் வாரினரும் ப்ராக் நகரில் ஒரு ஹோட்டலை தங்கள் செயல்பாட்டு மையமாக மாற்றி, தங்கள் குழந்தைகளை பாதுகாப்பான இடத்திற்கு அனுப்ப விரும்பும் குடும்பங்களின் விவரங்களை சேகரிக்கத் தொடங்கினர்.

லண்டனில், பாதிக்கப்படக்கூடிய சிறுவர்களை அனுமதிக்க இங்கிலாந்து அரசாங்கம் விதித்திருந்த கடுமையான நிபந்தனைகளின் காரணமாக, அக்குழந்தைகளை நாட்டிற்குள் நுழைய அனுமதிக்கும் நூற்றுக்கணக்கான ஆவணங்களை நிர்வகிப்பது விண்டனின் பணியாக இருந்தது.

ஐக்கிய ராஜ்யத்தில் உறவினர்கள் இல்லாத ஒவ்வொரு அகதிகளுக்கும் மாற்றுக் குடும்பங்களைக் கூட விண்டன் கண்டுபிடிக்க வேண்டியிருந்தது.

நிகோலஸ் வின்டன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நிகோலஸ் வின்டன் 2015 இல் தனது 106 வயதில் இறந்தார்.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில், வின்டன் செய்தித்தாள் விளம்பரங்கள் மூலம் குடும்பங்களுடன் தொடர்பு கொண்டு அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டியிருந்தது. மேலும் இங்கிலாந்து குழந்தைகளை நகர்ப்புற மையங்களில் இருந்து இடமாற்றம் செய்வதற்கான இங்கிலாந்து அரசாங்கத்தின் திட்டங்களிலிருந்தும் அவருக்கு உதவி கிடைத்தது.

1939 ஆம் ஆண்டில், வின்டன் ப்ராக் நகரிலிருந்து எட்டு ரயில்கள் புறப்படுவதற்கு ஏற்பாடு செய்து, 669 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றினார். இதை அப்போரில் இருந்து தப்பித்து 2020 ஆம் ஆண்டு இறந்த, ரூத் ஹலோ 2015 இல் பிபிசியுடன் பேசுகையில் தெரிவித்தார்.

"ஒரு ஸ்டீம் என்ஜின் இருந்தது. பழைய பெட்டிகள் மரப் பலகைகளால் செய்யப்பட்டு இருந்தன". "எங்கள் அனைவரிடமும் எண் குறியீடுகளுடன் இருக்கும் ஒரு அட்டைப் பலகை கயிற்றில் தொங்கவிடப்பட்ட பின்னரே அவர்கள் எங்களை வண்டிகளில் ஏற்றினார்கள்" என்று ஹலோவா பிபிசியிடம் கூறினார்.

அந்தப் பயணத்தை ஒரு "சாகசமாக" பார்த்ததால் "உற்சாகமாக" இருந்ததாகவும், ஆனால் ரயில் நிலையத்தில் "ஜன்னல்களுக்கு எதிராக அழுத்தப்பட்ட பெற்றோர்களின் கண்ணீர் நிரம்பிய கண்களுடன் இருக்கும் முகங்களை அவர்கள் மறக்கவேயில்லை" என்றும் அவர் கூறினார்.

நிகோலஸ் வின்டன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப்ராக்கிலிருந்து லண்டனுக்குப் புறப்படும் 8 ரயில்களுக்கான தளவாடங்களை வின்டன் ஒருங்கிணைத்தார்.

போரின் போது ​​​​ஹலோவா, செக் மொழி பேசாத ஒரு பிரிட்டிஷ் குடும்பத்துடன் வாழ வேண்டியிருந்தது. “ஆனால் அவர்களுக்கு தான் நன்றியுடன் இருக்க வேண்டும் ஏனென்றால் அவர்களால்தான் போருக்குப் பிறகு எனது குடும்பத்துடன் மீண்டும் இணைய முடிந்தது. தாயுடன் மீண்டும் இணைந்தது என் பிரார்த்தனைகளுக்குக் கிடைத்த பதில்," என்று அவர் விவரித்தார்.

ப்ராக் நகரிலிருந்து புறப்படத் திட்டமிடப்பட்ட ஒன்பதாவது ரயில், போர் தொடங்கியதால் அதன் இலக்கை அடையவில்லை. அதில் பயணிக்கவிருந்த 250 குழந்தைகள் கைதிகள் முகாம்களில் இறந்தனர்.

இரண்டாம் உலகப் போரின்போது 669 யூத குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றிய இங்கிலாந்து தொழிலதிபர் நிகோலஸ் வின்டனின் கதை சுமார் 50 ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது.

நிகோலஸ் வின்டன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப்ராக் ரயில் நிலையத்தில் வின்டனின் நினைவாக ஒரு சிலை உள்ளது.

வின்டன் இந்த திட்டத்தை ரகசியமாக வைத்திருந்ததாக வதந்திகள் வந்தாலும், அவரே இக்கதையை தனது மனைவியிடம் சந்தர்ப்பங்களில் அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் கூறியதாகவும் இங்கிலாந்து செய்தித்தாளான தி கார்டியனுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

வின்டன் 1988 இல் பிபிசியின் "தட்ஸ் லைப்" (That's life) என்ற நிகழ்ச்சியினால், தனது முயற்சிக்கான பலனைக் காண முடிந்தது. தனது கணவர் காப்பாற்றிய குழந்தைகளின் பெயர் பட்டியலை ஆராய்ச்சியாளர் எலிசபெத் மேக்ஸ்வெல்லுடன் இணைந்து வெளியிட்ட விண்டனின் மனைவிக்கு நன்றிகள்.

செக்கோஸ்லோவாக்கியாவிலிருந்து வின்டன் ஏற்பாடு செய்த எட்டு ரயில்களில் தப்பி ஓடிய குழந்தைகளின் புகைப்படங்கள் மற்றும் பெயர்ப் பட்டியலை பழைய புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த பொது திடீரென்று பார்க்க நேரிட்ட தொகுப்பாளர் எஸ்தர் ரான்ட்சனிற்கு கூட நன்றிகள்.

நிகோலஸ் வின்டன்
படக்குறிப்பு, நிகோலஸ் வின்டன் பிபிசி நிகழ்ச்சியின் போது அவர் காப்பாற்றிய பல குழந்தைகளை சந்திக்க முடிந்தது.

சுமார் 7 வயது சிறுமியின் புகைப்படத்தைப் பார்த்து, "இது வேரா கிஸ்ஸிங்," என்று ரான்ட்சன் கூறினார். “அவளது பெயரை (வின்டனின்) பட்டியலில் கண்டோம். வேரா கிஸ்சிங் இன்றிரவு எங்களுடன் இருக்கிறார். அவள் நிகோலஸ் விண்டனுக்கு அருகில் அமர்ந்திருக்கிறாள் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்".

வின்டன் தனக்கு அடுத்திருந்த பெண்ணை உணர்ச்சியுடன் பார்த்து அவரிடமிருந்து இதமான அணைப்பைப் பெற்றார். மேலும் அந்த நபர் தான் அணிந்திருந்த கண்ணாடிக்கு பின்னால் வடியும் கண்ணீரைத் துடைத்தார். உடனே, ஏராளமான பார்வையாளர்கள் எழுந்து நின்றனர், எல்லோரும் இவரால் மீட்கப்பட்ட குழந்தைகள் என்று ரான்ட்சன் அடையாளம் காட்டினார்.

பார்வையாளர்கள் கரகோஷத்தை எழுப்பினர்.

நிகோலஸ் வின்டன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராணி எலிசபெத் II -ஐ வின்டன் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் சந்தித்துப் பேசினார்.

வின்டன் 2003 ஆம் ஆண்டில் ராணி எலிசபெத் II ஆல் கௌரவிக்கப்பட்டார். மேலும் அவரது மகள் எழுதிய அவரது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு தான் இப்போது இந்த புதிய திரைப்படம் எடுக்கப்பட இருக்கிறது.

ஆனால் அங்கீகாரம் இருந்தபோதிலும், நண்பர்களால் நிக்கி என்றழைக்கப்படும் வின்டன், அவர் செய்தது வீரச் செயல் இல்லை என்று உறுதியாக நம்பினார்.

2015 இல் அவரது தந்தையின் மரணத்திற்குப் பிறகு அவரது மகன் நிக், "என்னுடைய தந்தை கூறியது என்னவென்றால், ஏதாவது நடக்கும் அல்லது யாரவது செய்வார்கள் என்று காத்திருப்பதற்குப் பதிலாக ஒரு மாற்றத்தை உருவாக்க மக்களை நாம் தான் ஊக்குவிக்க வேண்டும்," என்று கூறியதாகத் தெரிவித்தார்.

"அதைத்தான் அவர் தனது எல்லா உரைகள் மற்றும் எனது சகோதரி எழுதிய புத்தகத்தின் மூலமாகவும் மக்களுக்குச் சொல்ல முயன்றார்." என்று கூறினார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)