இருவருக்கு ஒரே கைரேகை சாத்தியமே - அமெரிக்க ஆய்வு முடிவால் தடய அறிவியலில் சிக்கலா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜோ க்ளீன்மேன்
- பதவி, தொழில்நுட்ப செய்தியாளர்
ஒவ்வொரு நபரின் கைகளில் உள்ள ரேகையும் முற்றிலும் தனித்துவமானது என்று ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு இப்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி ஒன்றின் மூலம் சவால் விடப்பட்டுள்ளது.
இந்த அமெரிக்க பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு குழு, 60 ஆயிரம் கைரேகைகளை ஆய்வு செய்ய ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவியைப் பயிற்றுவித்தது.
ஒருவரின் வெவ்வேறு விரல்களிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள் ஒரே நபருடையது தானா என்பதை 75-90% துல்லியத்துடன் இந்த தொழில்நுட்ப கருவி அடையாளம் காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்று தெரியவில்லை.
"செயற்கை நுண்ணறிவுக் கருவி அதை எவ்வாறு செய்கிறது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை," என்று ஆய்வை மேற்பார்வையிட்ட கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ரோபோட்டிஸ்ட் பேராசிரியர் ஹோட் லிப்சன் ஒப்புக்கொண்டார்.
"இருவருக்கு ஒரே கைரேகை சாத்தியம்"
இந்த கருவி கைரேகைகளை பாரம்பரிய முறைகளுக்கு மாறாக பகுப்பாய்வு செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது ஒவ்வொரு தனிப்பட்ட ரேகையும் எங்கே தொடங்கி எங்கே முடிவடைகிறது என்பதுடன் அதன் தன்மையைக் குறிக்கும் மினுட்டியேவில் இந்த கருவி கவனம் செலுத்துகிறது.
"இந்தக் கருவி தடயவியல் துறையில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய குறிப்பான்களைப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது" என்று பேராசிரியர் லிப்சன் கூறினார். "இது வளைவு மற்றும் மையத்தில் உள்ள சுழல்களின் கோணம் போன்ற ஒன்றைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது."
பேராசிரியர் லிப்சன், தானும் இளங்கலை மாணவரான கேப் குவோவும் இந்த முடிவைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் கூறினார்.
"இது குறித்து நாங்கள் உண்மையில் மிக அதிகமாகச் சந்தேகப்பட்டோம். நாங்கள் இந்த முடிவை மீண்டும் இரண்டு முறை சரிபார்க்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார்.
இத்துறையில் உள்ள மற்றவர்களுக்கு அது செய்தியாக இருக்காது.
ஹல் பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் பேராசிரியரான கிரஹாம் வில்லியம்ஸ், தனித்துவமான கைரேகைகள் பற்றிய நம்பிக்கை ஒருபோதும் நிரந்தரமான ஒன்றாகக் கருதப்படவில்லை என்று கூறினார்.
"கைரேகைகள் தனித்துவமானவை என்பது உண்மையா என்பது எங்களுக்கு உண்மையில் தெரியாது," என்று அவர் கூறினார். "எங்களுக்குத் தெரிந்த வரையில், ஒரே மாதிரியான கைரேகையை இதுவரை உலகில் ஏதேனும் இருவர் நிரூபிக்கவில்லை என்று மட்டுமே நாங்கள் கூற முடியும்."

பட மூலாதாரம், Getty Images
தடய அறிவியலில் சிக்கல் வருமா?
கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பயோமெட்ரிக்ஸ் துறை - ஒரு குறிப்பிட்ட விரலைப் பயன்படுத்தி ஒரு சாதனத்தைத் திறக்க அல்லது அடையாளத்தை வழங்க - மற்றும் தடய அறிவியல் துறை ஆகிய இரண்டையும் பாதிக்கும் திறனைக் கொண்டிருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, குற்றம் நடந்த இடத்தில் அடையாளம் தெரியாத கட்டைவிரல் அச்சு மற்றும் அடையாளம் தெரியாத ஆள் காட்டி விரல் ரேகை காணப்பட்டால், இரண்டையும் தற்போது ஒரே நபருடன் தடயவியல் ரீதியாக இணைக்க முடியாது. ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியால் இதை அடையாளம் காண முடியும்.
கொலம்பியா பல்கலைக்கழகக் குழுவினர், "தங்களில் யாரும் தடயவியல் துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல, மேலும் ஆராய்ச்சி தேவை" என்பதை ஒப்புக்கொண்டனர்.
செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பொதுவாக பரந்த அளவிலான தரவுகளில் பயிற்சியளிக்கப்படுகின்றன. மேலும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த இன்னும் பல கைரேகைகள் தேவைப்படும்.
இதற்கும் மேலாக, மாதிரியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து கைரேகைகளும் முழுமையான அச்சுகள் மற்றும் நல்ல தரம் வாய்ந்தவை என்ற நிலையில், நிஜ உலகில் பெரும்பாலும் பகுதியளவிலான அல்லது மோசமான விரல் ரேகை அச்சுகள் தான் அதிகமாகக் காணப்படுகின்றன.
"நீதிமன்ற வழக்குகளில் சாட்சியங்களை தீர்மானிக்க எங்கள் கருவி போதுமானதாக இல்லை. ஆனால் தடயவியல் விசாரணைகளில் முன்னணிகளை உருவாக்குவதற்கு இது நல்லது" என்று குவோ கூறினார்.
ஆனால் ஸ்டாஃபோர்ட்ஷையர் பல்கலைக் கழகத்தின் தடய அறிவியல் இணைப் பேராசிரியரான டாக்டர் சாரா ஃபீல்ட்ஹவுஸ், இந்த கட்டத்தில் குற்றவியல் வழக்குகளில் இந்த ஆய்வு "குறிப்பிடத்தக்க தாக்கத்தை" ஏற்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்றார்.
அச்சு மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளும்போது தோல் எவ்வாறு முறுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து செயற்கை நுண்ணறிவுக் கருவி கவனம் செலுத்தும் குறிப்பான்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா, மேலும் அவை பாரம்பரியத்தைப் போலவே வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என்ற கேள்விகள் இருப்பதாக அவர் கூறினார்.
பல செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் போலவே, செயற்கை நுண்ணறிவு சரியாக என்ன செய்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நிச்சயமற்றவர்களாக இருப்பதால், பல கேள்விகளுக்குப் பதில் அளிப்பது ஒரு சிரமமான ஒன்றாக இருக்கலாம்.
கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு சக மதிப்பாய்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமையன்று அறிவியல் முன்னேற்றங்கள் ஆய்விதழில் வெளியிடப்படும்.

பட மூலாதாரம், Getty Images
"கைரேகை ஒத்துப் போகும் இரட்டையர்கள்"
ஆனால் செஷயரில் ஒரு ஜோடி இரட்டையர்கள் இந்த விஷயத்தில் உலகில் உள்ள அனைவருக்கும் முன்னால் இருக்கலாம். ஏனென்றால், அவர்களுடைய பாட்டி கரோல் பிபிசியிடம் பேசுகையில், தனது இரண்டு பேரக் குழந்தைகளும் தங்கள் சொந்த விரல்களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் ஐபோன்களை ஓபன் செய்ய முடிகிறது என்று கூறினார்.
"கிறிஸ்துமஸ் நாளன்று அவர்கள் எனக்கு இதைக் காட்டினார்கள்," என்று அவர் சொன்னார். "அவர்கள் பிறக்கும் போது அவர்கள் இருவரும் ஒரே மாதிரியானவர்கள் என்று எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் பின்னர் வளர்ந்த பொழுது அவர்களுக்கு இடையேயான வித்தியாசத்தை என்னால் தெளிவாகக் கூற முடியும்."
தனது இரண்டு பேரக் குழந்தைகளும் கைபேசிகளின் ‘முக அங்கீகார அம்சத்தை’ ஏமாற்றி ஒரு செல்போனை யாருடைய முகத்தைக் காட்டியும் ஓபன் செய்ய முடியும் என்று அவர் கூறினார்.
கைரேகைகள் பிறப்பதற்கு முன்பே உருவாகின்றன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்பு ஒன்று, வரிக்குதிரைகள் மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் அவற்றின் அடையாளங்களைப் பெறுவதைப் போலவே மரபணு செயல்முறையும் இருக்கலாம் என்று பரிந்துரைத்தது. 1950 களில் கோட் பிரேக்கர் ஆலன் டூரிங் முன்மொழிந்த ஒரு கோட்பாடு இது தான்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












