உடலை கண்ணாடியாக மாற்றும் தவளைகளின் ரகசியம் மனிதர்களுக்கு உதவுமா?

கண்ணாடித் தவளைகள், ரத்தம் உறைதல்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜியார்ஜினா ரென்னார்ட்
    • பதவி, பிபிசி காலநிலை & அறிவியல் செய்தியாளர்

தூங்கும் போது தன் உடலை கிட்டத்தட்ட முழுமையாக ஒளி ஊடுருவக் கூடிய கண்ணாடி போல் மாற்றிக் கொள்ளும் தவளையின் செயல்பாடு, மனித உடலில் ரத்தம் உறைவது எப்படி என்பதை புரிந்து கொள்ள உதவும் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

கண்ணாடித் தவளைகள் குறித்து ஆய்வாளர்கள் நீண்ட காலமாகவே அறிந்திருந்தாலும், அவை தன் உடலை கண்ணாடி போல் மாற்றுவது எப்படி என்பதை தெரிந்திருக்கவில்லை.

அவை, தங்களது உடலில் உள்ள ரத்தம் உறையாமல், ரத்த அணுக்களை ஒரே இடத்தில் சேகரிப்பதன் மூலமே இதை சாதிக்கின்றன என்பது தற்போதைய ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

மனிதர்களில் உயிருக்கு ஆபத்தான ரத்தம் உறைதல் குறித்த மருத்துவ புரிதல்களை மேம்படுத்திக் கொள்ள இந்த கண்டுபிடிப்புகள் உதவக் கூடும்.

மார்ஷ்மெலோ என்ற தின்பண்டத்தின் அளவே உள்ள இந்த கண்ணாடித் தவளைகள், வெப்ப மண்டலக் காடுகளில் பகல் நேரம் முழுவதையும் பச்சை இலைகளின் மீது தூங்கியே கழிக்கும்.

தன்னை இரையாக்கும் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க, தன் உடலை 61% ஒளி ஊடுருவக் கூடியதாக்கி, கண்ணாடி போல் மாற்றிக் கொண்டு இலையோடு இலையாக மறைந்து கொள்ளும்.

கண்ணாடித் தவளைகள், ரத்தம் உறைதல்

பட மூலாதாரம், ஜெஸ்ஸி டெலியா

"இந்தத் தவளைகளைத் திருப்பிப் போட்டால், அவற்றின் இதயம் துடிப்பதை உங்களால் பார்க்க முடியும். அதன் தோல் வழியாக தசையைப் பார்க்கவும் முடியும், உடலின் பெரும் பகுதி கண்ணாடி போல் ஒளி ஊடுருவக் கூடியதாக இருக்கும்," என்று பிபிசியிடம் நியூயார்க்கில் உள்ள, இயற்கை வரலாற்று அருங்காட்சியக ஆராய்ச்சியாளர் ஜெஸ்ஸி டெலியா கூறினார்.

அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டெலியா, கார்லோஸ் தபோடா ஆகியோரின் கண்டுபிடிப்புகள், கண்ணாடித் தவளைகள் இந்த அசாதாரண செயல்பாட்டை எவ்வாறு செய்கின்றன என்பதை வெளிக் கொணர்ந்துள்ளன.

இந்த தவளைகள் சுறுசுறுப்பாக இயங்கும் போதும், தூங்கும் போதும் வெளிப்படும் ஒளியின் வெவ்வேறு அலைநீளங்களை ஆய்வு செய்து அவற்றின் ஒளி ஊடுருவ முடியா நிலையின்(Opacity) அளவை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர். அதன் மூலம் இந்த தவளைகள் அவற்றின் ரத்தத்தை கல்லீரலில் சேகரிக்கின்றன என்பதை கண்டுபிடித்தனர்.

"ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அவை எப்படியோ கல்லீரலுக்குள் சேகரித்து விடுகின்றன. இதனால், ரத்த பிளாஸ்மாவில் இருந்து சிவப்பணுக்கள் நீக்கப்பட்டுவிடுகின்றன. அவற்றில் இப்போதும் பிளாஸ்மா சுழற்சி இருக்கவே செய்கிறது. இந்த ஒட்டுமொத்த செயல்முறையையும் ரத்தம் உறையாத வகையில் இந்த தவளைகள் எப்படியோ செய்கின்றன," டெலியா விளக்கம் தருகிறார்.

கண்ணாடித் தவளைகள், ரத்தம் உறைதல்

பட மூலாதாரம், ஜெஸ்ஸி டெலியா

படக்குறிப்பு, கண்ணாடித் தவளை தூங்கும் போதும், விழித்திருக்கும் போதும் ரத்த ஓட்டத்தை விவரிக்கும் படம்

89% வரையில் ரத்த அணுக்களை கல்லீரலுக்குள் சேகரித்து விடுவதால், கல்லீரலின் அளவு இருமடங்காக பெரிதாகிறது. இந்த செயல்முறை தவளையை கண்ணாடி போல் தோற்றமளிக்கச் செய்கிறது.

இரவு வேளையில், இரை தேடவோ, துணை தேடவோ விரும்பும் போது இந்த தவளைகள் ரத்த சிவப்பு அணுக்களை மீண்டும் சுழற்சிக்கு விடுகின்றன. அப்போது, அவற்றின் கல்லீரல் சுருங்கி இயல்பு நிலைக்குத் திரும்பிவிடும்.

இத்தகைய தனிச்சிறப்பு வாய்ந்த செயல்முறையைக் கொண்டிருந்த போதிலும், காயமடைதல் போன்ற அத்தியாவசிய நேரங்களில் ரத்தத்தை உறையச் செய்யவும் இந்த தவளைகளால் முடியும் என்கிறார் தபோடா.

ரத்த அணுக்களை சேகரிப்பது மற்றும் விடுவிப்பது, தேவைப்படும் வேளையில் ரத்தத்தை உறையச் செய்வது போன்றவை இந்த தவளையின் தனித்திறன்கள், மனித உடலில் ரத்தம் உறைதலை புரிந்து கொள்வதற்கான கதவுகளை திறந்திருக்கின்றன என்று அவர் கருதுகிறார்.

பெரும்பாலான விலங்குகளில், ரத்த அணுக்கள் ஓரிடத்தில் சேகரமாவது உயிருக்கே ஆபத்தான ரத்தம் உறைதலுக்கு வழிவகுத்துவிடும். மனிதர்களுக்கு வரும் மாரடைப்பு இதற்கு சிறந்த உதாரணம்.

கண்ணாடித் தவளை ஆய்வில் கிடைத்துள்ள புதிய தகவல்களை நடைமுறையில் அப்படியே மனித மருத்துவப் பயன்பாட்டிற்கு கொண்டு வர இன்னும் பல தசாப்தங்கள் ஆகலாம் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

"Science" என்ற அறிவியல் இதழில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: