கர்ப்பப்பையே இல்லாத பெண்கள் - இந்த பிரச்னை குறித்து தெரியுமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பிரிஸில்லா கேர்வலோ
- பதவி, ரியோ டி ஜெனிரோ, பிபிசி நியூஸ் பிரேசில்
மாடலிங் துறையில் உள்ள தற்போது 19 வயதான கேசியா நாசிமென்டோ, 13 வயதாக இருக்கும்போதே அவர் வயதையொத்த பெண்களைவிட வளர்ச்சியடைந்த தேகத்தைக் கொண்டிருந்தார். ஆனால், 13 வயது வரையிலும் கூட அவருக்கு முதல் மாதவிடாய் ஏற்படவில்லை. “என் அம்மாவும் கொஞ்சம் தாமதமாகத்தான் பூப்பெய்தினார். அதனால் இது இயல்பானதுதான் என நினைத்தேன். இன்னும் சிறிது காலம் காத்திருக்கலாம் என முடிவு செய்தோம்,” என்கிறார் கேசியா.
ஆனால், 15 வயதானபோதும் அவருக்கு மாதவிடாய் ஏற்படவில்லை. எனவே மருத்துவரிடம் சென்றார். அப்போது, இயல்புக்கு மாறான எந்த பிரச்னையும் இல்லை என அவரிடம் கூறப்பட்டது.
கேசியா தன் 16 வயதில் மீண்டும் மகப்பேறு மருத்துவரிடம் சென்றபோது சில பரிசோதனைகளை மேற்கொள்ள அவருக்கு பரிந்துரைக்கப்பட்டது. அதிலும் எந்த பிரச்னையும் கண்டறியப்படவில்லை. ஆனால், அதன்பின் கொரோனா முடக்கம் காரணமாக இதுகுறித்த நிபுணரிடம் பரிசோதனைக்காக அவரால் செல்ல முடியவில்லை.
17 வயதில் மீண்டும் மருத்துவரிடம் சென்ற அவருக்கு ரத்தப் பரிசோதனை, பெண்களின் இனப்பெருக்க உறுப்புகளை ஆய்வு செய்யும் டிரான்ஸ்வஜைனல் உள்ளிட்ட மற்ற பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. “இந்த பரிசோதனையில் எனக்கு கர்ப்பப்பை இல்லாதது தெரியவந்தது,” என்கிறார் கேசியா.
மருத்துவரிடம் தான் தாயாக விரும்புவதாக கூறியுள்ளார் கேசியா.
எக்ஸ்-ரே பரிசோதனைக்குப் பின், கேசியா ஓர் அரிய பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.
என்ன பிரச்னை?

பட மூலாதாரம், PERSONAL FILE
மகப்பேறு மருத்துவர் உடனான ஆலோசனைக்குப் பின் கேசியாவின் வாழ்க்கையே முழுவதும் மாறிவிட்டது.
அவருக்கு ரோகிடான்ஸ்கி சிண்ட்ரோம் எனும் பிரச்னை இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. அதாவது, இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு பிறக்கும்போதே கர்ப்பப்பை இல்லாமலும் பிறப்புறுப்பு சிறியதாகவும் இருக்கும்.
“எனக்கு இந்த பிரச்னை இருப்பதாக மருத்துவர் கூறியவுடன் நான் அதிர்ச்சி அடைந்துவிட்டேன். இப்படி இருக்கும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. இதனை நான் என் அம்மாவுடன் கேட்டுக்கொண்டிருந்தேன், மருத்துவரே பேசுவதை நிறுத்திவிட்டார். நான் கழிவறைக்கு சென்று அழுதேன், பின்னர் கண்களை துடைத்துவிட்டு மீண்டும் வந்தேன்,” என நினைவுகூர்கிறார் கேசியா.
வீட்டுக்குத் திரும்பியபோது தன் பிரச்னை குறித்த பெரும்பாலான கேள்விகளுக்கு அவருக்கு விடை கிடைக்கவில்லை, அது அவரை மேலும் விரக்தியடையச் செய்தது. “இந்த பிரச்னை குறித்த எல்லாமே மிகவும் அறிவியல்பூர்வமாக இருந்தது. ஓர் பதின்பருவ பெண்ணுக்கு புரியும் மொழியிலேயே இல்லை,” என்கிறார் அவர்.
அந்த காலகட்டத்தில் தனக்கு பதற்றம் இருந்ததாகவும் தாயாவதற்கான சாத்தியக்கூறுகள் தேங்கி நின்றதாகவும் கூறுகிறார் அவர்.
ரோகிடான்ஸ்கி சிண்ட்ரோம் என்றால் என்ன?

பட மூலாதாரம், Getty Images
இது ஒரு பிறவி குறைபாடு ஆகும். இதனால் பிறக்கும்போதே கர்ப்பப்பை இருக்காது. மேலும் பிறப்புறுப்பு முழுமையான வளர்ச்சியை கொண்டிருக்காது.
இந்த குறைபாடு, கரு உருவாகும் போதே ஏற்படுகிறது. அதாவது, கரு உருவான ஆறாவது வாரத்திலேயே ஏற்படுகிறது.
"இந்த சிண்ட்ரோம் ஒரு உடற்கூறியல் மாற்றம் போன்றது. இந்த பிரச்னை இருப்பவர்களுக்கு பிறப்புறுப்பில் குறைபாடுகள் இருந்தாலும் பெண்களுக்கே உரிய பாலின பண்புகள் இருக்கும்" என்று பாசிடிவோ, குரிடிபாவில் (பிரேசில்) உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் (Universidade Positivo) மகப்பேறு மருத்துவ நிபுணரும் பேராசிரியருமான நடாலியா பியோவானி விளக்குகிறார்.
கருப்பையை சுற்றியிருக்கும் எண்டோமெட்ரியம் எனும் திசு, போதுமான வளர்ச்சியடையாதபோது மாதவிடாய் ஏற்படாத நிலை உருவாகிறது.
பொதுவாக, பெண்களுக்கு 9 முதல் 13 வயதுக்குள் முதல் மாதவிடாய் ஏற்படும்.
இந்த நோய்க்குறியை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.
வகை 1 - இது மிகவும் பொதுவானது. இது சுமார் 70% நோயாளிகளை பாதிக்கலாம். இதில், இனப்பெருக்க அமைப்பு மாற்றம் அடையும் அளவு குறைகிறது.
வகை 2 - நோய்க்குறியின் வித்தியாசமான வடிவமாக இது அறியப்படுகிறது. இது, கர்ப்பப்பை நோய் மற்றும் பிறவியிலேயே சிறுநீரகம், எலும்பு மற்றும் காது குறைபாடுகளுடன் தொடர்புடையது.
வகை 3 - மிகவும் கடுமையானது மற்றும் அரிதானது. பல குறைபாடுகளுடன் இது ஏற்படுகிறது.
ரோகிடன்ஸ்கி சிண்ட்ரோம் பரவலாக இல்லை என்றாலும், இதனை ஓர் அரிய நோயாக மருத்துவர்கள் கருதவில்லை. ஏனெனில் இது ஐந்தாயிரம் பெண்களில் ஒருவரை பாதிக்கிறது.
இந்த நோய்க்குறி பொதுவாக மாதவிடாய் ஏற்படாத காரணத்தால் கண்டறியப்படுகிறது. மேலும், இளம் பருவத்தினர் ஏற்கனவே பாலியல் வாழ்க்கையைத் தொடங்கி இன்னும் மாதவிடாய் ஏற்படவில்லை என்றால், உடலுறவு கொள்ளும்போது வலி மற்றும் அசௌகரியத்தை உணரும்போது கண்டறியப்படுகிறது.
இப்பிரச்னை உள்ள பெண்களுக்கு வெளிப்புற பிறப்புறுப்பு சாதாரணமாக இருப்பதால், நோய்க்குறியைக் கண்டறிவதில் அதிக சிரமம் உள்ளது.
"நோயாளிக்கு XX குரோமோசோம்கள் உள்ளதா என்பதைச் சரிபார்க்க இடுப்புப் பரிசோதனை, அல்ட்ராசவுண்ட் மற்றும் மரபணு சோதனை ஆகியவற்றை நாங்கள் பரிந்துரைக்கிறோம்" என்று சாவோ பாலோவின் ஃபெடரல் பல்கலைக்கழகத்தில் பிறப்புறுப்பு குறைபாடுகள் கிளினிக்கின் ஒருங்கிணைப்பாளர் கிளாடியா டகானோ விளக்குகிறார்.
சிகிச்சை இருக்கிறதா?
ரோகிடான்ஸ்கி சிண்ட்ரோம் குறைபாட்டுக்கு தெரபி உள்ளிட்ட சிகிச்சைகள் பரிந்துரைக்கப்படுகின்றன. மேலும், டைலேட்டர்களைப் பயன்படுத்துவது பிறப்புறுப்பை குறிப்பிட்ட அளவுக்கு நீட்டுகிறது.
மகளிர் மருத்துவ நிபுணர்கள், பிசியோதெரபிஸ்டுகள் மற்றும் முக்கியமாக உளவியலாளர்களின் ஆலோசனைகள் இதற்கு அவசியம். இதன்மூலம், பாலியல் மற்றும் தாய்மை தொடர்பான பிரச்னைகள் தீர்க்கப்படுகின்றன.
கடைசி முயற்சியாக, ஸ்டென்ட் சிகிச்சை வேலை செய்யாதபோது, அறுவை சிகிச்சை பரிந்துரைக்கப்படுகிறது. அறுவை சிகிச்சையில் பல நுட்பங்கள் உள்ளன. ஆனால், புதிய பிறப்புறுப்பு கால்வாயை உருவாக்குவதே மிகவும் பொதுவான முயற்சியாகும்.
அறுவை சிகிச்சைக்குப் பின்னர், நோயாளி நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பர். மேலும், நான்கு மாதங்கள் வரை அவரால் உடலுறவு கொள்ள முடியாது.
தாய்மை அடைவது சாத்தியம்
இந்த பிரச்னை இருப்பவர்கள் தாங்கள் தாயாக முடியாது என்பதை எண்ணியே மிகுந்த விரக்தியை அடைகின்றனர்.
தன்னை ஒரு தாயாக கற்பனை செய்துகொள்ள முடியாதது மிகவும் வேதனையானது என்று நாசிமென்டோ கூறுகிறார். கிட்டத்தட்ட "பிறக்காத ஒரு குழந்தையின் வலியை நாங்கள் உணர்கிறோம்," என்று அவர் கூறுகிறார்.
ஆனால், இதற்கு மாற்று வழிகள் உள்ளன.
வாடகை கர்ப்பப்பை அல்லது தத்தெடுப்பு மூலம் தாயாக முடியும். "இதற்கு இன்னொரு மாற்றாக கர்ப்பப்பை மாற்று அறுவை சிகிச்சை உள்ளது. ஆனால், இது இன்னும் ஆய்வு நிலையிலேயே உள்ளது" என்று டகானோ கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்













